C257-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 8/?

இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 8/?

FFC – C257

01-01-2017—ஞாயிறு

இன்றைய விருந்தில்: மகரிஷி அவர்கள் பிறவியின் நோக்கத்தைக் கண்டுபிடித்து, அதனை அடைந்ததில் அனுபவித்த பேரானந்தத்தை நான்கு நிலைகளாக இன்பம் இன்பம் இன்பம் இன்பம் என்கின்ற தலைப்பில் ஒரு கவிதையாக அருளியுள்ளார். அக் கவியின் பொருளை அறிவோம்.
தான் பிறவியின் நோக்கத்தை அடைந்ததை நான்கு நிலைகளாகக் கூறுகிறார்.
1) பிறவியின் நோக்கத்தை அறிதல்,
2) பின்னர் அதனை அடைவது,
3) உயர்வானத் துறவு நிலையை உணர்தல்,
4) முடிவாகத் துறவு நிலையைப் பெறுதல்.
முதல் வரி கூறுவது என்ன?

பிறவியின் நோக்கத்தை அறிந்தது: பேரின்பப் படிகளின் முதல் படியாக பிறவியின் நோக்கத்தை அறிந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஆனால்  “பிறவியின் நோக்கத்தை அறிந்த போதும்” என்றுதான் முதல் வரி சொல்கின்றதே தவிர, பிறவியின் நோக்கம் என்ன என்று சொல்லவில்லை. மகரிஷி அவர்கள் பிறவியின் பயன் இறையுணர்வு பெறுவது என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் இப்பாடலில் அதனை மீண்டும் கூறவில்லை. ஒருவேளை அது ஏற்கனவே தன்னுடைய மாணவர்களுக்குத் தெரிந்ததுதானே என்பதால் அப்பாடல் வரிகளில் ‘பிறவியின் நோக்கம் இறைஉணர்வு பெறுவது’ என்று கூறவில்லை போலும்!

பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதே பேரானந்த நிலையை அடைந்ததாகக் கூறுகிறார். அதாவது,
திக்குத்(திசை) தெரியாத இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்டு வழி தெரியாமல் அவதியுறும்
சாதாரணமான, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்,
தீடீரென ஒளி தெரிந்து, வழி தெரிந்து காட்டில் இருந்து வெளியேறினால் எவ்வாறு இன்பம் இருக்குமோ, அதனைவிட அதிகமாக இன்பம், பிறவியின் நோக்கத்தை தானாகவே கண்டுபிடித்தபோது இருக்குமல்லவா?
இருண்ட வாழ்க்கையில் ஒளி தெரிய ஆரம்பித்ததன் விளைவாக, வாழ்க்கைக்கு லட்சியம் ஏற்பட்டு விடுவதால் ஆனந்தம் இருக்கத்தானே செய்யும்! அதுவும் அது பேரானந்தமாகத்தானே இருக்கும்!

இரண்டாவது வரி கூறுவது என்ன?

 “பின் அந்த எல்லையினை அடைவதற்கு” என்று அடுத்த இரண்டாவது வரி உள்ளது. இந்த இரண்டாவது வரி —  “பின் அந்த எல்லையினை அடைவதற்கு” என்று கூறுவதால், பிறவியின் நோக்கத்தை அடைவதற்கு ஒரு எல்லை இருப்பதாகத் தெரிவிக்கிறார் மகரிஷி அவர்கள். இது வரை பிறவியின் நோக்கம் அறியாத, பயனற்ற பல்லாயிரம் பிறவிகள் வீணாய்ப்போன அறியாமை வாழ்க்கை வாழ்ந்த ஆன்மாவிற்கு பிறவியின் நோக்கம் விளங்கி, அதனை அடையப் போகிறோம் என்பது எல்லை உடையதாகத்தானே இருக்கும். ஆகவே அந்த எல்லையினை அடைவதற்காக மகரிஷி அவர்கள் மேற்கொண்ட வழிகளை மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள் கூறுகின்றன.
மூன்றாம் வரி கூறுவது என்ன?

“அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து,” — மகரிஷி அவர்களே வகுத்துக் கொடுத்துள்ள ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்ட அறநெறியில் வாழ்வதற்குப் பொறுப்பினை உணர்ந்தும். விழிப்புடன் இருந்ததைத் தெரிவிக்கிறார். அந்த எல்லையினை அடைவதற்கு பொறுப்பும், விழிப்பும் எவ்வாறு அவசியம் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். புல்லாய், பூண்டாய், வண்டாய்ப் பல்வேறு விலங்கினப் பிறவிகளைக் கடந்து, அவ்வையார் கூறும் அரிதான மானுடப் பிறவி கிடைத்துள்ளது. எனவே மனிதனாகப் பிறந்ததற்கான பொறுப்பு உள்ளது. அதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு. இந்த பொறுப்பு வந்துவிட்டால், கூடவே அதனுடன் தொக்கியுள்ள அயரா விழிப்பும் வந்துவிடும். அந்த அயரா விழிப்பு(constant awareness—Awareness Is God) நிலைதானே ஆதியாகிய பேரறிவின் நிலை. அந்த பேரறிவின் விழிப்பு நிலையில் இருந்து பிறழ்ந்து இருந்ததற்கான காரணம் மனிதப் பிறவியின் நோக்கம் அறியாமையேயாகும். நான்காவது வரிக்குள் செல்வோம்.

நான்காவது வரி கூறுவது என்ன?

 ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்,” — பொறுப்புடனும், விழிப்புடனும் இருந்தது எதற்காக என்கிறார் இவ்வரியில். அதாவது பொறுப்புடனும், விழிப்புடனும் இறைமையில், இருந்து தனது செயல்களை ஆற்றி, முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் தூய்மை அடைந்து வெற்றி பெற்றதைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

முதல் நான்கு வரிகளை் கூறும் தெய்வீகச் செய்தியினை சுருக்கமாகச் சொல்லிப் பார்ப்போம்
1) பிறவியின் நோக்கத்தை அறிந்து,
2) பின்னர் அந்த எல்லையினை அடைவதற்காக,
3) பொறுப் புணர்ந்த பொறுப்புடனும்,

4) அறநெறியில் விழிப்புடனும்,

5) செயல்கள் ஆற்றி
6) எண்ணம், சொல், செயல் தூய்மை ஆன போது, தான் அடைந்த இரண்டு பேரானந்த நிலைகளை, வாய்மொழியால் எவ்வாறு கூறமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வாறு இருந்தாலும், அந்தப் பேரானந்த நிலையின் விளிம்பிற்கே கொண்டு நிறுத்தியிருக்கிறார் மகரிஷி அவர்கள்.

தான் அடைந்த பேரானந்த நிலைகளில், முதல் நிலையாக பிறவியின் நோக்கம் அறிந்ததையும், இரண்டாவது நிலையாக எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை ஆனதையும் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அத்தோடு பேரானந்த நிலை நின்றுவிட்டதாகக் கூறவில்லை. மூன்றாவது, மற்றும் நான்காவது நிலையாகவும் இரண்டினைக் குறிப்பிடுகின்றார், இறை உணர்வு என்பதனை அவருடைய சீடர்கள், குழப்பமில்லாமல் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையிலே பல்வேறு இடங்களில் பல கோணங்களில் இறைஉணர்விற்கு வரையறைபோல் கூறியுள்ளார்.

அவைகளில் ஒரு சிலவற்றை நாம் பார்ப்போம்.

1) “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கிறார். அதாவது செயலின் விளைவாக சிவனைக் காண்கின்ற வழியே சிறந்த இறை உணர்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
2) இயற்கையின் தன்மையினை உணர்ந்து கொள்வது இறை உணர்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
3) இறை உணர்வு என்பது, இறைவனைப் பற்றி தெளிவாகத் உணர்ந்து கொண்டு இறைவனே தனக்குள் அறிவாகவும், அனைத்திலும் இயக்க ஒழுங்காற்றலாகவும் இருப்பதை அகக் காட்சியாகக் கொண்டு, எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களை முறைப்படுத்திக் கொண்டு ஆன்மாவின் மாசற்ற வாழ்க்கை நிலையே இறை உணா்வு என்கிறார் மகரிஷி அவர்கள்.
4) மனம் தூய்மை அடைந்தால் அந்த வினாடியே இறை உணர்வு கிட்டும் என்கிறார்.
5) இறை உணர்வு என்பதைச் சரியாகப் பெற்றுவிட்டால் வாழ்க்கையே அறநெறியாக அமையும் என்கிறார். அறநெறி வழியாக இறை உணர்வு என்ன என்று கூறுகிறார். அறநெறியே இறை உணர்வு என்கிறார்.

இவ்வாறாக இறை உணர்வு பற்றி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இறை உணர்வு என்றால் இறையை உணர்வது என்று மட்டும் சொல்லிவிடவில்லை. நாம் தனியாக இருக்கிறோம். இறை எங்கோ தனியாக இருக்கின்றது. அதனை நாம் கைகளால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இறைஉணர்வைப்பற்றி, பலகோணங்களில் விளக்குகிறார் மகரிஷி அவர்கள். எனவேதான் இறை உணர்வு பற்றி இத்தகைய வரையறைகள் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்,

இறையே நம் அறிவாக இருந்தும்,
பரிணாமக் கசடுகளால் கலங்கமுற்றிருப்பதால்,

இறை உணர்வு என்பது, மனிதனின் முத்தொழில்களிலும் தூய்மைப் பெறுவதே என்கிறார். இந்த விளக்கம் எளிதாக இருந்தாலும், மனிதன் பழக்கப் பதிவுகளில் மூழ்கிவிட்டதால், முத்தொழில்களிலும் மிக மிகப் பின்தங்கியே உள்ளான். விளக்க வழி வாழ முடியவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. திருவள்ளுவர் கூறும் பிறவிப்பெருங்கடலை நீந்த முடியமால் மீண்டும் மீண்டும் பிறவிச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றது மனிதகுலம். அதனால் தான் திருவேதாத்திரியம்  “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்கின்றது.

இறை உணர்வு என்பது மனித மனம் தூய்மை அடைதலே என்பதால் பிறவியின் நோக்கம் என்ன என்று கூறாமல் பிறவியின் நோக்கம் அறிந்த போது என்று கூறிவிட்டு, பிறகு அந்த எல்லையினை அடைய விழிப்புடனும், பொறுப்புணர்ந்து எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களில் தூய்மை அடைந்த போதும் பேரானந்தம் என்கிறார். மனித மனம் தூய்மை அடைவதே இறைஉணர்வு என்பதனை மனதில் கொண்டுதான் பாடலின் முதல் வரியில் பிறவியின் நோக்கம் என்று சொல்லாமல், பிறவியின் நோக்கம் அறிந்தபோது பேரானந்தம் அடைந்ததாகக் கூறுகிறார். ஆகவே இறை உணர்வு பெற மனத்தூய்மை அவசியம் என்பதனை வலியுறுத்துகிறார். பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது என்பதனை இன்னொரு வகையில் சொல்வதென்றால் பிறவியின் நோக்கம் மனிதன் மனிதனாக வாழ்வது என்றும் பொருள் கொள்ளலாம். மனிதம் மனம் தூய்மை அடைந்தால்தான் அவன் மனிதன். இல்லையெனில் மனித உருவினிலே அவன் மிருகமாக அரைகுறை மனிதனாகத்தான் வாழ்கிறான் என்றே பொருள். இந்தக் கருத்தை மகரிஷி அவர்களின் ஒரு கவியின் வாயிலாக அறிவோம்.

முழுமனிதன்(03.01.1959)

மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,
மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு,
மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்
மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.

… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 ஆகவே விலங்கினத்திலிருந்து கருத்தொடராக வந்துள்ள மனிதஇனம், இன்னமும் பிறர்வளம் பறித்தலான விலங்கினப் பண்பிலிருந்து முழுவதுமாக விடுதலை அடையவில்லை என்பதனால்தான் முழுமனிதன் என்கின்ற தலைப்பின் கீழ், யார் முழுமனிதன் என்று கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு, கவியின் வழியாக தன்னுடைய ஆதங்கத்தையும் தெரிவிக்கும்படி ஆயிற்று மகரிஷி அவர்களுக்கு.

ஆகவே தற்போதுள்ள மனிதனவன் முழுமனிதனாக
மனதை அறிய வேண்டும்,
மதி நிலைக்க வேண்டும்,
மனம் இதமாக இருக்க வேண்டும்,
மனம் உவந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்.
இத்தகைய மனிதன் முழுமனிதனாகிறான் என்கிறார் மகரிஷி அவர்கள். இதுவரை பாடலின் முதல் நான்கு வரிகளில் நம் குருநாதர் அவா்கள் பிறவிப்பயனை அடைந்து வந்த தெய்வீக அனுபவங்களை அறிந்தோம். மனிதன் முத்தொழில்களில் தூய்மை அடைந்தாலே இறையுணர்வு பெற்றதற்கான அடையாளமாகும் போது இத்துடன் மனிதப் பிறவியின் நோக்கம் முடிந்து விட்டதுதானே என ஐயம் எழலாம். மனிதன் மனிதனாக்கூடிய வழிகளை இந்த நான்கு வரிகளும் கூறுகின்றன. ஆனால் மனிதன் தெய்வமாகப் பிரகாசிக்க அடுத்த நான்கு வரிகள் மகரிஷி அவா்களின் அனுபவங்களைத் தருவதோடு, எதார்த்தத்தை புரிந்து கொள்ள சிந்திக்க வைக்கின்ற வகையிலே உள்ளன. அவற்றை அடுத்த விருந்தில் அருந்துவோம். வாழ்க வளமுடன். தொடரும்