இப்பயிற்சியின் நோக்கம்

குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

இப்பயிற்சியின் நோக்கம்

அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அதனை ஏன் அமுத மொழிகள் என நாம் கூறுகிறோம்?
அமுதம் என்கின்ற சொல்லுக்ககு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் இரண்டு இன்பங்கள் கிடைக்கின்றது. ஒன்று தாகம் தீர்கின்றது. மற்றொன்று நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது. உணவாகவும் அமைந்தது. நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தனிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்னொரு சுவை இன்பம் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும். தெளிவானால் அறிவு அறிஞர்களின் மொழிகளைக் கேட்பதற்கு விழையும். விழைந்தால் அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். இருட்டில் இருந்த அறிவு ஒளியை வீசும். அறிவொளியாகத் திகழும்.

வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு? அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது மலமாகி வெளியேறிவிடும். ஆனால் அறிஞர்களின் அமுத மொழிகள் அறிவிற்கு என்றென்றும் அமுதமாக கருமையத்தில் பதிந்து தங்கிவிடும். ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும். இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும். மன தைரியத்தை ஊட்டும். நம்பிக்கையை வளர்க்கும்.
எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையை தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல் ) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

 • அறிவிற்கு இனிமையாக இருக்கும்.
 • வாழ்வியலைப்பற்றிய உண்மைகளைக் கூறும்.
 • பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.
 • அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.
 • ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.
 • ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.
 • ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.
 • கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.
 • இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.
 • மன தைரியத்தை ஊட்டும்.
 • நம்பிக்கையை வளர்க்கும்.

பத்திற்கு மேற்பட்ட இவ்வளவு பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால் ஏன் அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக .இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறியவில்லை.

இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனிமேலாவது அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம். அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடுங்கள். சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தொரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பாருங்கள். அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும். சலிப்பே இராது, நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள். வாழ்க வளமுடன்.

பயிற்சிக்குள் செல்வோம்

சிந்திக்க அமுத மொழிகள்

1) ஒரு மனிதன் நற்பண்போடு வாழ்வில் சிறந்து விளங்கினால் உலகிற்கு ஆயிரமாயிரம் மக்களுக்கு நலம் விளைவிக்கும் பெரு நிதியாகத் திகழ்சிறான்.

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

2) எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.

….. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

3) ஆன்மீகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி> கூட்டுப் போலத்தான்.

….. சுவாமி விவேகானந்தர்

4) ஆன்மா தன்னுடன் பேசிக் கொள்வதுதான் சிந்தனை.

….. பிளேட்டோ

5) ஒழுக்கமாக வாழ்வதே இன்பத்திற்கான வழிமுறை. ஒழுக்கமே எல்லா நல்ல வழிகளையும் நமக்காக திறந்து விடும் சக்தி கொண்டது.

….. அரவிந்தர்.