FFC – 165-வினா விடை – 14

 வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

                                                                                           VFY-வினா விடை – 14

FFC – 165

                                       21-02-2016—ஞாயிறு

சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி…

 சிந்திக்க வினாக்கள்-131

(07-12-2015 – திங்கள்)

 குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

 விடை:–  தொடர்ச்சி…

     சென்ற விருந்தில் பொதுவாக உறவுகள் பற்றி அறிந்தோம்.  இப்போது உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க குருவின் உறவு ஒன்றே எவ்வாறு உதவுகின்றது என்று அறிய இருக்கிறோம்.  குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்கின்ற உண்மையினை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.  ஆகவே குருவிடம் வைத்துக்கொள்ள வேண்டிய  உறவு பற்றி  ஆராய்வோம்.

                    குருவிடம்,

                    எத்தகைய  உறவு,

                    ஏன்  அவசியமாகின்றது? 

                    குரு சீடரின் உறவு என்ன பயனை அளிக்கின்றது? 

                   எதற்காக சீடன் குருவைத் தேடுகிறான்? 

   ஒருபுறம் இவ்வாறெல்லாம் வினவிக்கொண்டிருந்தாலும் உண்மையில்  இயற்கையே/இறையே பரிபக்குவ நிலையிலுள்ள சீடனுக்கு ஒரு குருவிடம் உறவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

   அத்தகைய குரு சீடர் உறவால் ஏற்படும் பயன்கள் என்ன?  பயன்கள் என்று பன்மையில் சொல்வதைவிட ஒருமையில் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த ஒன்றுதான்  பண்பேற்றமாகிய ஒரே பயன். எப்படி கல்வி நிலையங்களில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியரின் கல்வித்தகுதி நிலைக்கு மாணவனும்(ஆசிரியர்  நிலைக்கு), ஒரு நாளில்  உயர முடிகிறதோ அதுபோல், குரு–சீடர் உறவால், குருவிற்கு நிகராக   சீடன் பண்பேற்றம் பெற வேண்டும்.

  • ‘நானெனினும் நீ எனினும் பேரறிவு நிலையில் ஒன்று’,
  •  ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்’,
  •  ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’
  • ‘நீங்களும் இதுபோல் ஆகலாம்’

என்கின்ற மகரிஷியின் ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். எதுபோல் நாம் ஆக முடியும் என்பதனை மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிவோம்.

neengalum_idhupolaagalaam 

மேலும் குரு–சீடர் உறவு ஏற்படுவது பற்றி மூன்று வரிசைக் கிரமத்தில் மகரிஷி அவர்கள் உலக மக்களுக்காக கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.

1)   குருவின் தொடர்பு  (1955)  இதனை தனது 44 வது வயதில், (இறையுணர்வு பெற்ற பிறகு 9 வருடத்திற்குப் பிறகு இயற்றியுள்ளார்)  உய்வதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தபோது குருவின் தொடர்பு கிடைத்தது என்கிறார்.  அதனால் அடைந்த மாற்றங்களைக் கூறுகிறார். கடைசி வரியில் சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கங்கள் கண்டதாகக் கூறுகிறார் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 2)   குருவின் சேர்க்கை (15-08-1984)  இதனை தனது 73 வயதில் இயற்றியுள்ளார்.  குருவின் சேர்க்கையால் என்ன நிகழும் என்று கூறுகிறார்.   தப்பாமல் குருவினுடைய உயர்வு  மதிக்கின்ற சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறார்.  ‘தப்பாமல்’ என்பதால்  பிறவிப்பயனை அடைவதில் உறுதியினைக் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் நிபந்தனை என்ன?  குருவுடன் சேர்ந்தாலே பிறவிப்பயன் கிட்டிவிடாது.  இதுவரை  எத்தனையோ அருளாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அருளாளர்கள் தம் அருட்செய்தியினை கவிகளாகவும், உரைநடைகளாகவும் எழுதிவிட்டுச் சென்று விட்டனர். ஆனால் அந்த அருளாளர்கள் கூறும் அறநெறியில் வாழ்கின்றதா இந்த சமுதாயம் என்றால் ஐயமே. எனவே குருவுடன் சேர்ந்துவிட்டால் மட்டுமே பிறவிப்பயன் கிட்டிவிடாது என்பதனை கருத்தில் கொண்டுதான், குருவினுடன் சேர்ந்தமைக்கான காரணமாகிய பண்பேற்றத்தை பெறுவதற்கு எளிய முறையாக, இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தச் சொல்கிறார். குருவை மதித்து ஒழுகினால்தான் தப்பாது குரு உயர்வு சீடனைத் தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்றும் அறிவுறுத்துகிறார்,

    இயல்பூக்க நியதியினை பயன்படுத்துதல் என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி முன்று திறங்களில் ஒன்று இயல்பூக்கம் என்பதனை அறிவோம்.  அப்படியானால் என்ன?  இயல்பாகவும் இருப்பது, ஊக்கத்துடனும்  செயல்படுவது அத்திறன். அத்திறன் ஊக்கத்துடன் இருந்து பேரறிவின் தன்மாற்ற நிலையில் தகுந்த மாற்றங்களைக் கொடுத்து ஏற்றத்தை கொடுத்திருக்கின்றது. இன்று நாம் காணும் எல்லாத் தோற்றங்களும் எதில் இருந்து தோன்றியுள்ளன?  வேகமும்(Force) விவேகமும்(Consciousness) உள்ள இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்ட வெளியிலிருந்துதான் தோன்றியுள்ளன. எல்லாத் தோற்றங்களும் விண்களின் கூட்டால் அமைந்தாலும்,  அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  காரணம் அவற்றில் உற்பத்தியாகும் காந்தம், அதனுடைய தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகிய ஆறினால் அந்த வடிவம்  வெளிப்படுத்தும்  குணங்களும், அததற்கு உரிய இயக்கச் சிறப்புகளுமேயாகும். இதனையே இயல்பூக்கம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     ஆதிநிலையிலிருந்த இயல்பூக்கம்தான்

     தன்னுடைய மாற்றத்தில் விண்ணிலிருந்து ஆரம்பித்து ஆதிமனிதன் தோன்றி  மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும் வரை உதவியாக இருந்து வந்துள்ளது.

     இனி தன்மாற்ற சுழற்சி பூர்த்தியாக, அதாவது

     அறிவில் முழுமை அடைந்து, ஆதியில் இருந்த விவேகத்தைப் பெற,  

     மனிதன்தான், பேரறிவிற்கே,  தன்மாற்றம்  அடைய உதவிய   அந்த இயல்பூக்க நியதியை இப்போது தன்னுடைய செயல்களால்  ஆறாம் அறிவு பண்பேற்றம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

     ‘இன்னும் பரிணாமம் பூர்த்தியாக வில்லை’ என்கிறார் ஓர் அறிஞர்.  அந்த அறிஞரின் ஆதங்கத்தை போக்குவதற்கு குரு சீடா் உறவின் மூலம், விலங்கினப்பண்பிலிருந்து தெய்வீகப்பண்பேற்றம் ஏற்பட இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எனவேதான் அந்த  இயல்பூக்க நியதியினை மனிதன், குரு சீடர் உறவிலும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

Amazing_Guru


    எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்கும் என்கின்றார் மகரிஷி அவர்கள். 


ஒருவரிடம் இருந்த உயர்வுதான் மற்றொருவரிடம்  உயர்வை அளிக்க முடிகின்றது. இங்கேதான் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தச் சொல்கிறார்.  இயல்பூக்க நியதியினை மட்டுமல்லாது இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும் அடிக்கடி நினைத்து வந்தால், நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்கிறார். இது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் நடக்கின்றது என்கிறார். 

  மேலும் ‘அடிக்கடி நினைத்து வந்தால்’ என்பதற்கான வரையறை என்ன?  அங்கேதான் இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தை(corollary) ஆன்ம சாதகன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  அதாவது ‘தான் உயராது மற்றவரின் உயர்வை ரசிக்கவும், மதிக்கவும் முடியாது’ எனவும்  மற்றொரு இடத்தில் கூறுகிறார்  மகரிஷி அவர்கள். இதனை நாம் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே ‘அடிக்கடி நினைத்து வருவதற்கு’ வேறு யாரும் சான்று தருவதற்கில்லை.  தன்னுடைய ஆன்மாவின் அடித்தளமான இறையே தருவதுதான்.  ஆகவே குருவின் ஆன்மாவையும், செயல்களையும், குணங்களையும் உணர்ந்து நெஞ்சாரப் போற்றி, போற்றி ஏற்றி வரவேண்டும்.  குருவின் அரிய பெருமைகளை தானும் நினைத்துப்பார்த்து நெஞ்சம் மகிழ வேண்டும். பிறர்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு(பிறர்க்கும்) குருவின் அரிய பெருமைகள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.  உலகியல் வாழ்க்கையில் ஒருவரின் அரிய பெருமைகளை எடுத்துச் சொல்வது போன்றல்லாமல், குருவை மட்டுமே போற்றிக் கொண்டிருக்காமல், அவரது அரிய கண்டுபிடிப்புகளையும்(தத்துவம் என வழக்கத்தில் கூறப்படுவது) போதனைகளையும் எடுத்து நெஞ்சாரக் கூறவேண்டும்.

    இவ்வழியில்தான் குருவருளால் திருவருள் கிடைக்கும் என்பது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.  ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்று ஆன்மீகத்தில் குருவின் மகிமைக்கு, முக்கியத்தும் கூறப்படுகின்றது.  இயல்பூக்க நியதியின் படிதான் குருவருளால் திருவருள் கிடைக்கின்றது. மாற்றாக, குரு, தன்கையில் வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு திருவருளைத் தருவது இல்லை. நம் குருதேவரின் மானசீக குருவான அறிஞர் திருமூலர் கூறுவதுபோல் குருவிடமிருந்து நான்கு வழிகளில் தெளிவைப் பெறவேண்டும்.

 thelivu_guruvin

    இறை அரூபம் என்று தெளிந்தாகிவிட்டது. அப்போது இறைஉரு சிந்தித்தல்(literally) சாத்தியமில்லையாயினும், துரியாதீத தவத்தில் நம் அறிவை பேரறிவோடு இணைக்கிறோம்.  அதே நேரத்தில் 24 மணிநேரமும் இது சாத்தியமில்லை.  இறையைக் காட்டிக் கொடுத்த குருஉரு சிந்திப்பது என்பது திருமூலர் கூறுவதுபோல் சாத்தியம் தானே.

 3)   குருவின் உதவி(15-08-1984)  இதனை அதே நாளில் இயற்றியுள்ளார்.

      குரு சீடர் உறவில் அலைஇயக்கத்தின் பங்கு என்ன என்று பார்ப்போம்.  அலை என்பது என்ன? பேரியக்க மண்டலம் தோற்றம், இயக்கம், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அலை இயக்கம்.  ஒன்றிலிருந்து அலை புறப்பட்டுச் செல்கின்றது என்றால், அது அப்பொருளின் தன்மையினை (modulated) எடுத்துச் செல்லும்.  அந்த அலை சென்று அடையும் பொருள் மீது அத்தன்மையினை கொடுக்கும்.  அலை மோதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் என்கின்ற ஐந்து வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

   அறிவை அறிந்த தூய்மை பெற்ற குருவிடமிருந்து வரும் காந்த அலைகள் மேற்கூறிய ஐந்து வகைகளில் சீடர் மீது தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.  இதனால்தான்  குருவின் திருமேனி காண்பதிலும், அவரது திருஉருவை சிந்தித்தலும் தெளிவை அளிக்க வல்லது என்கிறார் அறிஞர் திருமூலர்.  ஏனெனில் அறிவை அறிந்த குரு தெளிவைப் பெற்றவர்.  எனவே அவரிடமிருந்து வரும் காந்த அலை தெளிவினை ஏற்படுத்துகின்றது.

 அதேபோல் குருவினுடைய திருவார்த்தை கேட்பதும், அவருடைய திருநாமம் கேட்பதும் குருவினுடைய பண்புகளை சீடரின் கருமையத்தில் மெல்ல மெல்ல பதியச்செய்கின்றது. இவ்வாறு அலைஇயக்கத்தின் பண்புகள் தன் பதிதல் பணியைச் செய்தாலும், சீடரும் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டு பரிபக்குவ நிலையில்(receptivity)உள்ளார் என்பதனைப் பொருத்து  ‘மெல்ல மெல்ல பதியச்செய்வது’ என்பது வெகு விரைவிலேயேயும் நடத்தி வைக்கும்.

     குரு அருளியுள்ள அறநூல்களிலிருந்து வரும் காந்த அலைகள்  சீடரின் மீது மோதி பிரதிபலிக்கின்றது, சிதறுகின்றது, ஊடுருவுகின்றது.  குருவினிடமிருந்து வரும் அந்தகாந்த அலை சிடரின் காந்த அலையோடு கூடி ஒன்றுபட்டு இயங்கும் போது சீடரின் பண்பேற்றமும் சிறிது சிறிதாக வளர்ந்து வரும்.(ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்).  இதனைத்தான் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகிவந்தால், தப்பாது குருவின் உயர்வு சீடரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்