C253-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

C253-FFC 

 18-12-2016—புதன்

சென்ற அறிவிற்கு விருந்தில் திருமூலர் கூறும் முதல் இரண்டு முறைகளில் தெளிவு பற்றி அறிந்தோம். இன்றைய அறிவிற்கு விருந்தில் மற்ற இரண்டு முறைகளில் தெளிவு பற்றி ஆராய்வோம்.

3) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்:

இது எவ்வாறு சாத்தியம் என்று காண்போம். திருவள்ளுவர் கேள்விச் செல்வத்தை அறிவுறுத்துவதற்காகவே ஒரு அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார். அதில் முதலாவதாக இடம் பெறும் குறளைக் கவனிப்போம்.

” செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” ….குறள் எண் 411

“ எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்” … குறள் எண் 416

 

மனிதனுக்கு பல செல்வங்கள் அவசியமாகின்றது. அவற்றில் செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வமே தலைமையானது என்கிறார். கேட்டறிவதைச் செல்வமாகக் கருதுகிறார்.

துன்பத்திற்குக் காரணமாக உள்ளது அறியாமைதான். எதையும் அறிந்து கொள்வதற்கு நம் உள்ளத்திற்கு இரண்டு தேவைகள் அவசியமாகின்றன. அவையான ஒன்று தேடல், மற்றொன்று ஆர்வம். தேடுபவருக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். சலிப்பிருக்காது. மாறாக சுவையிருக்கும். தேடுதலில் பலபடிகள் உள்ளதால், அவற்றினை வரிசையாகக் கூறுவதென்றால் இவ்வாறாகக் கூறலாம். –

1) பார்த்தல்,
2) படித்தல்,
3) கேட்டல்,
4) தெரிந்து கொள்ளுதல்,
5) புரிந்து கொள்ளுதல்,
6) அறிந்து கொள்ளுதல்,
7) தெளிவு பெறுதுல்,
8) நிறைவு பெறுதல்.

அறிவை உடைமையாக, அதாவது செல்வமாகக் கருதி, அறிவுடைமை என்கின்ற ஒரு அதிகாரத்தை இயற்றியவர், கேட்டறிவதனையும் செல்வமாகக் கருதுவதில் நியாம்தானே. ஆகவே திருவள்ளுவர் கூறும் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ள அறிவிற்கான வரையறையின்படி அறிவைத் தெளிவாக்குவதற்கு அறிவை அறிந்த குருவின் வார்த்தையை கேட்பது அவசியமாகின்றது. எனவேதான் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்கிறார் திருமூலர்.

செவிச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதாவது:

1) செவிகளுக்கு உணவாகிய கேள்விச்செல்வத்தை உடையவர், பூலோகத்தில் வாழ்ந்தாலும் தேவர்களுக்கு ஒப்பாவார்.
2) தான் கற்காவிட்டாலும், கற்றவர் கூறுவதைக் கேட்க வேண்டும்.. அது வாழ்க்கையில் தளர்ச்சி(சூழ்நிலை) ஏற்படும்போது துணை இருக்கும்.
3) சேற்று நிலத்தில் நடந்தால் வழுக்கும். அப்போது ஊன்றுகோல் நடப்பவர்க்கு உதவுவது போல ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் உதவும்.
4) ஒருவன், சிறியதாயினும் நல்லவைகளைக் கேட்டால், அவை அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
5) கேள்வி அறிவினை உடையவர்கள் பிறழ உணர்ந்த வழியும் பேதமை தரும் சொற்களைச்
சொல்ல மாட்டார்கள்.
6) கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் செவிடாம் தன்மை உள்ளன.
7) கேள்விச்சுவை அறியாத மனிதர் இறந்தாலும், இருந்தாலும் பயன் என்ன?

அறிவு மேம்படுவதற்கு தெளிவு அவசியமாக உள்ளதால், குருவின் திரு வார்த்தையைச் செவிமடுத்துக் கேட்டுப்பெறும் செவிச் செல்வத்தை வலியுறுத்துகிறார் திருமூலர்.

4  தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

குருவின் திருஉருவத்தைச் சிந்தித்தால் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார் திருமூலர். இது எவ்வாறு நடக்கின்றது? முதலில் கூறிய மூன்றையும் விட அந்த ஞானாசிரியருடைய திருஉருவை மனதில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே நினைவால் தொழுவதும் அறிவிற்கு விளக்கம் தரும் எனப்படுகின்றது. தியானத்திற்கு ஒரு பொருள் தேவைப்படுகின்றது. தியானத்திற்குரிய பொருள், நமக்கு என்ன வேண்டுமோ, அதனை தன்மையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சிலர் சிலைகளை வைத்து தியானிப்பது வழக்கம். உதாரணத்திற்கு புத்தர் சிலையை வைத்து தியானம் செய்யும் பழக்கமும் உண்டு. மனம் ஒருமைப்படும். புத்தா் கூறிய அறிவுரைகளின் தன்மையாய் தியானிப்பவர் ஆவார். அதுபோல் குருவின் திருஉருவத்தை சிந்தித்து வந்தால் குரு கூறும் தன்மைகள் சீடனுக்கு வந்து சேரும் இறை அருளைப் பெறுவதற்கு குருவருள் துணை செய்யும் என்பதால் குருவருளின் பெருமை பற்றி திருமூலர் கூறுகின்றார், அவ்வையார் மற்றும் அறிஞர் திருமூலர் ஆகிய இருவரும் கூறியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். இவ்விரு அருளார்களின் அறிவுரைகள் எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டு, நம்பப்பட்டு பயன் படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது, மகரிஷி அவர்கள் இயற்றிய குருவணக்கப் பாடலில் வாயிலாகத் தெரிய வருகின்றது.

மேலும் பஞ்சபூத தத்துவத்தைப்பற்றி கூறும் போது, வெளி மற்றும் விண்ணின் விகிதாசாரத்தை விளக்க வந்த மகரிஷி அவா்கள் அவ்வையார் கூறும் பாடலை சான்றாக எடுத்துக் கொண்டுள்ளார், ஞானக்குறளில் உள்ள சில வரிகளைக் கவனிப்போம்.

” பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரம் மாறித் தோன்றும் பிறப்பு.”

”நிலம் ஐந்து, நீர் நான்கு, நீடங்கி மூன்று,
உலவை இரண்டு, ஒன்று விண்”

இதிலிருந்து என்ன தெரிகின்றது? அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்த காட்டியவர்களை நினைவுகூர்ந்ததால், அவர்களின் அறிவாற்றல் எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

இத்தருணத்தில், கூடுதலாக விநாயகர் அகவலிருந்து அவ்வையார் கூறும் சிலவரிகளைக் கவனிப்போம்.
”மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே” என்கின்ற வரிகள் மகரிஷி அவர்கள் இன்று எளிமையாக்கிக் கொடுத்துள்ள குண்டலினி யோகத்தைக் குறிப்பிடுகின்றன. காலால் என்பது மூச்சுக் காற்றினால் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து உயரே கொண்டுவருவதைக் குறிப்பிடுகிறார் அவ்வையார்.

மேலும் மகரிஷி அவர்கள் கூறும் இறைவெளியையும், அதன் தன்மாற்றத்ததைப் பற்றிக் கூறும் வரிகளைக் கவனிப்போம்.

” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி
அணுவிற்கணுவா யப்பாலுக்கப்பாலாய்ச்
கணுமுற்றிநின்ற கரும்புள்ளேகாட்டி”

“அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்” என்கின்ற வரி இறைவெளி அணுவிற்குள்ளும் இருக்கின்றது அதற்கு அப்பாலும், பிரபஞ்சத்தைத் தாண்டி எல்லையில்லாததாக(அப்பாலுக்கு அப்பாலாய்) உள்ளது என்கின்ற இறைவெளித்தத்துவத்தைக் கூறுகிறார், அந்த வெளியைப் பற்றி கூறவந்த அவ்வையார்,

” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
சித்தத்தினுள்ளே சிவலிங்கக்காட்டி” என்கிறார் அவ்வையார்.

ஒலி எவ்வாறு வருகின்றது? காற்றிலிருந்து வருகின்றது. காற்று பஞ்சபூதங்களில் ஒன்று. பஞ்சபூதங்கள் வெளியிலிருந்து உண்டாகின. வெளி அமைதியானதால், அதனை அமைதியைக் குறிக்கின்ற ‘சிவம்’ என்கின்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஒலி வருவதற்குக் காரணம் காற்று, காற்றிற்கு மூலம் வெளி. வெளி எப்போதும் சதா(எப்போதும், தொடர்ந்து), அதாவது எப்போதும் மௌனமாக உள்ளதால். சப்பதத்திற்கு மூலம் காற்று, காற்றிற்கு மூலம் பெருவெளியாகிய சதாசிவம் என்கிறார்,

சித்தம் என்றால் மனம், அறிவு என்று பொருள். இறைவெளியே எல்லா உயிர்களிலும் அறிவாக இருக்கின்றதை ”சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி” என்கிறார். அவ்வையார் ஒரு ஞானப்புலவர் ஆகவேதான் ஞானக்குறள் என்கின்ற தலைப்பில் 310 குறட்பாக்களை அருளியுள்ளார்,

அறிவினரைச் சோ்தல் இனிது, அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது என அவ்வையார் கூறியுள்ளதையே, அறிஞர் திருமூலரும் குருவின் பெருமைகளாகக் கூறியுள்ளார். அருளாளர்களின் கூற்றுக்கள் கவனிக்கப்படாமலும், நம்பப்படாமலும் இருக்கின்ற நிலையை மாற்றி, அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது என எடுத்துக் கூறும் பட்சத்தில் அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் ஏற்படும். ஆகவே அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.   வாழ்க வளமுடன்.