C246-எல்லாப் புகழும் இறைக்கே! — 6/?

வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

அ.வி. C246

23-11-2016-புதன்

‘எல்லாப்புகழும் இறைக்கே’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். இதுவரை அறிந்து கொண்டவை:

 பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
 இயற்கையின் இரகசியம் எது
 அதனை அறிய வேண்டிய அவசியம்,
 திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்
 இன்பத்தின் அடிப்படை உண்மை.
 ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம்.
 ‘எவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது சரி.

பொருள் மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவா் 2044 வருடங்களுக்கு முன்னர் கூறியுள்ளதை, திருவள்ளுரை மானசீக குருவாக அமையப்பெற்ற வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிக எளிமையாக்கி தெளிவு படுத்தியிருப்பதை சிந்திக்க இருக்கிறோம். மகரிஷி அவர்கள் நிகழ்ச்சியும் – பொருளும் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை ஆராய்வோம்.

FFC-142-நிகழ்ச்சியும் பெ்ாருளும்.

இப்பாடலின் பொருள் என்ன?

1) இல்லாததே இருப்பன — இல்லாமல் இருக்கின்ற அரூபமே இருக்கின்றது. ஏனெனில் அது ஆற்றலாக இருப்பதால் அது அரூபமாக உள்ளது.. ஆனால் எல்லாத் தோற்றங்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. அது என்றும் நிரந்தரமானது.

2) இருப்பன இல்லாது போம். – தோற்றமுள்ளது இல்லாது போய்விடும். மாற்றமே நிரந்தரமானது. மனிதன் முதற்கொண்டு எல்லாமே மாற்றத்திற்குரியது. ஆண்டியும் சரி அரசனாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் முடிவு என்பதுண்டு. இல்லாமல் ஒருநாள் போய்விடுவர்.

3) நில்லாதவை நிகழ்ச்சியாம் – நில்லாதவை என்றால் என்ன பொருள்? தோற்றங்களெல்லாம் அணுக்களால் ஆனது என்பது தெரிந்ததே. அணுக்கள் யாவும் நிற்காமல் சுழன்று கொண்டேதான் இருக்கின்றது. அவை நிற்பதில்லை. . நின்றால் அது அணுவில்லை. அது வெளியாகிவிடும். அவ்வாறு நிற்காமல் இருப்பதனை நிகழ்ச்சி என்கிறார் ஒருமை விஞ்ஞானம் தந்துள்ள மகரிஷி அவர்கள்.

4) நின்ற மிச்சமே பொருள் — இருக்கத்தால் நொறுங்கி சுழல ஆரம்பித்த துகளின் சுழற்சி நின்று விட்டால் வெளி. அதுவே பொருள் என்கிறார்.. இந்த வெளிதான் நிரந்தரமானது. அதற்கும் ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. எனவே வெளி அனாதை. எனவே தான் இறையை அனாதி என்கின்றனர் மெய்ஞ்ஞானிகள்.

மேலும், இது பற்றி, இணையதள ஆசிரியர் எழுதியுள்ள ‘நான் யார்?’ என்கின்ற நூலில் இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்” என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில் விரிவாக அறியலாம்.

‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற உண்மையினை, விஞ்ஞானத்தின் துணை கொண்டு, சுத்த அத்வைத விஞ்ஞானமாக்கியுள்ளது (Pure Advaidhic Science) திருவேதாத்திரியம். திருவள்ளுவர் ‘புகழ்’ என்கின்ற அதிகாரத்தை சேர்த்து, அதிலுள்ள பத்து குறட்பாக்களின் வழியாக உயர்புகழ் பற்றி கூறியுள்ளார். 233 வது குறளைக் கவனிப்போம்.

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்”

உயர்ந்த புகழைவிட, உலகத்தில் ஒப்பற்ற வேறு ஒரு பொருள் அழியாமல் நிலைத்து நிற்க வல்லது வேறொன்றும் இல்லை என்கிறார். இதற்குச் சான்று திருவள்ளுவரே ஆகும். உலகம் இருக்கும் வரை அவர் தந்த திருக்குறள் வழியாக அவரது உயர்ந்த புகழ் நிலைத்து நிற்கும். அதே போன்று அவருக்குப் பின் 19 நூற்றாண்டுகள் கழித்து அவதரித்த அவரது சீடரும் நமது குருதேவருமான வேதாத்திரி மகரிஷியின் உயர்ந்த புகழ் அவர் அருளியுள்ள வேதாத்திரிய அறிவின் ஒளிவிளக்கு வழியாக இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அத்தகைய குருபிரான், நாமும் அந்நிலையை எய்த புகழ், உயர்புகழ் என இரண்டாகப் பிரித்து மனிதனுக்கு உயர்புகழ் அவசியம் எனக் கருதி தினசரி சங்கல்பங்களில் ஒன்றாகச் சேர்த்துள்ளார்.

ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மை தெரிவிப்பது யாதெனில், ஆதியில் இருந்த ஒன்றே நாம் காணும் எல்லாத் தோற்றங்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஆதியில் இருந்த அந்த ஒன்றே தான் நாம் எல்லோருமாக உள்ளோம். ஆகவே மனிதன் செய்யும் செயல்களுக்காக (நிகழ்ச்சிகள்) வரும் புகழ் யாரைச் சார்ந்ததாக இருக்க முடியும்?
இந்த கோணத்தில் சிந்தித்தால் புகழ் யாருக்குரியது என்று தெரிய வரும். ஆதியில் இருந்த ஒன்றேயாகிய இறைக்கே உரியது எனத் தெளிவாகின்றது. அப்படி இருக்கும் அந்த புகழுக்கு மனிதன் சொந்தம் கொண்டாடுவது எவ்வாறு பொருந்தும். எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்?

மனிதனின் நற்செயல்களுக்காக வரும் விளைவாக புகழாக இருக்கும்போது, புகழ், எவ்வாறு இறைக்குரியதாகும் என ஐயம் எழலாம்.  “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கின்றபோது மனிதனின் நற்செயல்களுக்கு விளைவாக வரும் புகழ் யாருடையதாக இருக்கும்?” இறைவனுடையதாகத்தான் இருக்கும். இதனை உறுதிபடுத்துகின்றது ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கின்ற புனித வாக்கும்.

இறையின் திரு விளையாடலில் மனிதன் ஒரு கருவிதானே தவிர அவனே கா்தா இல்லை.” என்கின்றனர் இறையை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக உணர்ந்த மெய்ஞ்ஞானிகள். ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத தத்துவத்தின்படியும் இறைதான் எல்லாமாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது என்கின்ற போது மனிதன் செய்யும் நற்செயல்களின் பலனான புகழும் இறைக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும். ‘அப்படியில்லை மனிதனுக்குத் தான் புகழ் உரித்தானது’ என்றால் மனிதன் இறையிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்வதாகிவிடும்.
மனிதன் இறைக்குரிய புகழை தனது என்று சொன்னால் என்ன ஆகிவிடப் போகின்றது? இறை என்ன கோபித்துக் கொள்ளுமா? இறையின் மகன் தானே மனிதன். அதனால் ஏன் பரமபிதாவாகிய இறையின் புகழை தனது என்று சொல்வதானால் என்ன தவறு? இது போன்று ஐயங்கள் மனித மனங்களில் இருக்கும், எழும்.

அத்வைதியாக வேண்டிய பயிற்சியில், இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தன்முனைப்புத் திரையை நீ்க்க வேண்டியது கடைசி நிலை. “தன்முனைப்பு கரைந்துபோம். காணும் தெய்வம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும். அத்வைதியாவதற்கு மட்டுமே தன்முனைப்பை அகற்ற வேண்டும் என்பதில்லை. தன்முனைப்பு (Ego—ஆணவம்) எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக இருப்பதால் வாழ்க்கையில் துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கு தன்முனைப்பை அகற்றியேத் தீர வேண்டும். தன்முனைப்பு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற அமைதி வெடிகுண்டு (Silent Bomb.) இந்த தன்முனைப்பாகிய அமைதி வெடி குண்டு அன்றாட வாழ்வில் கொள்ள வேண்டிய மனித உறவுகளில் வெடிப்பதுதான் சினம், வெறுப்பு, பொறாமை, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகளாகும். இவற்றின் அளவு அதிகமாகும் போது பஞ்சமகாபாதகங்களாக உருவெடுக்கின்றன.

இறையினுடைய புகழை மனிதன் தனதாக்கிக்கொள்வதால் என்ன வந்து விடப்போகின்றது? என ஐயம் எழலாம். இறையே நானாகவும் எல்லாமாகவும் இருக்கின்றது எனக் கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் உறுதி படுத்தும் பெருமையை விடவா இப்புவியில் வேறு புகழ் உள்ளது? ஐயனின் ஆட்சியின்றி ஆளுகின்ற ஆட்சியில் மனிதன் ஒரு கருவி மட்டும்தான். எனவே மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது ஒருவித மாயை. எனவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் காந்த தத்துவப்பாடலில் மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை நினைவில் கொள்வோம்.

FFC-142- போருள் புகழ் செல்வாக்கு புலனின்பம்

28-06-1990 அன்று கலிபோர்னியா மாநிலத்தில் யக்காவேலி நகரத்தின் வன ஆசிரமத்தில் இருந்தபோது வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதியவை காந்தத் தத்துவப் பாடல்கள். பன்னிரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார். பன்னிரன்டு பாடல்களுக்கும் மகரிஷி அவர்களே விரிவுரையையும் எழுதியுள்ளார். இது போன்று மகரிஷி அவர்கள் உலக சமாதான நூலிலும் பாடல்களுக்கு அவரே விளக்க உரை எழுதியுள்ளார். மற்றுமொரு நூலான “அருட்பேராற்றலின் அன்புக் குரல்” எனும் நூலிலும் பாடல்களுக்கு அவரே விரிவுரை எழுதியுள்ளார்.

உலக சமாதானம் எனும் நூலில் பாடல்களுக்கு தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தை முகவுரையில் குறிப்பிடுகின்றார். பொதுவாக மெய்ஞானிகள் கவிகள் அருளியிருக்கிறார்கள். ஆனால் இது வரை கவிகள் அருளியவரே அதற்கான விளக்கவுரை எழுதியதில்லை என்றே தெரிகின்றது. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகுதான், பிறரால் விளக்கவுரை எழுதப்படுகின்றது. இதில் அந்த மெய்ஞ்ஞானி எந்த உள்நோக்கத்துடன் அந்தக்கவியினை எழுதினாரோ அந்த உள் நோக்கம் முழுவதும் வெளிப்பட்டுள்ளதா என்றால் சந்தேகமே. ஆனால் மகரிஷி அவர்கள் மட்டும் உலக சமாதானப் பாடல்களுக்கும், காந்தத் தத்துவப் பாடல்களுக்கும், அருட்பேராற்றலின் பாடல்களுக்கும் விளக்கவுரையும் அருளியுள்ளார்.

உலக சமாதானம் எனும் நூலுக்கு விரிவுரை எழுதும் போது தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். பாடல்களை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், எந்த உள்நோக்கத்திலிருந்து அந்தக் கவிகள் உதித்தன என்பதைத் தெளிவு படுத்தவும் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள். காந்தத் தத்துவ நூலில் முகவுரையில் மகரிஷி அவர்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்.” எனக் கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். எனவே இவ்வளவு முக்கியமான கவிகளுக்கும் அவரே விளக்கவுரை நல்கியுள்ளார்.

காந்தத் தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை‘ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக்கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடலாக இருக்கின்றது. அந்த மனத்தூய்மை என்கின்ற பாடலில் வரும் முதல் வரியினிலே ‘பொருள் புகழ் செல்வாக்கு புலன் இன்பம் நான்கிலே’ என ஆரம்பித்து அடுத்த வரிகளில்
‘புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்‘ என முடிகின்றது.

இப்பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விளக்கவுரையை விரிவாக அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து முழுவதுமாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். இருப்பினும் இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்து கொள்வோம். பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து விழிப்போடு அறநெறியை பழகிக் கொள்வதில்லை, பல் பிறவிகளாக கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவுகளாகிய பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம்(செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகுகின்றது.

ஆசை பெருகுவதால்,

1) இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.
2) அதற்கேற்ற செயல்களால் உடல் கெடுகின்றது. உள்ளம் கெடுகின்றது. மனித உறவில் இனிமை கெடுகின்றது.
3) தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடியாமலும், நிறுத்தவும் முடியாமலும் தேக்கம் கொண்டு
4) மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.
அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்போர்க்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாகக் கூறுகிறார் அப்பாடலின் விரிவுரையில்.

இன்றைய சிந்தனையின் சுருக்கம்
1) பொருள், நிகழ்ச்சி பற்றி அறியப்பட்டது.
2) தன்முனைப்பு என்பது அமைதி வெடிகுண்டு (Silent Bomb.)
3) பிறர் வளம் பறித்துண்டு வாழும் விலங்கினப்பண்பே பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம்(செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகுகின்றது.

இதன் தொடர்ச்சியினை அடுத்த அறிவிற்கு விருந்தில்  சிந்திப்போம்.