வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத் தொடர்ச்சி)

வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத்  தொடர்ச்சி)

01-11-2014

 எண்: அ.வி.மா. 002-2-6

வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்
இப்போது அறிவுப் பசியைப் பற்றிச் சிந்திக்க உள்ளோம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது, உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் ஐயம் எழலாம்?

வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகியத் துன்ப உணர்வை அறிவது அறிவு. அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்ளும் அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது, ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. இதனை சிந்தனை விருந்தும் என்றும் சொல்லலாம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு .இன்பம் தரமுடியுமா?
அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு. அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு தான் யார் என்றும், தன் இருப்பிடம் எது என்றும் அறிய வேண்டும். அப்போதுதான் அறிவு முழுமை பெறும். மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு.
அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம். தனக்கு எது பிரியமோ அதனை அறிவு அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கு பேரின்பம். இந்த நிலை அறிவிற்கு இல்லாதபோது ஏற்படுகின்ற துன்பத்தைத்தான் அறிவிற்குப் பசி உள்ளது என்கிறோம்.
தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல், அதற்கு வழியும் தெரியாமல், பிரியமில்லாததை உணர்வதிலேயே காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி. அறிவிற்கு தன்னை அறிவதில் ஆசை வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது. எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு விருந்து. ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போது தான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில் வந்து பிறந்ததற்கான சுவடை விட்டுவிட்டுச் செல்லலாம். குருவின் தாள் படிந்து – வேதாத்திரி நாமம் வாழ்க.
இன்றைய விருந்தில் அறிந்து கொண்டது என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
  2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
  3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
  4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம்.

இன்றைய விருந்தில் அறிவிற்கான ஏழு சத்துக்களைப் பெற்றுள்ளோம். இதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து உறுதி படுத்திக் கொண்டு நினைவில் கொள்ள வேண்டும்..

வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.
அறிவுவாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்செல்வம்.

*****