C242-எல்லாப் புகழும் இறைக்கே! –2/?

வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

lotus

C242-எல்லாப் புகழும் இறைக்கே! –2/? 

அ.வி. C242

09-11-2016 – புதன்

FFC-138-குறள் எப்பொருள்

 

இன்றைய சிந்தனையை திருவள்ளுவரின் அறிவாற்றலின் துணையுடன் துவங்குவோம்.

குறள் 351 – விளக்கம்—இக்குறளில் பிறவி ஏன் துன்பமாக உள்ளது என்கிறார் திருவள்ளுவர்.

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

குறள் 423 – விளக்கம்—இக்குறளில் எவ்வாறாக அறிவு இருக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் உண்மையானப் பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.

துன்பங்களுக்குக் காரணம்:

     மேற் கண்டுள்ள இரண்டு குறட்பாக்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் பொருள், மெய்ப்பொருள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும். அறிந்தாலும் அறிந்தபோது அறிந்ததோடு சரி, அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும். அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும். அறியாமை என்கின்ற குறைபாடு அறிவிற்கு இருந்தால் துன்பம்தான் வரும். ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்‘ வித்தியாசம் எந்த அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு பற்றுக்கள் நீங்கிவரும். பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும். பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

பேரானந்தத்தின் திறவுகோள்கள்:

FFC-138-பேரானந்தத்தின் திறவுகோல்கள

இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 இல் அறியலாம். அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்த பேரானந்த நிலைகளை நான்கு படிகளில் கூறியுள்ளார்.

ffc-137- இன்பம் இன்பம் இன்பம் இன்பம்

பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது, பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (Fractioned) மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால் குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட வேண்டும். அப்போதுதான் மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்கும்.

    அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது, ‘தான்’, ‘சமுதாயம்’, ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது. எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும்.

பொருள் பொருளல்ல—காரணம்?

     மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து. இந்த உலகம் பொய்யானது(the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்! ஆனால் சுத்தஅத்வைதத் தெளிவு வர வர ஏன் வேதாந்திகள் ‘உலகம் பொய்யானது’ என்று அவ்வாறு கூறுகின்றனர் என்பதும் தெரியவரும்.

இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமமோ அறிவுபூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது.

எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ,
அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் பொருள் என்றும்,
அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது.
அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.
பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம்.

முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் பொருள் பொருளல்ல என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும்.

நிகழ்ச்சி:

பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா? எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன?

தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால், மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. வாடி, மலரானது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?
மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் அங்கு இல்லை அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு, மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் நான்கு அடிகளைக் கொண்ட பன்னிரண்டு செய்யுட்களை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் நான்காவது செய்யுளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

மலர் வழியே விளங்கும் மறைபொருள்:

FFC-138- பரமணுக்கள்

48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து, சுத்தஅத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் இயற்கையும் இறையையும் ஒன்றே எனக் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு அரூபமான இறை தன்னுடைய சரித்திரத்தைக் கூறமுடியும்? இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் இயற்கை/இறை ஏற்படுத்தாத திருப்புமுனையை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக ஏற்படுத்தியுள்ளது.

வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்று கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் அதனை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களைத் தரிசிக்கின்றவர்கள் அனைவருமே அவரது சிந்தனாப்பள்ளியிலே மாணவர்களாகி நீடித்தால் அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. அப்படியானால் என்ன அர்த்தம்?

அடுத்த அறிவிற்கு விருந்தில்  வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களுக்குள்ள கடமையையும் பொறுப்பையும் என்னவென்று சிந்திப்போம்.

இன்றைய விருந்தின் சுருக்கம்:

1)   பொருள், மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம்.

2)   பேரானந்தத்தின் இரண்டு திறவுகோல்கள்.

3)   மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் (கண்டுபிடித்தல் இரண்டு-செயல்படுத்துதல் இரண்டு)எய்தினார்.

4)   மலர் ஒரு பொருளல்ல. நிகழ்ச்சியே! பிரபஞ்சம் எனும் மேடையில் மலர் என்கின்ற நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.

வாழ்க அறிவுச் செல்வம்                                                                         வளர்க அறிவுச் செல்வம்