TP-801-FFC – 268செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

lotus

FFC – 268
அ.வி. 268

19-11-2017-ஞாயிறு

அறிவுத்தேனீக்கள்

 

செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

சொல்

நன்முத்துக்கள்:

நற்சொற்கள் நன்முத்துக்கள் போன்றவை. மனிதனின் முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ என்பது பற்றி ஆராய்வோம். சொல் வருவதற்கு முன்னர் அது எண்ணமாக உருவெடுத்த பிறகுதான் வரும். எனவே எண்ணம் வரும்போதே ஆராய்ந்து அவ்வெண்ணம் நல்லதாக இருந்தால் அதனை மனதில் வளர விடலாம். இல்லை எனில் துன்பம் விளைவிக்கும் என்று கருதினால், வேண்டாத செடியினை முளையிலேயே கிள்ளி எறிவதுபோல் தீய எண்ணங்களை முதன் முறையாகக்கூட உள்ளே விடக்கூடாது. ஒரு முறை விட்டுவிட்டாலே அந்த எண்ணம், அந்த மனஅலைச்சுழல் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அடுத்த கட்டமான (next stage) சொல்லாக வெளியே வந்துவிடும். அல்லது எண்ணம் அழுத்தம் அழுத்தமாகவும். தீவிரத்துடன் இருந்தால் சொல்லாக வராமல், மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான நேரிடை செயலாகவே வந்துவிடும்.

எது இறைவழிபாடு?

‘சொல்லாகிய’ செயலுக்கும்  விளைவு நிச்சயம் உண்டு. நல்ல சொற்கள் இனியவையாக இருக்கும். நல்ல சொற்கள் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கும். ‘மனிதன்’ என்கின்ற சொல்லிற்கு இலக்கணமாக (மனம்+இதம்=மனிதன்) நல்ல சொற்கள் இதமாக இருக்கும். நல்ல சொற்களைப் பேசுபவருக்கும் இதமாக இருக்கும். யாரிடம் நல்ல சொற்கள் பேசப்படுகின்றனவோ அவருக்கும் இதமாக இருந்து இன்பத்தை அளிக்கும். எண்ணம் தீயதாக இருந்தால் அதனால் வரும் சொல்லும் தீயதாக இருக்கும்.

மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் யாதெனில், பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து மதித்து இரங்கி உதவி செய்வதாகும். பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. புலிக்கு மானின் உணர்வு தெரியாது. தெரிந்தால் பாம்பிற்கும், புலிக்கும் உணவு இல்லை. பட்டினியால்  இறக்க வேண்டியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்லவே! இனியவை கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறினால் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் இல்லையா? அதனால் நட்பு நலம் கெடும் இல்லையா? பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து இரக்கம் கொண்டு உதவி செய்வதில்தான் அறவுணர்வு மலர்கின்றது. ‘இறைவழி வாழும் அறவாழ்க்கையே இறைவழிபாடு’ என்றிருக்கும்போது இனிய (அன்பான) சொற்களைப் பேசுவதுதானே இறைவழி வாழும் இறைவழிபாடு.

இறை உணர்வின் பிரதிபலிப்பே அறவுணர்வு:

அறவுணர்வு என்பது இறைவுணர்வின் பிரதிபலிப்பே ஆகும் இல்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடித்த திருவள்ளுவர் 2048 வருடங்களுக்கு முன்னரே ‘இனியவை கூறல்’ என்கின்ற அதிகாரத்தை(எண் 10) வைத்து அதில் பத்து கோணங்களில் ‘இனியவை கூறலின்’ பயன்களை எடுத்துரைக்கிறார். மேலும் ‘புறங்கூறாமை’ பற்றி எடுத்துரைக்க ஒரு அதிகாரத்தையே(எண் 19) வைத்து அதில் வழக்கம் போல் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

மேலும் இறையின் பிரதிநிதியான மனிதன் எப்போதும் தனக்கும் சமுதாயத்திற்கும் அவனது முத்தொழில்களில் அதிகமாக பயன்படுத்தும் சொற்கள் பயனுள்ளனவாகவே அமைய வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘பயனில சொல்லாமை’ (அதிகாரம் எண் 20) என்கின்ற அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.

திருவள்ளுவரை நம்முடைய மானசீகக் குருவாக வணங்குவோம்:

dheaivappulavar

‘இனியவை கூறல்’ மட்டுமே ‘சொல்’ வகையில் சேர்ந்ததல்ல, ‘புறங்கூறாமையும்’, ‘பயனில சொல்லாமையும்’ ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே என்பதனை அறிந்து ‘பேசும் சொல்லிலும், சொல்லை பயன் படுத்துவதிலும்’ விழிப்போடு இருக்க வேண்டும்.

  அறிவின் முழுமைப்பேற்றினை (முக்தி) அடைய அகத்தை ஆய்வு செய்து கொண்டுவரும் அகத்தாய்வாளர்களாகிய நாம், குருநாதரின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவரை நாமும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு திருவள்ளுவரின் அருளையும் பெறுவோம்.

    திருவள்ளுவர் அருளியுள்ள அந்த அந்த முப்பது குறட்பாக்களையும் ஒரு முறை வாசித்து பயன் பெறலாமே! மனனம் செய்து கூட பயன் பெறலாமே! பெறுவோமா? வாழ்க வளமுடன்.

     நேரம் கிடைக்கும்போது புனித நூலான திருக்குறள் நூலைத் திறந்து பார்த்து, அன்றைக்கு என்ன இயற்கை/இறை ஆன்மசாதகனுக்கு அறிவுறுத்த நினைக்கின்றதோ அதனை வாசித்து அப்போதே இன்புற்று, அந்த இன்புறுதல் தொடர, ‘இன்புறுதலாகவே’ மாற அதனை நடைமுறைக்கு கொண்டுவராலாமே!

அந்த முப்பது குறட்பாக்களில் ஒரு சில குறட்பாக்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

இனியவை கூறல் – அதிகாரம் 10

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.”                                             . . .  குறள் எண் 96

பொருள்: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் தேய்ந்து புண்ணியம் வளரும்.

‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்று பட்டிணத்தடிகள் கூறியதுபோல் வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆன்மா உடலெடுத்துள்ளது. எனவே ஆன்ம-தூய்மை சாதகர்கள் சொல்லைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சொல்தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

புறங்கூறாமை அதிகாரம் – 19

அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன்
‘புறம்கூறான்’ என்றல் இனிது                                         . . .  குறள் எண் 181

பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும். அறச்செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறங்கூறாதிருத்தல் நன்று என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். இவ்வாறு கூறுவதால்  பாவங்களைச் செய்வது பரவாயில்லை என்று பொருள் அல்ல. மனிதன் வாழ்க்கையில் புறங்கூறாமையை பாவமாகக் கருதுவதில்லை என்பதனை மனிதன் உணரவேண்டும் என்பதனை திருவள்ளுவர் வலியுறுத்த விரும்புகிறார். பாவமாக கருதுவதையே பழக்க தோஷத்தால்(பழக்கப்பதிவின் அழுத்தத்தால்) மறந்து பாவங்களைச் தொடர்ந்து செய்து வருகிறான் மனிதன். அப்படியிருக்கும்போது இதுவரை பாவம் என்று கருதாத ‘புறங்கூறுதலை’ இனிமேலும் செய்து விடக்கூடாது எனக் கருதி புறங்கூறாமை அதிகாரத்தில் இக்குறளை முதலாவதாக வைத்துள்ளார். புறங்கூறுவதால் என்ன பாவம் நடக்கின்றது?

    ஒருவரின் image கெடுகின்றது.

    புறங்கூறப்படுவதால் இருவருக்கும் பகைமை ஏற்படலாம்.

   பகைமை ஏற்படின் துன்பங்கள் வரலாம்.

  இவ்வளவு துல்லியமாகவா மனிதன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கலாம். உயிரற்ற சடப்பொருட்களில் மிக மிக துல்லியமாக இயங்குகின்ற ஒழுங்காற்றலே மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது என்பதனை நினைவிற் கொள்க.

 இவ்விடத்தில் மகரிஷியின் கண்டுபிடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதை அவர் வாய் மொழியாகவே அறிவோம்.

உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்,
உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.’

சடப்பொருட்கள் அணுக்களாக கலைந்துவிடும்:

சடப்பொருட்களில் துல்லியமாக ஒழுங்காற்றல் செயல்படவில்லையானால் அந்த சடப்பொருட்கள் சடப்பொருட்களாக காட்சியளிக்க முடியாது. அணுக்களாக கலைந்துவிடும்.

    சாலையில் மகிழுந்து ஓட்டுனர் மற்றொரு வாகனத்தின் மோதாது விபத்து நடக்காமல் இருக்க துல்லியமாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். விபத்து நடந்தபோது ‘மயிர் இழையில்’ உயிர் தப்பினார் என்கிறோமே! அது என்ன? அவ்வாறிருக்கையில் மனிதனும் துல்லியமாகத்தான் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அயராவிழிப்போடு வாழக்கற்றுக் கொண்டால் துல்லியமாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. இறையேதான் மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது, இறையிடம் உள்ள தன்மையைத்தானே மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இறையிடம் இல்லாத தன்மையையா எதிர்பார்க்கப்படுகின்றது? இறையிடம் இல்லாத தன்மை என்றே சொல்ல முடியாது. சொல்லால் நன்மையே விளைய வேண்டும் என்று சிந்தித்து வந்தோம். எப்போதும் இனியவை கூறுதலாலும், எப்போதும் புறங்கூறாதிருத்தலாலும் புண்ணியக்கணக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாம் என்றும் அதனால் இறை அருள் பெருகிவரும் எனவும் சிந்தித்தோம். சொல்லின் மூன்றாவது வகையான ‘பயன் இல சொல்லாமை’யைப்பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிவோம்.

பயன் இல சொல்லாமை:

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.                                                             . . . குறள் எண் 196

பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல முறை சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

திருவள்ளுவர் ‘பதர்’(பதடி) என்று சொல்கிறாரே என்ன அர்த்தம்? ஏன் பதருடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பதனை கவனிப்போம். பதர் என்றால் உள்ளீடற்ற நெல்(empty ears of grain, chaff) மற்றும் உபயோகமற்ற நபர் (worthless person)என்று பொருள். சொல் எப்படி உருவாகிறது? சொல்லை வெளிப்படுத்துவதற்கு நாக்குதான் கருவி. இருப்பினும் அதற்கான ஆற்றல் சீவகாந்தம். சீவகாந்தம் என்பது என்ன? இறையின் ஆற்றல்தானே சீவகாந்தமாக செயலாற்றுகின்றது. சீவகாந்தத்தைப் பயன்படுத்தி பயனில்லாத சொற்களைப் பேசுவதால் இறை ஆற்றலான சீவகாந்தம் தான் வீணாகின்றது. எனவே யாருக்கும் பயனில்லாத சொல் பேசுதலை நெல்மணிகளுடன் பயன்படாது இருக்கும் பதருடன் ஒப்பிடுகிறார். பயன் படாது போனாலும் பரவாயில்லை. பேசுவரின் சீவ காந்தமும் விரயம் ஆகின்றது. கேட்பவரின் சீவகாந்தமும், நேரமும்(இறை ஆற்றல்) விரயமாகின்றது.

மேலும் சொல் வகையைச் சார்ந்தவை எவை எவை?

மேலும் அறிய வேண்டியது யாதெனில் நன்றியுணர்வும், பாராட்டுதலும் கூட ‘சொல் வகையை’ச் சார்ந்ததே. எப்படி? ஒருவர் செய்த உதவிக்கு பயன் பெற்றவர் நன்றி கூறுதல் அவசியம். ‘நன்றி’ என்று கூறுவது நாவினால் சொல்கின்ற சொல்தானே! இனியவை கூறல் அதிகாரத்திற்கு பின்னர் செய்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ள காரணத்தை அறிய வேண்டும். ‘நன்றி’ என்று கூறுவது இனியவை கூறல்தானே! நன்றி கூறுதலோடு நின்றுவிடக்கூடாது. அதனை நினைவில் கொண்டு அவருக்கு ஏதாவது தேவை ஏற்படுகின்ற சூழல் வந்தால் திருப்பி உதவி செய்ய(reciprocation) வேண்டும்.

செய்ந்நன்றி அறிதல்:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு”                                  . . . குறள் எண்-107

பொருள்: துன்பத்தைப் போக்கினவரின் நட்பை ஏழுபிறப்பிலும் நினைப்பர் பெரியோர்.

(எழுமை வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினைக் குறிக்கின்றது)

பாராட்டு:

பாராட்டு என்பதும் ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே. பாராட்டு என்பது உயர்வாகக் கூறுதல், மெச்சிப் புகழ்தல் என பொருளாகின்றது. ஒருவர் செய்த செயலால் பயன் வருகின்றபோது அச்செயலை பாராட்ட வேண்டும்.  ‘மிகைபடச் சொல்லேல்’ என அவ்வைத்தாய் ஆத்திச் சூடியில்(89) அறிவுரை கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

   பாராட்டு என்கின்ற சொல்லிற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தினை நினைவு படுத்திக் கொள்வோம்.  பாராட்டு என்பது இரண்டு சொற்களைக் கொண்டது, பார்+ஆடு=பாராட்டு. ஒருவர் செய்த செயலால் உலகமே(பார்) பயனடைந்து அதனால் மகிழ்ச்சி பொங்கி ஆடுதலால் வரும் சொற்களே பாராட்டு எனப்படுகின்றது என்பார் மகரிஷி அவர்கள்.

அவ்வைத்தாய் எவ்வாறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திச்சூடியில் அமுதமொழிகளால் அறிவுரைகளை கூறுவதனை நினைவு கூர்வோம்.

 

அவ்வையின் ‘சொல்வகை’யைச் சார்ந்த அமுதமொழிகள்:

FFC-268-ஆத்திச்சூடி-image.jpg-3

 

இவ்வாறாக ஆத்திச்சூடியில் 108 ஒரு வரி அறிவுரைகளில் சொல்லை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று, திருவள்ளுவர் ஒரு அறிவுரையை ஒரு அதிகாரத்தில் பத்து கோணங்களில் அறிவுறுத்துவதுபோல் அவரது சகோதரியும் நம்முடைய அருட் தாயுமான அவ்வை ‘பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பத்திற்கும் மேலான கோணங்களில் அறிவுறுத்துகிறார். அல்லது கற்றுத்தருகிறார் என்பதனை அறிந்து மகிழ்வோம். ஆத்திச்சூடி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆன்மீகத்தில் வெற்றி பெரும் வரை அனைவருமே ஒரு வகையில் குழந்தைகள்தான். எனவே ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை படித்து அவ்வைத்தாய் கூறியுள்ளதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

விரும்பும் இனியவை ஈடேற …. ?

avvai-ffc-261

எல்லோரும் இனியவையே விரும்புவர். ‘அறிவினர் சேர்தல், இனிது என்றும், அதனினும் இனிது, அவரை கனவிலும் நனவிலும் காண்பது தானே’ என்கின்ற அவ்வைத்தாய் ஆத்திச்சூடியில் ‘சான்றோர் இனத்திரு’ என்று ஒரு வரியில் கூறுகிறார். அதாவது சான்றோர்களிடம் சேர்ந்து இரு என்கிறார். இனியதை அனுபவிக்க சான்றோர்களிடம் சேர்ந்திருப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்?

சான்றோர்களிடம் சேர்ந்திருக்க …..?

சான்றோர்களிடம் சேர்ந்திருப்பதற்கு என்ன சான்று? சான்றோர்களிடம் சார்ந்திருப்பவர் நல்ல சொற்களையே பேசாமல் இருந்தால் சான்றோரைச் சேர்ந்திருப்பதற்கு சான்றாகுமா? சான்றோர்களிடம் சேர்ந்திருத்தலின் பயனை அனுபவிக்க முடியுமா?

எனவே சொற்களைப் பயன்படுத்துவதில் ‘மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற அறிவுரையை நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும் என்பதே இதுவரை ‘சொல்’ பற்றி சிந்தித்ததின் பயன் என அறிந்து கொள்வோம்.

நல்லதையே எண்ணுவோம். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். .

எப்போதும் விழிப்புணர்வோடு இருப்போம்.

 இது வரை மனிதனின் முத்தொழில்களான சொல் பற்றி அறிந்து கொண்டோம். அடுத்ததாக ‘நேரிடை செயல்’(Direct action) பற்றி அடுத்த அறிவிற்கு விருந்தில்(22-11-2017-புதன்)

வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்