FFC – 161-வினா விடை – 11—(3/3)

வினா விடை – 11—(3/3) 

FFC – 161

07-02-2016—ஞாயிறு

சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி–

சிந்திக்க அமுத மொழிகள்- 131
(04-12-2015—வெள்ளி)

தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

….. புத்தர்

இன்றைய சிந்தனையில் பழக்கம் பழகிவிட்டால் அதனை விட்டுவிடுவதில் என்னென்ன சிரமங்கள் உள்ளன என அறிந்துகொள்வோம். மேலும், ஒரு கேள்விக்கு இத்தனை நீண்ட விடை அவசியமா எனவும் அறிந்து கொள்வோம். .

ஆரம்பத்தில் பழக்கம் சிலந்தி வலைபோல் வலிமையற்று இருக்கும். அதாவது அறியாமையால், தீமைதரும் பழக்கத்தை கொண்டிருந்தால், அதனை ஆரம்பத்திலேயே அறவே நிறுத்திவிட பழகவேண்டும். தீமை தரும் பழக்கத்தை நிறுத்தவும் பழகவேண்டியிருக்கின்றது/ அவசியமாகின்றது. தீய பழக்கத்தை நிறுத்தாமல், அது தொடரப்படுமானால் அது தேரை இழுக்கும் கயிறுபோல் வலிமையுடையதாகிவிடும். அந்நிலையில் தீயபழக்கத்தை கைவிட போராட வேண்டியிருக்கும். அதில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிகொள்ள முடிகின்றது. மற்றவர்களோ வாழ்நாள் முழுவதும் தீயபழக்கத்திற்கு அடிமையாகி உடலாலும், உள்ளத்தாலும் மற்றும் நட்புநலமில்லாமலும் துன்பத்தையே அனுபவிக்க நேரிடுகின்றது. இந்த உண்மைக்குத் தொடர்புள்ள வேறு அறிஞர்களின் பொன்மொழிகளை நினைவு படுத்திக் கொள்வோம்.

முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.
. . . ஸ்பானியப் பழமொழி
நல்ல குழந்தைகளை உருவாக்க பெற்றோர்கள் நல்லவர்களாக வாழவேண்டும்.
பெற்றோர்களின் வாழ்க்கை குழந்தைகளின் பாடப் புத்தகமாக அமைகிறது.
. . . அறிஞர் ஆர்னால்ட் பென்னெட்.
பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியா்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.
. . . அறிஞர் எம்.கோர்க்கி.
பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக்கொண்டிருக்கும் சீவன் மனிதன்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

குறிப்பு:-

தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.’ என்கின்ற புத்தரின் அமுதமொழியை ஆழ்ந்த விரிந்த சிந்தனைக்கு உட்படுத்துவதற்கான பயிற்சியாக ‘அறிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்கின்ற வினா கேட்கப்பட்டுள்ளது?
அறிஞர்களின் அமுதமொழிகள் பொதுவாக அனைவருக்குமே வாசிப்பதில் சுகமாகத்தான் இருக்கும். எனவே ‘அமுதமொழி’ நன்றாக இருக்கின்றது என மனதளவில் சொல்லிவிட்டும் அனுபவித்துவிட்டும் சென்று விடக்கூடாது. ஏனெனில் அறிஞர்களின் பொன்மொழிகள் ஒரு நாளில் தீடீரென்று உதிர்க்கப்படுவதில்லை. நீண்ட நாள் ஆழ்ந்த, விரிந்த சிந்தனையின் பயனாக அமுதமொழிகள் உதிர்க்கப்படுகின்றன. அமுத மொழிகள் ஆழ்ந்த, விரிந்த சிந்தனையில் உதிப்பதால்> அந்த அமுதமொழியினை மொழிவதற்கு அவ்வறிஞருக்கு ஏற்பட்டுள்ள துணை சிந்தனைகள் எல்லாவற்றையும் வாசிப்பவரும் அறிந்து கொண்டு ரசிக்கவும், மதிக்கவும் வேண்டும். இவ்வாறு செய்துவர வாசிப்பவரும் அறிஞரின் சிந்தனைத்திறனுக்கு உயர்ந்து வருவார். இது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றப்படி வாசிப்பவர் உயர்ந்து வருகிறார் என்பதனை உறுதிபடுத்துகின்றது.
எனவே இவ்வாறெல்லாம் அமுத மொழியினை கண்ணுறும்போது ஆழ்ந்து, விரிந்தும் சிந்திக்க வேண்டுமா எனவும் ஐயம் எழலாம். இதற்கெல்லாம் பரபரப்பான உலகில் நேரம் இல்லையே என நினைக்கலாம். பழகிவிட்டால் அமுத மொழியினை வாசித்த உடனேயே அதனுடன் தொடர்புள்ள துணைச்சிந்தனைககள் பளிச்சிடும். வேறு அறிஞர்கள் யாராவது அந்த அமுதமொழியின் பொருளையொட்டி கூறயிருந்தாலும் இணைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் நொடி நேரப்பழக்கம் அந்த அமுத மொழியை தன்னுடையதாக்கிவிடும். ஒரு வேளை அந்த அமுதமொழியின்படி வாழ்க்கை வாழாமலிருந்தால், விளக்கம் உறுதியாகி உடனே அவ்வாறே வாழ்வதற்கு அறிவு தொடர் விடாமுயற்சி எடுக்கும். விளக்கம் உறுதியாகிவிடுவதால் பழக்கப்பதிவு தோற்கடிக்கப்பட்டு விளக்கப்பதிவு வெற்றி பெறும். இது விளங்குகின்றதால்லவா!
புத்தர் கூறுவதென்ன? ‘தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.’ என்கிறார் புத்தர். அதாவது ‘தீமை தீங்கு செய்யாத வரையில்’ என்றால், அதற்கு முன்னர், ஆரம்பத்தில் நன்மையை, அதாவது சுகத்தை கொடுத்திருக்கின்றது. அதனால் அதில் மூழ்கி இறங்கிவிட்டான். ஆனால் இப்போது (பின்னர்)அது தீமையைத் தர ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதனை பின்னர் துன்பத்தை தரும் என்று முன்கூட்டியே அறியாதவனை முட்டாள் என்கிறார் புத்தர். ஏன் அவன் முட்டாளாக இருக்கின்றான் என்று ஆழ்ந்து, விரிந்து சிந்தித்தால் நமக்கு தெளிவாவது என்ன?
அவன் அறிவு கூர்மையாக இல்லை. ஆறாம் அறிவின் சிறப்புத்திறனான ‘நுண்மான் நுழைபுலன்’ மேலோங்கவில்லை. மேலும் பேரறிவே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அது நேரிடையாக ஆறாம் அறிவாக தன்மாற்றமடையவில்லை. ஒரறிவிலிருந்து ஐந்தறிவாக சீவன்களாக வந்த பிறகுதான் ஆறாம் அறிவான மனிதனாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எனவே ஆறாம் அறிவின் தன்மைகள் முழுவதுமாக மேலோங்காமல் மனிதனுக்கு முந்தைய பிறவிகளான விலங்கினப் பண்புகளே மேலோங்கி உள்ளன.

புத்தரின் இந்த அமுதமொழியால் நாம் ஆழ்ந்து விரிந்த சிந்தனையின் அவசியத்தை அறிந்து கொண்டதன் விளைவாக
1) அறிவுக் கூர்மையின் அவசியம்,
2) அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் பற்றி
ஏற்கனவே தெரிந்திருந்தாலும், மேலும் விரிவாகவும் அறிய வேண்டியது அவசியம்,
3) திருவள்ளுவரின் அறிவுக்கான வரையறையைக் கூறும் இரண்டு குறட்பாக்களை நினைவு படுத்திக் கொண்டதால் திருவள்ளுவரோடு இணைந்து கொண்டோம்.
4) திருவள்ளுவரோடு இணைவதோடு மட்டும் இல்லாமல் நம் குருநாதரின் பாடலை நினைவு கூர்ந்ததால் அவரோடும் இணைந்து கொண்டோம்.
5) மற்ற அறிஞர்களின் அமுத மொழிகளோடும், பழமொழிகளோடும் இணைத்துப்பார்த்து புத்தரின் இந்த அமுதமொழியினை மொழிவதற்கு புத்தர் உறுதிபடுத்தியதுபோல் நாமும் இந்த அமுத மொழியினை உறுதிபடுத்தி நமதாக்கிக் கொண்டோம். அதோடு மட்டுமல்ல, புத்தர் இப்போது இருந்து நேராக சமுதாயத்திற்கு சொன்னால் என்ன பயன் ஏற்படுமோ அதே பயனை நாம் இப்பழமொழியினை பிறர்க்கு எடுத்துச் சொல்வதில் ஏற்படுத்த முடிகின்றது. வாழ்க வளமுடன் வாழ்வ மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம். இத்துடன் இன்றைய இத்துடன் முடித்துக் கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் (07-02-2016 – ஞாயிறு) கூடுவோம்.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(07-02-2016 ஞாயிறு) “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே” என்று அறிஞர் அர்னால்டு அவர்களின் பழமொழியின் பயிற்சிக்காக கேட்கப்பட்டிருந்த கீழ் கண்டுள்ள வினாக்களுக்கான விடைகளை அறிவோம்.
1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”  என அழைக்கிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்.