FFC – 156-வினா விடை 8

வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

வினா விடை 8

FFC – 156

20-01-2016–புதன்

 

சிந்திக்க அமுத மொழிகள்- 120
(24-10-2015—சனி)

முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.                   …ஸ்பானியப் பழமொழி.

பயிற்சி—
1) இப்பழமொழி எச்சரிப்பது என்ன?
2) நம்மை ஏற்கனவே இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எச்சரித்திருப்பது என்ன?
3) எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன?

விடை:-

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பே ஆகும். அனுபவங்கள் என்பது மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்களாகும். இந்த ஸ்பானியப் பழமொழியின் வாயிலாக வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள பழக்கங்களின் தன்மையைப் பற்றி அறிய இருக்கிறோம். பழக்கங்கள் பற்றி … ஸ்பானியப் பழமொழி இரண்டு உவமானங்களைக் கொண்டு புரியவைக்க விரும்புவது என்ன? சாதாரணமாக தெரியாத ஒன்று, தெரிந்த ஒன்றுடன் உவமானம் காட்டி விளக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு உவமானங்கள் காட்டப்பட்டுள்ளன இங்கே. எனவே இப்பழமொழி சொல்கின்ற அறிவுரை மிக முக்கியமானது எனத் தெரிகின்றது. ஏனெனில் பழக்கங்களின் இரு நிலைகளை அறிவுறுத்தி எச்சரிக்க வேண்டியிருப்பதால், வலிமையற்ற சிலந்தி வலையையும், வலிமையில் அதற்கு நேர் எதிரான தேர்வடத்தையும் உவமானங்களாக சொல்ல வேண்டியுள்ளது.
முதலில் பழக்கம்(Habit) என்பது என்ன என்று பார்ப்போம். பொதுவாக எந்த ஒன்றிலும் திறமை பெற அதனை முதல் முறையிலேயே செய்து அதில் திறமை பெறமுடியாது. பலமுறை செய்துதான் திறமை அடையமுடியும். ஆர்வத்திற்கேற்ப தொடர்ந்து பலமுறை செய்யப்படுவதும் உண்டு. இங்கேதான் பழக்கம் உள்ளே நுழைகின்றது. இந்த பழக்கத்தின் இருநிலைகளை பற்றி ஸ்பானியப் பழமொழி எச்சரிக்கின்றது.
‘எந்த ஒன்று’ நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அது தீயதாக இருந்தால் எச்சரிக்கை வேண்டும். அதனை ஆரம்பிக்கவே கூடாது. நல்லது, தீயது என்பது அந்த ஒன்றை ஆரம்பிக்கும் முன் எவ்வாறு முடிவு செய்வது? அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பாயிற்றே!

1) ஒன்று, ‘மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்’ என்பதால் மூத்தோர்கள் ஏற்கனவே சொல்லியுள்ளதை மதித்து, கவனத்தில் கொண்டு நடப்பதனை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
2) திருவள்ளுவர் கூறுவதுபோல் பெரியோரை துணை கொள்ளல் வேண்டும்.
3) புத்தர் கூறுவதுபோல் எப்படி பிணத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் கடல் தள்ளி கரையோரம் தள்ளிவிடுகின்றதோ அதுபோல் தீயநட்பை தள்ளிவிடவேண்டும்.
4) ஆதிசங்கரர் பஜகோவிந்த்தில் அறிவுறுத்துவதுபோல் சத்சங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
5) தினந்தோறும் அறிஞர்களின் அறவுரைகளை தாங்கிய நன்னூல்களை வாசிக்க வேண்டும்.
6) விழிப்புணர்வை வளர்த்து அதனை அயராத விழிப்புணர்வாக்கிக் கொள்ள வேண்டும்.
7) அறிவினரோடு சேர்வதில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
8) அறிவினர்களை கனவிலும், நனவிலும் கண்டு இன்பம் காணப் பழகிக் கொள்ள வேண்டும்.
9) நேரிடையாக அறிவினரின் தொடர்பு கிடைக்கவில்லை எனில் அவர்கள் அருளிய நூல்கள் வாயிலாக அவர்களுடன் தொடர்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இராமலிங்க வள்ளலாரைத் தவிர மற்ற அருளாளர்களான தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவா்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யுக்தி நாம் அறியாததா என்ன?
‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்கின்றது தமிழ்ப் பழமொழி ஒன்று. ஏனெனில் பழக்கம் ஆரம்பத்தில் சிலந்தி வலைபோல் வலியமையற்று இருக்கும். அதனால் பழக்கம் தீயபழக்கமாக இருந்தால் அதனை அழித்துவிடுவது எளிது. ஆனால் பழக்கங்கள் நாளாக நாளாக வழக்கமாகி அது வலிமையுற்று தேர்வடமாக ஆகிவிடும் என்கிறது ஸ்பானியப் பழமொழி. சிலந்தி வலையை ஒரு சுண்டு விரலாலேயே அழித்துவிடலாம் ஆனால் தேரை இழுக்கும் கயிறு(தேர்வடம்) எவ்வளவு வலிமையாக இருக்கும். அதை இரண்டு கைகளால் அறுக்க முடியுமா?

பழக்கம் என்பது என்ன? எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது கருமையத்தில் பதிகின்றது. இன்று ஒரு செயல் முதல் முறையாக செய்யப்படுகின்றது. அது இயற்கையின்/இறையின் அருமையான, மிக, மிகச்சிறந்த பதிவுசெய்யும் ஏற்பாடான(Excellent Recording System) கருமையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. நாளை அச்செயல் மீண்டும் இரண்டாவது முறையாக செய்யப்படுகின்றது. இதற்கிடையில் அச்செயலின் பதிவு, செயல் செய்யாத போதும் எண்ணங்களாக வந்து அச்செயலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும், அச்செயலை செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றது.
இவ்வாறு அந்த ஒரு செயல் பலநாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள் ரசித்து, ருசித்து, ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அச்செயல் பதிவு, பதிவு மேல் பதிந்து, பதிந்து அழுத்தம் பெறுகின்றது. அந்த ஒன்று நல்ல செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கது, ஆனால்

அந்த ஒன்று தீயதாக இருந்து, பிறகு நமக்கே தெரிந்து,
அல்லது ‘அது தீயது’, என பெரியோர்களின் இணைப்பு ஏற்பட்டு அவர்கள் வழியாக
விளக்கம் கிடைக்கப்பெற,
இறை அருளால் ஏற்பாடு செய்யப்பட்டாலும்,
அப்பழக்கத்திலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கும்.

இருந்தாலும் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு விளக்க வழியே வாழ்ந்து வெற்றிகண்டவர்களும் உண்டு. ஆனால் கடுமையாக தொடர் விடாமுயற்சி செய்ய வேண்டும் அதற்கு நாம் இந்த சத்சங்கத்தில்(Click here) ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’– என்கின்ற தலைப்பில் 27-05-2015—புதன்று சிந்திக்க ஆரம்பித்து 17-06-2015—புதனன்று (FFC – 86 — FFC-92) சிந்தனையை விரிவாக முடித்திருக்கிறோம். அதில் கருப்பொருளாக அறிஞர் ரூஸோ அவர்களின் “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கின்ற அமுத மொழியை எடுத்துக் கொண்டோம். அது பெட்டகத்தில்தான் உள்ளது. அதனை மீண்டும் பெட்டகத்திலிருந்து எடுத்து வாசித்துப்பார்க்கலாம்.

நம்முடைய குருதேவர் அவர்கள் “பழக்கத்தி்ற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். இவ்வாறு மனிதனின் எதார்த்த நிலையைப்பற்றி கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளில் பழகிக் கொண்ட பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே கருமையத்தூய்மையால் செயலிழக்கச் செய்யலாம் எனவும் உறுதி அளிக்கின்றார். அதற்காக, .இயற்கை/இறை கருணையோடு வடிவமைத்துக் கொடுத்ததே இறையுணர் பாதையிலே விழிப்புடனே வாழ்வதற்கான அகத்தவம், அகத்தாய்வு ஆகியவற்றைக் கொண்ட தெய்வீகப்பயிற்சியாகிய மனவளக்கலை என்கிறார்.

அடுத்த வினாவான ‘எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன? என்பதற்கு வருவோம்.

ஏற்கனவே சத்சங்கத்தில் (Click here) அமுத மொழிகள் 86 இல் இதுபற்றி 27-06-2015 அன்று சிந்தித்திருக்கிறோம். அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அதில் இரண்டு அறிஞர்களின் அமுத மொழிகளை எடுத்துக்கொண்டோம்.

“நல்ல குழந்தைகளாக உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.
……. ஆர்னால்ட் பென்னட்.

“பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.“
……எம் கோர்க்கி.
அதில் பயிற்சிக்காக கேட்கப்பட்ட கேள்விகளாவன.
பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

ஆகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு முன், பத்து வருடங்களாக பண்பேற்றத்தை கொடுக்கக் கூடிய மனவளக்கலை பயிற்சியினை பயின்று செயல்படுத்திக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது. மற்றும் அதுவே ஞானபரம்பரை உருவாவதை ஏற்படுத்தும். இது குழந்தை பெறுவதற்கு முன் செய்ய வேண்டியது. பெற்றோர்களே முதல் ஆசிரியர் என்பதால் பெற்றோர்கள் ஆவதற்கு முன்னரே வாழ்வியல் கற்று, பின்பற்றுகின்ற மனவளக்கலைஞர்கள்–பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவர். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்.

அறிவிப்பு—

 வாழ்க வளமுடன்.

23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்)  வள்ளலார் அவர்களிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

வாழ்க வளமுடன்.