வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்

 FFC -103

26-07-2015 – ஞாயிறு

anbargale vaareer-THAI

 

மலரை நாடித் தேனீக்கள் வரும். ஏன்? மலரில் தேன் உள்ளதால் தேனீக்கள் மலரை நாடிச் செல்கின்றன. மலர்களில் பல உள்ளன. மலர்களில் பாரிஜாத மலர் என்பது ஒன்று. ஆனால் பாரிஜாத மலர் என்பது கற்பனையான ஒன்று.
அச்சத்தை ஏற்படுத்தி, மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக, நரகம், சுவர்க்கம் என்று கற்பனையாகப் படைக்கப்பட்டது போல் தேவலோகமும் ஒரு கற்பனைதான். அந்த தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று ஒரு கற்பனைக் கதை கூறுகின்றது. பாரிஜாத மலர் என்றோ ஏற்படுத்தப்பட்ட கற்பனையான மலர்.
இப்போது ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’ என்கிறோம். ஏன்? பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் தருவதைப் போல் வேதாத்திரியம் விரும்பியதை எல்லாம் தரும். மனிதன் எதனை விரும்ப வேண்டும்? சிந்திப்போம்.
மனிதன் தனக்கு வேண்;டியதை விரும்புகிறான். அவ்வாறு மனிதன் விரும்ப வேண்டியது என்ன?
1) நல்ல உடல் நலம்,
2) நீண்ட ஆயுள்,
3) நிறை செல்வம்,
4) உயர் புகழ் ஆகியவைகள் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும்.

இந்த நான்கிற்கும் மேலாக மனிதன் வாழ்வதற்கு அவசியமானவை ஏதாவது உள்ளதா? உண்டு.

இந்த வாழ்க்கை எதற்காக, மனிதன் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ,

அந்த காரணத்தை அறிந்துஅதனை அடைய வேண்டும்.

இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவுதான் தன்னை அறிய வேண்டி மனித அறிவாக தன்மாற்றமடைந்துள்ளது. [The premordial state of Nature, the Consciousness, Almighty the God itself has transformed into human consciousness]

கடலிருந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, குளிர்ந்த பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறாகி, நதியாகி நிலப்பரப்பில் ஆர்பரித்து ஒடி கடலில் கலந்து தன் சுழற்சியை முடித்துக்கொண்டதும் ஆர்பரிப்பு நின்று அமைதி கொள்கின்றது. அது போல்
பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (fractioned) மனித அறிவு
மீண்டும் பேரறிவுடன் கலந்து,
தன்னை அறிந்து கொண்டு,
தன் சுழற்சியை முடித்துக் கொள்ளும் போதுதான் பேரமைதி உண்டாகும் அறிவிற்கு.

அதாவது ஆறாம் அறிவு தன்னை அறிந்;து கொண்டு இன்பமுறவே இந்த மனிதவாழ்க்கை. இவ்வாறு வந்த அறிவின் பயணத்தில், அறிவு ஒரு பிறவியிலேயே அதனை அடைய முடியாது. பல கோடிப் பிறவிகள் எடுத்து,
அப்பிறவிகளிலெல்லாம், மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள நோக்கம் அறியாத அறியாமையால்;
புலன்வழி வாழ்க்கையையே வாழ்ந்து மயக்கம் கொண்டு,
அளவு மீறியும், முறை மாறியும் வாழ்ந்து
ஏற்படுத்திக் கொண்ட வேண்டாத துன்பம் தரும் பதிவுகளைத் தன்
ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,
அவற்றின் விளைவுகளை அனுபவிக்கவே வந்த பிறவிதான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பிறவி. ஆகவே மனித வாழ்க்கைக்கு அவசியமான உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ் ஆகிய வளங்களுடன் மெய்ஞ்ஞானம் என்கின்ற ஐந்தாவது வளமும் அவசியமாகின்றது. இந்த மெய்ஞ்ஞான வளத்துடன் மனித வாழ்வு முழுமை அடைகின்றது.

மனித வாழ்வு முழுமை அடைவதற்கு இப்போது அறிவிற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாதத் தெளிவு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனிதன் மனம் போன போக்கெல்லாம் போய்க்கொண்டு அல்லறுகிறான்.

மனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும்? உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை, அறிவின் செல்வமாக்கிட வேண்டும்.

அதனால்தான் ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ (Slogan) என்கின்ற எண்ண ஆதரவு கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். ஆகவே பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல் இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.

தன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும் புரிதலையும் தெளிவையும் விரும்புவான் மனிதன். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லததுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். பாரிஜாத மலர் ஒரு கற்பனையே என்றாலும். என்றோ மனிதனை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக ஏற்படுத்திய ஒரு கற்பனைக் கதையில் வந்த பாரிஜாத மலர் உண்மையில் இன்று வேதாத்திரியத்தின்; அருமை பெருமைகளைக் எடுத்துக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமேயமாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. வேதாத்திரியத்தின் வாயிலாக இதுவரை கற்பனை மலராக இருந்து வந்த பாரிஜாத மலர் இன்று உண்மையான மெய்ஞான மலராகிவிட்டது.

இதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத்திரிய பாரிஜாத மலர் ஐந்து வளங்களைத் தருகின்றது. அவையாவன, உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகும்.
பாரிஜாத மலரின் மெய்ஞ்ஞானத் தேன் .நான்கு வகைகளில் கீழ்கண்ட வினாக்களுக்கு அறிவுப்பூர்வமான விடைகளைத் தந்து சுயமாக சிந்திக்கவும் செய்கின்றது.

1) கடவுள் என்பவர் யார்? இயற்கை என்பது எது?
2) உயிர் என்பது என்ன?
3) இன்பதுன்பம் என்பது என்ன?
4) வறுமை ஏன் வருகின்றது?

ஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ளத் தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும்? இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ! இது வரை இது மறைமுகமாக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. இப்போது வேதாத்திரியத்தால் அது வெளிப்படையான விரும்புதலாகிவிட்டது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என்கிறோம்.

மலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ளத் தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இப்போது மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்திரிய அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழிகாட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுவோம்.

மகரிஷி அவர்கள் அறிவை அறிய விளக்கம் தருகிறேன் என்று அவர் விடுக்கும் அழைப்பை அவர் எழுதிய காந்த தத்துவ நூலின் பக்கம் 11 இல் முதல் பத்தியில் உள்ள அவர் எழுத்தின் வாயிலாகவே அறிவோம்.

FFC-103-பாரிஜாதமலர்

மேலே உள்ள பாடல் வரிகளுக்கு அவரே விளக்கமும் கொடுத்துள்ளார். அவ்வரிகள் மந்திரம் போல் உள்ளதால் அதனை அன்பர்கள் ஏற்று பயன்பெற, அவ்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

FFC-103- பாடலின் விளக்க வுரை

பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும். பொதுவாக மனிதன் விரும்புவதெல்லாம் என்னவாக இருக்க முடியும்? நிரந்தரமில்லாத உலகியல் வாழ்க்கையில், இப்பூவுலகை விட்டுச்செல்லும்போது விரும்பிச் சோ்த்த யாவற்றையும் இங்கே விட்டுச் செல்பவைகளைத்தான் விரும்புவதாக இருக்கும்.

ஆனால் வேதாத்திரிய பாரிஜாத மலர்,
முதலில் உடல்நலத்தையும்,
உடல்நலத்தால் பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான காலநீளத்தை நீட்டிக்கும் நீளாயுளும்,
இப்புவியல் வாழ்வதற்குத் தேவையான பொருட்செல்வத்தைத் தரக்கூடிய நிறைசெல்வத்தையும்,
மனிதனின் அறிவுத்தொண்டு இவ்வுலகிற்கு மிக மிக அவசியமாக இருப்பதால், அந்த அறிவுத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் அளித்து, அதன் மூலம் பயனாளிகள் வாழ்த்துவதால் வருகின்ற பாராட்டுதலான உயர்புகழையும் தந்து
மெய்ப்பொருளை விளக்கி, மனதில் மெய்ப்பொருளை நிறையச் செய்து மனநிறைவளிக்கின்றது.
இந்தப் பேற்றினைவிட வேறு எது மனம் விரும்புவதற்குள்ளது?
எப்போதும், எல்லையுள்ள பொருட்களை மட்டுமே மனம் நினைப்பதால், மனம் எல்லையுடைதாகி, குறுகிவிடுவதால் மனம் குறைவுடையதாகிவிட்டது.
மனதில் எல்லையில்லா மெய்ப்பொருள் நிறைந்து விட்டால், மனம் விரிவடைந்துவிடும். நிறைவடைந்துவிடும்.
அதனைவிட மனதிற்கு வேறு என்ன தேவையிருக்கின்றது?
மனமும் மெய்ப்பொருளும் ஒன்றாயிற்றே! மனமும் மெய்ப்பொருளும் ஒன்றாகிவிட்டால் மனம் நிறைவு பெறுகின்றது.
கடலிருந்து நீர் ஆவியாகி மழை பெய்து, மீண்டும் ஆற்றில் நீர் ஆர்பரித்துக்கொண்டு இறைச்சலுடன் ஓடி கடலில் கலந்து அமைதியுறுகின்றது. அதுபோல் மெய்ப்பொருளே மனிதமனமாகி மீண்டும் மெய்ப்பொருளுடன் சோ்ந்துவிட்ட பிறகு மனித மனம் சொற்களால் விவரிக்க முடியாத அமைதிப்பேற்றினைப் பெறுகின்றது. இது தான் இயற்கையின் உள்ளது உள்ளபடியான நிலை.  அடுத்த விருந்திற்கு 29-07-2015 புதன் அன்று சந்திப்போம்.

வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;
வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.
வாழ்க உலக மக்கள் அனைவரும்.
வாழ்க உலக அமைதி; வருக உலக அமைதி விரைவில்.
*****