216-அருளாளர்கள் உலகம் 9/9

அருளாளர்கள் உலகம் 9/9

வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு

11-08-2016-வியாழன்

வணக்கம்.  வாழ்க வளமுடன்.

     ஏற்கனவே நேற்று(10-08-2016) அறிவித்தபடி இன்று சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சிக்கு பதிலாக அறிவிற்கு விருந்து படைக்கப்படுகின்றது.  ‘அருளாளர்கள் உலகம்’ நிறைவுப்பகுதி இடம் பெறுகின்றது.

வாழ்க வளமுடன்.


அறிவிற்கு விருந்து—216

11.08.2016—வியாழன்

    குருவணக்கம் என்கின்ற தலைப்பில் ஐந்து பாடல்களை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  அருள் துறைக்கு நேர்வழியைக்காட்டுவதற்கு முதல் பாடலை இயற்றியுள்ளார். அடுத்த மூன்று  பாடல்களில் குருவை  விளித்துப் பாடுகிறார். குருமார்களை நினைவுகூறும் வகையில் மற்றொரு பாடலை இயற்றியுள்ளார்.    அத்துடன் இல்லாமல்  மேலும் குருவின் தொடர்பு, குருவின் சேர்க்கை, குருவின் உதவி என்கின்ற தலைப்பில் மூன்று பாடல்களையும் இயற்றியுள்ளார். இன்றைய சிந்தனையில்  எவ்வாறு தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார் ஆகிய அருளாளர்கள் மகரிஷி அவர்களுக்கு குருவாக அமைந்தனர் என்று அறிய இருக்கிறோம். எனவே, குருமார்களை நினைவுகூர்வதற்காக இயற்றியுள்ள பாடலை  மட்டும் எடுத்துக் கொள்வோம்.

FFC-62 -PIC - மகான்களின் படம்

FFC-62-PNG-குரு வணக்கம்- அறிவே-பாடல்

பாடல் அறிவுறுத்துவது என்ன?

   தாயுமானவர் அவதரித்த  காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை.  இருப்பினும் தாயுமானவர் எப்படி மகரிஷி அவர்களுக்கு குருவாக அமைந்தார் என்கின்ற ஐயம் எழுகின்றது.

    ஏன் தாயுமானவரை மகரிஷி அவர்கள் குருவாக ஏற்றுக் கொண்டார்?   

    ஏன் தாயுமானவரை தான் குருவாக ஏற்றுக் கொண்டதை நமக்குத் தெரிவிக்கிறார் மகரிஷி அவர்கள்?

    எது தாயுமானவரை மானசீகமாகக் குருவாக மகரிஷி அவர்களை எற்றுக் கொள்ளச் செய்தது? 

  பதிலையும் பாடல் வரிகளிலேயே குறிப்பிடுகிறார்.

 மகரிஷி அவர்கள் தாயுமானவரை குருவாக ஏற்றுக் கொண்டதனை பின்னர் வருகின்ற அவரது சீடர்களுக்கு பாடலின் வாயிலாக தெரிவிக்கக்காரணம்,  அவரைப்போன்றே தாயுமானவரை அவரது சீடர்களும் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைய வேண்டும் என்பதே மகரிஷி அவர்களின் எண்ணம்.  எது மகரிஷி அவர்களை தாயுமானவரை குருவாக ஏற்றுக் கொள்ளச் செய்தது என்பதனை நாம் அறிந்து கொண்டால், நமது உள்ளமும் தாயுமானவரின் அறிவாற்றலைப் போற்றி இயல்பூக்க நியதியின் படி பயன் பெறலாம்.  எது மகரிஷி அவர்களை, தனது குருவாக தாயுமானவரை  ஏற்றுக்கொள்ளச் செய்தது என்பதனை அறிவோம். மகரிஷி அவர்களின் சிறு வயதிலேயே இயற்கை/இறை அதனை முடிவு செய்தது என்றே கூறலாம்.  அந்த நிகழ்வை இங்கே நினைவு கூர்வோம்.

 angingenathapadi

மகரிஷி அவர்கள் பாலனாக இருந்தபோது, அவர் வாழ்ந்த ஊரில் சனிக்கிழமைகளில் பலர் கூடி பஜனைப்பாடல்கள் பாடிக் கொண்டு தெருக்களை சுற்றுவது வழக்கமாம். அடிக்கடி  மேற்கண்ட தாயுமான சுவாமிகள் பாடலைப் பாடுவார்களாம்.  அந்தப்பாட்டில் மகரிஷி அவர்களின் உள்ளம் முழுவதும் லயித்துவிடுமாம்.  இப்பாடலின் மூலம் உணர்ந்து கொண்ட முடிவே, தெய்வம் அரூபம், என்கின்ற தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர உதவியதாகவே கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  குருவணக்கப் பாடலில் அறிவேதான் தெய்வமென்றார் என்கிறார் மகரிஷி அவர்கள். 

   ‘அஞ்சுவதேன் துணிந்துரைப்போம் அறிவேதான் தெய்வம்’ என்று உரைத்த மகரிஷி அவர்களுக்கு தாயுமான சுவாமிகளின் எந்தப் பாடல் உதவியாக இருந்திருக்கும் எனத் தெரிந்து கொள்ள தாயுமான சுவாமிகளின் பாடல்களை ஆராய வேண்டும்.  அவ்வாறு ஆராய்கையில் பல இடங்களில் அறிவே தெய்வம்  என்று கூறுவதனைக் காணமுடிகிறது. அவற்றினை  நினைவு கூர்வோம்.

 “ஆர் அறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்

பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே”.           ….. (பரா.க.5)

 

பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய்த் தோன்றஒரு

வார்த்தைசொல்ல வந்த மனுவே* பராபரமே.    ”.  ….. (பரா.க.12)

                * மனுவே – அறிவுப் பொருளே

சுத்த அறிவாய்ச் சுகம் பொருந்தில் அல்லால்என்

 சித்தம் தெளியாதுஎன் செய்வேன் சிவமே பராபரமே.” ….. (பரா.க.22)

 

“சித்தமிசை குடிகொண்ட அறிவுஆன தெய்வமே

   தேஜோ மயானந்தமே!                            ….. (தேஜோ..8)

 தாயுமான சுவாமிகள் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு என்கின்றனர்.  மகரிஷி அவர்கள் வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டு.  தாயுமானவர், மகரிஷி அவர்களின் நேரிடையான குருவில்லை.  மகரிஷி அவர்கள் தனக்கு முன்னர் அவதரித்த அருளாளர் தாயுமான சுவாமிகளை ஸ்தூல உடல் இருக்கும்போதோ, அல்லது சூக்கும உடலையோ குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை.  தாயுமானவரின்  அறிவாற்றலைத்தான்  மகரிஷி அவர்கள் மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.  காரணம் பாடல் வரிகளில் உள்ள தாயுமானவரின் அனுபவ உண்மைக்கண்டுபிடிப்பு, உள்ளுணர்வைத்(பிறரின்) தூண்டி அறியாமை நீங்கச் செய்து, தெய்வம் அரூபம் என்பதனையும், அந்த அரூபம் அறிவே என்கின்ற  பேருண்மையினையும் தெளிவாக்கியதால் அவரை மானசீக குருவாக வணங்குகிறார்.  அதனை குருவணக்கப்பாடலின் மூலமாக தெரிவிப்பதன் நோக்கம், அவரது மாணவர்களும் அதே போன்று தாயுமான சுவாமிகளை மானசீக குருவாக ஏற்று  வணங்கவேண்டும் என்பதன்றோ! அவ்வாறு இருக்கையில் அருளாளர் தாயுமான சுவாமிகளை வணங்கி அவர்களின் ஆசி பெறுவதற்காக   தாயுமானசுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்ளலாம்.  அவரது பாடல்களையும்  உள்ளம் விரும்பி படித்து பொருளுணர்ந்து தாயுமானவர் கண்டுபிடித்ததை உறுதி படுத்தி நமதாக்கிக் கொள்ள  வேண்டும். 

 எது தாயுமானவரை குருவாக ஏற்றுக் கொள்ளச் செய்தது என்று அறிந்ததன் பயனாக, நம் நேரிடை குருவைப்போன்றே நாமும்  தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயனடைய  உறுதி கொள்ளமுடிகிறது.

ஏன் திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார் மகரிஷி அவர்கள்?

   இப்போது, மகரிஷி அவர்களை எது  ஐயன் திருவள்ளுவரை   மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளச்  செய்தது என அறிந்து  அவ்வாறே நாமும் திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயனடைவோம்.  பக்திமான்கள் வரிசையிலோ, நாயன்மார்கள் வரிசையிலோ, ஆழ்வார்கள் வரிசையிலோ, தவச்சீலர்களான சித்தர்கள் வரிசையிலோ திருவள்ளுவர் சமுதாயத்தால் அடையாளம் காணப்படுவதில்லை. திருவள்ளுவருக்கு உள்ள பல பெயர்களில் ஒன்று தெய்வப்புலவர். இருந்தாலும் திருவள்ளுவர்  ஆன்மீகச் செம்மல் எனக்கருதப்படுவதில்லை. திருக்குறள் உலகப் பொதுமறை நூல் என்றே போற்றப்படுகின்றது.  நாற்பது அன்னிய மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  காரணம் என்ன?    திருவள்ளுவர் எந்த துறையைச்  சேர்ந்த அறிஞராகத் திகழ்கிறார்? மகரிஷி அவர்களிடமிருந்தே தெரிந்து கொள்வோம். 

    மகரிஷி அவர்கள், பஜனைப்பாடலில் பாடப்பட்ட ‘அங்கிங்கெனாதபடி’ எனத்துவங்கும் தாயுமான சுவாமிகளின் பாடலால் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.  மகரிஷி அவர்களுக்கு இளமையிலேயே மகானாக்கிய நான்கு உன்னத கேள்விகள் எழுந்தன. அவையாவன—

1)   கடவுள் என்பவர் யார்?

 2)   உயிர் என்பது என்ன?

 3)   இன்பதுன்பம் என்பது என்ன?

 4)   வறுமை ஏன் வருகின்றது?

 இந்த நான்கு கேள்விகளுக்கு முதல் கேள்வியான ‘கடவுள் என்பவர் யார்?’ என்பதற்கு விடை அளி்க்க தாயுமான சுவாமிகள் குருவாக அமைந்துவிட்டார். திருவள்ளுவர் எந்த கேள்விக்கு விடை அளிக்க குருவாக அமைந்தார் என்பதே நம்முடைய அடுத்த வினா?  கடவுளை அறிய வேண்டும் என்கின்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகரிஷி அவர்கள் எதனால் திருவள்ளுவரால் ஈர்க்கப்பட்டிருப்பார்?  பின்னாளில் ஐம்பது குறளுக்கு உட்பொருள் விளக்கமும் எழுதியுள்ளார்.  திருவள்ளுவருக்கு இது தெரியுமானால்(தெரியும்)  தான் என்னகூறியிருப்பாரோஅதனை   தன் சீடர் வேதாத்திரி ஐயமற புரிந்து கொண்டு இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளாரே என வியந்திருப்பார்.

   மேலும் மகரிஷி அவர்கள் எத்தனையோ அருளாளர்களின் அறிவாற்றலை அவா்கள் அருளியுள்ள அறநூல்களின்  வாயிலாகப் பெற்றிருந்தாலும், திருக்குறளை பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது—

  மெய்ப்பொருள் விளக்கத்தால் முழுமை பெற்ற அகன்ற அறிவோடு, வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கை நெறியினை வகுத்த நூல்கள் மிக சிலவே உள்ளன என்கிறார்.  அவற்றில் சிறந்த ஓர் உயர்வினைப் பெற்று மிளிர்வது பெருந்தகை வள்ளுவர் அருளிய திருக்குறள் ஆகும் என்கிறார். மேலும் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள்தான் என்கிறார்.  ஒரே ஒரு பெருநூல் என்று மொழிந்ததற்கேற்ப ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். நம்முடைய ஆராய்ச்சியில் இருந்து விலகிவிடக்கூடாது?  என்ன நம் ஆராய்ச்சி?  தாயுமானவரைப் போன்றே திருவள்ளுவரும் மானசீகக்  குருவாகவே அமைந்துள்ளார்.  அப்படியானால் எந்தெந்த குறட்பாக்கள் மகரிஷி அவர்களை எவ்வாறு ஈர்த்தது என்று அறிவதே நம்முடைய ஆராய்ச்சியாகும்,  உட்பொருள் விளக்கம் எழுதிய  ஐம்பது குறட்பாக்களுமே அவரை ஈர்த்ததா? இல்லை என்றால் அதில் ஒருசில குறட்பாக்கள் ஈர்த்தனவா என அறிய வேண்டும். அதனை உறுதிப்படுத்த மகரிஷி அவர்கள் தான் இயற்றிய குருவணக்கப்பாடலில் என்ன கூறி திருவள்ளுவரை வணங்குகிறாரோ அவ்வரிகளைக் கவனிக்க வேண்டும்.

அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,

அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்’ என்கின்ற வரிகளைக் கவனிக்க வேண்டும்.

இவ்வரிகள் கூறும் உண்மை என்ன?

‘அறிவே தெய்வம்’ என்பதனை உறுதிபடுத்துவதற்கு மகரிஷி அவர்களுக்கு, தாயுமான சுவாமிகள் துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.  அறிவு தெய்வம் என்று உறுதியாகிவிட்டது,  அறிவு மனிதனிடம் உள்ளது என்பது யாவரும் அறிந்ததே.  ஆனால் அரூபமான அறிவு மனிதனிடம் எப்படி, எங்கு எவ்வாறு உள்ளது என்பதனை அறியவேண்டுமே!  அதனை அறிவதற்கு மகரிஷி அவர்களுக்குத் துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் ஐயன் திருவள்ளுவரே.  எப்படி?

   அகமே, உள்ளமே மெய்ப்பொருள் எனக்கூறி அறிவேதான் அகமாக உள்ளது என்கிறார்  திருவள்ளவர் எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  முதலில் தாயுமான சுவாமிகள் இறைவன் அருபம் என்றும், அவன் அறிவின் வடிவத்தில் உள்ளான் என்பதனை உறுதிப்படுத்த துணை நின்றிருக்கிறார்.

திருவள்ளுவர் தாயுமான சுவாமிகள் கூறிய அறிவாகிய தெய்வமே மனிதனிடம் உள்ளமாக, அகமாக உள்ளது என்கிறார்.

அதற்கு எந்தக் குறட்பாவின் வாயிலாக திருவள்ளுவரின் அறிவாற்றல் மகரிஷி அவர்களுக்கு உதவியுள்ளது என்பதுதான் நம்முடைய இரண்டாவதாக அறிந்து கொள்ள வேண்டிய தெளிவாகும்.   எனவே அக்குறட்பாக்களை அறிவோம்.  அக்குறப்பாக்களாவன—

ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்

தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.     …குறள் எண் 702

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு     …குறள் எண் 355

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.      …குறள் எண் 423

தாயுமானவரையும், திருவள்ளுவர் மற்றும் திருமூலரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டதிலிருந்தும்  குரு என்பவர் நேரிடை குருவாகத்தான்  அமைய வேண்டும் என்பதில்லை எனத் தெரிய வருகின்றது.  அருளாளர்கள் பூதவுடலை நீத்த பிறகும் அவர்கள் விட்டுச்சென்ற அறநூல்கள் (அறிவாற்றல்) மூலமாகவும் அவர்களை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு, நேரிடை குருவிடம் பயன்பெறுவது போன்று ஆன்மீகசாதகன் பயன் பெறுவது  சாத்தியம் என்பது தெள்ளத் தெளிவாகின்றதுதல்லவா?  அப்படி இல்லாவிடில் அருளாளர்கள் அருளியுள்ள  அறநூல்களின் பயன்கள்தான் என்ன?

    விஞ்ஞானத்தில் ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்ததை அவர் எழுதி வைத்துவிட்டு சென்றதை பிறகு  அதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு   மேற்கொண்டு மேலே(further) அதே கண்டுபிடிப்பில் ஆராய்ச்சி செய்யவில்லையா!?  இது எப்படி என்றுகேட்டால்   ‘அது விஞ்ஞானம் எனப்படும்.    கணிதத்தாலும்,  கருவிகளாலும் உறுதி படுத்தப்பட்டது/முடிகின்றது’ என்கின்ற விடை கூறப்படும்/கூறப்படலாம்.

    அருளாளர்கள் கூறுவதனையும் ஆறாம் அறிவைக் கொண்டு. காரண அறிவைக் கொண்டுஉறுதிப்படுத்திய பிறகே அதனை ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வாழலாமன்றோ!  அதுதானே ஆறாம் அறிவின் சிறப்பு?!  என்ன கூறுகின்றனர் அருளாளர்கள்?  ‘உண்மையே பேசு,  நல்லவனாக நட’ என்றுதானே எல்லா அருளாளர்களின் பொதுவான ஒட்டுமொத்த அறிவுரையாகும்.

   உண்மைப்பொருளால்(மெய்ப்பொருளால்) இயக்கப்படும் மனித இயக்கத்தில் உண்மை பேசாமல் பொய் பேசுவது என்பது  காரணஅறிவுடன் பார்த்தால் கூட (logically incorrect)சரியாக இருக்க முடியுமா?

நல்லவனாக நடப்பதற்கு என்ன சிரமம்? பழைய பழக்கம் காரணமாக இருக்கலாம். உண்மையைப் பேசாது பொய் பேசும்போது  எப்படி நல்லவனாக இருக்க முடியும்?. 

    பழக்கம் நல்லதாக இருந்தால் நலமே. பழக்கம் தீயதாக இருந்தால் அதனை மாற்றிக் கொண்டுதான் வாழ வேண்டும்.  மாற்றிக் கொண்டு வாழ்தல் என்பது அருளாளர்களின் அறிவுரையை சாதனை ஆக்குவதாகும்.  இதுவரை அருளாளர்கள் கூறும் அறநெறிகள்  சாதனை ஆக்கப்படவில்லை என்பதே உண்மை. இல்லையானால் ஏன் திருவேதாத்திரியம் ‘இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும்.  இனியும் அறநூல்கள் தேவையில்லை.  தேவையானது சாதனையே.  அதுவே அறநெறி’ என்கின்றது.

    இதுவரை அருளாளர்கள் கூறும் அறநெறிகள்  சாதனை ஆக்கப்படவில்லை என்பதே உண்மை.

      ஒழுக்கம் பற்றி ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் பத்து குறட்பாக்களை அருளிய திருவள்ளுவர்,

     ஒழுக்கம் கடைபிடிக்காமல் போனால் என்ன தீமைகள் வரும் என்பதனைக் கூறுவதற்கு 

     நல்வினையான ஒழுக்கத்திற்கு எதிரான தீயவினைக்கு அஞ்ச வேண்டும் என்று தீவினை அச்சம்

     என்கின்ற அதிகாரத்தை ஏற்படுத்தி அதில் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார்,

     இதற்கும் மேலாக, நாண் உடைமை அதிகாரத்தையும் ஏற்படுத்தியுள்ளார். எதற்காக நாண் உடைமை அதிகாரத்தை ஏற்படுத்தினார் திருவள்ளுவர்? உயிரினங்களிலேயே நாணம் என்பது மனிதனுக்குத்தான் இருக்க வேண்டும். அது அவசியமும் கூட.  விலங்கினங்களில் காணப்படும் ‘பிறர் வளம் பறித்துண்ணும் பண்பிற்காக’ அவை நாணம் கொள்கின்றனவா? நாணம் கொள்ள முடியுமா?  காரணம் அவற்றிற்கு ஆறாம் அறிவு இல்லை. பிறர்வளம் பறித்துண்ணுதல் என்பது இயற்கையின் ஏற்பாடு அவற்றிற்கு அது.  ஆனால் அதுவே மனிதனிடம் காணப்பட்டால் இயற்கைக்கு அது ஒவ்வாதது.  எனவே பிறர்வளம் பறித்தல் பண்பு மனிதனிடம் காணப்பட்டால் அதற்கு வருந்த வேண்டும்.  பிறர் வளம் பறித்துண்ணல் என்கின்ற பண்பு மனிதப்பண்பு அல்ல.

    எனவே பிறர்வளம் பறித்துண்ணும் பண்பு மனிதனிடம் காணப்படுமேயானால் அந்த மனிதன் நாணப்பட வேண்டுமல்லவா?!  அந்த நாணம் என்பது மனிதனிடம் உடைமையாக இல்லாததால்தான் அவன் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான்.  சமுதாய கூட்டு இயக்கத்தில் (வாழ்க்கையில்) யார் ஒருவர் எங்கோ தவறு செய்தாலும் அது அவரையும் பாதிக்கும், சமுதயாத்தையும் பாதிக்கும். சில தவறுகளுக்கு ஒரே ஒரு முறை விளைவு வந்து  முடிந்துவிடும். ஆனால் ஒரு சில தவறுகளுக்கு விளைவுகள் தொடராக வந்து கொண்டே இருக்கும். 

     திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒழுக்கம் உடைமை போன்று மனிதகுலத்திற்குத் தேவையான பத்து உடைமைகளைத் தெரிவிப்பதற்காக பத்து அதிகாரங்களை அருளியுள்ளார்.  அந்த உடைமைகள் எல்லாம் அறம் சார்ந்தவைதானே! அவை சாதனையாக மாற்றப்பட்டுள்ளதா இதுவரை சமுதாயத்தில்? இல்லையே! சாதனையாகி இருந்திருந்தால் இன்று வேதாத்திரியத் தோற்றத்திற்கே அவசியமில்லையே! இரண்டு ஒழுக்கப் பண்பாடு ஏற்படுத்த வேண்டியதில்லையே.  முப்பது குறட்பாக்களையும்(ஒழுக்கம் உடைமை, தீவினை அச்சம், நாண் உடைமை)  எப்போதும் கவனத்தில் கொண்டு பண்போடு வாழ்வதற்கு மனிதனுக்கு சிரமிருக்கின்றது என்பதனை கருத்தில் கொண்டுதான், முதலில் ஐந்தொழுக்கப் பண்பாட்டினை வகுத்த பிறகு, அதனையேச்  சுருக்கி இரண்டொழுக்கப்பண்பாட்டாக  மனவளக்கலையில் வகுத்துக் கொடுத்துள்ளார் திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்ட அருஞ்சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

      இதே போன்று அறிஞர் திருமூலர் எவ்வாறு தனக்கு மானசீக குருவாக அமைந்தார் என்கிறார் மகரிஷி அவர்கள் பாடலில்.  வள்ளலார் அவர்கள் காப்பிட்டுக் கொள்ளும் போது சொல்லிவிட்டு சென்றவாறு, ஏற்கனவே இறைநிலைத் தெளிவு அடைந்திருந்த மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடங்கள் தங்கியிருந்தார்.  அப்போது மகரிஷி அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்க முடியாததையெல்லாம் மகரிஷி அவர்களின் உடலை ஆட்கொண்டு முடித்ததாகவே மகரிஷி அவர்கள் எண்ணுகிறார்.

   மகரிஷி அவர்கள் வேண்டாமலேயே வள்ளலார் அவர்கள் ஆன்மா பரிபக்குவ நிலை அடைந்த மகான் அவர்களின் சூக்குமஉடல் வந்து தங்கியுள்ளது.  இவ்வாறு இயற்கையே/இறையே நடத்தி வைக்கும்.

   இதுவரை அருளாளர்களை எவ்வாறு துணை கொள்வது என்று நம்குருதேவர் அருளாளர்களை துணைகொண்டதை வைத்து அறிந்து கொண்டோம்.   ‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் ஒன்பது  நாட்களாக சிந்தித்து வருகிறோம்.  இப்போது  பொதுவாக அருள்துறையில்  அருளாளர்களை எவ்வாறு துணை கொள்வது என்பதனை அறிவோம். 

1)   அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆழ்ந்து ஆர்வமுடன், அக்கறையோடு, படிக்க வேண்டும்.  இந்த அருளாளர் ‘என்ன எனக்கு அறிவுறுத்த இருக்கிறார்? இறையின் ஏற்பாடு என்ன இதில்?’ என்கின்ற உள்ளக் கிடக்கையோடு சிந்தித்து படித்துப் பயன் பெறவேண்டும்.  எந்த காரணத்திற்காக சிறுவனாக இருந்தபோது வீரசிவாஜிக்கு அவனது தாயார் வீரக்கதைகளைச் சொல்லி வளர்த்தாளோ, அதுபோன்று, நாமே அல்லது பிறர் சொல்ல அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி இறை-உணர்-ஆன்மீகமான  பண்பேற்றத்தினைப் பெற்றிடல் வேண்டும். 

 2)    இன்று உலகமக்கள் தொகை 740 கோடிகளாகும்.  740 கோடி மக்களின் கருமையப்பதிவுகளும் ஒன்றிரண்டு கூட முற்றிலும் எல்லா வகையிலும் ஒன்றாக (identical) இருக்காது. காரணம் என்ன?  மனிதருள் காணப்படும் வேறுபாடுகளுக்கு காரணமாக மகரிஷி அவர்கள் பதினாறினைக் கண்டுபிடித்துள்ளாரே! அதே போன்றே அறிவை அறிந்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அருளாளர்களின் எண்ணிக்கை இதுவரை பிறந்த மனிதர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக மிகக் குறைவாக இருந்தாலும் இதுவரை அறிவை அறிந்த அறிஞர்களின் கருமையப்பதிவுகள்  முற்றிலும் ஒன்றாக (identical) ஆக இருக்காது. ஆனால் அறிவை அறிந்ததற்கான கருமைய சிறப்புப் பதிவு வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம்.  அறிவை அறிந்ததில் எல்லோரும் ஒரே நிலையில் இருக்கலாம்  ஆனால் அறிவை அறிந்ததன் வழிமுறைகள், அனுபவங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.   (அறிவை அறிகின்ற வெவ்வெறு முறைகள் வேதாத்திரியத்தால் முறையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதால், இனிவரும் மனவளக்கலை-அருளாளர்களின் அறிவை அறிந்த வழிமுறைப்பதிவுகள் ஒன்றாகவே இருக்கும்.)  இது வரை எண்ணிலடங்கா அருளார்கள் அறிவை அறிகின்ற ஆன்மீகப் பயிற்சியினை  பின்பற்றும்போது  அடைந்த வெவ்வேறு அனுபவங்களை அறியும்போது  புதிதாக இறை-உணர்-ஆன்மசாதகனுக்கு புத்துணர்ச்சியினையும், ஊக்கத்தையும் அளித்து ஆன்ம சாதனையில் வெற்றி பெறச் செய்யும்.

3)   எனவே அருளாளர்களின் அமுத மொழிகளை சிந்தித்து படித்துப் பயன் பெறவேண்டும். அதற்காகவே நம்முடைய சத்சங்கத்தில் ‘பயிற்சியுடன் கூடிய சிந்திக்க அமுத மொழிகள்’ நிகழ்ச்சி வாரம் இரண்டுமுறை  வைத்துள்ளோம்.

 4)   இறை-உணர்-ஆன்ம சாதனையில் வெற்றி என்பது எவ்வளவு சீக்கிரம் பண்பேற்றம் பெறுவதனைப் பொருத்தது. அதற்கு இயற்கையின்/இறையின் திறனான இயல்பூக்க நியதி,  இதுவரை(மனிதகுல தன்மாற்றம் பெறும் வரை) அதன் இயல்பான ஊக்கத்தால் தானாகவே செயல்பட்டு வந்தது.  இனி ஆறாம் அறிவாக வந்த பிறகு மேலும் மேலும் மலர்ச்சி அடைந்து வருகின்ற வேளையில் மனிதனின் ஊக்கம் பண்பேற்றம் பெறுவதில் மனிதனுடைய பங்குதான் உள்ளது. இதற்கு அருளார்களின் அறிவாற்றல் துணையாக இருந்திருக்கின்றது /இருக்கின்றது.

 5)   தாயுமானவராக இருக்கட்டும், திருவள்ளுவராக இருக்கட்டும், திருமூலராக இருக்கட்டும், வள்ளளாராக இருக்கட்டும், நம்முடைய குருதேவரான வேதாத்திரி மகரிஷியாக இருக்கட்டும், எந்த அருளாராக இருக்கட்டும்,  அவர்கள் யாவருமே இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுதான் அருளாளத்தன்மை பெற, அருளாளர்களின் உலகத்தில் மனதை இணைத்துக் கொண்டே வாழ்ந்து அருள் துறையில் வெற்றி பெற்றுள்ளனர். இது இயற்கையின்/இறையின் கருணையோடு அமைந்த புனித ஏற்பாடாகும்.

6)   நாமும் அவ்வாறே இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டே அருளாளர்களின் உலகத்தில் எண்ணத்தையும், மனதையும்  வைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து இவ்வுலகம் உய்யும் வகையில் அறிவுத் தொண்டாற்றி வாழ்வோமாக,  வாழ்க வளமுடன் வாழ்க வையகம். வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம். நம் எண்ண ஊடகத்தைப் பயன்படுத்துவோமாக!

 7)   மலர் வழியே மறைபொருள் விளங்க வைக்கிறார் மகரிஷி அவர்கள். ‘மலரே மலரே’ என்று ஆரம்பிக்கின்ற பாடலில் பதினாறு செய்யுள்கள் உள்ளன.  மலர் தன் பரிணாம வரலாற்றினை மனிதனிடம் கூறுவது போன்று பாடல்களை இயற்றியுள்ளார். எட்டாவது செய்யுளில் ‘செவ்விய சிறு சொல் பரிணாமம்’ என்கின்ற வரியுள்ளது.  ஒவ்வொரு பொருளும் பரத்தில் ஆரம்பித்து அது இன்று வரை வந்த கால அளவு எவ்வளவு என்று கணிக்க  முடியாத, எண்ணிலடங்கா தன்மாற்ற  வரலாற்றினை ‘பரிணாமம்’ என்கின்ற சிறப்புச் (செவ்விய) சிறு சொல்லால்  கூறமுடிகின்றது.

   இதனை ஆங்கிலத்தில் மகரிஷி அவர்கள் கூறியுள்ளது—

  Evolution is the word that epitomizes

    The history of every thing,

  Starting from the Absolute Space

    upto the prsesnt,

   Understand its siginificance,

 For you, too, came that way. 

                   . . . Shri Vethathri Maharishi. 

1911 ற்கு முன்னர் ஆன்மீகத்தில் இறைவன் என்று சொன்னால், உருவத்தை வைத்து அல்லது திருநாமத்தை வைத்தோ இறைவனை விளங்கிக் கொள்வது என்கின்ற நிலை மாறி, 1911 பிறகு, இப்போது  இறை என்று சொன்னாலோ, அல்லது, இறையின் தன்மாற்ற சரித்திரம் என்று சொன்னாலும், சொல்கின்ற ஷணநேரத்தில் மனக்கண் முன்னே இறையின் ஆதிநிலையிலிருந்து நம்வரை மொத்த வரலாறும் வந்து நின்றுதான் அச்சொல் இறை என்கின்ற சொல் சொல்லப்படுகின்றது.

   அதேபோல் ‘அருளாளர்’ என்கின்ற சொல்லை சொல்லும்போதே  இதுவரை அவதரித்துள்ள மொத்த அருளாளர்களின் அருளாளத்தன்மை மனக்கண்முன்னே  கொண்டு வந்து நிற்கக் கூடிய பெருமையினையும், மதிப்பையும் அருள் துறைக்கு கொடுத்து மதிக்க வேண்டும்.  அருளாளர்கள் என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கின்ற அளவிற்கு அருளாளர்களையும், அருளாளத்தன்மைகளையும் அறிந்திருக்க வேண்டும்.

Analysis_of_Thought

இத்துடன் அருளார்கள் உலகம் தலைப்பில் சிந்தனை விருந்தினை  நிறைவு செய்கிறோம். இதற்கு உதவிய நம் நேரிடை குருதேவர், மற்றும் அனைத்து அருளார்களையும் மதித்து போற்றி போற்றி வணங்குகிறோம்.  வாழ்க வளமுடன்.

     அடுத்த அறிவிற்கு விருந்திற்காக  14-08-2016-ஞாயிறு மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்தன்று  சத்சங்கத்தில் கலந்து கொள்வோம்.  அன்று நம் குருதேவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் 106 ஆம் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகின்றது.  எனவே நம் சத்சங்கத்தில் சிறப்பு அறிவிற்கு விருந்தாக, குருதேவர் உறுதி அளித்துள்ள ‘உத்தம நண்பர்கள் உங்கட்கும் பிறவிப்பயன் அடைவது உரியது’ என்பதனால், ‘பிறவிப்பயனை நல்கும்’ என அவர் மொழிந்துள்ளதையே தலைப்பாகக் கொண்டு சிந்திக்க உள்ளோம்.  அவ்விருந்து சிறப்பாக அமைய உங்களுடைய எண்ண ஆதரவினைத் தருமாறு அன்புடன் வேண்டப்படுகின்றது. வாழ்க வளமுடன்.   

 வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளர்க அறிவுச் செல்வம்.


     அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

                                              அல்லது

நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here

http://www.prosperspiritually.com/contact-us/  

நன்றி,

வாழ்க வளமுடன்