FFC – 162-வினா விடை – 12-1/2

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

வினா விடை – 12-1/2

FFC – 162

10-02-2016—புதன்

 

சிந்திக்க அமுத மொழிகள்- 132
(05-12-2015—சனி)

“நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.”

…. அர்னால்டு

பயிற்சி—
1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
என அழைக்கிறார்?
4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

விடை:–
1) வேதாத்திரியம் மனவளக்கலையின் வாயிலாக அறிவை அறியும் கலையைக் கற்றுக் கொடுக்கின்றது.
 மனவளக்கலை அறிவை அறியும் கலை.
 மனவளக்கலை மனிதனிடம் ஒழுக்கத்தை ஓங்கச்செய்யும் கலை.
 மனவளக்கலை சமுதாயத்தில் அறம் ஓங்கச்செய்யும் கலை.
 மனவளக்கலை மனக்கவலையை மாற்றக்கூடிய கலை.
 மனவளக்கலை மனிதனை தெய்வநிலைக்கு உய்விக்கும் கலை.
 மனவளக்கலை தெய்வத்தை அறிகின்ற கலை.
 மனவளக்கலை பேரின்பத்தை அனுபவிக்கும் கலை.
 மனவளக்கலை தனிமனித அமைதி, குடும்ப அமைதி மற்றும் உலகஅமைதிக்கும் வழிகாட்டும் கலை.
2) எல்லோரும் விரும்புவது இன்பத்தையே அல்லவா!
இன்பத்தை எது அனுபவிக்கின்றது?
அறிவுதான் இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்றது.
எனவே அறிவு இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது என்றால் அறிவு அதற்குரிய செயலை மட்டுமே செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.
அதற்கு அறிவு தன்னை தகுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
அறிவு தன்னை தகுதி படுத்திக் கொள்வது என்பது அறிவு தன்னுடைய காரணப் பெயருக்கேற்ப அறிய வேண்டியதை அறியவேண்டும்.
அறிய வேண்டியவைகளில் சிகரமானது தன்னையே அறிதலாகும்.
அதாவது அறிவு அறிவையே அறிய வேண்டும்.

பேரறிவு/இயற்கை/தெய்வம் தன்னுடைய தன்மாற்ற பயணத்தை ஐந்தறிவு சீவன்களோடு நிறுத்தி விடாமல், ஆறாம் அறிவு சீவனாக, ஆறாம் அறிவிற்காக புலன் எதனையும் உருவாக்கிக கொள்ளாமல் மனிதனாகவும் வந்துள்ளது. காரணம் என்ன? பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருந்த(இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது) ஐவகை நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகியவற்றை உணா்வதற்காக ஒவ்வொரு புலன்களாக அதிகரித்துக் கொண்டு ஒன்றிலிருந்து ஐந்தறிவு சீவன்கள் வரை மலர்ச்சி பெற்றது.

ஐவகை உணர்ச்சிகளையும் உணர்வதற்காக ஐந்தறிவு சீவன்களாக மலர்ச்சி அடைந்து, அதோடு தன்மாற்றத்தை நிறுத்திக் கொள்ளாமல் ஆறாம் அறிவு மனிதனாக ஏன் தன்மாற்றம் அடைந்தது என்று ஆராயும்போது கிடைக்கின்ற விடை என்ன?

ஐந்து உணர்வுகளையும் உணர்கின்ற அறிவு எது,

அது எங்கிருந்து வந்தது,

அதன் மூல இருப்பிடம் எது என உணர்வதற்காகவே என்பதுதான் விடையாக கிடைக்கின்றது.

வேறு ஏதாவது விடை உள்ளதா? இல்லை. ஆகவே ஆறாம் அறிவின் சிறப்பே அறிவு, தன்னையே உணரவேண்டும். தன்னை உணராமல் ஐவகை உணர்வுகளை மட்டுமே உணர்ந்து கொண்டிருக்கும் ஆறாம் அறிவு

 தன்நோக்கத்தை மறந்து புலன்இன்பங்களிலேயே மயக்கம் கொண்டு,
 ‘அளவு’ மற்றும் ‘முறை’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்தை(formula) மறந்து,
 புலன்களை துன்பப்பொறி/துன்பவலை(trap for sufferings) ஆக்கிக்கொண்டு சிக்கித்தவித்துக் கொண்டு,
 அடிமையாகி ‘உணர்ச்சியினை’ அரியணை ஏற்றி, மூலஅறிவை(இறையையே) வெளியே தள்ளிவிட்டது
இவற்றிற்கு விதிவிலக்கு எல்லா வகையிலும் ஞானம் அடைந்த அறிவை அறிந்த அறிஞரே.

யார் அந்த அறிஞர்? என் அவரை அறிஞர் என்கிறோம். அதற்கு ‘யாரை கலைஞர் என்கிறோம்’ என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கலையில் சிறந்து விளங்குபவரை அத்துறையின் பெயரைச் சொல்லி அத்துறையின் கலைஞர் என்போம். உதாரணம் – வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்குபவரை வயலின் கலைஞர் என்கிறோம். வீணையை வாசிப்பதில் சிறந்து விளங்குபவரை வீணைக்கலைஞர் அதுபோல் பொதுவாக அறிஞர் என்றால் யார் அவர்? கலைஞர் யார் என அழைப்பது போன்ற ஒப்புவமையில்(analogy)அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்றவரை அறிஞர் எனலாம். அறிஞர்கள் யார் என்று, அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவின் அறிவியல் அறிஞராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

              அறிஞர் (17-12-53)
அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அறிவு தன்னை உணரா முன்னர் முழுமை பெறாமல் இருக்கின்றது. காரணம் விலங்கினப்பண்புகளை பதிவுகளாகக் கொண்டுள்ளது. அறிவு முழுமை பெறும்போதுதான் துன்பமிலா இன்பப் பெருவாழ்வையே அனுபவிக்க முடியும்.
ஏற்கனவே அறியாமையால், அலட்சியத்தால், உணர்ச்சிவயத்தால் விளைவறியாது செயல்கள் செய்து,
துன்பம் ஏதேனும் இப்போது வந்தாலும் அதனை எளிதாகவும், சாதுரியமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் திறமையையும் பெறமுடியும். அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவைகளை நீக்காமல் அறிவு எவ்வாறு இன்பத்தையே அனுபவகிக்க முடியும்?
அறுகுணங்களான பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் மனிதனிடம் இருக்கும் போது எவ்வாறு இன்பத்தை மட்டும் அனுபவிக்க முடியும்?
அறுகுணங்களின் பிறப்பிடம் ‘தான், தனது’ என்கின்ற எண்ணக் கோடுகள். அறுகுணங்கள் நீங்கினால் ‘தான், தனது’. என்கின்ற எண்ணக்கோடுகள் நீங்கும்.
‘தான், தனது’ என்கின்ற எண்ணக்கோடுகள் நீங்கினால் அதன் பிறப்பிடமான தன்முனைப்பு கரைந்துவிடும். தன்முனைப்பு கரைந்தால் தெய்வத்தைக் காணலாம். தெய்வத்தை மறைக்கும் திறை தன்முனைப்பே ஆகும்.
3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அன்பர்களே வாரீர்” என அழைக்கிறார். அவ்வாறு அழைக்கும் அழைப்புக் கவியினை நினைவு கூர்வோம் வாரீர்.

அழைப்புக்கவி!1970)
1644

அன்பர்களே வாரீர்!
அறிவின் இருப்பிடம்
அறிந்து இன்பமுற, (அன்பர்களே)
இன்பநிலையதை, ஏகநிலையதை,
அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று. (அன்பர்களே)

‘தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?’
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
இன்றேனும், விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்! (அன்பர்களே)

பூரணதூலமும், பொருந்து சூக்குமம்,
காரணமான கருவையு மறிந்து,
ஆரணமான அணுவறிந்து சுடர்
தாரக மவுன தவத்தில் நிலைபெற (அன்பர்களே)

எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்!
இவ்வுல கெங்கும், பேரண்ட முழுமையும்,
அத்தன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்,
அறிவை விரித்து, அனைத்தும் துய்த்தின்புற (அன்பர்களே)

நீங்களும், உங்கள் அன்புக் குடும்பமும்,
நீளாயுள், உடல்நலம், நிறைசெல்வம், மெய்ஞ்ஞானம்
ஒங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு
உள்ளொளி பெருக்கி உண்மைப் பொருள் காண, (அன்பர்களே)

… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொண்டுவருவதாக இருக்க வேண்டும் என்றார்(Education is the manifestation of perfection already present in man).
அவருக்கு இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கல்வியுடன் ஆன்மீகக்கல்வியையும் இணைத்துப் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். அதோடு நின்று விடாமல், அக்கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார். ஒரு பசுவிற்கு நான்கு கால்கள் இருப்பதுபோல், வேதாத்திரியம் கூறும் கல்வி நான்கு அங்கங்களைக் கொண்டாதாக இருக்க வேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அஃதாவன

எழுத்தறிவு,
 தொழிலறிவு,
 ஒழுக்கப்பழக்க அறிவு,
 இயற்கை தத்துவ அறிவு ஆகியவையாகும்.

ஏற்கனவே கல்வி நிலையங்கள் முதல் இரண்டையும் செய்து கொண்டு வருகின்றன. அத்துடன் கடைசி இரண்டையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
கடைசி இரண்டும்தான் அறிஞர் அர்னால்ட் அவர்கள் கூறும் ‘அறிவை அறியும் கல்வி.’ எனவே மகரிஷியின் இளவளான அர்னால்ட் அவர்கள், வேதாத்தரியம் கூறும் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தில் இணைகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆக மூன்று அறிஞர்களும் அவர்களின் ஒரே விருப்ப எண்ணத்தை வெவ்வேறு வார்த்தைகளாகக் கூறியிருக்கின்றனர்.
மனிதனிடம் இல்லாத ஒன்றை வெளிக்கொண்டுவரமுடியாது. எனவே சுவாமி விவேகானந்தர் கூறுவது யாதெனில் மனிதன் இறையின் அங்கம் என்பதால் அவனிடம் இறையின் பூரணத்துவம் ஏற்கனவே மறைந்துள்ளது. அதனை வெளிக்கொணரும்படியான கல்விவேண்டும் என்கிறார்.
மனிதனிடம் ஏற்கனவே உள்ள பூரணத்துவம் எவ்வாறு கொண்டுவர முடியும் என்று ஆராயும்போது ஸ்ரீ ரமண மகரிஷியின் பக்தர்கள், அவரிடம் வந்து, தங்கள் துயரங்களைக்கூறி ஆசீர்வதிக்கும்படி வேண்டும்போது ‘நீ யார் எனக்கண்டுபிடி-Find out who you are’ என ஆசிர்வதித்தது அனுப்புவது நினைவிற்கு வருகின்றது. எனவே ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் துயரங்கள் நீங்க ‘நீ யார் எனக்கண்டுபிடி’ என்று ஆசீர்வதித்ததன் நோக்கம் ஒவ்வொருவரும் அறிவை அறியும் கல்வியில் தேர்ச்சி பெறவேண்டும், அவ்வாறு தேர்ச்சி பெறுவதால் அவர்களது துயரங்கள் நீங்கும் என்பதே. இதனையே அறிஞர் திருவள்ளுவர் கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் ஏழாவது குறளாக அருளியுள்ளதனை நினைவுகூர்வோம்.

“தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.“ குறள் எண் 7

இயற்கையின்ஆதிநிலை/இறைநிலை/அறிவிற்கெல்லாம் மூலநிலை அறிந்து, அதன் வழி வாழ்ந்தால் அன்றி வேறு எந்த வகையிலும் மனக்கவலை மாறாது என்று கருணையோடு எடுத்து இயம்புகிறார் அறிஞர் திருவள்ளுவர்.
மேலும் திருவள்ளுவருக்கு முன்னரே, அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அறிஞர் சாக்ரடீஸ் அவர்கள் இளைஞர்களை அழைத்து அவர்களிடம ‘உன்னையே நீ அறிவாய்’ என்று கூறுவாராம் என்பதனை தெரிந்து கொள்ளும்போது ஐந்து அறிஞர்களின் விருப்ப எண்ணமும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
இப்போது அத்தகைய புனிதமாகிய விருப்ப எண்ணத்தில் லட்சக்கணக்கில் மனவளக்கலைஞர்களும் இணைந்துள்ளனர் என்பது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடுதான் இயற்கையின் சரித்திரத்தை/இறையையே அறியும் மனவளக்கலையாகும்.

எனவேதான் அறிஞர் அர்னால்டு “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.” என்கிறார்.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(14-02-2016 ஞாயிறு) நான்காவது கேள்வியான ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன? என்பதற்கான விடையினை அறிவோம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்           வளர்க அறிவுச் செல்வம்