FFC – 147-வினா விடை 1

 

வாழ்க மனித அறிவு                                                                                                         வளர்க மனித அறிவு

வினா விடை 1

FFC – 147

23-12-2015 – புதன்

சிந்திக்க வினாக்கள்-126
19-11-2015 – வியாழன்

வினா: அருள்நெறியின் உறுப்புகள் எவை?

விடை:
அருள் நெறியும் அறநெறியும் ஒன்றே. எப்படி? அருளைப் பெறக்கூடிய நெறி அருள்நெறி எனப்படுகின்றது. அந்த இறை அருள் எப்போது கிட்டும்? வாழ்க்கையை நெறியுடன் வாழ்ந்தால் இறை அருள் கிட்டும். அந்த நெறிதான் அறநெறி எனப்படுகின்றது, அறநெறியின் உறுப்புகள் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றுமாகும்.
ஒழுங்காற்றலான அறிவே மனித அறிவாக இருந்தும், .ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால், ஒழுங்காற்றலான இறையின் அருள் எவ்வாறு கிட்டும்?
‘செயலுக்கான விளைவாக வருவது இறை’ என்கின்றபோது, கடமையில்லாமல்(செயல்) எவ்வாறு இறையின் அருள் கிட்டும்?
‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்கின்றபோது ஈகையின்றி சமுதாயத்துடன் எவ்வாறு இசைந்து வாழ முடியும்? சமுதாயத்துடன் இசைந்து வாழாமலிருந்தால் இறை அருள் எவ்வாறு கிட்டும்?
ஆகவே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து இறை அருளைப் பெற வல்லன. என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று உறுப்புகளைக் கொண்ட அறநெறியும் அருள் நெறியும் ஒன்றே.

சிந்திக்க அமுத மொழிகள்- 127

                                                                                                                                        20-11-2015—வெள்ளி

இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கி விடும். அதுபோல ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.
                                                                                                                                             ….. புத்தர்
பயிற்சி—
1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே எடுத்துக்கூறவும், ஏன், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

2) ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

விடை:
வினா-1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே நீங்களே எடுத்துக்கூறவும், அடுத்து, மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

திருவள்ளுவர் கூறும் ‘கூடா ஒழுக்கம்’. ‘கூடநட்பு’ பற்றியேதான் புத்தரும் எடுத்துரைக்கிறார்.. ‘ஒழுக்கமற்றவர்களுடான நட்பை ஒதுக்கி விடுங்கள்’ என்கின்ற அறிவுரையை புத்தர் உவமானம் ஏதுமின்றியே நேரிடையாகவே சொல்லியிருக்கலாம். மனித சமுதாயத்திற்கு! ஆனால் சொல்வது தெளிவாகவும், சுருக்கமாகவும்(succinctly, pointedly, without leaving any loose ends) இருப்பதற்காக நறுக்குத்தெறித்தாற்போல் ‘கடல் இறந்தவர்களை ஒதுக்கிவிடுகின்ற’ உவமானத்துடன் கூறுகிறார் புத்தர்.
உவமானங்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? இயற்கையின் நிகழ்சிகளிலிருந்துதான் எடுக்கப்பட வேண்டும். வேறு எங்கிருந்து எடுக்க முடியும்? இயற்கையின் தன் இருப்பின் மூலமும், நொடிக்கு நொடி தன் நிகழ்வுகளின் மூலமும் அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றது. இயற்கையுடன் இணைந்திருந்தால் (attunement with Nature) இயற்கையே சிந்தனையாளர்களுக்கு ஆசானாக இருக்கும்.
அறிஞர்கள் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு இரண்டு விதமாகச் சொல்வர். ஒன்று வாழ்வியல் கண்டுபிடிப்புகளை எளிதாக விளங்க வைப்பதற்கு உவமான உவமேயங்ளை கையாள்வர். சில நேரங்களில் உவமான – உவமேயம் இல்லாமலேயே நேரிடை அறிவுரையாகவும் இருக்கலாம். அறிஞர்கள் பயன்படுத்தும் உவமான- உவமேயங்களை நாம் மதிக்கவும் வேண்டும், ரசிக்கவும் வேண்டும். கூறுகின்ற கருத்திற்கும் உவமான-உவமேயத்திற்கும் உள்ள ஒற்றுமையை(mapping) அறிய வேண்டும். மனதிற்குள்ளாகப் போற்றிப் பழக வேண்டும். ஏன் எனில் இறைத்தூதர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், நாமும் வாழ்நாளில் பெறுகின்ற அனுபவங்களை அதுபோல் பின்வரும் சமுதாயத்திற்குச் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.

‘தான் உயராது, மற்றவரது உயா்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’ என்பது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாக (corollary) இருப்பதால், போற்றுகின்ற பண்பு இருக்கின்றது என்றால் மற்றவரது உயா்வுநிலைபோல் நாமும் உயரவேண்டும் என்கின்ற விழைவு அந்த ஆன்மாவிற்குள் உள்ளது என்பது அறிகுறி. அது மறைந்தும் இருக்கலாம். அல்லது அது வெளிப்படையாகவும் தெரியலாம். மறைந்திருப்பதை எவ்வாறு அறிவது? ‘பிறர் உயர்வைப் போற்றி, மதித்து, ரசிக்கும் தன்மை’ நம்மிடம் இருக்குமானால் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றப்படி நாம் அந்த உயர்வுநிலைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து, உயா்ந்து வருகிறோம் என்று பொருள். குறிப்பாக இது குரு-சீடர் உறவில் பளிச்சிட வேண்டும்.

நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் அமைந்துள்ள எல்லாச்சிறப்புகளில் இந்த உவமான – உவமேயங்கள் பயன்படுத்துதலும் முக்கியமானதாகும். இல்லையெனில் ‘வெட்டவெளியே தெய்வம்’ என்று வெளிப்படையாகத் துணிந்துரைத்து லட்சோப லட்ச சீடர்களைக் ஈர்த்துக் கொண்டிருக்க முடியுமா?

மகரிஷி அவர்களின் உவமான – உவமேயங்கள் பயன்படுத்தும் சாதுரிய-யுக்தியினை அறிந்து கொள்ள அவர் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை அறிவோம்.

மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. அமெரிக்காவில் பயிற்சியாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்க இளைஞர் ஒருவர் மகரிஷி அவர்களிடம் ஒரு வினாவினைக் கேட்டாராம். அதாவது

“சுவாமிஜி ஏன் ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்துகிறீர்களே! ஏன்” என்றாராம். அதற்கு மகரிஷி அவர்கள் பதில் வினாவினை அந்த இளைஞரிடம் கேட்டாராம். அது என்னவெனில்:- “சாலையில் மகிழுந்தை(car) ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது, சிவப்பு விளக்கு எரிந்தால் என்ன செய்வீர்கள்” என்றாராம். அதற்கு அந்த இளைஞர் என்ன சொல்லியிருப்பார்? அந்த இளைஞர் “சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் போனால் விபத்து நேரும். எனவே மகிழுந்தை நிறுத்திவிட்டு பச்சைவிளக்கு எரியும்போது செல்வேன் ” என்றாராம். உடனே அதற்கு மகரிஷி அவர்கள் “அதுபோல்தான் வாழ்க்கையில் மனிதன் ஒழுக்கம் தவறி நடந்தால் வாழ்க்கை எனும் பயணத்தில் விபத்து ஏற்படும்” என்றாராம். அந்த விபத்துதான் துன்பங்களாக வருகின்றன. என்றாராம். மகரிஷி அவர்கள், அந்த இளைஞர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற கருணையால், சாதுரியமாக தக்க உதாரணத்துடன் சொன்ன பதில் எவ்வளவு ஆறுதலையும், அதனால் மகிழ்ச்சியினையும் உண்டாக்கியிருக்கும்.! ஆறுதலும் மகிழ்ச்சியும் எவ்வாறு உண்டாகியிருக்கும்? ஒழுக்கம் அவ்வளவு அதிமுக்கியமானதா என்கின்ற ஐய–இருளில் இருந்த அந்த இளைஞரின் அறிவிற்கு விளக்கம் நிச்சயமாக ஒளியைத் தந்திருக்கும் என்பதால், ஐயம் தீர்ந்ததால் ஐயம் தீர்ந்த(இருள் மறைந்தது) ஆறுதலும், அதனைத் தொடா்ந்து அறிவு, ஒளியால் உயர்வை அடைந்ததால் மகிழ்ச்சியும் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.

இதே போன்று மற்றொரு நிகழ்ச்சி ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி நடந்ததனை அறிவோம். இதே போன்று வேறொரு சமயத்தில் ஒழுங்குடன் இருப்பது பற்றி ஐயம் எழுந்தது பயிற்சியாளர் ஒருவருக்கு. அதற்கு அந்த பயிற்சியாளரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து இரண்டு சரிபாதியாகக் கிழிக்கச் சொன்னாராம் மகரிஷி அவர்கள். உடனே அந்த பயிற்சியாளர் காகிதத்தை வாங்கி இரண்டாக மடித்து மடிப்பை விரல்களால் நன்றாக தீட்டி பிறகு கிழித்தாராம். என்ன நடந்திருக்கும்? ஒன்றாக இருந்த காகிதம் சரியான நேர்கோட்டுடன் கிழிந்திருக்கும். மகரிஷி அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? அந்த பயிற்சியாளரிடம் “ஏன் இரண்டாக மடித்து தீட்டி கிழித்தீர்கள்? இரண்டு கைகளால் காகித்தை பிடித்து இழுத்தால் காகிதம் இரண்டாகக் கிழிந்திருக்குமே!” என வினவினாராம். அதற்கு அந்த பயிற்சியாளர் என்ன சொல்லியிருப்பார் என்று தெரிந்ததே, அப்படி மடித்து நன்கு தீட்டி கிழிக்க வில்லை என்றால் காகிதம் நோ்கோட்டில் கிழியாமல் தாறுமாறாக, வளைவுகளுடன் ஒழுங்கில்லாமல் கிழிந்திருக்கும்” என்றாராம். உடனே மகரிஷி அவர்கள் “இதுபோன்றுதான் வாழ்க்கையில் ஒழுங்கு இல்லையானால் வாழ்க்கை என்கின்ற வண்டிச்சக்கரம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகும்” என்றாராம்.

எனவே நமக்கும் உவமான-உவமேயம் கண்டு பிடிக்கும் திறன் வளர்ந்து விட்டால் அது இரண்டு விதங்களில் உதவியாக இருக்கும்.

ஒன்று – முதலில் நமக்கு நாமே எடுத்துச் சொல்ல உதவியாக இருக்கும். இது என்ன? உதாரணமாக வாழ்க்கையில்

‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’

என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். ‘நான் தான் சரியாக நடந்து கொள்கிறேனே, நான் ஏன் பிறருடன் ஒத்துப் போக வேண்டும் என வினா எழலாம்.? இந்த வினாவிற்கு விடை கிடைக்கும் வரை ஒத்துப் போக மனம் இடம் தராது. அப்போது இந்த உவமான உவமேயம் கண்டுபிடிக்கும் திறனால் தக்க உவமான-உவமேயம் கண்டுபிடித்து, மனதிற்கு தெளிவினை ஏற்படுத்த முடியும். இது முதலில் நமக்கு உதவியாக இருப்பது.

மற்றொன்று. பிறர்க்கு நாம் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு உவமான, உவமேயம் பயன்படுத்தும் திறன் உதவியாக இருக்கும். வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்களாக்கியுள்ளார். ஆகவே மனவளக்கலைஞர்களுக்கு ஞானாசிரியராகும் பயிற்சியினைத் தந்து அருள்நிதி என்கின்ற பட்டத்தை வழங்கி வருகிறார்.

ஆகவே இறைத்தூதுவர்களான மனவளக்கலைஞர்களுக்கு,

அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை பிறர்க்கு எளிமையாக, சுருக்கமாக விளங்க வைக்கவும்,

அதுமட்டுமன்றி, தாங்கள் தங்கள் வாழ்வில் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளையும் பிறர்க்கு எடுத்துச் சொல்வதற்கும் உவமான-உவமேய கண்டுபிடிக்கும் திறன் பெரும் உதவியாக இருக்கும்.

உவமான-உவமேயம் இல்லாத ‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’ என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். இந்த அறிவுரைக்கு ஏற்ற உவமான-உவமேயத்தை கண்டுபிடிப்போம்.

சாலையில் மிக கவனத்துடன் நடந்தோ அல்லது வண்டியை ஓட்டிக் கொண்டோ நம் பாதையில் செல்கிறோம். அப்போது எதிர் திசையில் ஒருவன் தாறுமாறாக வண்டியை ஒட்டிக் கொண்டு நம் பாதைக்குள் வருகிறான். அப்போது நாம் என்ன செய்வோம்? நாம் சரியாக நம் பாதையில் செல்கிறோம், அவன் தாறுமாறாக ஓட்டி நம் பாதையில் குறுக்கிட்டு வந்தால் அது அவன் தவறு என்று இருப்போமா? என்ன செய்வோம்? எதிர் திசையில் வருபவன் நம்மீது மோதி விடப்போகிறான் என்று நாம் ஒதுங்கிச் செல்வோம்,

அதுபோல் நாம் என்னதான் நல்லவராக இருந்து(என நினைப்பதுகூட தன்முனைப்பின் வாசனையே. மனிதனாகப் பிறந்திருக்கிறோம். அதுபோல் வாழ்கிறோம் அவ்வளவுதான். இருந்தாலும் பரவாயில்லை. பண்பேற்றத்தில் ஆரம்ப கட்டத்தில் முதல்படியில் இருப்பவர் அவ்வாறு அவ்வாறு நினைப்பதில் தவறில்லை. ஆனால் பண்பேற்றப் படிகளில் ஏறி வரவர அந்த எண்ணமும் நீங்கி விடும். அயராவிழிப்புப் பயிற்சியால்) சரியாக நடந்து கொண்டிருந்தாலும் விட்டுக் கொடுத்து போவதுதான் அறிவுடைமை. இங்கு சமயோசிதமும் தேவை, நமக்கும், பிறருக்கும் துன்பம் வராத வரை, சமயோசிதத்துடன் பிறருடன் விட்டுக் கொடுத்து போவதுதான் அருள் நெறியின் அறிவுடைமை என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

“விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை
கெட்டுப் போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை” என்று ஒரு பழமொழி உண்டு.

பிறவியின் நோக்கத்தினை இப்பிறவியிலேயே நிறைவேற்றிட நமக்கு திருத்தம் வேண்டும் என முடிவு செய்துவிட்டால் இயற்கையே இதுபோன்ற உவமான – உவமேயங்களைக் கூறி, அல்லது சம்பவங்களை நிகழ்த்தி அறிவுறுத்துகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளை உணா்வதற்கு இயற்கையுடன் இணைந்து(attunement with Nature) இருக்க வேண்டும்.

2) வினா– ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

விடை—
ஒரு அறிஞர் கூறியுள்ள அறிவுரையைக் கண்ணுறும் போது, அதே போன்று வேறு அறிஞர்கள் கூறிய அறிவுரை நமக்குத் தெரிந்திருந்தால் அதனையும் நினைவிற்கு கொண்டு வந்து இணைத்து ரசிக்க வேண்டும். இது எப்போது சாத்தியம் என்றால் பல அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்திருந்தால் சாத்தியம். ஒரு அறிஞரின் அறிவுரை இப்போதுதான் முதன் முதலில் அறியப்படுகின்றது என்றால், இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று வேறு அறிஞா்களின் அறிவுரையைக் கண்ணுறும் போது இந்த அறிவுரையை நினைவில் கொண்டு வந்து இணைத்துப் பார்த்து அந்த ஒற்றுமையை ரசிக்க வேண்டும். அப்போதுதான் அந்த அறிவுரை சரியானது என மேலும் உறுதிபடுத்த உதவியாக இருக்க முடியும்.

உதாரணத்திற்கு, ஒழுக்கமும், பழக்கமும் எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி அறிஞர்களின் கூற்று என்ன? முதலில் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளதைக் கவனிப்போம்.

ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள்.

இதே போன்று, இந்த உண்மையை ஒட்டி வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்று பார்ப்போம். மேலைநாட்டு அறிஞர் ரூஸோ கூறுவது—

“ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்.” வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா?

ஸ்பானியப் பழமொழி. ஒன்று “முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள், பிறகு தோ்வடமாக மாறிவிடும் என்கின்றது.

இவ்வாறாக ஒரே வாழ்வியல் உண்மையை பலகட்டங்களில் தெரிவிக்கும் பல அறிஞர்களின் அமுத மொழிகளை இணைத்து அமுதம் அருந்த வேண்டும். அப்போதுதான் பல பிறவிகளில் தவறவிட்ட பண்பேற்றத்தை இப்பிறவியலாவது பெற்று கடைத் தேறமுடியும்.

சிந்திக்க அமுத மொழிகள்- 128

21-11-2015—சனி

எவனொருவன் ஒரு ஆன்மாவை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.

….. மகாவீரர்

பயிற்சி—
1) எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?
2) இது எப்படி சாத்தியமாகின்றது?
3) இதனை மகாவீரர் எவ்வாறு கண்டுபிடித்திருப்பார்?

விடை:
1) வினா– எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?

விடை- எல்லாவற்றையும் என்பது இறையின் சரித்திரத்தையே அறிந்து கொள்வதுதான். அதற்கு திருவேதாத்திரியம் பெருமளவு உதவியாக இருக்கின்றது. திருவேதாத்திரியம் மனித குலத்திற்கு இறை அளித்துள்ள காலத்துக்கேற்ற வரப்பிரசாதமாகும்.

2) பரமாத்மாவே சீவாத்மாவாக உள்ளதால் சீவாத்மாவான ஆன்மாவைப்பற்றி அறிந்துகொள்ளும்போது பரமாத்மாவின் சரித்திரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது

3) மகாவீரர் மட்டுமல்ல அவருக்கு முன்னர் / பின்னர் அவதரித்த ஞானிகளெல்லாம் கண்டுபிடித்துள்ளனர்? ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என்கின்ற வினா அவர்களைத் கடுமையாகத் துளைத்திருக்கும். ‘நாம் யார்?’ என எண்ணியிருப்பர்?’ வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என அறிய விரும்பியிருப்பர். அதன் விளைவாக ‘நான் யார்?’ என இயற்கையால்/இறையால் உணர்த்தப்பட்டார்கள்.

வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்

முக்கிய   அறிவிப்பு

வாழ்க வளமுடன்.

 

     அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

வாழ்க வளமுடன்.