FFC – 153-வினா விடை – 5

வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

                                                                             வினா விடை – 5

                                                                                                         FFC – 153

10-01-2016–ஞாயிறு

சிந்திக்க வினாக்கள்-112
(01-10-2015 – வியாழன்)

1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.

இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?

விடை:-

பாவம் என்பது, தீமையைத் தரும் ‘செயல். செயலுக்கு விளைவு உண்டு’ என்பது நியதியாக இருப்பதால் பாவச் செயலுக்கு விளைவாக தண்டனை வருகின்றது. ஆகவே ‘செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்’ என்றால் மனிதன் செய்கின்ற பாவச் செயலுக்கு தண்டனை யாரோ ஒருவர் தனியாக இருந்து கொண்டு வழங்குவதாக பொருள்படுகின்றது.
அவ்வாறு கூறுவதனைவிட ‘செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்’ என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் செயலுடன் விளைவு தொக்கி நிற்கின்றது. அதனால்தான் ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்கின்றது திருவேதாத்திரியம்.


 சிந்திக்க வினாக்கள்-113
(05-10-2015 – திங்கள்)

(அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
(ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும்? ஏன்  அல்லலுறுகின்றது?

விடை:-

அ) இயற்கையின் ஆதிநிலை/ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆதிநிலை வெட்டவெளி, இறைவெளி. இறை வெளி பேரறிவையுடையது. அந்த பேரறிவுதான் மனிதனிடம் ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எண்ணம் என்பது ஆறாம் அறிவு தான் எண்ணுகின்றது.
சிகரம் என்பது என்ன? மலையின் உயர்ந்த பகுதியினை சிகரம் என்போம். இந்தப் பொருளை வைத்துக் கொண்டு ஒன்றின் உயர்ந்த நிலையான சிறப்பையோ, உன்னதத்தையோ குறிப்பதற்கு சிகரம் என்போம்.
ஆகவே இயற்கையாகிய பேரறிவே ஆறாம் அறிவாக உள்ளதால், ஆறாம் அறிவு எண்ணுகின்ற எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது.
ஆ) இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமடைந்து ஆறாம் அறிவாக வந்துள்ள மனிதனின் எண்ணம் என்பது வேறுயாருடையதுமல்ல. எண்ணம் என்பது இயற்கையே/இறையே எண்ணுவதுதான். அவ்வாறிருக்கும்போது இயற்கையோ/இறையோ எதனை எண்ணும்? நல்லதையேதான் எண்ணும். ஆனால் மனிதன் என்னவெல்லாம் எண்ணுகிறான்?! அல்லலுறவேண்டிய தீய எண்ணங்களையும் எண்ணுகிறான். எனவே செயல் விளைவுத் தத்துவப்படி தீய எண்ணங்களுக்கு விளைவாக துன்பம் வருகின்றது. . இறையருள் இழக்கப்படுகின்றது, எனவே மனிதன் அல்லலுறுகிறான்.
தெய்வமே மனிதனாகியும், அந்த தன்மாற்றத்தில் விலங்கினங்களாகி மனிதனாக வந்துள்ளதால், மனித ஆன்மா அதனை நீக்க பலபிறவிகளாக முயற்சி செய்யப்படாத, அழுத்தம் பெற்றுள்ள விலங்கினப்பண்பு வலிமையாக உள்ளது. ஆகவே மனிதன் முழுமையாக தெய்வீகத்தை வெளிப்படுத்த முடிவதில்லை. இதனையே சுவாமி விவேகானந்தர் மனிதன் என்பவன், விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய மூன்றினையும் கொண்ட கலவை என்கிறார்.
ஆகவேதான் மனவளக்கலையில் முதல் தற்சோதனை—செயல்முறை பாடமாக ‘எண்ணம் ஆராய்தல் வைக்கப்பட்டுள்ளது.
மகான் மகா கவி பாரதியார் ‘எண்ணிய முடிதல் வேண்டும், அதே நேரத்தில் நல்லவை எண்ணுதல் வேண்டும்’ எனவும் இறைவியை வேண்டச் சொல்கிறார்.

சிந்திக்க அமுத மொழிகள்- 113
(02-10-2015—வெள்ளி)

குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
….. ஸ்ரீ ரமண மகரிஷி

பயிற்சி—
1) “உனக்குள் இருக்கும் குரு என்பவர்” என்பவர் யார்?
2) இக்கூற்றின் வாயிலாக பகவான் ரமணர் என்ன கூறுகிறார்?

விடை:-

1) வேதாத்திரிய இறையியல் என்ன கூறுகின்றது? அந்த இறையியல் அறிவைப்பற்றிய புதிய அறிவியலை Science of Consciousness) உருவாக்கியுள்ளது. வேதாத்திரிய—இறையியல்–அறிவியல், இறை எது என்றும், இறையேதான் உயிராகவும், அறிவாகவும், ஆன்மாவாகவும் உள்ளது என்கின்றது. அறிவு மனமாக இயங்குகின்றது. எவ்வாறு இயங்குகின்றது? உயிரின் படர்க்கை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது மனம் காந்த அலையாக உள்ளது.
பொதுவாக அலை என்றால் அதற்கு இரு முனைகள் உண்டு. எங்கிருந்து அலை புறப்படுகின்றதோ அந்த முனை ஒன்று, மற்றொன்று எங்கு சென்றடைகிறதோ அது ஒரு முனை. உயிரின் படர்க்கை நிலையாகவும், மனம் காந்த அலையாக உள்ளதால், மனஅலைக்கும் இருமுனைகள் உண்டு. மனம் கருமையப் பதிவுகளிலிருந்து புறப்படுவதால் அது ஒரு முனையாகவும், எங்கு சென்று முடிவடைகின்றதோ/எந்த புறப்பொருட்களோடு தொடர்பு கொள்கின்றதோ அது ஒரு முனை.
இந்த இரண்டு முனைகளில் புறப்படுகின்ற முனையை ‘மறுமுனை’ என்கின்றார் மகரிஷி அவர்கள். அந்த மறுமுனை புறப்படுகின்ற இடம்தான் தெய்வமே வீற்றிருக்கும் அகம். ஆகவே மனதின் மறுமுனை தெய்வம் என்கிறார் மகரிஷி அவர்கள்(The other end of mind is God). எனவே அகத்தே–உள்ளே, மனிதனுக்குள்ளும் இருப்பது தெய்வமேதான். அகத்தே தெய்வம் இருக்க, அகத்தை தூய்மை செய்து வர வர அதுவே உள்ளொளியாகி ஆன்மஒளியை வீசி வழிகாட்ட ஆரம்பிக்கின்றது. திக்குத் தெரிய இருண்ட காட்டில் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவருக்கு இருளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி மெல்ல மெல்ல வழி காட்டுகின்றது. அப்படியானால் வழிகாட்டுபவருக்கு என்ன பெயர்? என்ன பெயர் வைக்கலாம்? குரு என்றுதான் பெயர்.
அறிவை அறிந்த அருளாரிடம் தீட்சை பெறும்போது, உயிரிலிருந்து புறத்தே ஓடிக்கொண்டிருக்கின்ற மனம் உயிர் மீதே வைக்கப்படுகின்றது அருளாரின் கருணைச்செயலால் மனம் உள்ளே திருப்பி விடப்படுகின்றது. எனவே இதனைத்தான் குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
2) இக்கூற்றின் வாயிலாக தெய்வம் வீற்றிருக்கும் அகத்தை தூய்மை செய்து வரும்போது அகமாகிய தெய்வமே குருவாக வழிகாட்டிவரும் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.

சிந்திக்க அமுத மொழிகள்- 114
(03-10-2015—சனி)

“நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”

…. சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி—
1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.

விடை:-

1) இயல்பூக்க நியதியின் கீழ் நடைபெறுகின்றது.
2)
குருவின் சேர்க்கை(15-08-1984)
“எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்,”
…. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அவ்வையார் கூறும் ‘அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும், இனிது’ என்கின்ற எளிதான ஆன்மீகத் தொழில் நுட்பத்தை(Simple Spiritual Technique) அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும்.
ஐயன் திருவள்ளுவர் ‘பெரியாரைத் துணைகோடல்’ என்கின்ற அதிகாரத்தில் பத்து வெவ்வேறு கோணங்களில் கூறியுள்ளதில், எது தனக்கு உகந்ததாக உள்ளதோ அதனைக் கண்டறிந்து அல்லது இயன்றால் எல்லாவற்றின் வழியாகவும், நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு திருவள்ளுவர் அவதரித்து 20 நூற்றாண்டுகள் கழிந்தும், திருவள்ளுவரையும் மானசீக குருவாக்கிக் கொண்டாரோ அதுபோல் அவருடைய சீடர்களாகிய நாமும் திருவள்ளுவரையும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு, ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்––Inforamation. Confirmation. Transformation’ என்கின்ற தாரக மந்திரப்படி ஆட்சேபமில்லாது உறுதிபடுத்திய பிறகு, பின்வாங்காமல் பூரண முழுமனத்தோடு (in implicit obediience) தன்னை மாற்றிக் கொள்ள செயலில் இறங்க வேண்டும். இந்த ஆண்டு 2016 ஐ இறையுணர் ஆண்டாக மலரச்செய்வோம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்