வினா விடை 2              

வாழ்க மனித அறிவு                                                வளர்க மனித அறிவு

வினா விடை 2                  

FFC – 149

 30-12-2015-புதன்

 

சிந்திக்க வினாக்கள்-134

   (17-12-2015 – வியாழன்)

dheaivappulavar

 வினா:–

 சான்றோர்க்கு நாணுடைமையை ஏன் அணிகலனாகக் கூறுகிறார் திருவள்ளுவர்? (குறள் எண் 1014)

விடை:–

சான்றோர் என்பவர் யார்? அறிவில் பண்பில், நெறியில் சிறந்து விளங்குபவர் சான்றோர் எனப்படுவார்.  நெறியைச் சார்ந்து இருப்பவர் சான்றோர். ஒழுக்க நெறிக்குச் சான்றாகத் திகழ்பவர் சான்றோர் எனப்படுவார்.  உடைமை என்றால் ஒருவருடைய செல்வம் என்று பொருள். திருவள்ளுவர் கூறும் ஒன்பது உடைமைகளில் ‘நாண் உடைமையும்’ ஒன்றாகும்.

   நாணம் என்றால் வெட்கம் என்று பொருள். வெட்கம் என்றால் மதிப்புக் குறைவு, அவமானம் என்று பொருள். தவறு செய்யாமல் இருக்க வேண்டும். தவறு செய்வதற்கு வெட்கப்படவேண்டும்.  மனிதன் மனிதனாக வாழாமல் முந்தைய இனமான விலங்கினமாக வாழ்வது அவமானம். மதிப்பும் குறைவு. ஆகவே மனிதன் மனிதனாக வாழ இயற்கை நியதியை மதித்து தவறு செய்யாமல் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழவேண்டும்.  மனிதனுக்கு நாணம் இருந்தால் தவறு செய்வதற்கு  வெட்கப்பட்டு ஒழுக்க நெறியுடன் வாழ்வான் என்கிறார் திருவள்ளுவர்.எனவே மனிதனிடம் இருக்க  வேண்டிய, அவர் கூறும் ஒன்பது உடைமைகளில் ஒன்றாக, நாணம் இருக்க வேண்டும் என்கிறார்.

    நெறிசார்ந்து வாழும் சான்றோர்களிடம்  நாணம் இருப்பதால்  தவறு செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் நாணம் உள்ளது.  அது  அணிகலனாக இருந்து கொண்டு, தவறு செய்ய விடாமல் அவர்களை அலங்கரிக்கின்றது.

ஆகவே நாணம் சான்றோர்களின் அணிகலனாக உள்ளது என்கிறார் திருவள்ளுவர்.  ‘நாணம்’ என்பது இயற்கை அனைவருக்கும் கொடுத்துள்ள அணிகலன் என்பதால்,  மற்றவர்களும் நாணம் என்கின்ற அணிகலனை அணிந்து கொண்டு  தவறு செய்வதற்கு வெட்கப்பட்டு நெறியுடன் வாழவேண்டும் என்பதே திருவள்ளுவருக்கு 2046  ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட அவாவாகும்!

 

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்


 வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

 சிந்திக்க அமுத மொழிகள்- 135             

(18-12-2015—வெள்ளி)

 

நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம்.  செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.         …..  ஜார்ஜ் எலியட்

பயிற்சி— 

1)   இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?

2)   செயல்கள் எப்படி நம்மைத்தீர்மானிக்க முடியும்?

3)   ‘Tell me who is your friend. I will tell about you – நீ உன் நண்பன் யார் என்று சொல்.  நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது போல் இருக்கின்றதல்லவா?

விடை:–

   மனிதனின் முத்தொழில்களாவன எண்ணம், சொல், செயல். 

மனிதன் விரும்பாமல் செயலைச் செய்ய முடியாது. 

முதலில் எண்ணமாக வந்துதான், பின்னர் அது செயலாக மாறுகின்றது.

எனவே செயலைத் தீர்மானிக்கிறான் மனிதன் என்கிறார் அறிஞர் ஜார்ஜ் எலியட். 

பின்னர் அவன் செய்த செயலே அவனைத் தீர்மானிக்கின்றது என்கிறார். 

    ‘தீர்மானித்தல்’ என்பது என்ன?  ஒன்றை முடிவு செய்தல்.  உதாரணத்திற்கு சாலையைக் கடக்க வேண்டும் என்பவர்,  குறுக்கே வந்துகொண்டிருக்கும்  பேருந்தைப் பார்த்ததும் ஒதுங்கி நிற்கிறார்.  நிற்கவில்லை என்றால் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஆகவே சாலையை கடக்கும் செயலை தீர்மானித்தவர், விழிப்போடு இருந்ததால்  பேருந்து வருகின்றதா எனப் பார்த்துவிட்டு கடக்க எண்ணுகிறார்.

ஆகவே விபத்து தடுக்கப்படுகின்றது. சாலையைக் கடக்கின்ற செயலை அவர் தீர்மானித்தார்

கவனத்துடன் கடந்த அந்த செயல் அவரை விபத்தில்லாமல் கடக்க வைப்பதைத் தீர்மானித்தது.  ஆகவே செயல்களை தீர்மானிக்கும் போது நுண்மான் நுழைபுலன் திறமையைப் பயன்படுத்தி அதன் பின்விளைவுகளை அறிந்து  செய்ய வேண்டும்.  ஏனெனில் நம்செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.

    எல்லோருக்கும் தன்மீது சுயமதிப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் அந்த தன்மதிப்பை பிறரும் அறிந்து நம்மைப் போற்ற வேண்டும் என்கின்ற அவாவும் இயல்பாக உள்ளது.  தன்மதிப்பு பிறர்க்கு எப்போது தெரிய வரும்? தான்  செய்கின்ற செயல்களால்தான் அது தெரியவரும்.  அவ்வாறு ஒருவன் செய்கின்ற செயல்கள் நல்விளைவைக் கொடுத்து சமுதாயம் பயன் பெறும் வகையில்   இருந்து, சமுதாயம் இவனை நல்லவன் எனத் தீர்மானம் செய்து போற்றும்போதுதான், தான் கொண்டிருந்த தன்மதிப்பு சமுதாயத்தில் உயரும்,  உயர் புகழ் உண்டாகும்.   நம்முடையச் செயல்கள்  நம்மைத் தீர்மானிக்கின்றன’ என்பது இதுவேயாகும்.  சமுதாயத்தில்தான் வாழ்கின்றான் மனிதன். எனவே மனிதனுடைய செயல்கள் விளைவை ஏற்படுத்தும் என்பதால் அவனுடைய செயல்களின் பயனே, அவனை, சமுதாயத்தால்,  ‘யார்’ எனத் தீர்மானிக்கின்றன.  எனவே செயல் புரியும்போது கவனம் தேவை. நுண்மான் நுழைபுலன் திறனைப் பயன்படுத்த வேண்டும்

3) ‘Tell me who is your friend. I will tell about you – நீ உன் நண்பன் யார் என்று சொல்.  நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது  இவன் யாருடன் பழகுகிறானோ அவனுடைய தன்மையை இவன் பெற்றிருப்பான் என்பது இயல்பூக்க நியதியின் விளைவாகும். எவ்வாறு மனிதனுடைய செயல்கள் அவனைத் தீர்மானிக்கின்றனவோ, அதுபோல இவன் யாரை நண்பனாகக் கொண்டிருக்கின்றானோ அந்த நண்பனின் தன்மைகளைக் கொண்டு  இவனைப்பற்றி தீர்மானம் செய்யப்படுகின்றது.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

 


 

  வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

சிந்திக்க அமுத மொழிகள்- 136             

(19-12-2015—சனி)

 

இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.                    ….. ஓர் அறிஞா்

   பயிற்சி—

1)   நம்பிக்கை எல்லோருக்கும் அவசியம்தானே?

 2)   இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?

 3)   அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட உவமானத்தை ரசிக்கவும். இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக்  கொடுக்கும்.

    விடை:–

      நம்பிக்கையைப் பற்றிக் கூறுகிறார்  அறிஞர்.  யானைக்கு எது பலம்?  அதன் தும்பிக்கை தான் அதற்கு பலத்தைக் கொடுக்கின்றது.  அதுபோல மனிதனுக்கு பலத்தைத் தருவது எது? அவனது நம்பிக்கையே. தன்மீதுள்ள நம்பிக்கை தன்னம்பிக்கை எனப்படுகின்றது. இந்த தன்னம்பிக்கையில்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு காரியத்தை செய்து வெற்றி பெறுவதில் உள்ள வித்தியாசம் உள்ளது.

    சாலையில் தினந்தோறும் செல்கிறோம்.  சாலையில் வாகனத்தால் விபத்து நடக்கின்றது என்பதால் நம்பிக்கையில்லாமலா ‘அன்று  வேறோருவருக்கு நடந்த விபத்து நமக்கும் நடந்துவிடுமோ’ என்று அஞ்சிக் கொண்டா தினந்தோறும் செல்கிறோம்? இல்லையே! அல்லது தனக்கேகூட, ஒரு நாள் வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது, சிறு விபத்து நடக்க இருந்து, அருட்பேராற்றல் கருணையினால் தப்பிவிடுகிறார் என்பதால் ஒருவர் அதன் பிறகு வாகனத்தை ஓட்டாமலா இருப்பார்?   மாறாக அந்த விபத்து நடந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அதுபோல்  தவறு செய்திடாமல் சாலை விதிகளை மதித்து கவனத்துடன் அல்லவா செல்வார்.

    பள்ளியில், கல்லூரியில் நடத்தப்படும் பாடங்களை நன்றாகப் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுப்போம் என்கின்ற நம்பிக்கையுடனும், அதற்கான முயற்சியான பாடங்களை நன்கு படித்தலில் மாணவர்கள் ஈடுபடுபட்டு உழைக்கிறார்கள்.

    பயத்தின் காரணமாக தன்மீதே நம்பிக்கை இருப்பதில்லை. 

    தன்னம்பிக்கை இருந்தால்தான்,

    விடாமுயற்சி தொடர்ந்து இருக்கும். 

    முயற்சியைப் பற்றிக் கூறும்போது அறிஞர்கள் முயற்சி விடாமுயற்சியாக இருக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

    இப்போது விடாமுயற்சியினை தொடர் விடாமுயற்சி வேண்டும் என்கின்றனர்.  அதாவது செயலில் வெற்றி பெறும் வரை துவண்டு விடாமல் அந்த விடாமுயற்சி வெற்றிபெறும் வரை தொடர்வதே தொடர்விடாமுயற்சி என்பது.  உதாரணத்தை அறிவோம்.

    நால்வர் இருக்கின்றனர்.  ஒரு செயலைச் செய்து அதன் பயனை நால்வரும்  அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம்.  அந்தச் செயலை முடிப்பதற்கு குறைந்தது 30 நாட்கள் தேவையாயிருக்கின்றது என வைத்துக் கொள்வோம்..

   முதலாமவர் அந்த செயலின் பயன் மீது நம்பிக்கையில்லாமல் அந்த செயலைச் செய்வதற்கு முயற்சியேசெய்யவில்லை.  ஆகவே செயல் புரிந்ததால் வரும் பயனை அவர் அனுபவிப்பதற்கு இல்லை.

இரண்டாமவரை எடுத்துக் கொள்வோம்.   30 நாட்களில் உழைத்துப் பெற வேண்டிய ஒன்றிற்கு இரண்டாமவர் ஒரு வாரம் வரை முயற்சி செய்து உழைக்கிறார். வெற்றிகிடைக்கவில்லை. என விட்டுவிடுகிறார். முயற்சி செய்தார். ஆனால் அது விடாமுயற்சியாக இல்லை.  பலனில்லை அவருக்கு.  மூன்றாமவரை எடுத்துக்  கொள்வோம்.

  மூன்றாமவர் 30 நாட்களில் உழைத்துப் பெற வேண்டிய ஒன்றிற்கு  25 நாட்கள் வரை முயற்சி செய்து உழைக்கிறார். வெற்றிகிடைக்கவில்லை என விட்டுவிடுகிறார். 26-ம் நாள் தன் முயற்சியினை  விட்டு விட்டு ‘நான் விடாமல் முயற்சியுடன்தான் உழைத்தேன்,  ஆனால் பலனில்லை. எனவே அந்த முயற்சியினை விட்டு விட்டேன்’ என்கிறார்,  உண்மைதான் இரண்டாமவரைக் காட்டிலும் மூன்றாமவர் 18 நாட்கள் உழைத்து பிறகு விட்டு விட்டார், எனவே இரண்டாமவரைக் காட்டிலும் மூன்றாமவர்  செய்தது விடாமுயற்சிதான்.  இருந்தாலும் வெற்றிக்கனியை பறிக்கமுடியவில்லையே. விடா முயற்சி இருந்தும், போதிய காலம் அவர் அந்தவிடாமுயற்சியினைத் தொடரவில்லை. நான்காமவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.

   நான்காமவர் 25 நாட்களில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வெற்றிகிடைக்கும் என நம்பிக்கை வைத்து  விடா முயற்சியினைத் தொடர்கிறார். 30 வது நாளில் வெற்றிக் கனியைப் பறிக்கிறார்.  இது எதனுடைய விளைவு?  முதலாமவர் முயற்சியே செய்யவில்லை. இரண்டாமவர் முயற்சி செய்து விட்டுவிட்டார்.  மூன்றாமவர் முதலாமவரைக் காட்டிலும் அதிக நாள் விடாது முயற்சி செய்து  வெற்றிக்கனியைப் பறிப்பதற்குள் விட்டுவிட்டார்.  ஆகவே முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் ஆகிய மூவரைக் காட்டிலும் நான்காமவர் வெற்றிக்கனி கிடைக்கும் வரை முயற்சி செய்து உழைக்கிறார்.  ஆகவே நான்காமவரின் தொடர்விடாமுயற்சியின் விளைவுதான் வெற்றிக்கனியைப் பறிப்பதற்குக் காரணம்.

   மூவருமே முயற்சி செய்ததாகக் கூறுகின்றனர்.  ஆனால் வெற்றிக்கனியை எல்லோராலும் பறிக்க முடியவில்லையே!  இரண்டாமவர், மூன்றாமவர், நான்காமவர்  செய்த முயற்சியில்  உள்ள வித்தியாசம்தான் (நான்காமவரைவிட குறைவான முயற்சி) வெற்றிக்கனி பறிப்பதை இழக்கச் செய்துவிட்டது..

   ஆனால் நான்காமவர்  விடாமுயற்சியினை 25 நாட்களுக்கு மேலும் தொடர்ந்ததால் வெற்றிக் கனியைப் பறிக்கிறார். எனவே இந்த மூவரின்  விடாமுயற்சியில் உள்ள வித்தியாசத்தைக் கூறவே அறிஞர்கள் இப்போதெல்லாம் விடாமுயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘தொடர்விடாமுயற்சி’ என்கின்றனர்.

    அடுத்ததாக ‘இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?’ என்கின்ற வினாவிற்கு வருவோம்.  திருவேதாத்திரியம் இறைஉணர் ஆன்மீகத்தில், ஒவ்வொரு மனவளக்கலைஞர்களும் வெற்றிபெற, அருளை நிதியாகக் கொள்ளும் வழிகளைக் கூறி, அவர்களை அருள்நிதியாக்கி, பின்னர் இறைத்தூதுவர்களாக ஆக்கும் அருட்பணியை செய்து வருகின்றது.

இம்மனவளக்கலைப் பயிற்சியில் இறையை நிச்சயமாக உணரமுடியும் என்பதால்   இது ‘இறைஉணர் ஆன்மீகம்’ எனப்படுகின்றது. 

 

    எனவே இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியாளர்களுக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. 

    நம்பிக்கை ஏற்பட்டு, விளக்கத்தைக் கொண்டு முதலில் முயற்சியை ஆரம்பித்து, 

    விளக்கப்பதிவு பழக்கப்பதிவால் தோற்கடிக்கப்படாமல் இருக்க,  முதலில் ஆரம்பித்த முயற்சி விடாமுயற்சியாகி,

    இறுதியில் விளக்கப்பதிவு பழக்கப்பதிவை வெற்றிகொள்ள விடாமுயற்சியினை தொடர்விடாமுயற்சியாக்கி  வெற்றியடைய வேண்டும். 

    நாம் ஏற்கனவே சத்சங்கத்தில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்பது எவ்வாறு என அறிந்திருக்கிறோம்.(Click here ) இறைஉணர் ஆன்மிகம் தந்த நம் அருட்தந்தை அவர்கள் கூறும் நம்பிக்கையினைக் கவனிப்போம்.

purification

                 அடுத்து மூன்றாவது வினாவான அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட  உவமானத்தை ரசிக்கவும். மதிக்கவும்.  இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் உங்களிடமே நிரூபணம் பெறச்செய்யுங்கள்.  நாளை நீங்களும் அறிஞராகலாம்.  இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக்  கொடுக்கும்.

 இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.

    நம்பிக்கையின் அவசியத்தை இளைஞர் முதல் பெரியோர் வரையுள்ள சமுதாயத்திற்கு வலியுறுத்த விரும்பினார் அறிஞர். எனவே ‘நம்பிக்கை மனிதனுக்கு மிக மிக அவசியம்’ என்றுமட்டும் கூறியிருக்கலாம். இருந்தாலும் நம்பிக்கை முழுநம்பிக்கையாக இல்லாதவர்களுக்காக சொல்லப்படுவது  அவரின் அனுபவம் என்பதால், அது கேட்பவர்கள் ஏற்றுக் கொண்டு அதனைத் தொடர்ந்து முயற்சி செய்து அதனை அவர்களின் அனுபவமாக அனுபவிப்பதற்காகவே உவமானத்துடன் கூறி அவர்கருத்தை விளங்க வைக்க கையாண்ட யுக்திதான் அது.

    பொழுது விடிவதற்கு முன்னரே 3-00 மணிக்கெல்லாம் குயில் கூவ ஆரம்பித்து விடும்.  இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டுதான் ‘இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது ‘நம்பிக்கை’ என்கிறார் அறிஞர்.  பறவைகள் இரவில் கூடுகளில் தங்கிவிடுகின்றன.  சூரியன் உதயமாக இருக்கின்ற அதிகாலையில் கூட்டைவிட்டு வெளியே சென்றால்தான் அதற்கு அன்றைய உணவு கிடைக்கும்.  அதனால் அதிகாலை-இருட்டாக இருக்கும்போதே சூரியன் உதயமாகிவிடும் என்கின்ற நம்பிக்கையில்தான், மகிழ்ச்சியில் குரல் எழுப்பி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன.  

    எவ்வளவு  தூரம் பறக்கவேண்டுமோ, 

    எவ்வளவு நேரம் ஆகுமோ,  

    எவ்வளவு உணவு கிடைக்குமோ என பறவைகளுக்குத் தெரியாது. இருப்பினும் சூரியன் உதயமாகப்போகின்ற நம்பிக்கையில்தான் தன்னை தயார் செய்து கொள்கின்றன.  ஆகவே மனிதன் ஆரம்பத்தில் முயற்சியில் ஆரம்பித்து அது தொடர்ந்து விடாமுயற்சியாகி, பின்னர் அந்த விடாமுயற்சி தொடா்ந்து வெற்றி பெறும் வரை முதலில் கொண்ட நம்பிக்கைதான் துணையாக இருக்கின்றது.  எனவே மனதிற்கு பலம் அவன் தன்மீது கொண்ட, நல்லவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கைதான்.

   ஐந்தறிவு உயிரினங்களுக்கு நம்பிக்கை என்பது என்ன என்றும் தெரியாது. அவசியமும் இல்லை. நம்பிக்கை இயல்பாகவே உள்ளது. நம்பியபடி நடந்ததா என்பதும் அவற்றிற்கு தெரிய வாய்ப்பில்லை.  ஐந்தறிவு சீவன்களுக்கு commitment என்பதே கிடையாது. அவை நிகழ்காலத்தில் வாழ்கின்றன(They live in the present).  ஆனால் மனிதன் நிகழ்காலத்தில் வாழத் தெரியாமல் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

   ஒழுங்காற்றலை அறிவாகக் கொண்ட  மனிதனோ,

   தான் ஏன் பிறந்தேன் என்று அறிந்து,

   அதன் பொருட்டு தேவையான

   ‘ஒழுங்காற்றலான அறிவை பெயருக்கேற்றவாறு, ஒழுங்குரியதாக உயா்த்தி(ஒழுக்கம்) மனிதன் மனித வடிவில் மனிதனாக ஒழுக்க வாழ்வு வாழ்ந்து,

   பிறகு தெய்வமாகி வாழ வேண்டிய commitment’ ஐ அறவே மறந்துவிட்டு,

   தேவையுள்ள, அதனுடன் சேர்த்து (along with)அதனை உள்ளடக்காத மற்ற, தேவையில்லாத  ஈடுபாடு பற்றிய கடப்பாட்டு நிலைகள்(Necessary commitments –OK. but Unnecessary commitments??) ஏராளமாக உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் முடிக்க  தேவையாய் இருக்கின்றது மன ஆற்றல்.  மனஆற்றல் எல்லாவற்றிற்கும் ஈடுபாடு கொடுக்க முடியாமல் போகின்றது.  எனவே இங்கேதான் அவன் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகின்றது.

   மகான் மகாகவி பாரதியார் நம்பிக்கையைப் பெறுவதற்கு அன்னையை வேண்டுவதைக் கவனிப்போம்.

 “எண்ணிய முடிதல் வேண்டும்.

……………………………………………………………………….

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

……………………………………………………………………………………..” என்கிறார் மகான் மகாகவி பாரதியார்.

மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையை(நம்பிக்கை)ப் பற்றிக் கூறுவதனைக் கவனிப்போம்.

எண்ணத்தின் வலிமை(13-01-1954)

“எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்

எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்”  என்கிறார் மகரிஷி அவர்கள்.  வாழ்க வளமுடன். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை முடித்துக் கொள்வோம். வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்