வாழ்வில் தேறிடுவோம்!

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 FFC/அ.வி.  201

26-06-2016-ஞாயிறு

வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியவை:

FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

 

பிறப்பு – இறப்பு என்கின்ற இரு நிகழ்சிகளுக்கு இடையில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை எனப்படுகின்றது. சிறுவனாக இருக்கும்போது பள்ளிப் படிப்பில் தேற்கிறோம். வாலிபனாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பில் தேற்கிறோம். பணிக்குச் சென்ற பின் அப்பணியிலும் தேற்கிறோம். ஆனால் வாழ்வில் தேறினோமா என்றால் சந்தேகமே. இல்லாவிட்டால் ‘ஒருவரேனும் தேறிலர்’ என்று ஆதங்கப்பட்டிருக்கமாட்டார் அருட்பிரகாச வள்ளலார். எனவே ‘அஞ்சவேண்டாம், திருத்திடுவோம்’ என்று பூதவுடலைவிட்டுச் சென்றபோது கூறிய அருட் செய்திக்கு இணங்க திருந்திடுவோம், தேறிடுவோம். இது காலத்தின் கட்டாயம்.

வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 740 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 740 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 140 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.
ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.

FFC_46-geetha chaaram-

 இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.

740 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 740 கோடி மக்களும் 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன் படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.
இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) சொத்தை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவதில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று ஏன் கூறப்படுகின்றதென்றால் அந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காததால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர், காரணம் என்ன? வாழ்வில் அறிய வேண்டியதை அறியவில்லை.
தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.
எதார்த்தம் என்றால் என்ன?
எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி,
நடைமுறைக்கு முரண்படாதது.
அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள்.
உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.
சமுதாயம் இயற்கையின்/இறையின் மற்ற ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை.
காரணம், மனித அறிவு, இதுவரை வாழ்வின் நோக்கத்தை விஞ்ஞானப் பூர்வமாக அறியவில்லை.
இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன
அறியாமை,
அலட்சியம்,
உணர்ச்சிவயம்.
ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,
அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அதாவது
அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவின் பூர்வீகம் என்பது, மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.
“காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும்.
அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும்.
அறிவின் இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். ஒழுங்காற்றலான அறிவை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தினால்தான் அறிவின் இருப்பிடம் அறிய முடியும்,
அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதை எல்லாம் அறிந்துவிடும். மகாவீரர் கூறுவதனை நினைவு கூர்வோம்.
“எவனொருவன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.”
நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது,
அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
“தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”
— சுவாமி சிவானந்த பரமஹம்சர்.
மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.

“எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”   — டால்ஸ்டாய்.

வரும் புதனன்று(29-06-2016) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்