237-பழக்கமும் விளக்கமும்-7/7

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

237-பழக்கமும் விளக்கமும்-7/7

அறிவிற்கு விருந்து—237

23-10-2016—ஞாயிறு

வாழ்க வளமுடன்!

    ‘பழக்கமும், விளக்கமும்’ என்கின்ற தலைப்பில் ஆறு சத்சங்கங்களில் சிந்தித்து வருகிறோம்.  இன்று இச்சிந்தனையை நிறைவு செய்ய இருக்கிறோம்.

   இதுவரை பதிவு, பழக்கம், பழக்கப்பதிவு, பழக்கப்பதிவின் அழுத்தம், விளக்கம், விளக்கப்பதிவு, விளக்கப்பதிவின் அழுத்தம், பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன், பெரும்பாலும் ஏன் பழக்கப்பதிவே வெற்றி கொள்கின்றது, மனிதனிடம் உள்ள தீமை, ‘பழக்கம்’ என்ற மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு சரியாக உள்ளது என அறிந்து கொண்டோம். எனவே இனிமேலும் தீமை தரும் பழக்கத்தினை பழகுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நமது வம்சாவளியும், சமுதாயத்தின் வருங்காலத் தூண்களான குழந்தைச் செல்வங்களுக்கு நற்பழக்கங்களைக் கற்றுக்கொடுத்தும், அவர்கள் நற்பழக்கங்களை பழகக்கூடிய சூழல்களையும் உருவாக்கித் தருவோம். அத்தகைய சூழல்களில் முதன்மையானதான நாமே முன் உதாரணமாகத் திகழ்வோம்.

   மனிதனின் நிலை நற்பழக்கம் பழகுவதில் போராட்டமாக இருப்பதால் என்ன செய்ய வேண்டும். இனிமேலும் துன்பம் வரக்கூடாது என்பதனை முடிவு செய்த பிறகு நற்பழக்கத்தை எப்பாடு பட்டாவது பழகித்தான் ஆகவேண்டும்.  இல்லை எனில் துன்பமே மிகும். விளக்கவழி பழகுவது/வாழ்வது எப்போது எளிதாக இருக்கும்? பழக்கப்பதிவின் அழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் விளக்கவழி பழகுவது/வாழ்வது எளிதாக இருக்கும். இது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

வாழ்வில் நற்பழக்கம் எப்போதிலிருந்து பழக வேண்டும்?

    இந்த வினாவிற்கான பதில் அனைவரும் அறிந்ததே. இளமையில் நற்பழக்கம் பழக ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முறையான வாய்ப்பும் இருக்க வேண்டும். நற்பழக்கம் மனித வாழ்வில் எப்போதிலிருந்து பயில வேண்டும் என்பதனையும், அவ்வாறு உற்ற வயதில் தொடங்காவிட்டால் போராட்டம்தான் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அவர் வாய்மொழியாகவே அறிந்து கொள்வோம்.

நற்பழக்கம்(22.12.1959)

பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;
பழக்கத்தை, வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.
பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிக்கும் எளிது”

                                                                      . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிப்பது எளிதாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். உண்மைதானே! ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ மற்றும் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்’ என்கின்ற இரு பழமொழிகளும் இதனைத்தானே தெரிவிக்கின்றன.

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

     எப்படி நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி சமநிலையாக (stable, equilibrium) இருக்கின்றதோ, அதுபோல், ஆனால் இரு கால்களைக் கொண்டே உடல் சமநிலையாக இருக்க முடிந்தாலும், அறிவு நிலையில் மனிதனை சமநிலைப்படுத்துகின்ற கல்விக்கும் நான்கு கால்கள் இருக்க வேண்டும் எனக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள். எனவே கல்வி எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கை தத்துவ அறிவு என்று நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மனிதன் என்பவன் விலங்குத்தன்மை, மனிதத்தன்மை, தெய்வத்தன்மை ஆகிய மூன்று கலவையாக இருக்கிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். எனவே சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை-தெய்வத்தன்மையை (Education is the manifestation of perfection already present in man) வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த மூன்று கலவையில் விலங்குத்தன்மை நீங்கி, மனிதத்தன்மை வளர்ந்து தெய்வத்தன்மை ஓங்கவைக்கும் கல்வி, மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல் எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத் தத்துவறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும் என நாமும் எண்ணுகிறோம். அந்த எண்ணத்தை உரமிட்டு வளர்ப்போம்.

“உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”

     இவ்வாறு கூறுவது யார்? மகரிஷி அவர்கள். எது நமக்கும் உரியது என்கிறார்? ஆறாமறிவாக வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், அதற்கு ஏற்ப பொருத்தமாக பிறிவிப்பயனாகிய இறையை உணர்வது என்பது நமக்கும் உரியது என்கிறார். அதாவது சாத்தியம் என்கிறார். எப்படி தகவல் அறியும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளதோ அதுபோல், இயற்கையின் ஆட்சியின்றி ஆளுமையில் ஒவ்வொரு ஆறாம் அறிவைக் கொண்ட மனிதனுக்கும், ஆறாம் அறிவு தன்னைப்பற்றி–அறிவை அறியும் ஆற்றல் – உரிமை உண்டு என்கிறார்.

     அவ்வாறு இளமையில் கல்வியோடு வாழ்வியல்–ஆன்மீகக் கல்வி இல்லாத காலத்தில் பிறந்து இளமைப்பருவத்தை தாண்டியவர்களுக்கும் ஒழுக்கப்பழக்கத்தைக் கொண்ட இறைஉணர் ஆன்மீகக்கல்வி தனியாகப் பயின்று இப்பிறவியிலேயே வெற்றிபெற வழி இருக்கின்றது என்பதனை உறுதியோடு கூறுகிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள், தான் எய்திய நிலையை, நாமும் அடையமுடியும் என்பதற்கு “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று உத்திரவாதத்தை அளிக்கிறார். பிறவிக் கடல் நீந்தலாம் என்கிறார்.

பிறவிக்கடல் நீந்தலாம்(26-10-1994)

பல ஆயிரம் பிறவி எடுத்தேற்றப் பாவப்
பதிவுகளை, ஒரு பிறவிக் காலத்துள் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்லவாய்ப்பு ஆற்றல்இவை நமக்களித்து, இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைந்துளது, உண்மை;
நேர்முகமாய் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றிப்
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும் முறை போதும்.”

                                                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பாடலை அருளியதோடு மட்டுமில்லாது, அதற்கு முன்னதாகவே, பாடலில் கூறப்பட்டுள்ள வழிகளான தவமும், அறமும்(தற்சோதனை) பயில மனவளக்கலையை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதனால் கிடைத்த feedback ஆல் மனவளக்கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 1994 இல் ‘பிறவிக்கடல் நீந்தலாம்’ என்கின்ற பாடலை அருளியுள்ளதன் முக்கியத்துவத்தை உணர்வோமாக! எனவே நம் சுதந்திரமாகிய சுயமாய் சிந்திப்பதை நினைவில் கொண்டு ஆராய்ச்சி செய்து துன்பம் நீக்கி இன்பம் அனுபவித்து, பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவித்து பேரின்பத்தை அடைந்து, நிறைவு வாழ்க்கை வாழ்ந்து பிறவிக்கடல் நீந்தவேண்டும்.

இப்போது என்ன செய்ய திட்டமிடல் வேண்டும்?

      துன்பமிலா வாழ்க்கைக்கு ஒழுக்க வாழ்வு வாழவேண்டும் என்பதால், குழந்தைகளை ஒழுக்கத்தில் வளர்ப்பதில் முதல் ஆசிரியராக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

இங்கே அறிஞர் ஆர்னால்ட் பென்னெட் அவர்களின் அமுத மொழியினை நினைவிற்கொள்வோம்.

“நல்ல குழந்தைகளை உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும். பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.” (சிந்திக்க அமுத மொழி – 86 —27-06-2015 சனிக்கிழமை அன்று சத்சங்கத்தில் பகிர்ந்து கொண்டது click here)
                                                                                  . . . அறிஞர் ஆர்னால்ட் பென்னெட்.

மற்றொரு அறிஞர் எம். கோர்க்கி கூறுகின்ற அமுத மொழியினை நினைவு கூர்வோம்.
“பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.” (சிந்திக்க அமுத மொழி – 86 —27-06-2015 சனிக்கிழமை அன்று சத்சங்கத்தில் பகிர்ந்து கொண்டது click here)

                                                                                                . . . அறிஞர் எம். கோர்க்கி

     அறியாமையால் ஏற்படுத்திக் கொண்ட பெற்றோர்கள் அவர்கள் பெற்றோர்களின் முன்வினைப்பதிவுகளை ஏற்றுத்தான் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு நற்பழக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அதற்கேற்றால்போல் நாமும் நம் குழந்தைகளுக்கு முன்உதாரணமாக இருந்து, குடும்பத்திலேயே சத்சங்கத்தை ஏற்படுத்தி குழந்தைச் செல்வங்களை அறிவுச் செல்வங்களாக திகழச் செய்வோம். வாழ்க வளமுடன்.

எவ்வாறு குழந்தைகளுக்கு முன்உதாரணமாக இருப்பது?

கல்வியோடு இயற்கையியல் பாடம்(ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவறிவு—வாழ்வியல் கல்வி–ஆன்மீகக்கல்வி) இல்லாத காலத்தில் கல்வி கற்றவர்கள் செய்ய வேண்டியதைக் கவனிப்போம். தீயபழக்கம் எவ்வளவு ஆபத்தானது என்றும், இதுவரை விளக்கமே பெறாத நிலையில், விளக்கம் பெற்ற உடனே, தீயபழக்கத்தை மாற்றி நற்பழக்கத்திற்கு வருவதில் சாதாரண மனிதனுக்கு(கருவில் திருஉடையவர்கள் இதற்கு விதிவிலக்காகத் திகழலாம்) எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றது எனவும் அறிந்து கொண்டோம். சிறப்பாக வாழ்வதற்கான விளக்கங்களை திருவேதாத்திரியம் வழியாகத் தந்து கொண்டிருக்கும் மனவளக்கலை மன்றத்தின் வாயிலாக அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாகத் தொடர் விடா முயற்சியுடன் பயின்று பழக்கப்பதிவை வென்று விளக்க வழி வாழ வேண்டும். மேலும் பயிற்சிகளோடு சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத்சங்கத்தைப் பற்றி ‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற அத்வைத உண்மையை எடுத்துரைத்த ஆதிசங்கரர் கூறுவதனை நினைவு கொள்வோம்.

அறநெறி பிறழ்ந்த செயல்பதிவுகளே நன்மையளிக்காப் பழக்கப்பதிவுகளாக உள்ளன. எனவே விளக்கத்தினை சாதனை செய்துதான் விளக்கப்பதிவுகளுக்கு உரத்தை அளிக்க ஆதிசங்கரர் கூறும் சத்சங்கம் அவசியம்.

Adi shankaracharya with his disciples

Adi Shankaracharya with his disciples

பஜகோவிந்தம்–9

ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்!
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி!”

 . . . ஆதிசங்கரர்.

வள்ளுவர் கூறும் சத்சங்கத்தையும் அறிந்து கொள்வோம்:

      சத்சங்கத்திற்கு சான்றோரைத் துணைக்கொள்ள அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் சான்றோரைத் துணைக்கொள்ளுதலின் அவசியத்தை உணர்ந்து அதற்கென தனியாக ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்கின்ற அதிகாரமே இயற்றியுள்ளார். பெரியாரைத் துணை கொள்ளுதல் என்பது என்ன, பெரியாரை எவ்வாறு துணை கொள்வது, பெரியாரைத் துணை கொள்வதால் என்ன தீமைகள் விலகி என்னென்ன நன்மைகள் ஏற்படும் என பத்துக் குறட்பாக்களில் எடுத்து இயம்பியுள்ளார். பொதுவாக, தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பினையும்(ஒன்றைப்பற்றிக்கூற) ஒரே ஒரு பாடலில் சொல்லாமல், மக்களுக்கு அதனை எளிதில் விளங்க வைக்க, பத்து கோணங்களில் எடுத்து இயம்புவது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாக உள்ளது. அச்சிறப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்புறுவோம்.

     பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் இரண்டு குறட்பாக்கள் அரசனுக்கு அறிவுரை கூறுவதாக இருந்தாலும், அரசனுக்கு மட்டுமே அறிவுறுத்துவதாகக் கொள்ளமுடியாது. ‘பெரியாரைத் துணைக்கொள்ளல் வேண்டும்’ என்கின்ற அறிவுரை தனியொருவருக்கும் பொருந்துமன்றோ! ஏனெனில், மனிதனில், அறிவு புலன்களுக்கு அடிமை ஆகாமல், அரசாட்சி செய்ய வேண்டும். அவ்வாறு அறிவு மனிதனில், புலன்களை வென்று (இன்பம் துய்த்தலில் அளவு, முறை காத்து) அரசாட்சி நடத்த வேண்டியிருப்பதால் தனிமனிதனைப் பொருத்தவரை அவனுக்கு அவனே ராஜா- அரசன் என்பதால் பெரியாரைத் துணைக்கோடல் அறிவுரை அரசன் உள்பட அனைவருக்குமே பொருந்தும்.

திருவள்ளுவரின் தனிச்சிறப்பினை அறிந்து, மகிழ்ந்து திருக்குறளைப் போற்றுவோம்; திருவள்ளுவரை வணங்குவோம்.

அறநூல்களை வாசித்தலும் சத்சங்கமே!

   சத்சங்கத்தில் நேரிடையாக கலந்து கொள்ளும் நிலை இல்லாத காலங்களிலும்/சமயத்திலும், அறிஞர்கள் அறநூல்களின் வாயிலாக சூக்குமமாக வாழ்ந்து கொண்டிருப்பதால், அறநூல்களை வாசிப்பதன் மூலம் அவர்களுடன் மனதளவில் தொடர்பு கொள்ளுதலால், பல்லாயிரம் பிறவிகளால் ஏற்பட்டுள்ள வலிமைப் பெற்றுள்ள பழக்கப்பதிவை வலிவிழக்கச் செய்யவும், விளக்கப்பதிவிற்கு உரம் ஊட்டி வலிமைப்படுத்தவும் முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் தவறாது நமது அன்றாட வாழ்வில் இடம் பெறுவதால் அதுவே நமது குழந்தைச் செல்வங்களுக்கு முன் உதாரணமாக அமைந்துவிடும்.

முடிவாக அறிந்து கொள்ள வேண்டியது:

பழக்கம், விளக்கம், அவற்றிற்கு இடையில் உள்ள போராட்டம் பற்றி மகரிஷி அவர்கள் உதிர்த்துள்ள பொன்மொழிகளைக் கவனத்தில் கொள்வோம்..

பழக்கம் விளக்கம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

1) பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும்.

2) வாழ்விற்கு உயர்வளிக்கும் எண்ணங்களே ஒழுக்கம் எனப்படும்.

3) விளக்கம் ஒரு விதமாகவும், பழக்கம் வேறு விதமாகவும் இருந்தால் வாழ்வு அமைதியுடன் அமையாது.

4) பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டு இருக்கக்கூடியவன் மனிதன்.

5) பழக்கத்தை மாற்றிக் கொண்டு, விளக்கத்தின் வழியே வாழ்வதற்கு உரிய ஒரு முறையான பயிற்சிதான் ‘மனவளக்கலை’.

6) ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. (இதற்கான விளக்கம்—எண்ணுவதும் செயல்தானே. எனவே எண்ணியது பதிகின்றது. மீண்டும் அதனையே எண்ணி எண்ணி பழக்கப்பதிவு வலிவு பெறுகின்றது. எண்ணுவதும் பழக்கப்பதிவுதான். எனவே ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விடும்போது பதிவாகின்றது. அப்பதிவினால் மீண்டும் மீண்டும் அத்தீய எண்ணம் வரும். பிறகு அத்தீய எண்ணம் எழக்கூடாது என விளக்கம் பெற்றாலும் அத்தீய எண்ணத்தை எண்ணிய பழக்கப் பதிவுகளே வலிமை ஆகிவிடுவதால் மறுபடியும் அத்தீய எண்ணத்தை உதிக்காமல் செய்வது எளிதன்று எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.)

1) பெற்றோர்கள் ஆவதற்கு முன்னர் அதாவது திருமணத்திற்கு முன்னரே பத்து வருட காலம் ஒழுக்கப்பழக்க வாழ்விற்கான வாழ்வியல் கல்வியான மனவளக்கலையை பயின்று தேர்ச்சி பெற்று நன்மக்களை பெற்றிடல் வேண்டும்.

2) அவ்வாறு வாய்ப்பில்லாமல் போய்விட்ட பட்சத்தில் தனது குழந்தைகளுக்கு உரிய வயதிலிருந்தே ஒழுக்கப்பழக்க அறிவை ஊட்டி வளர்க்க வேண்டும்.

3) அவ்வாறு குழுந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்க அறிவை ஊட்டி வளர்க்க ஏதுவாக தானும் ஒழுக்கப்பழக்க வாழ்விற்கான வாழ்வியல் கல்வியான மனவளக்கலையை ஏற்கனவே கூறியபடி தொடர்விடாமுயற்சியோடு பயின்று வந்து, அதில் தேர்ச்சி பெற்றிடல் வேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்திடல் வேண்டும். அதற்கு, நமக்குக் காலம் கடந்ததுபோல் இருந்தாலும், நாம் அறிவை அறிந்த அறிவினரைச் சார்ந்து அவரை வாழ்க்கை பயணத்திற்கு வழித்துணையாகக் கொண்டு வாழ வேண்டும்.

     மகரிஷி அவர்கள் கூறுவது போன்று சாதனை செய்வதுதான் அறநெறி மலர்வதற்கு வழியாகும்(கவி எண். 533- சாதனையே அறநெறி–21.12.1961). ஆகவே திருவள்ளுவர் அறிவுறுத்தியவாறும் அவ்வைத்தாய் அறிவுறுத்தியபடியும், சேரிடம் அறிந்து, சான்றோர்களிடம் சேர்ந்து, பெரியாரைத் துணை கொண்டு தீவினை அகற்றி, விளக்க வழியில் வாழ்வோம்.  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

வாழ்க வேதாத்திரியம்       வளர்க வேதாத்திரியம்.

வாழ்க மனவளக்கலை      வளர்க மனவளக்கலை.

வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்