சிந்திக்க அமுதமொழிகள்

 • சிந்திக்க அமுத மொழிகள்- 328

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 328

  15-08-2020— சனி

  அமைதி

   

  உன்னைத் தவிர வேறு யாராலும் உனக்கு அமைதியைத் தர முடியாது”

  . . .   எமர்சன்

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் அறிஞர் எமர்சன்?  உண்மைதானே!
  2. (i) அமைதி என்பது என்ன? (ii) அது எப்படி இருக்கும் மனதிற்கு ? (iii) அதனை மனம் எப்படி, எப்போது,  எப்படி இருந்தால் அனுபவிக்க முடியும்?
  3. அமைதியை வேறு யாரும் தர முடியாது என்றால் என்ன பொருள்?
  4. (i)அமைதி என்பது மனிதகுலத்தின் பூர்வீகச் சொத்து. எவ்வாறு? (ii)அமைதி பூர்வீகச் சொத்தாக இருந்தும் ஏன் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியவில்லை மனிதகுலத்தால்?
  5. (i) மனிதன் உண்மையில் அமைதியை அனுபவிக்க விரும்புகின்றானா? (ii) இல்லையெனில் ஏன் விரும்புவதில்லை? (iii) விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
  6.   மனிதனுள்ளே  ஆனந்தவடிவமான உத்தமன் கோயில்கொண்டிருந்தும், மனிதனால் ஏன் உத்தமனாக இருந்து,  அமைதியையும், அதற்கு அடுத்த நிலையான பேரானந்தத்தையும் அனுபவிக்க முடியவில்லை?

          உடம்புக்குள் இறைவன் இருப்பதை அறிவீர்

    “உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்

  உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்

          உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

  உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.”

                                                                . . . திருமூலர் –  திருமந்திரம் 725

       7.  அமைதிக்கு திருவேதாத்திரியம் அருளும் அருமருந்து என்ன? அது ஒன்றா  அல்லது இரண்டு கலந்த கூட்டு அருமருந்தா(Combined Divine Medicine)

  வாழ்க உலக அமைதி!   வருக உலக அமைதி விரைவில்!!

  வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க அமுத மொழிகள்- 327

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 327

  14-08-2020— வெள்ளி

   

   

  “பிறவிப்பயனை எய்துவதற்கும், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவதற்கும் உரிய செயல் எதுவோ அதுவே புண்ணியம்”

  வேதாத்திரி மகரிஷி அவர்கள்

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
  2. (i) பிறவிப்பயன்என்பதுஎன்ன?                                                                                      ii) மனிதகுலம் முழுவதும் இதனைஅறிந்துள்ளதா? அல்லது அறியவில்லையா?   என்ன காரணம்?                                                                          (iii) பயனைக் கருதும் இயல்புடையது மனிதமனம். மனிதப்பிறவியின் பயனை அறியவில்லையோ மனிதகுலம்?ஆகவேதான் பிறவிப்பயனை அடைவதற்கான பிரயத்தனம் செய்யாமல் உள்ளனவோ மனிதமனங்கள்?
  3. i) பிறவிப்பயனை அடைவதற்கும் மும்மலங்களுக்கும் என்ன தொடர்பு? ii) பிறவிப்பயனை அடைவதற்கு எவ்வாறு ஆணவம், கன்மம், மாயை ஆகியன எதிராக உள்ளன?
  4. (i) இந்த மூன்றிலிருந்து விடுபட மனிதனுக்குத் தயக்கம் ஏன்?                     (ii) அல்லது முயற்சியிலும் பயிற்சியிலும்  தடங்கல்கள் ஏன் வருகின்றன?
  5. பிறவிப்பயனை அடைவது, ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்து விடுபடுவது என்பது ஆன்மசாதகர்களுக்கு மட்டுமே பொருந்துவதா?  அல்லது இரு தரப்பினருக்குமே உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் பொருந்தக்கூடியதா?
  6. i) மாயை என்பது என்ன?                                                                                                                 ii) மாயை மெய்ப்பொருளை எவ்வாறு திரைபோன்று மறைத்துவிடுகின்றது  என்கின்றனர் ஆன்மீகத்தில் வெற்றி பெற்ற அருளாளர்கள்?                                      iii) மாயையால் மனிதகுலத்தின்  இரு தரப்பினருக்கும் (ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது ஆன்மீக  வாழ்க்கையைத் தவிர்த்து உலகியல் வாழ்க்கை மட்டுமே வாழ்பவர்கள்) வரும் விளைவுகள் என்ன?
  7. இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் புண்ணியத்தில் நம்பிக்கையுள்ளவர்களே. அப்படியிருக்கும்போது புண்ணியம் தேட என்னென்ன செய்ய வேண்டும்?
  8. புண்ணியத்திற்கு அறிவியல் அடிப்படையில் என்ன பொருள்?
  9. இரண்டொழுக்கப் பண்பாடும் புண்ணியத்தைச் சேர்ந்ததுதானே?
  10. இரண்டொழுக்கப் பண்பாட்டால் ஆணவம் கன்மம் மாயை விலகிவிடுமா? இதில் உள்ள அறிவியல் என்ன?
  11. ஆனந்தமய கோசத்திற்கும் பிறவிப்பயனை எய்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?

  வாழ்க வளமுடன்!

  வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

 • சிந்திக்க அமுத மொழிகள்- 326(56)

  வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

  சிந்திக்க அமுத மொழிகள்- 326(56)

  08-08-2020— சனி

  ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் மறைய ஆரம்பிக்கின்றது!

  … ரூஸோ

  பயிற்சி—

  1)ஆடம்பரம் என்றால் என்ன?

  2)ஒழுக்கம் என்றால் என்ன?

  3)ஆடம்பரமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானதா?

  4)ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் எப்படி மறைகிறது?

  5)ஆடம்பரத்தின் எதிர்ச்சொல் என்ன? அதனைத் தெரிந்து கொண்டு, கடைபிடிக்கலாமன்றோ, ஒழுக்கம் அதிகரிப்பதற்கும், நிலைப்பதற்கும்!

  வாழ்க வளமுடன்

  வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

 • சிந்திக்க அமுத மொழிகள்- 325(57)

  வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

  சிந்திக்க அமுத மொழிகள்- 325(57)

  07-08-2020— வெள்ளி

  நீ உலகிற்குச் செய்யும் முதல்தரமான சேவை உன்னை நீ அறிந்து விடுவது ஒன்றுதான்.

  …ஸ்ரீ சாந்தானந்தர்

  பயிற்சி—
  1) இந்த அமுத மொழி கூறுவதென்ன?
  2) தன்னை அறிவது உலகிற்குச் செய்யும் சேவை என்கிறாரே ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள். எவ்வாறு?
  3) அந்த சேவை முதல்தரம் என்கிறாரே. எப்படி?

  வாழ்க வளமுடன்

  வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

 • சிந்திக்க அமுத மொழிகள்- 324

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 324

  01-08-2020  — சனி

  ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறைமுகமாக உண்டாகின்றதோ அந்த அளவுக்கு நாம் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.”

  -சுவாமி விவேகானந்தர்.

  பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
  2. ஆன்ம சாதனையில் ஆனந்தம் ஏன் மறைமுகமாக  ‘உண்டாகிறதோ’ எனக் கூறுகிறார்?
  3. நேரடியாக ஆனந்தம் தெரியாதா? மறைமுகமாகத் தான் இருக்குமா? மறைமுகமாக உண்டானால் எப்படி ஆன்மசாதகன் அறிந்துகொள்ள முடியும்?
  4. ஆன்ம சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவுகோலா?
  5. ஆன்மசாதகனுக்கு மறைமுகமாக உண்டாகும் ஆனந்தம் தெரியவந்தால் விளக்கப்பதிவு வலிமை பெற்று வருகின்றது என்றுதானே பொருள்?
  6. பழக்கப்பதிவு வலிமை இழந்து வருகின்றது என்றுதானே பொருள்?
  7. உள்ளத்தில் ஆனந்தம் உண்டானால், அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்தில் மட்டுமே இயங்கிவந்த ஆன்ம சாதகனின் ஆன்மா, அவற்றையெல்லாம் கடந்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்திற்கு வந்துவிட்டது என்றுதானே பொருள்?
  8. பலன் ஏதும் இல்லாமல் எந்த ஒரு செயலையும் எவ்வாறு தொடரமுடியும்? அவ்வாறிருக்க ஆத்ம சாதகனுக்கு அந்த மறைமுக ஆனந்தம்தானே பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் தரும்?
  9. இந்த அமுதமொழி ஆன்மசாதகர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதல்லவா? 

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க  திருவேதாத்திரியம்!!

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 323

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 323

   

  31-07-2020  — வெள்ளி

  பழக்கமும் விளக்கமும்

  பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஜீவன் மனிதன்.

  — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

  எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

   

  பயிற்சி:

  1. பதிதல், பதிவு என்றால் என்ன?
  2. (i) பழக்கம் என்பது என்ன?   (ii) பழக்கப்பதிவு என்றால் என்ன? (iii) அது எப்படி நடைபெறுகின்றது?
  3. விளக்கம் என்பது என்ன?
  4. (i) விளக்கப்பதிவு என்றால் என்ன? (ii) அது எவ்வாறு நடைபெறுகின்றது?
  5. போராட்டம் என்கிறாரே மகரிஷி அவர்கள்! அப்படியென்றால் என்ன பொருள்?
  6. ஏன் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் நடக்கின்றது?
  7. பழக்கப்பதிவை விளக்கப்பதிவு வெற்றிகொள்ள ஆன்மசாதகன் என்ன செய்ய வேண்டும்?
  8. விளக்கப்பதிவை வலிமையாக்க ஆன்மசாதகன் என்னென்ன செய்ய வேண்டும்?
  9. (i) ஊக்கமுடைமை என்றால் என்ன? (ii) ஊக்கமுடைமை விளக்கப்பதிவை வலிமையாக்குமா?
  10. முயற்சி…?
  11. (i) சத்சங்கம் என்றால் என்ன? (ii) சத்சங்கத்தை எத்தனை வகையாக கொள்ளலாம்? (iii) சத்சங்கத்தால் விளக்கப்பதிவின் வலிமையை அதிகரிக்க முடியுமா?
  12. விளக்கப்பதிவின் வலிமையை அதிகரித்துக் கொண்டு   பழக்கப்பதிவை  வெற்றிகொள்ள  ஐயன் திருவள்ளுவரும், அவ்வைத்தாயும் எவ்வாறு உறுதணையாக இருக்கின்றனர்? Avvaiyar & Thiruvalluvar - Prosper Spiritually
  13. (i) இயல்பூக்க நியதி  எவ்வாறு  பழக்கப்பதிவை விளக்கப் பதிவு வெற்றிக்கொள்ள  உதவியாக இருக்கும்? (ii) இயல்பூக்க நியதி தானாகவே உதவி செய்யுமா? (iii) அல்லது ஆன்மசாதகன் இயல்பூக்க நியதியை யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?  வாழ்க வளமுடன்!

  வாழ்க வேதாத்திரியம்!  வளர்க வேதாத்திரியம்!!

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)

  25-07-2020  — சனி

  எண்ணத்தின் வலிமை


  மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல, நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!

                                                                         . . .   கன்பூசியஸ்


   பயிற்சி—

  1)    என்ன கூறுகிறார்  சீன அறிஞர் கன்பூசியஸ்?

  2)    மனிதன் என்பவன் யார்?

  3)    மனிதனை வரையறை செய்ய முடியுமா(Can man be defined)?

  4)    i)தன்மை என்றால்  என்ன? 

         ii) மனிதத் தன்மை என்றால் என்ன?

      iii) மனிதனின் சிறப்புகள் பற்றி நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்               என்ன கூறுகிறார்? 

         iv) அக்கவியினை (ஞா.க.கவி எண் 290)நினைவு கூர்வோம்? 

          v) அவற்றில் எத்தனை   நம்மிடம்     உள்ளன என தற்சோதனை செய்து                          பார்க்கலாமே!

  5)  i) மேன்மை என்றால் என்ன?

       ii) மனித மேன்மை என்றால் என்ன?

  6)  அறிஞர் கன்பூசியஸ்  ஒப்புமையில் பயன்படுத்துகின்ற உவமேயத்தின் சிறப்பு என்ன? ஏன் வானம் என்கின்ற உவமேயத்தைப் பயன்படுத்துகிறார் அறிஞர் கன்பூசியஸ்?

  7) கைக்கு எட்டினால் …………….. ????!!!!

  8) அறிஞர் கன்பூசியஸ் மொழிகின்ற அமுத மொழியின்  அறிவியல் என்ன?

  9) அறிஞர் கன்பூசியஸ் கண்டுபிடித்த உண்மைக்கும் மனவளக்கலையின் சங்கல்பத்திற்கும் தொடர்பு/உறவு இருக்கின்றதா? எவ்வாறு  தொடர்புள்ளது?

  10)    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா?  இப்போது என்றால் …………  ?????!!!!!

  11)    எண்ணத்தின் வலிமைதான் என்னே!  நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!

  12)    அன்று  கன்பூசியஸ் கூறிய  ‘விருப்பம் கைகூடக்கூடியது’  என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?

   

  வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

  வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

  வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 321(248)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 321(248)

  24-07-2020  — வெள்ளி

                                      சொல்வதுபோல் வாழ்வது


  நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.”

                                                                                                        . . . மகாத்மா காந்தி


  பயிற்சி:

  1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?

  2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?

  3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?

  4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?

  5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?

  6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளதா?

  வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

  வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

  வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 320

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 320

  18-07-2020  — சனி

     முதன்மையான   வித்தியாசம்!

   


  நற்பண்புகள் விண்மீன்கள் போன்றதாகும்.  இரக்கம் விண்மீன்களிடையே  நிலவை போன்றது. 

                 . . .     அறிஞர்  பிராப்ட் பெர்ட்டியஸ்


  பயிற்சி—
  1) அறிஞர் என்ன கூற விரும்புகிறார்?

  2) இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை ஓட்டம் எங்கெல்லாம் செல்லுகின்றது? 

  3)     i) வாரப்பத்திரிகையாக இருந்தாலோ  அல்லது மாதப்பத்திரிகையாக இருந்தாலோ   அவற்றின் பக்கங்களின்  மேலோ அல்லது கீழோ, பக்கங்களின் ஓரங்களிலோ அமுத மொழிகளைக் காண முடிகின்றது. இதன் நோக்கம் என்ன? 

  ii) அந்த பத்திரிகையை வழக்கமாக படிப்பவர்களில் எல்லோருமே  அந்த அமுத மொழியிள் அமுதத்தைப்  பருகுகின்றனர் என்று கூற முடியுமா? 

  iii) ஆம் என்றால் ஏன்?

  iv)  இல்லை எனில் ஏன்?

  v)   அமுதமொழிகளை படிக்க வேண்டியது  அவசியமா?

  vi)  அமுத மொழிகளைப் படிப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன?  படித்துவிட்டு நன்றாக உள்ளது என்பதோடு படித்ததன் பயன் முடிந்துவிடுகின்றதா?  அல்லது என்ன செய்ய வேண்டும்?  என்ன ஏற்படவேண்டும் வாசிப்பவருக்கு?

  vii)  சிந்தனை வளத்தைப்  பெருக்க என்ன செய்யலாம்? (புத்தக உலகில் இப்போதெல்லாம் அறிஞர்களின் அமுதமொழிகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளிவருகின்றன)

  viii)  சிந்திக்க அமுதமொழிகள் பயிற்சிக்கும்  மனிதஅறிவினில் மாற்றம் ஏற்படுவதற்கும்   ஏதேனும் தொடர்பு உள்ளதா? உள்ளது எனில் அந்த மாற்றம்  எந்த நியதிப்படி நடக்கின்றது?

  4)  இந்த அமுத மொழியில்  கூறப்பட்டுள்ள இரண்டு பொருட்களுக்கிடையே (நற்பண்பு, இரக்கம்) உள்ள வித்தியாசம் என்ன?  

  5)  i) பண்பு, நற்பண்பு, இரக்கம் என்றால் என்ன?

        ii)  மனிதனுக்கு நற்பண்புகள்,  இரக்கம் இரண்டுமே வேண்டும்.                                 ஆனாலும்  அறிஞர் பிராப்ட் பெர்ட்டியஸ் எது எதனைவிட                                      சிறந்ததாகக் காண்கிறார்? 

         iii) ஏன்?

   iv) மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள வித்தியாசங்களில் எது                          முதன்மையானதாகத் திகழ்கின்றது?

  6)  அறிஞர் பிராப்ட் பெர்ட்டியஸ் கையாண்டுள்ள உவமைகளிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?  அல்லது இதே  கண்டுபிடிப்பை ஏற்கனவே அறிந்திருந்தால் இதனை எதனோடு இணைத்து மேலும் சிந்திக்கலாம்?

  7) நம் குருபிரான் வேதாத்திரி  மகரிஷி  அவர்கள் இரக்கம் பற்றி உரைநடை மற்றும் கவியின் வாயிலாக  என்ன கூறுகிறார்? இரக்கம் பற்றி கூறும்  கவியினை நினைவு கூறவும்.

            வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!

          வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!

  வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 319(131 & FFC159)

  17-07-2020  — வெள்ளி

  நல்ல பழக்கமே நல்லொழுக்கம்

   

  தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

  ….. புத்தர்

  பயிற்சி—
  1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

  விடை:–

   

  ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல். தீய பழக்கம், பெரும்பாலும், ஆரம்பத்தில் இன்பத்தையே தந்தாலும் அல்லது தருவதுபோல் இருந்தாலும்/இருந்து ஈர்த்தாலும், பின்னர் அது தீங்கையேத்தான் நிச்சயம் தரும். அதுவரை அந்த தீயபழக்கத்தை தேனாக நினைப்பவனை முட்டாள் என்கிறார் புத்தர். பின்னர் அந்த தீயபழக்கம் தீங்கை தர ஆரம்பித்ததும் அதனை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்வதில் வெற்றி பெறுவது,

  • அத்தீய பழக்கத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம்,
  • அதில் ஆழ்ந்து, ஆழ்ந்து அனுபவித்த ஆரம்பகால சுகம்,
  • எவ்வளவு காலம், அது பழகப்பட்டிருக்கின்றது

  ஆகியவற்றைப் பொருத்து எளிமையாகவும் இருக்கலாம். அல்லது அறிஞர் ரூஸோ கூறும் ‘ஒழுக்கவாழ்விற்கு போராட வேண்டும்’ என்பதுபோல் போராடும்படியாகவும் இருக்கலாம். எந்த ஒரு பழக்கத்தையும் பழகுவது என்பது ஐம்புலன்களைக் கொண்டுதான் பழகவேண்டும். எந்த ஒரு தீயபழக்கமும் ஆரம்பத்தில் சுகம் கொடுத்து பிறகு சிக்க வைத்துவிடும். உணர்கருவிகளாகிய புலன்களை தவறாகப் பயன்படுத்தும்போது புலன்கள் அறிவை சிக்கவைத்துவிடுவதால், ஐம்பொறிகளும் (ஐம்புலன்களும்) அறிவிற்கு உணர்கருவிகளாகச் செயல்பட்டாலும், அறிஞர் திருவள்ளுவர் அவற்றை ‘பொறி’ என்பதனை கருவி எனும் அர்த்தத்தில் கூறாமல், ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்கின்றபோது ‘சிக்கவைக்கும்–அகப்படுத்தும் பொறிகளாகத்தான் எச்சரிக்கிறார். (traps-உதாரணத்திற்கு எலியைச் சிக்கவைக்கும் எலிப்பொறி)’

  “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
  நெறி நின்றார் நீடுவாழ் வார்.” …. குறள் எண் 6

  ஆகவே ஆரம்பத்தில் சுகம் கொடுப்பதாக இருந்து, ஆரம்பிக்கப்பட்ட தீயபழக்கம், பின்னர் தீங்கை கொடுக்கும்போது, அதனை விட்டுவிடுவதற்கு அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
  தீய பழக்கம் ஆரம்பத்தில் ஒருவேளை இன்பத்தைக் கொடுத்தாலும், ‘தீமை தீங்கைத் தரும் இயல்புடையதால்’, பின்னர் தீங்கைத்தான் நிச்சயமாகத் தர ஆரம்பிக்கும். அதுவரை அத்தீயசெயலை தேனாகக் கருதுகிறான் முட்டாள் என்பதனை வலியுறுத்திக் கூறவந்ததே புத்தரின் இந்த அமுதமொழி. உதாரணத்திற்குப் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், சூதாட்டம் போன்ற இன்னும் எத்தனையோ, தீயபழக்கங்கள் மனிதனிடம் உள்ளன. மனிதத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்த மானுடவியல் அறிஞரும் நம்முடைய குருநாதருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘மனிதனிடம் இருக்கும் தீமை, பழக்கம்’ என்கிறார். பழக்கம் பழகிவிட்டால் அது வழக்கமாகிவிடும். பழக்கவழக்கம் தீமையைத் தருவதாக இருந்து விட்டால் பின்னர் அதனை நிறுத்துவதற்கு பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.

      துன்பம் தரும் பழக்கம் எவ்வாறு  நற்பழக்கமாகும்? 

      துன்பம் தரும் செயல் எவ்வாறு ஒழுக்கச் செயலாகும்?

      எனவே   நல்ல பழக்கமே நல்லொழுக்கமாகும்.

       பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவது எதனைக்குறிக்கின்றது? அறிவின் கூர்மையின்மையைக் குறிக்கின்றது, காய்கறிகளை நறுக்க உதவும் கத்தி அதன் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையற்ற கத்தியால்(மழுங்கிய) உபயோகமில்லை. அதுபோல் கூர்மையில்லாத அறிவால்(மழுங்கிய) பயனில்லை மனிதனுக்கு. அறிவு அரூபமாக உருவமற்று இருந்தாலும், அது கூர்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவு கூர்ந்து உணரமுடியும். அறிவு கூர்மையில்லாதிருந்தால், அது தனக்கே உபயோகமற்றுபோய்விடும். ஒன்று தனக்கே உபயோகமற்று இருப்பது விசித்திரமாக இல்லை?! ‘நான் எனக்கே உபயோகமற்று இருக்கிறேன்’ என்றால் எப்படியிருக்கும்? கூர்மையின்மையால் உபயோகமற்றிருப்பது/போவது அறிவிற்கே துன்பத்தை தரும். 

        கூர்மையாக இருக்கும் அதே நேரத்தில், அறிவு தன்முனைப்பில் சிக்காமல் இருக்க விழிப்புடனும் இருக்க வேண்டும். ‘தான் கூர்மையாக இருக்கிறேன்’ என்று அறிவு கர்வம் கொள்ள நேரிடின் அது தன்முனைப்பில் சிக்க நேரிடும்.

    கூர்மையாக இருக்க வேண்டியது அறிவின் இயல்பு. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மனிதன். அதில் பெருமை கொண்டு கர்வமடைய எங்கே நியாயம் இருக்கின்றது? நியாயமே இல்லை. அந்த அறிவுக்கூர்மை விவேகமான பேரறிவின் சிறப்பு. இது சுத்தஅத்வைதம். என் அறிவு கூர்மையானது என பெருமை கொள்கின்ற துவைதத்திற்கு இடமில்லை.

      கூர்மையான கத்தியை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் கூர்மையான கத்தி விரல்களையே காயப்படுத்திவிடும். சாணை பிடிக்கப்பட்ட அறிவாள்மனை சில நாட்கள் மிகக்கூர்மையாக இருக்கும். அதனை காயை நறுக்கப்பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லாவிடில் சில நேரங்களில் விரல்களை காயமாக்கிவிடும்.

      அதுபோல் அறிவின்கூர்மையால் தன்முனைப்பை வெளிப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். அடக்கம் வேண்டும்.

     ஒரு பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா எனத் தீர்மானிக்காமல் அச்செயலில் இறங்குவதற்குக் காரணம், அறிவின் குறைபாடே!

      அறிவின் குறைபாடுகள் என்ன என்று ஆராயப்போனால், அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம். ஆகியமூன்றும் அறிவின் குறைபாடுகளாகத் தெரியவரும்.

       அவற்றை ஒவ்வொன்றாக சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

  முதலில் அறியாமையை எடுத்துக் கொள்வோம்.

  இயற்கையின்/இறையின் நெறியான அறநெறியை சமுதாயத்தில் நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்கள் பல இருந்தாலும், தவறிழைக்கும்போது அது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் குற்றம் எனகருதப்படுமானால், அப்போது அந்தச் சட்டம் தனக்கு தெரியாது(அறியவில்லை) என வாதிடமுடியாது. ‘Ignorance of Law cannot be an excuse’ என்பதுபோல், அறியாமையும் (அறியாமைக்கு அறியாமை காரணமாக இருந்தாலும்) மன்னிக்க முடியாததுதான். ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிறைய சட்டங்கள் உள்ளன. அவற்றிற்கு பெயர்களும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.. ஆகவே வழக்கறிஞரல்லாத மற்ற குடிமகன்கள் எல்லாம், ஒருசட்டத்தைக் குறிப்பிட்டு ‘இந்த சட்டம் எனக்குத் தெரியாது’ என்று சொல்ல முடியாது.

       ஏனெனில் எந்த ஒரு சட்டமும் மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஆறாம் அறிவிற்குடைய அறநெறியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

      ஆறாம் அறிவுடைய மனிதன் அறநெறி வாழ்க்கை வாழத் தெரிந்திருக்க வேண்டும். அறநெறி வாழ்க்கை வாழாமல் போனால் அது சட்டத்தை மீறியதாகி, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சட்ட–எண்ணைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தி, தண்டிக்கும்.

      நெறியுடன் இயங்குகின்றது இயற்கை. நெறியுடன் இயங்குகின்ற இயற்கை ஒழுங்காற்றலாகவுள்ள பேரறிவே. அதுவேதான் இறை. ஆகவே இறையின் நெறியான அறநெறி என்பது என்ன? ஒழுக்கம், கடமை, ஈகை ஆகும். ஆகவே இது ஆறாம் அறிவிற்கு இருக்க வேண்டிய நெறிகளாகும். ஒழுக்கம் மீறும்போது/தவறும்போது அது தவறுதானே?!

     ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்கிறார் மகரிஷி அவர்கள். விளைவறிந்து செய்தாலும், விறைவறியாது செய்தாலும் அதற்குரிய விளைவு வந்தே தீரும். (குற்றம் என தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் ஒரே விளைவுதான் வரும்)

       சூடான பாத்திரம் எனத் தெரியாமல், குழந்தை அறியாமல் அதன் மீது கைகளை வைத்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். குழந்தை அறியாமையில் கை வைத்து விட்டது என்பதற்காக பாத்திரம் சுடாமலா இருக்கும்? பெரியவர்களும் கவனக்குறைவாக சூடான பாத்திரத்தின் மீது கையை வைத்துவிட்டாலும் கை சுட்டுவிடும். கவனக்குறைவுடன் செய்த செயலுக்கான விளைவு ‘கைசுட்டுவிடுதல்’

  அடுத்ததாக கடமையை எடுத்துக் கொள்வோம்.

       கடமை என்பது இயற்கையின்/இறையின் இயல்பு அல்லது பண்பாகும் ஆகவே கடமையை விடுவது அல்லது செய்யாமல் இருப்பது அல்லது தவறுவது தவறுதானே?! இயற்கை தனது கடமையை தவறாது செய்து கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு சூரியனைச் சுற்றி பூமி ஒரே சீராக வலம் வந்து கொண்டிருகின்றது. இது இயற்கையின் கடமைகளில் ஒன்று. அந்தக்கடமையில் ஏதாவது குறை ஏற்படுமாயின் என்னவாகும்? ஆகவே அந்த இயற்கையின் ஒரு சிறந்த உயர்ந்த அங்கம்தான் மனிதன். எனவே மனிதன் கடமையில் தவறக்கூடாது. கடவுளையும் கடமையையும் இணைக்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

  கடவுளும் கடமையும்(17-12-1954)

  கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்.
  கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.

  …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  இப்பாடலிலுள்ள உண்மை அனைவருக்குமே பொருந்தும். ஏன் இவ்வாறு சொல்ல வேண்டியுள்ளது. இது மகரிஷியின் மாணவா்களாகிய மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவது அல்ல.

      மனிதனின் வாழ்வை பற்றிய ஒரு உண்மை கண்டுபிடிக்கப்படுகின்றது என்று சொன்னால் அது ஏதோ ஒரு தரப்பினருக்குமே மட்டும் பொருந்துவதாகக் கொள்வதற்கில்லை. இப்புவியில் வாழ்கின்ற மனிதகுலத்திற்கே பொருந்துவதாகத்தான் கொள்ள வேண்டும்.

      கடமையையும் கடவுளையும் இணைத்து சொல்வதால் இந்த உண்மை கடவுளை அறியவேண்டும் என்கின்ற மனவளக்கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகாது. மனவளக்கலைஞர்களல்லாத, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

  கடமையைச் செய்வதும் கடவுளை அறிவதும் சமப்படுத்தப்படுகின்றது. கடமை என்பது என்ன? கடமை என்பது உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயலாகும். செய்த செயலுக்கு இயற்கைநீதியின்படி விளைவு உண்டு. அந்த விளைவு எது? விளைவாக வருவதுவே இறைவன். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்கின்ற உண்மையை தெரிவித்துள்ளது வேதாத்திரியம் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.

  ஈகை

  துன்பத்தில் இருப்பவருக்கு உதவுகின்ற பண்புதான் ஈகை எனப்படுகின்றது. ஆகவே ஈகை ஆறாம் அறிவின் சிறப்பல்லவா?! ஆதலால், ஈகையைச் செய்யத் தவறும்போது ஆறாம் அறிவின் சிறப்பு கீழிறங்கிவிடும். ஆறாம் அறிவின் சிறப்புபோனால் அது கீழ்மைதானே? விளைவு சிறப்பால் வருகின்ற உயர்வோ அல்லது நன்மையோ இழக்கப்படுமன்றோ! ஒன்று இழக்கப்படுகின்றது என்றால் அதன் விளைவு துன்பமன்றோ! அறியாமையை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் அறியாமை என்பது மன்னிக்க முடியாதது, அறியாமைக்கும் ஏற்ற விளைவு வரும் என அறிந்து கொண்டோம். அந்த சிந்தனையில் கூடவே அறம் பற்றியும் அதன் அங்கங்களான ஒழுக்கம், கடமை, ஈகை பற்றியும் அறிந்து கொண்டோம்.

  இப்போது அறிவின் குறைபாடான அலட்சியம் என்றால் என்ன என்று அறிவோம்.

  பொதுவாக இது அனைவரிடமும் அவ்வப்போது தலைதூக்கும். பழக்கத்தாலும் அலட்சியம் செய்வது உண்டு. எனவே அலட்சியம் பற்றி பார்ப்போம். அலட்சியம் அறியாமையைவிட மோசமானது. தெரிந்தும் உதாசினப்படுத்துதல். தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்றிருக்கும்போது, செய்வது குற்றம் என்று அறிந்தும் அலட்சியத்தால் செய்வது’ அதனைவிட கொடுங்குற்றம். இது தன்முனைப்பின் வெளிப்பாடாகும்.

  மூன்றாவது உணர்ச்சிவயம். இது எல்லோரிடமுமே உள்ளது. எல்லோரிடம் இருப்பதால் அது சரி என்றாகிவிடாது. .இங்கே மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  இயல்பும் – உயர்வும் (22-12-1953)

  அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
  அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.”

  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

  உணர்ச்சி பெரியதா அல்லது அறிவு பெரியதா? உணர்ச்சி உயர்ந்ததா அல்லது அறிவு உயர்ந்ததா? உணர்ச்சி அறிவை உணா்வதில்லை. அறிவுதான் உணர்ச்சியினை உணர்கின்றது. எனவே அறிவுதான் எல்லாவகையிலும் சிறப்புடையது, உயர்ந்தது. அறிவேதான் இறையாக மனிதனிடம் உள்ளது.

    உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளது மனிதர்களிடம் என்றால் என்ன நிலையில் உள்ளது இந்த சமுதாயம்? உணர்ச்சி அறிவை(இறையை) வெல்வது இயல்பாக உள்ளதால் அறிவைக் கொண்டுதான் மனிதன் செயல்படமுடியும் என்கின்றபோது உணர்ச்சியிடம் தோற்ற அறிவு(இறை) எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும்?

     அறிவை(இறையை) தோற்கடித்த உணர்ச்சியால் தனக்கும், தன்னுடன் வாழும் சகமனிதர்களுக்கும் எவ்வாறு நலமளிக்க முடியும்? எனவே மனவளம் கருதி அறிவால் உணர்ச்சியை வெல்கின்ற கலைதான் மனவளக்கலை. அரசன் சேவகனிடம் அடிமையாவது போன்றது உணர்ச்சி அறிவை வெல்வது. அரசன்(அறிவு) சேவகனுக்கு(உணர்ச்சி) ஆணையிடுவது போன்றது அறிவு உணர்ச்சியினை வெல்வது.

      அறிவு எப்போதும் உணர்ச்சிக்கு வசப்படக்கூடாது. அறிவு உணர்ச்சிக்கு வசப்பட்டால் அது அறிவிற்கு உடைமையாகாது(அறிவுடைமையாயகாது). அதனால்தான் எது அறிவு என்று கூறவந்த திருவள்ளுவர் அறிவைப்பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறார். சிந்தனை முற்றுபெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.

  வாழ்க சிந்தனைச் செல்வம்!      வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


 • வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் -அறிவிற்கு விருந்து – FFC-296

  வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

  அறிவிற்கு விருந்து – FFC-296

  12.07.2020- ஞாயிறு

   

  அன்பர்களே!

  வாழ்க வளமுடன்!

          தலைப்பு ‘வயிற்றுப்பசியும் அறிவுப் பசியும்’ என்றிருக்கின்றது.  பசி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.  புதிதானது அல்ல.  எல்லோரும் அனுபவித்திருக்கின்ற ஒன்றுதான். ஆனால் தலைப்பு, வயிற்றுப்பசியுடன் அறிவுப்பசி என்று சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.   ஆகையால், பசியில் இரண்டு வகைகள் உள்ளன, அந்த இரண்டைப்பற்றியும்  சிந்திக்கப் பணிக்கப்பட்டுள்ளது இயற்கையால்/இறையால் இன்று. மகிழ்ச்சியுடன் சிந்திப்போம்.  இத்தலைப்பை ஏற்றுக்கொண்டு சிந்திப்பதன் வாயிலாக, இயற்கைக்கு/இறைக்கு உள்ளப்பூர்வமான  நன்றியினை அகத்திலிருந்து செலுத்துகின்றோம். 

  முதலில் பசியின் இரண்டு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

                                ஒன்று வயிற்றுப்பசி.  

                                மற்றொன்று அறிவுப்பசி.

        வயிற்றுப் பசி எல்லா சீவன்களுக்கும் பொதுவானது.  ஆனால் அறிவுப்பசி என்பது ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்த மனிதனுக்கு மட்டுமே பிரதானமாக இருக்கக் கூடியது.  ஆன்மா ஐந்து கோசங்கள் (போர்வைகள்) கொண்டிருந்தாலும் ஐந்தறிவு சீவன்களின் வாழ்க்கை முதல் இரண்டு கோசங்களான அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே புலன்வழி இச்சையோடு முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் அவற்றின் வாழ்க்கை. இந்த புலன்வழி இச்சைக்கான வாழ்க்கை வாழ்வதற்காகவா பேரறிவு நாமாக(மனிதனாக) தன்மாற்றம் அடைந்துள்ளது?! சிந்திக்கலாமே!  சிந்தித்தாலே பிறவியின் நோக்கம் அறியும் முயற்சியிலோ, இறைத்தேடலிலோ விரைவில் வெற்றி பெற்றிடலாம்!

  ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’

        இச்சையைப்பற்றி 80 வரிகள் கொண்ட கவியில் இருபத்தைந்தாவது  வரி ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’ என்பது. அக்கவியின் எல்லா வரிகளுமே உலகியல் வாழ்க்கையை மட்டும் பிரதானமாக நடத்தும் மனிதர்களுக்கும் உலகியல் வாழ்க்கையையும் இறையுணர்வு ஆன்மீகத்தையும் இணைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆன்ம சாதகர்களுக்கும் பொதுவானதுதான். இருந்தாலும், மேலும் அக்கவியின் மற்றொரு வரியினையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது உசிதமானது.  அதாவது 63-வது வரியில் “இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?” என வினவுகிறார் இன்ப-துன்ப அறிவியளாலரான ஜகமே போற்றுவதற்கு உரியவரான இருபதாம் நூற்றாண்டின் ஜகத்குருவாக அவதரித்த நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கை மிக மிகச் சிறப்புடையது என்பதனை நன்கு உணரலாம்; அறியலாம் அனுபவப்பூர்வமாக.  மனிதனின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘மனிதனின் சிறப்பு’ (1955) என்கின்ற தலைப்பில் 100 வரிகளில் கவி ஒன்றை அருளியுள்ளார். வாசித்து இன்புறலாம்.

   

  மனிதனின் சிறப்பை  அறிந்து   ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்துள்ள மனிதனால் மற்ற மூன்று கோசங்களிலும்  வாழ்க்கையை நடத்தாமல் வாழ்க்கை வாழ்வது சரியா என்பதனை அறிந்துகொள்ள முடியும்.   நடைமுறையில் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படுவதில்லையே!  ஏன்?

  கடினமானதா?

      மற்ற மூன்று கோசங்களில் வாழ்க்கையை நடத்துவது கடினமானதா? மற்ற மூன்று கோசங்கள் என்னென்ன?  அவற்றில் பெரும்பாலோர் கடைசி மூன்று கோசங்களில் வாழ்வதில்லை; வாழ முடிவதில்லை?   ‘வாழ்வதில்லை’ என்றால்  அது தனிமனிதனின் பொறுப்பின்மையையாகின்றது.   ‘வாழ முடிவதில்லை’ என்றால் அதற்குக் காரணம் சமுதாயம்.  பாரதியார் மொழிந்துள்ளதுபோல் ‘வாழவேண்டிய நன்முறையை’ சமுதாயமோ, விஞ்ஞானமோ  மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  அந்த நன்முறையினை  சமுதாயத்தின்  சார்பாகவும் விஞ்ஞானத்தின் சார்பாகவும்  திருவேதாத்திரியம் செய்துகொண்டிருக்கின்றது  என்பது மிகையே அன்று. 

  கடைசி மூன்று கோசங்கள் என்னென்ன?

     அவையாவன:

                  3) பிராணமய கோசம்

                  4) விஞ்ஞானமய கோசம்

                  5) ஆனந்தமய கோசம் (முழுமை பெற்று நிறைவாக நிற்கின்றது மனம்)

       முதல் இரண்டு கோசங்களையும் சேர்த்துத்தான் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படவேண்டியுள்ளது. ஆனால் முதல் இரண்டு கோசங்களிலேயே வாழ்வது என்பது

       அறியாமையின் காரணமாகவோ

                அல்லது

      அறிந்தும் அலட்சியப்படுத்தி வாழ்வதன் காரணமாகவோ

               அல்லது

      தக்க வழிகாட்டுதல் கிடைக்காமலோ மனிதர்கள் அல்லலுறுவதைக் கண்கூடாகப் பார்க்கும்போது  சகமனிதர்களாகிய மனவளக்கலைஞர்களுக்கெல்லாம் கவலை ஏற்படுகின்றது.  கவலை ஏற்பட்டாலும், அந்நிலையினை மாற்றி அமைக்க  மகரிஷி அவர்களின் வழியில், தொண்டுகளிலே சிறந்ததான அறிவுத் தொண்டாற்றி இன்பம் கண்டு வருகிறோம்.   இன்றைய  ‘அறிவிற்கு விருந்து’ (FFC: Feast For Consciousness) – க்கான முன்னுரையை (like starter served in Dinner to create appetite) இத்துடன் முடித்துக்  கொண்டு நேரிடையாக தலைப்பிற்குள் செல்வோமாக.

  பசி என்பது என்ன?

        ‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியுடன் இருக்கிறேன். I am hungry என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு.  அந்தப் பசிக்கு  ‘வயிற்றுப் பசி’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

      வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எது எது, எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும்.   இதனை செய்வது யார்?  நாமா?  இல்லையே! இயற்கைதான்/இறைதான் செய்கின்றது.     வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை முடிந்துவிடுகின்றது.  உண்ணும் உணவை சீரணம் செய்து ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவது  யார் அல்லது எது அனுப்புகின்றது? இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது என்று சொல்ல மாட்டோம்.   

  காரணம் என்ன?

         காரணம் 1911 வரை அவ்வாறெல்லாம்  சிந்தித்ததில்லை மனிதஅறிவு. சிந்தித்துப் பழக்கமில்லை. ஆனால் 1911 ற்குப்  பிறகு மனிதஇனத் தன்மாற்றத்தில்  அல்லது  ஆன்மீகத்தில்  ஒரு புதிய திருப்பத்தை சடுதிமாற்றமாக எட்டியிருக்கின்றது இயற்கை/இறை. எனவே இப்போது  சீரணம் செய்யவைத்து ஏழுவித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவதை  இயற்கை என்கின்றது 1911 ல் ஏற்பட்டுள்ள  சடுதிமாற்றத்திற்குள் வந்த மனிதஅறிவு.   இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது. இது கருத்து என்றுகூட சொல்ல முடியாது. இதுவே உண்மை. எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை.  

  விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

         மனிதன் உண்ட உணவு சீரணிக்கப்பட்டு ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்பப்படும் விந்தையை நினைத்து மகிழலாமன்றோ?  இயற்கையை/இறையை* நினைவில் கொண்டோ அல்லது  முன் வைத்து ஒருமை இயலில் (in advaidic sense or in  Oneness Science)  பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நான், தான், தனது என்கின்ற தன்முனைப்பில்(Ego = Edging God Out= E + G+ O = EGO) மூழ்கிவிடும் அறிவு.  தன்முனைப்பு வந்துவிட்டால் அறிவு தடுமாற்றம் அடைந்து தடமாற்றத்தில் சென்றுவிடும்.  விழிப்புணர்வு அயர்ந்துவிடும்.  அயராவிழிப்புணர்வேதான் இயற்கையின் ஆதிநிலையான பேரறிவு.  பேரறிவேதான் இப்போது ஆறாமறிவாக தன்மாற்றம் அடைந்துவிட்டாலும், மனிதஅறிவு விழிப்புநிலையில் அயர்ந்துவிட்டதால் அது மயக்கத்தில்- மாயையில்(புலன்மயக்கத்தில்) சிக்கித் தவித்துக்கொண்டு வாழ்கின்றது.  காரணம் பேரறிவு நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவும்கூட ஒருவகை விழிப்புணர்வைச்சார்ந்ததே!  பேரறிவு நேரிடையாக மனிதஅறிவாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.  ஓரறிவிலிருந்து ஐந்தறிவாகி மனிதனாகி வந்துள்ளதால் பேரறிவின் பின்னமான மனிதஅறிவு விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியைப் போக்கி அயராநிலைக்கு வந்து அயராவிழிப்புணர்வாகிய பேரறிவோடு கரைந்து ஆனந்தமயகோசத்தில் இன்புறவேண்டும்.  இதுவேதான் மனிதப்பிறவியின் நோக்கங்களிலே பெரும் நோக்கமானதாகவும் உன்னதமானதாகவும் உள்ளது. இந்த அறிவு பற்றிய அறிவியல் உண்மையை மனவளக்கலையின் வழியாக மலரச்செய்து கொண்டிருக்கின்றது  திருவேதாத்திரியம். 

  (*திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள்  இயற்கையை இறை என்றனர். ‘இயற்கையை’ இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்?  காரணப் பெயராக இயற்கையை இறை என்கின்றனர்.  இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை  என்று கூறுகின்றனர்.)

  அளவும் முறையும் அவசியம்

        உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில், உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்படும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கும் சாதாரண உணவுதான் கிடைக்கின்றது.  இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.  வறுமை என்பது சமுதாயத்தின் ஒரு பெரிய கொடும் துன்பம். கருணையாலும்,  சமுதாயத்தின்  மீது கொண்ட அக்கறையின் காரணமாக  “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினையே அழித்திடுவோம்” என்று கூறுகிறார் மகாகவி – பன்முகமாக  சிந்தித்த மாமனிதர்  (multifaceted Personality). அதாவது உலகில் வாழும் ஒருமனிதனுக்குக்கூட உணவு இல்லை என்கின்ற நிலை இருக்கக்கூடாது  எனக்கருதியே அவ்வாறு கூறி அதற்காக “இனியொரு விதி செய்வோம். அதனை எந்தநாளும் காப்போம்” என்கிறார் மகா கவி பாரதியார்.  

      விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவை உணவுக்குழாய்க்குள் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியை செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

     எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்தை உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில்   “அளவும்” (limit) முறையும் (method) அவசியம்.  அளவு என்பது அதிகமாகவோ, குறைவாகவோ, அனுபவிக்கக் கூடாது.  முறை என்பது இயற்கைக்கு முரண்படாமல் ஒத்த முறையில் அனுபவிப்பதாகும்.  இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.

         வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம்.    மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

  1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
  2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
  3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

  அறிவுப் பசி என்பது என்ன?

         இப்போது அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்வோம். வயிற்றுப் பசி என்பது சரி.  அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் என ஐயம் எழலாம்? அறியவேண்டியதை அறியவேண்டும் என்கின்ற அவா எழுந்தால் அதுவே அறிவிற்கானப் பசி ஆகும்.  அந்த அறிவுப்பசியினைப் போக்குவதுதான்  மனவளக்கலை எனும் விருந்து.  மனவளக்கலை அறிவை அறியும் பயிற்சியாயிற்றே!  அது அறிவிற்கு ஆனந்தத்தைத்தான் தரும்.  அதுதான் அறிவு முழுமை பெற்று நிறைவாக இருக்கின்ற நிலை.     வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகிய துன்ப உணர்வை அறிவது அறிவு.  அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

      அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது.  நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

  எத்தகைய உணவு அறிவிற்கு விருந்து?

       உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும்.   அதுதான் சிந்தனை. எனவேதான் சிந்தனையை சிந்தனை விருந்து என்றும் அறிவிற்கு விருந்து என்றும் சொல்கிறோம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது.  இன்பதுன்பங்களை உணர்கின்றது.  இதுமட்டுமேவா அறிவின் வேலை?  இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

  அறிவு அறிய வேண்டியது எது?

      அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிவது அறிவு.  அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு(Capable).  அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது?  அறிவு  ‘தான் யார்’ என்றும்,  ‘தன் இருப்பிடம்’ எது என்றும் அறிய வேண்டும். உயிரினங்களிலேயே இந்தச் சிறப்பை உடையது மனிதஇனம். தன்னை உணரும்போதுதான்  அறிவு முழுமை பெறும்.  மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு

  அறிவுப்பசிக்கான விருந்துதான் திருவேதாத்திரியம்

      அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை/இறை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம். இயற்கையின்/இறையின் தன்மாற்றப்படி பேரறிவிற்கு  எது பிரியமோ அதனை மனிதஅறிவு அறிய வேண்டும். அப்போதுதான் மனிதஅறிவிற்கு பேரின்பம். இந்த நிலை மனிதஅறிவிற்கு இல்லாதபோது மனிதஅறிவு அல்லலுறுகின்றது. அல்லலைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற வேட்கை மனிதஅறிவிற்கு வந்துவிட்டால் அதுவே அறிவுப்பசியாகிவிடுகின்றது. தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல்,  அறிந்தாலும் அதற்கான வழியும் தெரியாமல்  காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.

  அறிவிற்கு ஓய்வேது?

         அறிவிற்கு தன்னை அறிவதில் விருப்பம் வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழு விருந்துமாகும்.  அதுவே அறிவின் முழுமைப்பேறு.  ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து, அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போதுதான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில்  வந்து போனதற்கான சுவட்டினை விட்டுவிட்டுச் செல்லவேண்டும்.  வயிற்றுக்குப் பசி இருப்பதுபோன்று அறிவிற்கும் பசி உண்டு என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.  சிந்தனை விருந்துதான் அறிவின் பசியினைப் போக்க முடியும். அறிவு  அன்னமய கோசத்தைக் கடந்து விஞ்ஞானமய கோசத்திற்குள்ளும், ஆனந்தமய கோசத்திற்குள்ளும் பயணிக்க வேண்டும்.

         இதுவரை அறிந்து கொண்டது என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
  2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
  3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
  4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம்.

  வாழ்க திருவேதாத்திரியம்!           வளர்க திருவேதாத்திரியம்!!

 • சிந்திக்க அமுத மொழிகள்- 318(237)

  வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க அமுத மொழிகள்- 318(237)

  11-07-2020  — சனி


  சிந்தித்து, சிந்தித்து மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து என்கின்ற நூலில் எழுதியுள்ள கவிகள் பல உள்ளன. அந்நூலில் உள்ள கவிகள் ஒவ்வொன்றையும் பல முறைகள் நீங்கள் படிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தக் கவிகளுடைய முழு அர்த்தத்தையும், நான் எந்த அறிவு நிலையில் இருந்து கொண்டு எழுதினேன் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியாது.

                                                             வேதாத்திரி மகரிஷி அவர்கள்.


   . . 

  பயிற்சி—
  1) அவருடைய அறிவு நிலையினை ஏன் நம்மைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்?

  2) அவரது அறிவுநிலையினை புரிந்து கொள்வதால் என்ன பயன்? 

  3) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று விரும்புகிறாரா?

  4)  ‘இல்லை என்றால் மற்றும்  ‘முடியாது என்கிற இரண்டு எதிர்மறை வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறார்?

  5) நாம் கவிகளின் பொருளை முழுமையாக உணரவேண்டும் என்பதில் அவரது கருணை வெளிப்படுகிறதல்லவா?

  6) உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்ற வரிகளை இணைத்துப் பார்த்து சிந்திப்போமே!

  வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

  வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!