வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் — 2/5

FFC–98

அறிவுப் பசி

Scientist of Consciousness

08-07-2015—புதன்.

சென்ற விருந்தில் எல்லோருக்கும் தெரிந்த வயிற்றுப்பசி பற்றி அறிந்துகொண்டோம். இன்றைய விருந்தில் அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

அறிவுப்பசியைத் தூண்டும் மருந்தாக, அறிவின்–-அறிவியலாகிய (Science of Consciousness) மனவளக்கலை செயல்படுவது பற்றியும்,

பிறகு மனவளக்கலையே (அறிவின் அறிவியல்) அறிவிற்கு விருந்தாக அமைகின்றதையும் அறிய இருக்கிறோம். மனவளக்கலை அறிவின்—அறிவியலாக உள்ளதால் அறிவிற்கு, எடுக்க எடுக்க குறையாத அட்சயபாத்திரம் தருவது போன்று,
ஆழ்ந்து செல்லச் செல்ல,
குறையாத,
சலிப்பில்லாத,
புதிய புதிய விருந்தினைத் தந்துகொண்டுதானே இருக்க முடியும்?!

விருந்துகள் யாவும் ‘Infinite’ பற்றி அறிந்து கொள்வது என்பதால், அறிய அறிய குறையாததாகவும் இருப்பதில் ஆச்சரியம் இல்லையே. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்வதில் எவ்வாறு மனம் ஆர்வம் கொள்கின்றதோ. அதனைவிட infinite times ஆர்வம் கொண்டு, சலிக்காமல் அறிவுப்பசியைப் அறிவு பூர்த்தி செய்துகொள்ள, மனம்போன போக்கெல்லாம் போகாமல், மனம்தான் ஒத்துழைக்க வேண்டும் அறிவிற்கு.

இறைஉணர் ஆன்மீகப் பயிற்சியில் சாதகர்கள் இறைஉணர்வு பெறுவதற்கு அறிவுப்பசி இருந்தே ஆக வேண்டும்.  இறைஉணர் ஆன்மீக பயிற்சியில் பெரும்பாலோர் இறுதி வரை பயிற்சியில் சாதனையைத் தொடர முடிவதில்லை.  அதற்கு அறிவுப்பசி இல்லாமையே காரணம்.   அறிவுப்பசி உண்டாக, தூண்டப்பட ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் 9 வது ஸ்லோகத்தில் வலியுறுத்தப்படுகின்ற சத்சங்கம் மிக மிக அவசியம்.  அவ்வையார் கூறும் நல்லோர் இணக்கமும், அதில் இனிமையையும் காணவேண்டும்.

இப்போது அறிவுப் பசியைப்பற்றிச் சிந்திப்போம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குக்குகூடப் பசி ஏற்படுமா என ஐயம் எழலாம். ஏனெனில் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது, உருவமில்லாத ஒன்றிற்குப் (அறிவிற்கு) பசி எவ்வாறு ஏற்பட முடியும் என நினைக்கத் தோன்றலாம்.

வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசி என்கின்ற துன்பத்தை உணர்வது அறிவுதானே! அதுபோல் உடல் உறுப்புகளில் ஏற்படும் இன்பதுன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. ஆனால் தனக்கே ஏற்படும் பசி என்கின்ற துன்ப உணர்வினை அறிவு அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் என்ன?
பொதுவாக பசி எடுக்கவில்லை என்றால் ஏதோ கோளாறு இருக்கின்றது என்று அர்த்தம். அதற்கான காரணமாக ‘வயிறு மந்தப்பட்டிருக்கின்றது’ என்பார்கள் வீட்டிலுள்ள பாட்டிமார்கள். மந்தம் என்றால் என்ன? மந்தம் என்றால்

1) இயக்கக் குறைவு

2) வேகமின்மை

3) சுறுசுறுப்பு இல்லாத தன்மை

4) திறன்குறைவு

என்று பொருட்கள். வயிற்றில் பசி இல்லையென்றால், வயிறு மந்தப்பட்டிருக்கின்றது என்கிறோம். பசி அதிகம் இருந்தாலும் அதுவும் கோளாறுதான், ‘மந்தம்’ என்கின்ற சொல்லின் பொருட்களைக் கொண்டு ‘வயிறு மந்தப்பட்டிருக்கின்றது’ என்றால் வயிற்றின் இயக்கம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். வயிற்றின் திறன் குறைந்திருக்கின்றது என்று பொருள். வயிற்றில் சென்ற உணவு சீரணிக்கப்பட்டு உரிய நேரத்தில் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் உரிய நேரத்தில் சேர்வதற்கு வேகமில்லாமல், சுறுசுறுப்பு இல்லாமல், இருக்கின்றது என்று பொருள். அதாவது வயிற்றின் சீரணிக்கும் திறன் குறைந்துள்ளது என்று பொருள்.

வயிற்றுப்பசி எடுப்பதில்லை என்பதனை அறிவு அறிந்து கொண்டு, உடனே அதற்கான மருத்துவம் செய்து வயிற்றிலுள்ள கோளாறை சரி செய்து கொள்கின்றது அறிவு. வயிற்றுப் பசி இல்லை எனில் உணவு ஏற்றுக் கொள்ளமுடியாமல் உடல் பலவீனப்பட்டுவிடும். ஆகவே அறிவே  அதனை  உணர்ந்து கொள்கின்றது. பசி என்பது துன்பஉணர்வாக இருப்பதால் அறிவு உணர்ந்து கொள்கின்றது. அப்படி இல்லை எனில் வீட்டில் தாயோ அல்லது மனைவியோ கண்டுபிடித்து அவர்களே மருத்துவம் செய்வார்கள் அல்லது மருத்துவம் பார்க்கச் சொல்லி எச்சரிப்பார்கள்.

ஆனால் அறிவிற்கு பசி இல்லை என்பது அறிவிற்கே தெரியாமல் இருக்கின்றது என்பது மனிதகுல பரிதாபநிலையைத்தான் காட்டுகின்றது. இயற்கையிலே அறிவிற்குப்பசி உள்ளது. அதனை அறிவு அறியாமல் இருப்பதற்கானக் காரணம் அறிவு மந்தமாக உள்ளது என்று பொருள். அதாவது பிறவிப்பிணியே. என்றும் கொள்ளலாம்.

    ‘அறிவு மந்தமாக உள்ளது’ என்பது

அறிவின் இயக்கம் குறைவாக உள்ளதை.

வேகமில்லாமல்(not agile) இருத்தலை,

சுறுசுறுப்பு இல்லாதிருத்தலை(sluggish),

அறிவதில்  ஆர்வமின்மையை,

சிந்திக்கும் திறன் இல்லாது/குறைந்து இருத்தலை குறிப்பதாகும்,.

வயிற்றுப்பசி இல்லை, வயிறு மந்தப்பட்டிருக்கின்றது என்பதனை அறிவு, தானே உணராத போது மற்றவர்கள் வயிற்றுப்பசியைக் கண்டுபிடித்து விடுவதுபோல் அறிவுப்பசியின்மையை பிறர் கண்டுபிடிப்பது என்பது இயலாது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அறிவுப்பசியின்மை இருக்கின்றது என்பதனை குடும்பத்தில் உள்ள மற்றவர் கண்டுபிடிக்க வேண்டுமெனில் அந்த மற்றவர் அறிவுப்பசியினை உணர்ந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவம் செய்து கொண்ட அனுபவம் இருந்திருக்க வேண்டும். அறிவுப்பசியைப் போக்கிக் கொள்வதில் அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ளவராக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அந்த மற்றவர் இந்த ஒருவரின் அறிவுப்பசியின்மையை அறிந்து கொண்டு அறிவுரைகள் சொல்வதன் வழியாகவும் வழிகாட்டுவதன் மூலமும் சரி செய்யலாம்.

இல்லை என்றால் குடும்பமே அறிவுப்பசியை உணராமல், வாழ்நாள் முழுவதும் தங்கள் அறிவை பலவீனத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாது, பின் வரும் சந்ததிகளையும் அறிவுப்பசி இல்லாத, இளைத்த அறிவோடு பிறக்கச் செய்யும். உடலை இயக்கும் ஆற்றல் உயிராக இருந்தாலும், அந்த உயிராற்றல் சரியாக உடலை இயக்குவது என்பது, அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய குறைகளையுடைய இளைத்த, மெலிந்த, வலிமை குன்றிய அறிவால் சாத்தியமில்லை.  

அதாவது அறிவாற்றல் ஓங்கி இருத்தல் என்பது,  மனிதன் பெற்றுள்ள செல்வங்களுள் முதன்மையானது. எனவே வாழ்க அறிவுச்செல்வம்.  வளர்க அறிவுச்செல்வம்.

மற்ற உறுப்புகளில் ஏற்படும் பசி உள்பட மற்ற துன்பங்களை அறிந்து கொள்ள திறமையுள்ள அறிவு தனக்கே பசியாகிய துன்பம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் வயிற்றுக்காக மட்டுமே உண்டு திரிந்து உறங்கிக் கொண்டிருக்கின்றது அறிவு. பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கும் ஏற்படுகின்ற துன்பம் என்றுதானே பொருள்?

அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. எனவே உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருளாக உள்ள(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. அறிவுப்பசி என்பதனை ‘உணவு உண்ணத்தூண்டும் உணர்வு (hunger). என்கின்ற’ பொருளிலே மட்டும் ‘அறிவுப்பசி’யைப் புரிந்து கொள்ளக்கூடாது.

பசி என்கின்ற சொல்லின் சொல்லின் இரண்டாவது பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ‘ஒன்றின் மீது விருப்பம், ஆர்வம், ஆசை அதிகமாக இருப்பதனை தெரிவிப்பதும்’
‘பசி’ என்கின்ற சொல்லின் இரண்டாவது பொருளாகும்.
பசிக்கான இரண்டாவது பொருளிலும் ‘அறிவுப்பசி’ என்றால் என்ன என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது அறிவுப்பசி என்றால் அறிவிற்கு ஒன்றின் மீது ஏற்படும் அளவு கடந்த நாட்டமும், அதனை அடைவதற்கு ஏற்படவேண்டிய மிகுந்த விருப்பமுமாகும்.
அறிவிற்கு ஒன்றின் மீது அளவுகடந்த நாட்டமும், அதனை அடைவதற்கு மிகுந்த விருப்பமுள்ள பொருள் எது?
அறிவு என்பது காரணப்பெயரால் அழைக்கப்படுகின்றது. ‘அறிவது எதுவோ அதுவே அறிவு’
ஆகவே அறிவதற்கு காரணமாக இருக்கும் ஒன்றைக் காரணப்பெயர் கொண்டு பெயர்ச்சொல்லாக (noun)  ‘அறிவு’ என்று அழைக்கப்படுகின்றது. அறிவு புலன்கள் வழியாக உடலுக்கு வெளியே நடக்கும் புறச்செயல்களை உணர்கின்றது/அறிகின்றது. இத்துடன் அறிவின் பணி முடிந்து விடுகின்றதா?

ஐந்தறிவு விலங்கினங்களின் அறிவு கூட இதனைத்தான் செய்கின்றது.

பேரறிவின் தன்மாற்றம் ஐயறிவோடு நின்று விடாமல் ஆறாம் அறிவாக ஏன் தன்மாற்றம் அடைந்துள்ளது?
ஐயறிவிற்கும் ஆறாம் அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஐயறிவுடையது விலங்கினம், ஆறறிவுடையது மனிதஇனம். இவ்வாறு பிரித்து சொல்வதும் மனித இனம்தான். உருவத்தில் மட்டும் தானா வித்தியாசம்?
ஆறாம் அறிவின் சிறப்பில், பயன்பாட்டில் வித்தியாசங்கள் ஏதும் இல்லையா? அவற்றை வெளிப்படுத்த வேண்டாமா ஆறாம் அறிவு? வெளிப்படுத்துகின்றதா ஆறாம் அறிவு? இதற்கான பதில் அன்பா்களிடம் விடப்படுகின்றது.

ஐந்தறிவைவிட ஆறாம் அறிவின் சிறப்பிலும், பயன்பாட்டிலும் உள்ள வித்தியாசத்தை அறியாததால்தான்
“மனிதனென்ற உருவினிலே மக்களுண்டு, மாக்களுண்டு” என்கின்ற கவி மலர்ந்துள்ளது.
“தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்?” என்கின்ற ஆன்மீக விழிப்புணர்வு வினா கி.பி.1911 க்குப் பிறகு எழுந்துள்ளது. மேலும் மகானாக்கும் நான்கு மகோன்னத வினாக்கள் எழுந்து, வேதாத்திரி மகரிஷி அவர்களை கருவியாகக் கொண்டு, ஆன்மீக ஏணியில் ஏறி ஆன்மிகத்தின் சிகரத்தைப் பிடிக்க முடிந்தது ஆன்மீக அறிவியலால்(Spiritual Science).

அதன் விளைவாகத்தான், இயற்கை/இறை/அருட்பேராற்றல்/தெய்வம்/கடவுள்/God/Almighty/Truth/Existence, முதல் அறிவின் அறிவியாலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘அழைப்புக்கவி’ யின் வாயிலாக   மனிதகுலத்திற்கு அழைப்பினை  விடுத்துள்ளது. ஆனால் அது தமிழில் உள்ளது. உலகப் பொதுமறை நூல் எனப்படும் திருக்குறள் எவ்வாறு பல அன்னிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ, அதேபோன்றே  இரண்டவாது உலகப் பொதுமறையான திருவேதாத்திரியமும்  பல அன்னிய மொழிகளில் விளக்க உரையுடன் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.  அன்னிய மொழிகளில் முதலில் ஆங்கிலத்தில் திருவேதாத்திரிய 1854 மந்திரங்களும் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

“அன்பர்களே வாரீர்” என்கின்ற அழைப்பு வினாவாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தின்று திரிந்து உறங்குவதனை மாற்றி சரி செய்து, சாதாரண மனிதனை முழுமனிதனாக, மாமனிதனாக்கக்கூடிய மருந்தும், விருந்தும் அறிவின் இருப்பிடம் அறிதலே என்று கூறியும், அதனை அறிந்து அன்றாட வாழ்வை அறிந்து அனுபவிக்க ‘இன்றாவது விரைந்து வாரீர் என அழைக்கின்றான் இறைவன்(இயற்கை/இறை/அருட்பேராற்றல்). வாழ்க்கையை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்கின்றான் இறைவன்(இயற்கை/இறை/அருட்பேராற்றல்). ருசி தெரியாமல் சாப்பிடமுடியுமா? சாப்பிடுவது என்ன என்று தெரிந்து உண்ணுவதுபோல், ஏதோ வாழ்க்கையை அனுபவித்ததாக இருக்காமல், அறிந்து அனுபவிக்க வேண்டும். அதனால்தான் ‘அன்றாட வாழ்க்கையை அறிந்தனுபவிக்க’ என்கின்ற வைரவரிகள் வந்து உதிர்ந்துள்ளன அம்மந்திரத்தில்.

அறிதல் (அறிகின்ற) ஆற்றலைக் கொண்ட அறிவிற்கு, ‘அறிதலிலே சிகரமான பொருள்’ மீது நாட்டமும், அதனை அடைவதற்கு ஏற்படவேண்டிய மிகுந்த விருப்பமுமாகிய அறிவுப்பசி இல்லை. அதற்கேற்ற வசதிகளும் வாய்ப்பும் கி.பி. 1911 வரை சமுதாயத்தில் இல்லாமல் இருந்தது. ‘அறிவுப்பசி’ என்கின்ற உணர்வு தெரியாமல் இருப்பதனால்தான் மனிதகுலம் அறிவுப்பசி என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

பசிஉணர்வு தேவையை அறிவிற்கு உணர்த்த வேண்டியிருப்பதால்,  பசி முதலில்  துன்ப உணர்வாக எழுகின்றது.  பிறகு அறிவு முயற்சி செய்து, அதனை இன்ப உணர்வாக மாற்றுகின்றது.   எவ்வாறு? உணவு (food) என்கின்றத் தேவையை அளவோடும், முறையோடும் பூர்த்தி செய்து கொள்ளும்போது முதலில் எழுந்த பசியாகிய துன்ப உணர்வு சமன்படுத்தப்படுவதால் இன்ப உணர்வாகின்றது. இது வயிற்றுப்பசியைப் பொருத்த மட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

இயற்கையில் ஆறாம் அறிவிற்கு பசி உள்ளது. ஆனால் அறிவுப்பசியினை உணராதபோது அந்த தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமே எழுவதில்லை. தேவையைப்பூர்த்தி செய்யாதபோது துன்பம்தானே மிகும். இவ்வாறு பிறவிதோறும் மிகுந்து, மிகுந்து வரும் துன்பங்களினால் அறிவு எவ்வாறு தன்பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க முடியும்? இதுதான் இன்றைய மனிதகுலத்தின் நிலை.

ஆகவே உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் அறிவுப்பசியினைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. அதனால்தான் ‘சிந்தனை’, சிந்தனை விருந்து எனப்படுகின்றது. அறிவு ஐம்புலன்கள் வாயிலாகப் புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. உடலில் ஏற்படும் இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

 அறிவது எதுவோ அது அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டியதை அறியக் கூடிய திறன் உடையது அறிவு. அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு தான் யார் என்றும், தன் இருப்பிடம் எது என்றும் அறிய வேண்டும். அப்போதுதான் அறிவு முழுமை அடைய முடியும்.   இன்னும் அறிவுப்பசி பற்றிய அரிய சிந்தனைகள் அடுத்த விருந்தில் தொடரும். அதில் அறிவுப்பசிக்கு இரை எது என்றும், “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?” என பாரதியார் கூறியதுபோல் என்று தணியும் பேரறிவின் தாகம் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். அடுத்த விருந்திற்காக 12-07-2015 ஞாயிறன்று சத்சங்கத்தில் கூடுவோம்.

வாழ்க அறிவுச்செல்வம்.  வளர்க அறிவுச்செல்வம்.