வேதாத்திரியார் – ஓர் அகராதி-2/? (FFC-308)

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

lotus

வேதாத்திரியார் – ஓர் அகராதி -2/5

                            FFC-308           

18-03-2022-வெள்ளி

உ.ச.ஆ: 18-03-37

வாழ்க வளமுடன்!

      சென்ற அறிவிற்கு விருந்தில்,

         அகராதி என்றால் என்ன,

 வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில்                   மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,

   ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,

 சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,

 அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,

    சாலச்சிறந்த வழிபாடு எது என்பனவற்றை எல்லாம்  

     அறிவை விரித்து சிந்தனை ஆற்றி,

திருவேதாத்திரியத்தால் ஆறாமறிவின் திறனையும் திறமையும் வளர்த்துக் கொண்டு,

  வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளோம்.

     இன்று அதன் தொடர்ச்சியாக வாழவேண்டிய முறை என்ன என்பது பற்றி சிந்திக்க ஆரம்பித்து மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.

   வாழ வேண்டிய முறை என்பது என்ன? 

    மீண்டும் இப்போது இல்லறவியலில் இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளை நினைவு படுத்திக்கொள்வோம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும்.        . . . குறள் எண்:50

 பொருள்:

       இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார் திருவள்ளுவர்.

    ‘வாழவேண்டிய முறை’ப்படி என்றால் என்ன என்று ஐயம் எழலாம்.  அறநெறிப்படி வாழ்தல் என்பதே வாழ வேண்டிய முறை ஆகும். அடுத்த ஐயம்,‘அறநெறி என்றால் என்ன’,என்பது.  மனிதஇனப் பரிணாமத்தை ஆராய்ச்சி செய்து வரும்போது, அறம் தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்துள்ளார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அந்நிகழ்ச்சியினை அவர் வாய் மொழியாகவே அறிந்துகொள்வோம். 

gurudevar

     அறத்தின் தோற்றம்(20-12-1959)

பிறஉயிர் உணர்தலாய் பெற்றிடும் சுகதுக்க அளவினை

    உறவு கொண்டுள்ளத்தால் யூகித்து உணர்ந்திரங்கி     உதவும்

       சிறந்த திருப்பம் அறிவில் சிந்தனையில் முதல் உலகில்     பெற்ற நாள்

 அறம் தோன்றிற்றது மதமாம்; அதை வளர்த்தோர் பெயர்களினால் பல ஆயிற்று.

                       . . . மாக்கோலம்–(21-12-1959-அறத்தின் தோற்றம் என்கின்ற தலைப்பில்)

                                     … ஞா.க. எண் 494-அறமே மதம் என்கின்ற தலைப்பில்

 அறத்தின் மூன்று கண்கள்:

      ++ம் என்கின்ற மூன்று சொற்களைக் கொண்ட அறத்தைக் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள் அதற்கு மூன்று கண்கள் இருப்பதனையும் கண்டுபிடித்துள்ளார்,  அவையே ஒழுக்கம், கடமை, ஈகை என்கிறார். இரண்டு கண்கள்(physical eyes) ஏற்கனவே மனிதனுக்கு உள்ளதே! புதிதாக  மூன்று கண்கள் தேவையா?  மற்ற உயிரினங்களுக்கும் கூட இரண்டு கண்கள் உள்ளன? புலிக்கு உள்ள இரண்டு கண்கள் மானைப் பார்த்தால் அதனைக் கொன்று உணவாக்கிக் கொள்ள உதவுகின்றது. விலங்கினத்திலிருந்து வந்த ஆறாம் அறிவுடைய மனிதனுக்கு இருக்கின்ற  இரண்டு கண்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டுமல்லவா?

     சாதாரண  இரண்டு கண்கள்  புலன்களாக மட்டுமே செயல்படுகின்றன. நல்லவற்றையும் பார்க்கும். தீயவற்றையும் பார்க்கும்.  எனவே ஆறாம் அறிவு மேலோங்கிய நிலையில் அதே கண்கள் புலன் உணர் கருவியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல்  பார்க்கின்ற பொருட்கள் புனிதமாகக்கூடிய, மக்களெல்லாம் தூய்மை அடையக்கூடிய உள்ளொளியை பாய்ச்சுவதாகவும் அமைதல் வேண்டும்(துரிய தவத்தில் ஞானாசிரியரின்(வேதாத்திரி மகரிஷியின்) அருளப்பட்டுள்ள ஆசியினை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்).

    புலன் உணர் கருவியான கண்கள் வழியாக, உள்ளொளியைப் பாய்ச்சுவதற்கு  தேவைப்படுவதுதான் அறமென்னும் மூன்று அகக்கண்கள்.   சாதாரண கண்கள்(ordinary physical eyes), கண்களுக்குத் தெரிவது போல் கண்களுக்குத் தெரியாத கண்கள்(not physical eyes).  ஆனால் மனிதனின் செயலில் புலப்படுவது  அறக்கண்கள். மறைபொருளான மெய்(இறை), உயிர், மனம் ஆகிய மூன்று மறைபொருட்களை அறிந்து கொள்ள அறக்கண்களாகிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் திறக்க வேண்டும்.  சிற்பி சிலையை வடிவமைக்கும்போது கண்களை கடைசியில் வடிவமைப்பார்.  அதுவரை கல்லாகவே தோன்றிய அந்த சிற்பம் கண்கள் திறக்கப்பட்ட பிறகு உயிரோட்டம் பெற்றதாக மாறும்.  அதே போன்று ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அறக்கண்கள் வாழ்வில் திறந்த பிறகுதான் மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது. 

 வாழ்வாங்கு என்றால் என்ன?

      ‘வாழ்வாங்கு’ என்று திருவள்ளுவர் கூறியதை, பரிமேலழகர் வாழ்வு, ஆங்கு(வாழ்வு+ஆங்கு) என்று பிரித்து அதற்கு ‘இல்லறத்தோடுகூட’ என்று பொருள் கொள்கிறார்.  அதாவது ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ என்பதற்கு இல்லறத்தில் வாழ்பவன் என்கிறார். மக்களெல்லாம் இல்லறத்தில்தான் வாழ்கின்றனர். எனினும்  இல்லறத்தில் வாழ்கின்ற அனைவரையும் குறிப்பிடவில்லை பரிமேலழகர். ‘ஆங்கு’ என்பது ‘அங்கே=இல்லறத்தில்’ என்று பொருளாகின்றது.  ஆங்கு (இல்லறத்தில்), வாழ்பவர்களை  மட்டுமே இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் என்று பொருள் கொள்கிறார். அப்படியானால் மற்றவர்கள் இல்லறத்தில் வாழ்ந்தும் வாழாதவர்கள் என்று பொருளாகின்றது. எப்படி மெய்ஞ்ஞானத்தில் பொருள், மெய்ப்பொருள் என இரண்டாகப்பிரித்து பேசப்படுகின்றதோ, அதுபோல் இல்லறத்தில் இருப்பவர்கள்,  வாழ்பவர்கள்,  வாழாதவர்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றனர்.

 ஆங்கு(அங்கு) வாழ்பவர்கள் யார்?

     அப்படியானால் இல்லறத்தில் வாழ்பவர்கள் என்பவர்கள் யார் யார்?  ‘வாழ்தல்’ என்கின்ற இலக்கணத்திற்கேற்ப(இல்லற தருமத்திற்கேற்ப) வாழ்பவர்களைத்தான் வாழ்பவர்கள் எனக் கருதுகிறார் பரிமேலழகர்.  அப்படி வாழும்போதுதான், ஆங்கே (இல்லறத்தில்) வாழ்வு நடைபெறுவதாகக் கருதுகிறார். ஐந்தாவது அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு பொருள் கூறுகின்றபோது இருபத்து நான்காவதானபுகழ்’ என்னும் அதிகாரத்தில் கடைசியில் உள்ள  குறளை நினைவு படுத்துகிறார் பரிமேலழகர். அக்குறள் என்ன என்பதனையும் அறிந்து கொள்வோம்.

dheaivappulavar

            புகழ்(அதிகாரம் 24)

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய

 வாழ்வாரே வாழா தவர்                 . . . . குறள் எண் 240

 கருத்துரை:  தமக்குக் கெட்ட பெயர் உண்டாகாமல் வாழ்பவரே வாழ்பவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவர் இறந்தவர் ஆவார். 

ஆகவே அறக்கண்கள் திறந்து வாழும் வாழ்க்கையிலேதான்   ‘மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது’ என வேதாத்திரிய அகராதியினை நம்முள்ளே வைத்துள்ள மனவளக்கலைஞைர்களாகிய நாம் கூறுகின்றோம்.

 தன்னை அறியாத அறியாமை:

       மெய், உயிர், மனம் ஆகிய மூன்றையும் கருத்தியலாக தெரிந்து கொள்வதோடு, செய்முறைப்படுத்துவதுதான் இறை உணர்வு.  அந்த இறைஉணர்வு, அறவுணர்வில்லாமல் சாத்தியமாகாது. இறைஉணர்வும் அறஉணர்வும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.  எவ்வாறு ரயில் வண்டி தடம்பிறழாமல் ஓடுவதற்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியமாகின்றதோ அதுபோல் வாழ்வாங்கு வாழ இறைஉணர்வும், அறஉணர்வும் அவசியமாகின்றன.    எப்படி எல்லா பாவங்களுக்கும் தன்முனைப்பு ஆணிவேராக உள்ளதோ அதுபோல் எல்லா அறியாமைகளுக்கும்  ‘தன்னை அறியாத அறியாமை’ முதன்மையானதாக உள்ளது(Out of all ignorances ‘not knowing the self’ is the prime ignorance and it is the root cause for all ignorances resulting to all sins). மனிதப்பிறவியின் நோக்கம் அறியாதஅறியாமை அதாவது தன்னை அறியாத அறியாமை திருவேதாத்திரிய வாழ்வியல்-அகராதியால் நீக்கப்படுகின்றது.

 நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்:

     வாழ வேண்டிய முறையைப் பற்றிப் பார்த்தோம்.  குடும்பத்திலும், சமுதாயத்திலும் நன்முறையில் நடந்து கொள்வதே வாழவேண்டிய முறையாகும். அதனால்தான் ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.  குடும்பம் என்று சொல்லாமல் ‘நல்ல’ என்கின்ற பெயரெச்சத்தைச்(adjective)  சேர்த்து நல்ல குடும்பம் என்கின்றனர்.  எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பம் என்று சொல்லாமல் குடும்பத்திற்கு பெயரெச்சத்தைச் சேர்த்து ‘நல்ல குடும்பம்’ என்று கூறுகின்றனர்.          

   குடும்பத்தில் கணவன் மனைவி, தாத்தா, பாட்டி, மகன், மகள் ஆகியவர் இருப்பர். ஆறுபேர் இருக்கின்ற குடும்பம்  பல்கலைக்கழகமா? எப்படி? பல்கலைக்கழகம் என்பது பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தி தேர்வு நடத்துவது மற்றும்  ஆராய்ச்சிகள்  நடத்தும் ஓர் உயர்கல்வி நிறுவனம். அவ்வாறிருக்க  குடும்பம் எதற்காக  பல்கலைக்கழகத்தோடு ஒப்பிட்டு உயர்த்திச் சொல்லப்படுகின்றது?  பல்கலைக்கழகத்திற்கான பொருளில் பார்த்தால் குடும்பத்தையும் பல்கலைக்கழகம் என்பது கூட சரியே!  அதாவது குடும்பம் என்பது என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறம் நடத்துகின்ற அமைப்பே குடும்பம் ஆகின்றது. சமுதாயத்தின் ஒரு சிறிய அலகே(unit) குடும்பம்.    ஆணும்,பெண்ணும் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி ஆவதற்கு முன்பு ஒருவேளை,  வாழ்வியல் பாடத்தைக்  கற்காதிருந்தால், குடும்பமான பிறகாவது இருவரும்  பொறுப்புடன் குடும்பத்தை வாழ்வியல் விஞ்ஞானத்தை கற்கும் களமாக பயன்படுத்திக் கொண்டும் (to use family as a field of  learning Science of living), அதே நேரத்தில், அவர்களது  குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் நிறுவனமாக செயல்பட வேண்டியிருப்பதால்  அக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.  

வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

    ‘மக்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழவேண்டும்’ என்று  மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான திருவள்ளுவர் விரும்பியது,  திருவள்ளுவரின் இருபதாம் நூற்றாண்டின் சீடரான மகரிஷியிடம் நிறைவேறியுள்ளது என்றால் அது மிகையாகாது. மேலும் மகரிஷி அவர்கள் தான் வாழ்வாங்கு வாழ்ந்ததோடு தன்னுடைய மாணவர்களையும் மனவளக்கலையின் வாயிலாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அகராதியாகத் திகழ்கிறார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு அலாதியான ஆனந்தம் ஏற்படுகின்றது.   மகரிஷி அவர்கள் எவ்வாறு வாழ்வாங்கு வாழ்வது என்பதனை இறைவணக்கப்பாடலில் கூறியுள்ளதனை இங்கே நினைவு கூர்வோம்.

இறைவணக்கம்

ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,

  அணுவென்ற  உயிராகி, அணுக்கள் கூடி,

மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,

  மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,

பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

  பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,

நீதிநெறி உணர் மாந்தராகி,  வாழும்

  நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

                  . . . .. வேதாத்திரி மகரிஷி.  –  ஞா.க. கவி எண் 1

 திருமணப்பந்தம் எதற்காக?

         ஆணும் பெண்ணும் உயிரினப் பரிணாம அபிவிருத்திக்காக இயற்கையிலேயே அமைந்த  பாலுணர்வுத் தேவைக்காக மட்டுமே திருமண பந்தத்தில் இயற்கையால்/இறையால் இணைக்கப் படுவதில்லை.

      ‘‘*வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிற பட்டினத்து சுவாமிகள் கண்டுபிடித்த பிறப்பு-விதியின்படி(Law of birth),

       முன் பிறவியில் ஆற்றிய வினைப்பயனை அனுபவிக்கவே  ஆன்மாவிற்கு பிறவியினை  ஏற்படுத்தி,  

                அவ்வாறு பிறவி எடுத்துள்ள ஆணும். பெண்ணும் திருமணபந்தத்தால் இணைக்கப்பட்டு,

                தான் கொண்டு வந்த சஞ்சித கர்மா மூட்டையைக் காலி செய்தும், நல்ல பிராரப்த, ஆகாம்ய

                கர்மாக்களை நிரப்பியும்,  

               இப்பிறவியிலேயே பிறவியின் பயனை அடைந்தும்,

              ஒரு வேளை பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவுகளை வெற்றி கொள்வதாக இருக்கும்

              பட்சத்தில்,  பிறப்பு-விதிக்கு ஏற்ப பிறப்பு ஏற்படுவதால்,

           அடுத்த பிறவியிலாவது பிறவிப்பயனை எய்துவதற்கேற்ப இப்பிறவியின் முடிவில் தன்னை                   கருவில் திருஉடையவராக்கிக் கொள்ளும்,

        அதேநேரத்திலும் தனது  வம்சாவளிக்கு நல்வினைப்பதிவுகளை நிரப்பிய சஞ்சித மூட்டையைக் கொடுத்தனுப்பி, கருவிலேயே  திருவுடைய  வம்சாவளியினை உருவாக்கவுமே திருமண பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது இயற்கையால்/இறையால்.  இந்த அறிவினை/தெளிவினைத் தெரிய வைப்பது திருவேதாத்திரிய வாழ்வியல் அகராதியே!

       மற்ற உயிரினத்திற்கு கடைசி வரை குடும்ப அமைப்பு அவசியமில்லாதபோது,  மனிதஉயிரினத்திற்கு மட்டும் இயற்கையால்/இறையால் குடும்ப அமைப்பு ஏற்படுத்திய நோக்கம் நிறைவேறுவதற்காக,   அயரா விழிப்புணர்வு(constamt awareness), இணக்கம், சகிப்பு, தியாகம், (Adjustment, tolerance, sacrifice), கற்பனையான எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை  தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம்  கற்பதற்கான களமே  குடும்பம்.  எனவேதான் குடும்ப அமைப்பின் நோக்கத்திற்கேற்ப அமைகின்ற குடும்பத்தை  நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.

      விலங்கினத்திற்கு  குடும்பம் கிடையாது. ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து வந்த மனிதஇனத்திற்கு குடும்பம் அவசியமாக இருப்பதால் அக்குடும்பம் குடும்பக்கலையை பயின்ற/பயில்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும்  என்பது   ஆன்றோர்களின் விருப்பமும், எண்ணமும் ஆகும். 

 இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி:

    வினைப்போகமே தேகம் கண்டாய்’ என்று பிறப்பின் விதி அன்று பட்டினத்து சுவாமிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அது இருபதாம் நூற்றாண்டில், இயற்கையால்/இறையால்  பட்டினத்து சுவாமிகளின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக   மேலும் பிறப்பின்-விதி எளிதாக விளக்கம் ஆக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று அறிந்துகொள்வோம்.  பேரின்ப ஊற்று  என்கின்ற தலைப்பில்  அருளப்பட்டுள்ள கவியின் கடைசி நான்கு வரிகளை மட்டும் நினைவுகூர்வோம்.

Analysis_of_Thought

 பேரின்ப ஊற்று(07-03-1986)

வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே,

நினைவாய் உடலெடுத்தேன், நிலம் மீது விழுந்தபின்னே,

எனை மறந்தேன்! என்றன்வினை மறந்தேன்! இறைவா!

உனை மறந்தேன்! ஆனால் நீ, உள்நிறைந்து எனை மீட்டு,

 இன்ப ஊற்றாய்  நிறைந்த இறைவா! –  எங்கும்

இன்ப ஊற்றாய், அறிவாய், இயங்கும் இறைவா!

     . . . . வேதாத்திரி மகரிஷி.

 இந்த புரிதலெல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது?

     இந்த புரிதல் எல்லாம் எவ்வாறு மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படுகின்றது?  ஆன்மீக வாழ்க்கை மற்றும் உலகியல் வாழ்க்கை என பிரிந்து இருந்த  நிலையினை, இணைத்த வேதாத்திரிய மனிதவாழ்க்கை எனும் அகராதியினை தங்களுக்குள்ளே இறக்கியிருப்பதால்தான் அனைத்து அருளாளர்களின் அனுபவங்களை புரிந்து கொண்டு பயன்பெற முடிகின்றது.    வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரிக்கின்ற அனைத்து அருளாளர்களையும் மானசீகமாக குருவாக எற்றுக் கொண்டு ஆசி பெற முடிகின்றது.

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  மேலும் சிந்திப்போம் 20-03-2022 ஞாயிறு சத்சங்கத்தில் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்.    மேலும் மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.  நாளை 19-03-2022 சனிக்கிழமை சத்சங்க சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சியில் சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

* வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்வினை தான்ஒழிந்தால்

தினைப்போது அளவுநில் லாதுகண்டாய்சிவன் பாதம்நினை

நினைப்போரை மேவு நினையாரை நீங்கிஇந் நெறியில்நின்றால்

உனைப்போல் ஒருவர்உண் டோமன மேஎனக்கு உற்றவரே. 

                                                                  . . .  பட்டினத்தார்

வாழ்க வளமுடன்!                               வாழ்க வையகம்!!

 வாழ்க அறிவுச் செல்வம்          வளர்க அறிவுச் செல்வம்