C255-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 6/?

இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 6/?

FFC – C255

 25-12-2016—ஞாயிறு

இறைவெளியின் திறனான இயல்பூக்கம் மனிதனின் பண்பேற்றத்திற்கு எவ்வாறு உதவியாக உள்ளது?
சென்ற விருந்தில் இறைவெளியின் இயல்பூக்கம் பற்றி ஆராய்ந்தோம். இப்போது இறைவெளியின் திறனான இயல்பூக்கம், மனிதனின் பண்பேற்றத்திற்கு (பண்பில் ஏற்றம் பெறுவது பண்பேற்றம்) எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்று, மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிய இருக்கின்றோம்.
இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பிலும், அதனுடன் கூடவே குணநலங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்கின்றபோது, பேரறிவின் ஆறாம் அறிவு உயிரினத் தன்மாற்றத்தில்/பரிணாமத்தில், மனித உருவம் வந்ததோடு இயல்பூக்கப் பணி நின்றுவிட்டதாகிவிடுமா? மனித குணநலன்களில் மாற்றம் ஏற்படும் வரை இயல்பூக்கத்தின் பணி தொடர வேண்டுமே! அங்கேதான் மகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்கத்தின் பயன்பாடு வருகின்றது.
ஐயறிவு சீவன்கள் வரையில், இயல்பூக்கத்தால் உருவங்களிலும், குணநலங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அங்கே, தன்னுடைய தன்மாற்றத் தொழிற்சாலையை, இறையேக் கவனித்துக் கொண்டது. அப்போது ஆறாம் அறிவு மனிதன் உருவாகவில்லை.
ஆனால் இறை ஆற்றலின் மனிதகுல தன்மாற்றம்/பரிணாமம் பூர்த்தியாவதற்கு மட்டும் மனிதனுடைய பங்கும் இறையின் பங்கும் உள்ளன. இறையின் தன்மாற்றத் தொழிற்சாலையில் இறுதி கட்ட நிலையில் மனிதனும் அந்தத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான். ஆகவே, முன்னாள் இந்திய ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருப்பப்படி, இறையின் இறுதியான மனிதஇனப் பரிணாமம்(தன்மாற்றம்) பூர்த்தியாவதற்கு மனிதனின், ஆர்வம், ஒத்துழைப்பு, முயற்சி ஆகியவைகளும் அவசியமாகின்றன. அதற்கு, மனிதகுலம் பண்பேற்றம் பெற்று வாழ்வதற்கு, மகரிஷி அவர்கள் கூறும் வழி என்ன?
எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும். ………..என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
1) எந்த ஒரு பொருளையோ,
2) எந்த ஒரு செயலையோ,
3) எந்த ஒரு குணத்தையோ,
4) எந்த ஒரு உயிரையோ
அடிக்கடி நினைந்து வந்தால் இயல்பூக்க நியதியின்படி, அப்பொருளின் தன்மையாய் நினைப்பவரது ஆற்றல்
1) அறிவினிலும்
2) உடலினிலும்
மாற்றம் பெறும் என்கிறார்.
இவ்வாறில்லாமல் எவ்வாறு குணநலன்களில் முன்னேற்றமடைய முடியும்? குணநலன்களில் முன்னேற்றம் என்பது உளவியல் சம்பந்தப்பட்டது. குழந்தை மற்றொரு குழந்தையைப் பார்த்து கற்றுக் கொள்கின்றது. கலைகளில் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளவர்கள் அந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்று விளங்குபவர் யாரையாவது முன்மாதிரியாக (roll model) வைத்துக் கொண்டு முன்னேறுவதில்லையா?!
அடிக்கடி என்றால் அதற்கு ஏதாவது வரையறை உண்டா? அடிக்கடி என்பதற்கு எவ்வாறு வரையறை மற்றவர் கூறமுடியும்? அடிக்கடி என்பது ஆன்மீக சாதகனின் ஆர்வம், விருப்பம், முயற்சி ஆகியவைகளைப் பொறுத்து இருக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பாமலேயே “அடிக்கடி“ என்பது அமைந்துவிடும். காதலிக்கும் காலத்தில் காதலர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி நினைப்பதில்லையா? அதுபோல். ஒரு பொருளோ, செயலோ, குணமோ, உயிரோ, எந்த அளவிற்கு நேசிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு இந்த ”அடிக்கடி” என்பது அமையும்.

மேலே கூறிய, நான்காகிய
1) எந்த ஒரு பொருளையோ,
2) எந்த ஒரு செயலையோ,
3) எந்த ஒரு குணத்தையோ,
4) எந்த ஒரு உயிரையோ,

அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாய் நினைப்பவர் உடலினிலும் அறிவினிலும் இயல்பூக்கத்தினால் மாற்றம் அடைவர் என்கிறார்.
மனிதன், குருவிடம் வந்தமைக்கானக் காரணம் அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவில் மேம்பட வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிவதற்கு பயிற்சிகளோடு, ஆன்மீக சாதகன் தன் செயலில், குணத்தில் மேம்பட வேண்டும். அதற்கு எந்தப் பொருளை உணரவேண்டுமோ அந்தப் பொருளை அடிக்கடி நினைக்க வேண்டும். தான், மெய்ப்பொருளிலிருந்து வந்தவன் என்றும், மெய்ப்பொருளே தானாகவும் உள்ளது எனவும் அறிய வேண்டும் மனிதன். அதற்கு மெய்ப் பொருளை அடிக்கடி நினைந்து வரச் சொல்கிறார் மகரிஷி அவா்கள். அடுத்ததாக மெய்ப்பொருளை உணர்வதற்கு தன்னைத் தகுதி படுத்திக் கொள்வதற்கான செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதனை அடிக்கடி நினைந்து வர வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
மெய்ப்பொருளை உணர்வதற்கு மனிதனுக்குத் தேவையானக் குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு அக்குணங்களை அடிக்கடி நினைந்து வரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
இயற்கையின் ஓர் அபூர்வ நிகழ்வைக் (phenomenon) கண்டு பிடித்து மகரிஷி அவர்கள் இவ்வாறு கூறுகிறார் –
‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது; ரசிக்கவும் முடியாது’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
எனவே, எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும் அடிக்கடி நினைப்பதை, மேலே கூறிய இயற்கையின் அபூர்வ நிகழ்வின் படி மனிதன் சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது
ஒரு விரும்பியச் செயலை, தான் செய்வதற்கான வலிமையையும், திறமையையும் பெறுவதற்கு,
பிறர் செய்யும் அதே செயலை மதிக்கவும் வேண்டும். ரசிக்கவும் வேண்டும்.
அடிக்கடி அதனை நினைக்க வேண்டும்.
‘எண்ணியது போல் ஆக முடியும்’ என்பதும் இயற்கையின் அபூர்வ நிகழ்வு (phenomenon) என்பதால்,
விரும்பிய உயர்ந்த செயலுக்கும், குணத்திற்கும் உரியவராக வேண்டுமெனில்,
அவற்றை அடிக்கடி நினைந்து – நினைந்து, மதித்து – மதித்து, ரசித்து – ரசித்து, போற்றிப் – போற்றி, தளரா, விடாமுயற்சியுடன் அதற்கானதைச் செய்து வரவேண்டும்.
ஒரு வேளை இந்த அபூர்வ நிகழ்வு (phenomenon) ஒருவருக்கு, முன்னரே தெரியாதிருந்து ஆனால், அடிக்கடி ஒன்றை நினைந்து மதித்து. ரசித்து வருகிறார் என்றால், அவா் அந்த ஒன்றில் சிறந்து விளங்குவதற்கான அறிகுறி என்று அதனைக் கொள்ளலாம். இன்றிலிருந்தாவது அவா், மகரிஷி அவா்களின் கண்டுபிடித்துள்ள அபூர்வ நிகழ்வை (phenomenon) மனதில் கொண்டு செயல்கள் புரிந்து வந்தால் அவருக்கு வெற்றி அருகில் உள்ளது.
உயா்ந்த செயலை யார் செய்ய முடியும்? உயர்க்குணம் யாருக்கு இருக்க முடியும்? மனிதனுக்குத்தான் இருக்க முடியும். அந்த முன்னுதாரணமான உயிரையும் அடிக்கடி நினைந்து வந்தால், உடலினும், அறிவினிலும் மாற்றம் காணமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே உயர்ந்த செயலையும், உயர்க்குணமும் உடைய மனிதர்கள் யார்? அவர்களை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது?
அவர்கள்தான் பேரறிவின் தன்மாற்றத்தில் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய மகான்களாவர். அந்த திருக்கூட்ட மரபினில் தற்போது வந்துள்ள, நமக்குத் தெரிந்தவர், ‘திருவேதாத்திரியம்’ அருளியுள்ள நம்முடைய குருதேவரேயாவார். அது என்ன ‘திருவேதாத்திரியம்’? ‘திரு’ உடையதால், அது திருவேதாத்திரியம்.

      1991 ஆம் ஆண்டு வெளிவந்த விரிவாக்கப்பட்ட நான்காம் பதிப்பான ‘ஞானக்களஞ்சியம்’ என்கின்ற நூலுக்கு நூன்முகம் எழுதிய  டாக்டா். ஹரிவிஜயலட்சுமி துறைத்தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி. உடுமலைப் பேட்டை அவர்கள், சுவாமிஜி(மகரிஷி அவர்கள்)  அவர்கள் வகுத்துக் கொடுத்த  புதிய நெறியை ”திருவேதாத்திரியம்” என்று தமிழகமே போற்றுகிற நாள் விரைவில் வரும் என உள்ளப் பூரிப்புடன் கூறியுள்ளார் (ஞானக் களஞ்சியம் பகுதி -1 பக்கம் xv).  அன்னாரை மனம் குளிர்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம். இன்று, இறை/இயற்கை அன்னாரின் விருப்பத்தை, நிறைவேற்றும் முகத்தான்,  நம் வழியாக வேதாத்திரியத்தை, திருவேதாத்திரியம் என அழைக்க ஆரம்பித்துவிட்டது.  வேதாத்திரியத்தை திருவேதாத்திரியம் என அழைப்பதற்கான விளக்கம் பின்வருமாறு:

‘திரு’ என்றால் என்ன? மேன்மைக்கான அம்சம். இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை(prefix added to Holy or Auspicious objects)- உதாரணம்: திருக்கோயில், திருவடி அதே போன்று மதிப்புத் தரும் முறையில் ஒருவரின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை.

குறள் திருக்குறள் எனப்படுகின்றது.  திருமூலர் அருளிய 3047 பாக்களும் திருமந்திரம் எனப்படுகின்றன. ஏன்? மந்திரம் என்பது என்ன? சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகளாகும். அவைகள் நம்பமுடியாத அளவிற்கு விந்தையை நிகழ்த்துவதற்கு வேண்டிய சக்தி வாய்ந்ததாக உள்ள ரகசிய வார்த்தை அல்லது ஒலி. ஆகவே திருமூலர் அருளியப் பாக்கள்

மேன்மையை உடையதாலும்,
மந்திரத்துக்குரிய சக்தியை உடையதாலும்,
திருமூலர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வேதாத்திரியை மகானாக்கிய
அப்பாக்களை வெறும் மந்திரம் என்று மட்டும் சொல்லாமல் திருமந்திரம் எனப்படுகின்றன.
அதுபோல் வேதாத்திரியம் இறைவனைப் பற்றி தெளிவினும் தெளிவாக்கி, மனிதகுலத்தை மேன்மையடையச் செய்து வருவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பாக்கள், உரைநடைகள், அருளுரைகள் அனைத்தும் ‘திருவேதாத்திரியம்’ எனப்போற்றி அழைக்கப்படுகின்றது.
ஆகவே இயல்பூக்க நியதியின்படி மனிதன் தன்முனைப்பு நீங்க குருவை அடைந்து ஆன்மீகச் சாதனை செய்து வருவதுடன், அச்சாதனையில் விரைவிலேயே வெற்றியடைய இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எப்பொருளுக்கு மெய்ப்பொருளையும்,
எச்செயல், எக்குணம், எவ்வுயிர் ஆகிய மூன்றிற்கும் சேர்த்து நம் குருதேவரையே உதாரணப் புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது
நம் குருதேவரின் வாழ்க்கை வரலாற்றினை அறிய வேண்டும்.
அவர் எழுதியுள்ள வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை முழுவதுமாக பல முறை வாசித்து பயன் பெற வேண்டும்.
வேறு பல அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூட வாசிக்கலாம். பயன் தரும்.
அடுத்ததாக நம்குருதேவர் அருளியுள்ள ஞானக் கவிகள் அனைத்தும் நேரிடைப் பொருளைக் கொண்ட மந்திரங்களாவதால் குறைந்த பட்சம் ஒரு முறையாவது, ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்து 1854 கவிகளையும் படித்து முடித்திடல் வேண்டும்.
வாழ்க்கையில் திருவேதாத்திரியத்தை ஓதிடல் வேண்டும். மனதில் எப்பொழுதெல்லாம் சஞ்சலம் இருக்கின்றதோ., அப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பக்கத்தைத் திருப்பி அதிலுள்ள பாக்களை ஓதிடுங்கள். எத்தனைப் பாக்களை ஓதிட வேண்டும் என ஐயம் எழலாம். உங்களின் அப்போதைய மனசஞ்சலம் சிறிது நேரத்தில் நீங்கிவிடும். அது வரை அப்பக்கம், அப்பக்கத்திற்கு முன்னா் அல்லது பின்னர் உள்ள பக்கங்களிலுள்ள பாக்களை ஓதுங்கள். மனம் லேசாகிவிடுவதனை உணரலாம்.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசக்தின் சிறப்பைச் சொல்வதற்கு ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பர். அந்த திருக்கூட்ட மரபினில் வந்த, முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஒட்டத்தில், 1911 ஆம் ஆண்டின் அவதாரப் புருஷரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய திருவேதாத்திரியத்திற்கு உருகாதார் யார் இருக்க முடியும்?  அதனால்தான் இறை/இயற்கை, மகரிஷி அவர்கள்  வழியாக உலகமக்களுக்கு,  சேவையை வழங்க, உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவியுள்து.

கவிகளைப் படிப்பது என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?

1) கவி வாசிப்பது என்பது, மூளை வரை மட்டும் செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும் போது அதற்கு மூளை உதவியாக உள்ளதால் மூளை வரை செல்லும் எனப்படுகின்றது. அதற்கு மேல் அந்தக் கவியால் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்.
2) அடுத்தது மனம் வரை செல்லும். அதாவது மூளையைத் தாண்டி மனம் வரை செல்லும் கவியின் உட்பொருள். அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.
3) மூளை, மனம் வரை சென்றது, பின்னா், கவியின் உட்பொருளை, அறிவு மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பது மற்றொரு வகை. இந்த வகையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது என்று பொருள். அதனால்தான் அறிவு அதனைத் தீவிரமாக சிந்திக்கின்றது.
4) கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக, அமைந்ததாகவும் இருக்கும்.

கவியினை வாசிக்கும் போது, கவி அருளிய அருளாரை நினைந்து போற்றி, அவரது அரிய பெருமைகளை தனக்குள்ளாகவே மகிழலாம். வாய்ப்பு இருந்தால் மற்றவர்களிடம் அதனைப் பற்றி பேசித் தானும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழ வைக்கலாம். ஆனால், நம்முடைய கவனம் அறிவின் உயா்நிலையை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
இது போன்ற மகிழ்ச்சி, அவ்வையார் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் இவ்விரண்டையும் இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வையார்.
ஆகவே வேதாத்திரி மகரிஷி அவா்கள் அருளியுள்ள திருவேதாத்திரியத்திலுள்ள பத்தாவது மந்திரத்திலுள்ள யுக்தியான, இயற்கையின் இயல்பூக்கத்தை பயன்படுத்தி பண்பில் ஏற்றம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம் என உறுதியனை ஏற்போம். அடுத்த விருந்தில், திருவேதாத்திரியத்தின் பத்தாவது மந்திரத்தின் மற்றொரு பகுதியான பிறவிப் பயனை பற்றி அறிவோம்.

தொடரும்