FFC—157-‘வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்’

வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

‘வள்ளலார் கடைவிரித்தது விரித்ததுதான்’

… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 FFC—157

24-01-2015—ஞாயிறு

vallalar_thirukkappu-PNG_Thai

 

இன்று தைப்பூசத் திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாள். திருக்காப்பிட்டுக் கொண்டு நூற்று நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சிரம் தாழ்த்தி உடலாலும், உள்ளத்தாலும் ஆர்வத்தோடும் அருட்பிரகாச வள்ளலாரை வணங்குவோம். ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ வழங்கிக் கொண்டிருக்கின்ற அருட்பிராகாச வள்ளலாரின் அருளால் சாகா வரம் பெறுவோம்.  வள்ளலார் அவர்கள் சத்ய வாக்கு கொடுத்துள்ளதால், இந்நன்னாளில் அருட்பிரகாச வள்ளாரிடம் இறைமையை/அருளை இறைஞ்சி வேண்டி நிற்போம்.

வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வேதாத்திரி மகரிஷியின் உடலில் பத்து வருடங்கள் இருந்து கொண்டு, வள்ளலாரின் ஆன்மா மகரிஷி அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்களே தனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்கள்.

மகரிஷி அவர்களுக்குள் இருந்து கொண்டு வள்ளலார் அவர்கள் வழிகாட்டியாக இருந்து அருள் புரிந்த புனித நிகழ்வால், வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக்கொண்ட அன்று தமது திருவாயால் மலர்ந்தருளிய சத்திய வாக்கு ஒருவரிடம்(மகரிஷியிடம்) நிறைவேறியதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை அருள்துறை அன்பர்களுக்கு இது போன்று அருள் பாலித்தார் என்பது தெரியவில்லை.

வேறு எந்த அருளாளரின் பூதஉடலுக்குள் இருந்து கொண்டு செயல்பட்டாரோ அல்லது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ என்பது தெரியாது. எனினும் இன்று நாம் வள்ளலார் அவர்களிடமிருந்து அருள் பெற தயாராக உள்ளோம்.

 அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது திருவாய் மலர்ந்தருளியது என்ன என்பதனை நினைவு கூர்வோம்.

30-01-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம், தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டார். அப்போது அவர் அளித்த அருட்செய்தியினை கூர்ந்து கவனிப்போம். (வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் அந்த அருட்செய்தியினைக் காணலாம்.) அந்த அருட்செய்தி கூறுவது என்ன?
இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்? கேட்டு, திருந்தி எழுச்சி பெற்று, திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.
• இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்பொம், திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா.
• சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”
                                                                                        –வள்ளலார் அவர்கள்.

வள்ளலார் அவர்களின் மற்றொரு ஆதங்கம் என்ன?

“கடைவிரித்தேன். கொள்வாரில்லை”

அவர் பூதவுடலில் இருந்து கொண்டு நேரிடையாகவே அருட்செய்திகளையெல்லாம் சொல்லியும், அதனைக் கேட்டு, எழுச்சி பெற்று, திருந்தி பிறவிப்பயனை அடைகின்ற திறமையில் ஒருவா்கூடத் திகழவில்லை என்கிறார்.
எனவே அவர் பூதவுடலை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்கும உடல் எல்லோரிடமும் புகுந்து கொண்டு திருத்திவிடும்” என்கிறார். அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்களித்துள்ளார். இது ‘உடலே நான்’ என பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், வள்ளலார் என்கின்ற பூதவுடல் சொன்னதா? இல்லை!
“ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலர் வாக்கிற்கிணங்க,
வள்ளலாரின் பூதஉடலில் பேரறிவாகிய இறையே, ஆலயம் கொண்டு,
‘வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டன’ என்று சொல்லப்படுவதுபோல், சாட்சாத் இறைவனே வள்ளலாரின் திருவாய் வழியாக அருளிய திருவார்த்தைகளாகும்.
பின்னர் வேறு எந்த வழியில் அரூபமான இறையால் மனித சமுதாயத்திற்கு சொல்ல முடியும்? இறை அரூபமாக உள்ளது என்று விளங்கிய பிறகு, ஐயப்படாது அகத்தை உணா்ந்தவர் வழியாக இறை சொல்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்காது. அதனால்தான் மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்கிறார் அவ்வையார். மூத்தோர் என்பது அறிவை அறிந்த பெரியவர்கள் என்று கொள்ளலாம். வயதில் மூத்தவர்கள் அனுபவத்தால் சொல்வதனையும் கேட்க வேண்டும். அறிவை அறிந்த பெரியோர்கள் வழியாக சொல்வது இறையே என்பதால் அது அமிர்தமாகத்தானே இருக்கும். இயற்கை–இறை/இறைவன் ஆனந்தமயமானது/ஆனந்தமயமானவன் என்பதால் இயற்கையால்–இறையால்/இறைவனால் சொல்வது ஆனந்தமாகத்தானே இருக்கும்!
வள்ளலார் திருவாக்களித்தபடி, ஓயாமல் அவரது திரு எய்திய ஆன்மாவே (இறைவனே), ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்யும் சாதகர்களுடனே இருந்து கொண்டு உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆன்மீக சாதகர்களுக்கு இரண்டு வழிகளில் துணைபுரிவேன் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். முதல்தர சாதகர்களுக்கு ‘சாகா வரமே தருவேன்’ என்கிறார். மற்றவா்களுக்கு ’பரிபக்குவ நிலையைத் தருவேன்’ என்கிறார்.
ஆன்மீகத்தில் ’பரிபக்குவ நிலை’ என்பது மிக மிக முக்கியமானது. பரிபக்குவ நிலையில் பிறவி எடுத்தவர்களே, கருவில் திருவுடையவர்களாவார்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியவாறு கோடியில் ஒருவரே கருவில் திருவுடையவா்களாக இருப்பர். அவர்களே தன்னை வந்து அடைவதாக கூறுகிறார் கண்ணபரமாத்மா. மற்றவர்கள் வழுக்கி விழுந்து, விழுந்து, முயற்சி மேல் முயற்சி செய்து, ஆன்மீக இலக்கை அடைய வேண்டும். எனவே ‘சாகா வரம்’ வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பரிபக்குவ நிலையைத் தருவதாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். பரிபக்குவ நிலை வந்த பிறகுதான் குரு-சீடர் உறவில் அலை இயக்க ஐந்து பண்புகளும் முழுவதுமாக வேலை செய்து, குறிப்பாக அலை இயக்கப்பண்பில் கடைசியும், அதிமுக்கியதுமானதுமான ‘ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்–inter-action’ என்பது குரு-சீடா் உறவின் முழுப்பயனையும் தரும்.
இயற்கையின்/இறையின் மனிதர்களாகிய—தன்மாற்ற(self–transformation into human beings) சரித்திரத்தில் மனிதர்களை திருத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி திருவாய் மொழியிலிருந்து.
வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும்போது அறிவித்த அருட்செய்தியின்படி, நமக்குத் தெரிந்த வரை, வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது (1911-1874) + 42 = 37+42= 79 or 80) ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வள்ளலார் அருட்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் மகரிஷி அவர்கள் தான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். மேலும், இராமலிங்க வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தன் வழியாக முடித்தார் என எண்ணுவதாகவும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
வள்ளலாரின் அருள் தனக்கு கிடைத்த பாக்கியத்தை, நம்குருதேவர், பேரருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதை, அவரே கூறுவதை அறிந்து மகிழ்வோம். ஏனெனில் நம் தாய், தந்தையர் செய்த புண்ணியத்தால் நமக்கு குருவாக குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களை இயற்கை/இறை அருளியுள்ளது. மகரிஷி அவர்களின் பூதஉடலில் வள்ளலார் அவர்கள் பத்துவருடங்கள் தங்கியிருந்து அருள்பாலித்திலிருக்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதாக உள்ளது என்கிறோம். காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தெரிவித்த உண்மைகளுக்கு பலமும், தெளிவும், எளிமையும் கிடைத்திருக்கிறது அல்லவா? மகிழ்ச்சி மட்டுமல்ல, அது நமக்கு கூடுதல் பயன்தானே(additional benefit) உண்மையைப்பற்றி அறிந்து கொள்வதில். வள்ளலார் அவர்கள், பல சந்தா்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாகக் கண்டதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

FFC-157-வள்ளலார் அருள்
மகரிஷி அல்லாது இன்னும் எத்தனை அருளாளர்களுக்கு வள்ளலார் அவர்கள் சாகா வரம் தந்துள்ளார் என்பது தெரியாது. வெளியே தெரியவில்லை. ஆனால் பரிபக்குவ நிலையைத் தந்து கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதனை மட்டும் அறிய முடிகின்றது. ‘வேதாத்திரியம்’ கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களை ஒழுக்கத்திற்கு திருத்தி ஒழுங்கு படுத்தும் சீரிய பணியைத் துவங்கி விட்டதே இதற்குச் சான்றாகக் கொள்ள முடிகின்றது. பேரறிவின் தன்மாற்றத்தில் அவ்வப்போது மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடா் ஓட்டம் (Never ending–Continuous Divine Relay Race).
அதனால்தான் மகரிஷி அவர்கள் “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” எனத்துவங்கும் குருவணக்கப் பாடலில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் என பெயரிட்டு நான்கு அருளாளர்களை நினைவு கூர்வதோடுமட்டுமல்லாமல், இது வரை இறைவெளியின் தன்மாற்றத்தில், ஆன்மீக வரலாற்றில் தொடராக வந்துள்ள அனைத்து அருளாளர்களையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். அப்படியானால் மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டம் தானே!

வள்ளலார் “திருத்திடுவோம்” என்று கூறியது இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக நடைபெறவில்லையா? மனவளக்கலை ஒரு சாதனை மார்க்கம் என்பதே, திருந்துவதைத்தானே குறிக்கின்றது. சாதனை என்பது என்ன? பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனிதன் பழைய தீய பழக்கங்களுக்கும் இப்போது கிடைக்கும் நல்விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் சாதனை என்பது. எனவே தான் தற்சோதனைப் பயிற்சியை தெய்வீகப் பயிற்சி என்கிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். தன் பிணக்குகளை முறையாகக் களைவதும் ஒரு போராட்டம்தான் என்கிறார். எனவே தன் பிணக்குகளை முறையாகக் களைவதற்கு மகரிஷி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உயர்வையும் கவனிக்க வேண்டும். தன் பிணக்குகளை முறையாகக் களைவதை, உயிரைத் தூய்மையாக்கவல்ல ’அறிவுப்போர்’ என்கிறார். ஆகவே வாழ்வில், மகிழ்ச்சியும், நிறைவும். அமைதியும் அளிக்கும் அந்த அறிவுப்போர் ஒரு தெய்வீகப் போர் என்கிறார்.

அன்பொளி ஜுலை 1985 இல் ‘வள்ளலார் விரித்த கடை’ என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் முடிவுப்பகுதியில் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்:–
“கடைவிரித்தேன். கொள்வாரில்லை” என்றார் வள்ளலார் அவர்கள். ஆனால் மகரிஷி அவர்களோ, வடலூர் மேட்டுக் குப்பத்தில் ஓங்கார மண்டப திறப்பு விழாவில்(05-02-1985) ஆற்றிய உரையில் முடிவில் கூறியது “எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாக உள்ள, சேர வேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும் என்ற எண்ணத்தோடு ”கடைவிரித்தேன்” என்று சொன்னார் வள்ளலார் அவர்கள். ஆனால் கடையை மூடிவிட்டாரா? இல்லை. திறந்தே வைத்தார். இன்றும் அது திறந்தே உள்ளது.” என்றார். அதற்கு சாட்சியாகக் அவ்விழாவில் குழுமியிருந்த அன்பர்களே எனக் கருதி, ”அப்படி இல்லையானால் இவ்வளவு பேர் கூடி அனுபவிக்க முடியாது.” என்று அன்று குழுமியிருந்த அன்பர்களிடமே கூறினார் மகரிஷி அவர்கள்.
மேலும் மகரிஷி அவர்கள் அன்று கூறியதாவது:– “

விரித்தது, விரித்ததுதான்.  அவரவர்கள் வேண்டும் அளவுக்கு அள்ளிக் கொண்டு போகலாம். விரித்தது அத்தனையும்* செய்யுட்களாக வந்துவிட்டன. ஒவ்வொரு செய்யுளிலும் வரக்கூடிய ஒரு உண்மைப் பொருள், இறைவனே நேரடியாக எடுத்துக் காட்டியதை, உணர்ந்தது உணர்ந்தவாறு கூறுகின்றார் வள்ளலார்.இதைச் சாதாரண வார்த்தைகளில் கூறும்போது அது விளங்காது. ஆனால் அது அனுபவத்திலே அனுபவித்தவர்கள் கூறும்போது அந்த ஒளிக்கே ஓரு ஆற்றல் உண்டு”

*திருஅருட்பா

ஆகவே தெய்வீகப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், நாம் இந்த தைப்பூசத் திருநாள்–வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாளில் அருளை வேண்டி அருட்பிரகாச வள்ளலாராகிய அருட்தாத்தாவை வணங்கி நிற்போம்.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அருட்பிரகாசவள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி இறைஞ்சுகின்ற மடலை வரைவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்.