பண்பேற்றமும் பிறவிப்பயனும்

 

பண்பேற்றமும் பிறவிப்பயனும்

FFC – 109

 

                                               14-08-2015—வெள்ளி

  Perinbappadigal_Spiritual_ladder_reduced size   “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”, ”நான் எனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே; நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்;”   என்று மொழிந்துள்ள

வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்களின் 105 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகின்றது.   மகரிஷி அவர்கள் 14-08-1911 இல் அவதரித்தார். அவருடைய அவதாரம் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை, ஆன்மீகம் தன்வரலாற்றில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த அவதார புருஷருக்கு ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதில் மனம் மகிழ்ச்சியுறுகின்றது.

 பொதுவாக பிறந்த தினம் என்றால் என்ன? வருடந்தோறும் ஒரு முறை பிறந்த தினம் வரும். அது கொண்டாடப்படுவது வழக்கம். விழாவாகவும் கொண்டாடப்படலாம். பிறந்த தினத்தை ‘ஜெயந்தி’ தினம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் எல்லோர் பிறந்ததையும் ‘ஜெயந்தி’ என்று கூறுவதில்லை. எல்லோரும் வாழ்க்கையில் ஜெயம்(வெற்றி) அடைவதில்லையே! எனவே எவ்வாறு எல்லோர் பிறந்ததையும் ‘ஜெயந்தி’ என்பது?

வாழ்வில் ஜெயம் அடைந்தவர்கள்(வெற்றியடைந்தவர்கள்) பிறந்த தினம் ‘ஜெயந்தி’ என்று மரியாதையுடனும், மகிழ்ச்சியுடனும்,

 நன்றியுடனும் கூறப்படுகின்றது. வாழ்வில் ஜெயம் அடைந்தவர்கள் பிறந்த தினத்தை ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் நாளை ‘காந்தி ஜெயந்தி’ விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. அவதாரங்கள் பிறந்த தினத்தையும் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி.

   விழா என்றால் என்ன? எதற்காக விழா கொண்டாடப்படுகின்றது? விழா என்பது ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சி எதற்காக? ஒருவரையோ அல்லது ஒன்றைச் சிறப்பித்து பலரும் கூடி, கலந்து மகிழும் வகையில் பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சி விழா எனப்படுகின்றது. ஏன் சிறப்பிக்க வேண்டும்? ஒருவர் அதிநல்லவராக இருந்ததாலும்/இருப்பதாலும், நல்லவற்றை செய்ததற்காகவும்/செய்வதற்காகவும் சிறப்பிக்க வேண்டும். அவரை சிறப்பிப்பதோடு நின்று விடாமல் வருங்கால சமுதாயத்தில் யாராவது அவரைப் போன்று உருவாவதற்கு வித்திடுவதற்காகவுமே சிறப்பிக்கப்பட வேண்டும்.

   உதாரணத்திற்கு சுதந்திர தின விழா, இசை விழா, பாராட்டு விழா ஆகியன. விழா என்றால் மகிழ்வதற்காகவும், பாராட்டுவதற்காகவும் நடத்தப்படும் நிகழ்ச்சியாகின்றது. ஒருவருக்காக விழா என்றால் அவரை பாராட்டி, அதில் உண்டாகும் மகிழ்ச்சியினை அனுபவிப்பதற்காகவும் விழா நடத்தப்படுகின்றது. முதலில் தான் அடைந்த/அடைந்து வருகின்ற பயன்களுக்கு நன்றி கூறவும், இரண்டாவதாக, ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க சக மனிதர்களுக்கும் இப்பயனை எடுத்துக் கூறி அவர்களை பயன் பெறச்செய்யவும், மகான்களின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகின்றது. ‘ஒருவருக்கு விழா’ என்றால் அவரை பாராட்ட வேண்டும் என்றிருப்பதால் ஏன் அவரை பாராட்ட வேண்டும்? அவர் மிக மிக நல்லவர் என்பதாலும், அவருடைய பிறப்பு இச்சமுதாயத்திற்கு மிகப் பேறாக அமைந்ததாலும், அவர் செய்துள்ள நற்காரியங்களுக்காகவும்,

     அவருடைய வாழ்வால் பயனடைந்த சக மனிதர்கள் ஒன்று கூடி பாராட்டுகின்றனர். பாராட்டுவதோடு மட்டும் நின்றுவிடுவது விழாவின் நோக்கமும் அல்ல; அந்த பாராட்டுக்குரியவரின் நோக்கமும் அதுவல்ல. பின்னர் எதற்காக நல்லவர் ஒருவருக்கு விழா நடத்தப்படுகின்றது? தலைவர்களுக்கு விழா நடத்தப்படும் போது விழாவில் பேசுகின்ற சான்றோர் பெருமக்கள் கூறுவதென்ன? ‘அந்த தலைவரின் கொள்கைளைப் பின்பற்றி நடப்பதே அந்த தலைவருக்குச் செய்யும் மரியாதையும், நன்றியும் ஆகும்’ என்பர்.

   இது ‘உண்மைதானே’. தலைவர்கள் எதிர்பார்ப்பது அவர்களை பாராட்ட வேண்டும் என்பதல்ல.   தாம் கூறும் அறிவுரைகளை செவி சாய்த்துக் கேட்டு நடந்து தம்மைப் போன்றே வருங்கால சமுதாயத்திற்கு தலைவர்களாக, வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும் என்பதே அந்த தலைவர்களின் பெரும் ஆசை. அதனை நிறைவேற்றித் தருவதுதானே தலைவர்களுக்கு செலுத்தும் நன்றி. அப்போதுதானே அந்தப் பாராட்டு விழாவிற்கு ஒரு பொருளும் உண்டாகும்.

   ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’     என்று     உறுதியளித்திருக்கின்ற மகரிஷி அவர்கள் ‘மீண்டும் பிறவாமையை அளிக்கவல்ல மனவளக்கலை’ பயிற்சியினை அளித்திருக்கிறார். அப்பயிற்சியில் மனதிற்கான பயிற்சியும், தன்னிடம் உள்ள குற்றங் குறைகளை அறிந்து அதனை நீக்கிக் கொள்வதற்கு அகத்தாய்வு பயிற்சியும் உள்ளன. மனதிற்கான பயிற்சிக்கு தவம் உள்ளது. தவப்பயிற்சி என்பது மன அலைச் சுழலை மெல்ல மெல்ல குறைத்து வந்து அமைதி நிலையை அனுபவிப்பதற்கு உதவியாக இருக்கும். முடிவில் அறிவு முழுமை பெற்று இறையுணர்வு பெறச் செய்யும். நற்குணங்கள் இல்லாமல் தவம் பூரணத்துவம் அடையாது. நற்குணங்களும் தவமில்லாது உச்சத்தை அடையாது. மன அலைச்சுழல் குறையாது மனம் உணர்ச்சி நிலையை வெற்றி கொள்ளாது. உணர்ச்சி நிலை நீங்காது மனம் தூய்மை அடையாது.

   மனிதனின் இயல்பு, பலபிறவிகளாக பழகி வந்த பழக்கத்திற்கும், இப்போது கிடைக்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதாக உள்ளதால், தவம் மட்டுமே போதாது என்பதால் அகத்தாய்வு பயிற்சியினையும் அளித்துள்ளார். காரணம் சுவாமி விவேகானந்ததர் கூறியுள்ளது போல் மனிதன் விலங்கினத்தன்மை, மனிதத்தன்மை, தெய்வீகத்தன்மை ஆகிய மூன்றையும் கொண்டவனாக உள்ளான். ஆகவே விலங்கினத்தன்மை நீங்கி மனிதத்தன்மைக்கு வருவதற்கு மனிதன் பண்பில் ஏற்றம் பெறவேண்டும். இதனை மனிதத் தரம் என்றும் கூறலாம். மனிதன் தரத்தில் உயரவேண்டும். அப்போதுதான் பிறவிப்பயனாகிய அறிவின் முழுமைப் பேறு கிட்டும்.

   எனவே மனவளக்கலைப் பயிற்சியின் விளைவுகளை துரிதப்படுத்தும் வகையில் இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தச் சொல்கிறார். பிறவிப்பயனை அடைவதற்கு ஆன்மீகப்பயிற்சியாளர் பண்பில் ஏற்றம் பெறவேண்டும். பண்பேற்றமே பிறவிப்பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். பண்பேற்றத்திற்கு இறைவெளியின் இயல்பூக்க நியதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றார். அப்பாடலை நினைவுகூர்வோம்.

FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

    

குருவின் சேர்க்கையால் என்ன நிகழ வேண்டும்? இப்பாடல் தெரிவிக்கும் செய்தி என்ன? குருவின் சோ்க்கையால் என்ன நடக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  குருவின் சேர்க்கையால் பிறவிப்பயனை அடைய வேண்டும்.  பிறவிப்பயன் எப்போது அடைய முடியும்?

பிறவிப்பயன் என்பது என்பது என்ன?

அறிவு முழுமை பெற வேண்டும். அதனை மீண்டும் பிறாவாமை என்றும் கொள்ளலாம்.  

மீண்டும் பிறவாமை’ என்பது என்ன? மரணம் என்கின்ற நிகழ்ச்சியின் போது இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பிறவி எடுக்க வேண்டிய அவசியம் என்பது என்ன?  

ஆன்மா பிறவி எடுப்பதற்கான காரணம் ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் ஒரு மகான்.

எப்போது ஆன்மாவிற்கு மற்றொரு முறை தேகம் தேவைப்படுகின்றது?  

புலன்மயக்கத்தால், வாழ்வின் நோக்கத்திற்கு முரணான, நிறைவேறாத, முடிவு பெறாத, ஆசைகள் தேங்கி இருக்கும் போதும்,  பல பிறவிகளில் செய்துள்ள தீய வினையின் விளைவுகளை துன்பமாக அனுபவிக்காமல், அதற்குள் ஆன்மா உடலை விட்டு மரணம் என்கின்ற நிகழ்வின் மூலம் வெயியேறிவிட்டால் அவற்றினை அனுபவிக்கவும் தேகம் தேவைப்படுகின்றது.  

அத்தகைய ஆன்மா தரத்தில் குறைந்ததாகத்தான் இருக்கும். ஆகவே தக்க குருவோடு சேர்ந்து, குருவின் தரஉயர்வால் தன்னுடைய தரத்தை உயர்த்திக் கொள்ளவே குருசேர்க்கை எனும் புனித நிகழ்ச்சி இயற்கையால்/இறையால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வினை தற்செயலாகக் கொள்ளாமல் அதனை பயன்படுத்திக்கொள்ள வழியினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  

இதே போன்றேதான் திருமூலரும் கூறுகிறார். திருமூலர் கூறும் குருவின் மூலம் சீடனுக்கும் ஏற்படும் நான்கு தெளிவினை திருமந்திரத்தின் வாயிலாக அறிவோம்.

 குரு அருளே திருவருள்

  தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே,”   …. திருமந்திரம் – 139.  

ஆகவே குருவை சீடன் சந்திப்பதால் அறிவிற்குத் தெளிவு ஏற்படவேண்டும்.   அந்த தெளிவு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதனை திருமூலர் கூறுகின்றார்.

இரண்டு கவிகளின் பொருளையும் ஒப்பிட்டுப்பார்த்து, குருவை மதித்து ஒழுகி பிறவிப்பெருங்கடலில் தத்தளிக்காமல் இருக்க பிறவிப்பயனாகிய இறைஉணர்வு பெற்று வாழ்வோம். அதற்கும் திருவருளும், குருவருளும் துணை நிற்குமாக. வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.