FFC – 160-வினா விடை – 10—(2/3)

வினா விடை – 10—(2/3) 

FFC – 160

03-02-2016—புதன்

சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி–

சிந்திக்க அமுத மொழிகள்- 131
(04-12-2015—வெள்ளி)

தீமை, தீங்கு செய்யாத வரையில் முட்டாள் அதைத் தேனாக நினைக்கிறான்.

….. புத்தர்

பயிற்சி—
1) அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

விடை:– தொடர்ச்சி–

அறிவைப் பற்றி மெய் உணர்தல்(அதிகாரம்36-குறள் எண் 355) மற்றும் அறிவுடைமை(அதிகாரம் 43 – 423) என்கின்ற அதிகாரத்தில் கூறியிருக்கிறார். அக்குறளை நினைவுபடுத்திக் கொள்வதன் வாயிலாக திருவள்ளுவருடன் இணைந்து கொள்வோம். திருவள்ளுவர் இப்போது இல்லையே என நினைக்கலாம். நம் குருநாதரும் திருவள்ளுவர் இல்லாதபோதுதான்(1911) பிறந்தவர். அவர் திருவள்ளுவருடன் இணையவில்லையா! திருவள்ளுவரை அவர் மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்ளவில்லையா!. நமக்கெல்லாம் அந்த யுக்தியினை குருவணக்கம் பாடலின் வாயிலாக கூறியிருக்கிறார்.

நடந்த நிகழ்ச்சி ஒன்றை அறிவோம். அன்பர் ஒருவர், ஒரு குறளுக்கு சரியான பொருள் வேண்டி திருவள்ளுவரை நினைத்து தியானம் செய்துள்ளார். தியானத்தின் முடிவில், அந்த குறளுக்கு பொருள் அறிந்த தெளிவுடன் அவர் எழுகிறார். திருவள்ளுவர் பூதஉடல் இல்லை என்பது உண்மைதான். திருவள்ளுவரது அறிவாற்றல்தான் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றதே. அதேபோன்றுதான் மகரிஷி அவர்கள் பூதவுடலோடு இப்போது நம்மிடம் இல்லை. எனவே நாம் அவருடன் இப்போது இணைந்து கொள்ளாமலா இருக்கிறோம்!? நாம் அவருடன் இப்போது இணைய முடியாது என்பதில்லை. அவர் அருளியுள்ள, குறிப்பாக பாடல்களின் வாயிலாக நம்முடன் உறவை அவர் வைத்துக் கொண்டுதான் உள்ளார்.
அவரது பாடல்கள் இதுவரை ஆன்மீகத்தில் அருளப்பட்டுள்ள பாடல்களிலேயே மிகத் தெளிவாக, எளிமையாக வாழ்க்கையைப் பற்றி கூறுவதனால் காலங்காலமாக,

உலகியல் வாழ்க்கையும், ஆன்மீகவாழ்க்கையும் தனித்தனியாக இருந்து வந்ததை,
விருப்பமுள்ளவர்கள் ஆன்மீக வாழ்க்கை வாழலாம், மற்றவர்கள் உலகியல்
வாழ்க்கையிலேயேகூட
மூழ்கியிருக்கலாம் என்பதனை மாற்றி அமைத்து,
இரண்டையும் இணைத்து எந்தவித அச்சமும் இன்றி
உலகியல் வாழ்க்கையைவிட மிகவும் மகிழ்ச்சியான சிறப்பான ஒரே வாழ்க்கையை மனிதன்
வாழமுடிகின்றதல்லவா இப்போது மனவளக்கலையின் துணையால்?
மனவளக்கலைஞர்களுக்கு என்ன குறை இப்போது? ஒன்றுமில்லை.
வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அனுபவத்தாலும் அறிவாலும் அறிந்து கொள்ள முடியவில்லையா?
பேரின்ப பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் மனவளக்கலைஞர்கள்.

உணர்ச்சிவயம்:-

அடுத்ததாக அறிவின் குறைபாடுகளில் மூன்றாவதான உணர்ச்சிவயம் என்பதனை ஆராய்வோம்.
உணர்ச்சிவயம் என்கின்ற சொல் ‘உணர்ச்சி’, ‘வயம்-வசம்’ ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டது. உணர்ச்சி என்பது உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறியும் அனுபவம். அதாவது அறிவால் இன்ப துன்பங்களை உணர்வது.
‘வசம்’ என்றால் ‘உள்ளான நிலை, உட்பட்டது’ என்று பொருள்படும். ஆகவே உணர்ச்சிவயம் என்றால் ‘அறிவு உணர்ச்சிக்கு உட்பட்டநிலை.’ ஒன்றிற்கு ‘உட்பட்டநிலை’ என்றால், எந்த ஒன்று மற்றொன்றிற்கு உட்பட்படுகிறதோ அது தன் சுயத்தை இழக்கின்றது. அதாவது உணர்ச்சிவயப்படும்போது, அறிவு தன் சுயத்தை இழந்து விடுகின்றது.

அப்படியென்றால் என்ன பொருள்? விவேகமுடைய அறிவு தன் சுயத்தை இழக்கின்றது. விவேகம் என்பது ‘நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் சிறப்பாகும்.’ எனவே அறிவு தன்சுயத்தை இழக்கும்போது தன்னுடைய விவேகத்தை இழக்கின்றது. அதன் விளைவு அறிவு நிதானத்தை இழக்கும். அறிவு சலனப்படும். அதாவது, ஆதியில்(Originally)சலனமற்று இருந்த அறிவு, பின்னப்பட்டு, விலங்கினமாக வந்த பிறகு மனிதனிடம் வரும்போது அது சலனத்தை இழப்பதைத்தான், அறிவு சுயத்தை இழக்கின்றது என்கின்றோம். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ‘நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் சிறப்பை அறி வு இழப்பதாலும், சலனப்படுவதாலும், அறிவு நுண்மான்நுழைபுலனை இழக்கும். அப்போது அறிவு, செயலின் பின்விளைவை முன்கூட்டியே அறிந்துகொள்ள இயலாது. அறிஞர் திருவள்ளுவர் அறிவு எது என்று கூறுவதிலிருந்து, அறிவு உணர்ச்சி வயப்பட்டால் அறிவு அதன் வரையறைக்கு உட்படாமல் போகின்றது. அந்த இரண்டு குறட்பாக்களையும் நினைவு கூர்வோம்..
இப்போது அந்த இரண்டு குறட்பாக்களுக்குள் செல்வோம்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு …..குறள் எண். 355 (அதிகாரம் 36- மெய் உணர்தல்)

அடுத்ததாக,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. …. குறள் எண் 423 (அதிகாரம் 43- அறிவுடைமை)

அறிவு உடைமை அதிகாரத்தில் அறிவை எவ்வாறு ஒவ்வொரு மனிதனும், தனது உடைமையாக்கிக் கொள்வது என்று கூறியவர் அதற்கு முன்னதாக எழுதிய மெய் உணர்வு அதிகாரத்திலும் அறிவைப்பற்றி, எது அறிவு என்று அறிவு பற்றி கூற விரும்பியிருக்கிறார் திருவள்ளுவர். என்ன காரணம்? அவர் சொல்வது போல் அறிவு, அறிவை தனது உடைமையாக்கிக் கொள்ளும் பட்சத்தில், அது மெய்ப்பொருளை உணர்வதற்கும், மெய்ப்பொருளுடன் இணைவதற்கும் தகுதி உடையதாகின்றது.

    மெய் உணர்தல் என்றால் என்ன? மெய் என்றால் உண்மை என்று பொருள். ஆகவே இயற்கையைப் பற்றி உள்ளதை உள்ளவாறு உணர்தல் மெய் உணா்தல். அது என்ன உள்ளதை உள்ளவாறு உணர்தல்? ஒன்றேயாகிய இயற்கைதான்(இறையேதான்) எல்லாமாகவும் ஆகியுள்ளான் என்கின்ற உண்மையோடு மனிதன் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும்.  ஆரம்பகாலத்தில் இருப்பவர்களுக்கு இந்த உண்மையை கைவல்யப்படுத்திக் கொள்வதற்காக இக்குறளை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

‘ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்கின்ற பெரியபுராண உண்மை எப்படி உண்மையாகின்றது என்று பார்ப்போம்? ஒடு அணுக்களால் ஆனது. பொன்னும் அணுக்களால் ஆனது. அணுக்கள் ஒரே மூலத்திலிருந்துதான் உருவாகின. எனவே அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்கின்றது அப்பெரியபுராண வாக்கியம். சடப்பொருட்களிலேயே ஒற்றுமையினைக் காணப்பழகாவிட்டால் உணர்ச்சிகளுடைய வெவ்வேறு உருவங்களுடைய மனிதர்களிடையே எவ்வாறு அறிவு ஒற்றுமையைக் காண முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு பகல்கனவு போன்றதாகத்தான் இருக்கும். எந்தப்பொருளானாலும் அடிப்படையில் ஒன்றேதான் என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது அக்குறள்.

அடுத்த அறிவு உடைமைக் குறளான 423 கூறுவது என்ன?

சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கின்றது. யார் யார் என்ன சொன்னாலும் அது இயற்கையைப் பற்றியதாகவோ அல்லது இறையைப் பற்றியதாகவோ அல்லது எந்த ஒரு செய்தியாகவோ இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள உண்மை என்ன என்று சுயமாய் சிந்தித்து தெளிவடையச் சொல்கின்றது. வேதாத்திரிய முதல் பாடலே ‘சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்’ என்றுதான் இந்த மனித குலத்தை அன்புடன் அறிவுறுத்துகின்றது.

     அறிவு உணர்ச்சிக்கு வயப்படும்போது வள்ளுவர் கூறும் அறிவின் இலக்கணத்திற்கு ஏற்ப அறிவு எவ்வாறு இயங்க முடியும்? விளைவாக அறிவு துன்பத்தைதான் அனுபவிக்க நேரிடுகின்றது. உணர்ச்சிவயப்படும்போதுதான் மனிதன் சிறு குற்றங்களிலிருந்து பெருங்குற்றம் வரை செய்ய நேரிடுகின்றது. எனவே அறிவு உணர்ச்சி வயப்படுவதைத் தவிர்த்து, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இது ஒரு நாளில் வருவதன்று. அறநூல்களை வாசிப்பதாலும், அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலில் இன்பம் காண்பதன் மூலமும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதன் மூலமும் அறிவு உணர்ச்சி வயப்படுவதிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு மேன்மை அடையலாம்.

அறிவின் சிங்கமாக இருக்கின்ற அறிவாளி[அறிவு+ஆளி(சிங்கம்)], அறிவுக்கூர்மையுள்ளவன் ஒரு செயலின் பின்விளைவை முன்கூட்டியே அறிந்து கொள்வான். ஆகவே அவன் ஆரம்பத்தில் இன்பம் தருவதாக இருந்தாலும், ஏமாந்து போகாமல், பின்னர் அச்செயலே துன்பம் தரும் என்பதனை முன்கூட்டியே, அறிவான். அவனே அறிவாளி. அறிவுக்கூா்மையுடையவன். அவ்வாறு அறிவாளியாக, அறிவுக்கூர்மை இல்லாதவன்தான் அச்செயலில் ஈடுபடுவான். பின்னர் அச்செயல் தீமை தரும்வரை அதனை தேனாகக்கருதி அச்செயல் புரிவதில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு, அப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்சுயத்தை இழந்துவிடுவான். அப்படிப்பட்டவனை முட்டாள் என்கிறார் புத்தர். இது சரிதானே!

அறிவு ஏன் உணர்ச்சிவயப்படக்கூடாது எனப்படுகின்றது? எந்த ஒன்றும் மனிதனுக்கு கூடாது என்றால், அந்த ஒன்றால் மனிதனுக்கு துன்பம் வருகின்றது என்று பொருளாகின்றது. அதனைத் தவிர்த்தால் இன்பம்தான். எனவே அறிவு உணர்ச்சிவயப்படக்கூடாது என்றால் துன்பம் தவிர்த்து இன்பம் அனுபவிப்பதற்காகவேதான். ஆகவே அறிவு உணர்ச்சி வயப்பட்டால் இன்பத்தின் சாம்யமான ‘அளவு’ , ‘முறை’ கடைபிடிக்கமுடியாமல் போய்விடும். அதனால் துன்பம்தானே. மேலும் அறிவு உணர்ச்சியவயப்படும்போது தன்னிலை மறந்து சினம் கொள்கின்றது. மனஅலைச்சுழல் வேகமாகி சீவகாந்தம் வாரி இழக்கப்படுகின்றது.

ஒரு அறிஞர் உணர்ச்சி, அறிவு பற்றி கூறும் அமுதமொழியினை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அறிஞர் எம். ஹென்றி கூறுகிறார்:-

“உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய்விடும்”

என்ன கூறுகின்றார் அறிஞர் ஹென்றி? உணர்ச்சி வயப்படக்கூடாது என எச்சரிக்கிறார்? உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமா? அல்லது அறிவு அரியணையில் அமர்ந்திருக்க வேண்டுமா? அறிவே தெய்வம் என்றிருக்கும்போது அறிவாகிய தெய்வம்தானே அரியணையில் இருக்க வேண்டும்!! உணர்ச்சியை அரியணையில் அமரச்செய்துவிட்டு அறிவாகிய தெய்வத்தை வெளியே அனுப்பி விட்டால் தெய்வ அருள் எப்படிகிட்டும்? தெய்வத்தின் துணை எவ்வாறு கிட்டும் மனிதனுக்கு? தெய்வம் எவ்வாறு வழிகாட்ட முடியும்? தெய்வமேதான்  தானாகவும், மற்ற உயிர்களாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற  என்கின்ற பேருண்மையை கருத்தியலாக மட்டுமல்லாது எவ்வாறு செயல்முறையில் உறுதிபடுத்த முடியும்(Practical Enlightenment)? Both theoretical and practical understanding about God and oneself are required!!! That is Ecstasy and Real Enlightenment.

      ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவு என்ன என்று தீர்மானித்து விட்டுத்தான் அச்செயலைச் செய்ய வேண்டும். செயலுக்கேற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை/இறை நியதி இருப்பதால், செய்கின்ற செயலின் விளைவு நன்மையைத் தருமா அல்லது தீமையைத் தருமா என முன்கூட்டியே அறிய வேண்டும். விளைவறியாது செயலை செய்யக் கூடாது. இது விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வு அயர்ந்து விடாமல்(தூங்கிவிடாமல்) பார்த்துக் கொண்டால் அதுவே அயராவிழிப்புணர்வு(Constant Awareness).

     எந்த ஒரு செயலும் அறநெறிக்குட்பட்டே இருக்கின்றதா என அறிந்து விட்டுச் செய்ய வேண்டும். இயற்கையின்/இறையின் நெறி அறநெறி. ஆகவே இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் உச்சகட்டநிலையான மனிதன் எப்போதும் இயற்கையின்/இறையின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளாகும்.
துன்பத்தை(தீமையை) அளிக்கக்கூடிய செயல் ஆரம்பத்தில் இன்பத்தை அளித்தாலும் அச்செயலைத் தொடரக்கூடாது. செயலைச் செய்யும்போது ஒவ்வொரு முறையும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு(Wonderful Recording System) கருமையத்தில் பதிவாகின்றது. தொடர்ந்து அந்த செயலை செய்து வந்தால் அது பழக்கமாகவிடுகின்றது. பழக்கம் நெடுநாள் செய்து வந்தால் அது வழக்கமாகி பழக்கவழக்கமாகின்றது.
இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக்கொள்வோம். இதன் தொடர்ச்சியினை அடுத்த அறிவிற்கு விருந்தில்(07-02-2106 ஞாயிறு) பார்ப்போம்.