FFC – 132 -யோகவாழ்வு வாழ்வோம் – 1/3

யோகவாழ்வு வாழ்வோம் – 1/3

FFC – 132                             

                                                                01-11-2015-ஞாயிறு

Sri_shanthanandar

நிலையில்லாத வாழ்க்கையை  எதற்காக வாழ்வது, மகிழ்ச்சியாக வாழ்வது எவ்வாறு,  என்று தெரியாத நிலையில்,

வாழ்வதனை எளிமையாக்கி, ஒரு கலையாக்கி,

ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு மனவளக்கலை என்கின்ற பெயரில் அருளியுள்ள

வாழ்வியல் அறிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடை கண்டு

அந்த அடிப்படை வெளிச்சத்திலே தன்னைத் தூய்மை செய்து கொண்டு,

பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்டு வாழ்தலே

யோக வாழ்க்கையாகும் என்கிறார்.

 ஸ்ரீ சாந்தானந்தரோ ‘நான் யார்?’ என்று அறியாதவன் ஒன்றும் அறியாதவன், இறைவனைத் தனது அறிவாகக் காண்பவனே அறிவுள்ளவன் என்கிறார்.

மேலும் ஆத்மாவைவிட மேலான நண்பன் வேறுயாரும் கிடையாது என்கிறார்.  பக்தியில் சிறந்து விளங்கிய பக்திமான்கள் ஆண்டவனை நண்பனாகக் கருதினார்கள் என்பதனை நினைவிற் கொள்ள வேண்டும்.

‘தன்னை அறிந்தால் பிரம்மத்தை அறிந்தவனாவாய்’ என்கிறார்.  கடவுளை(பிரம்மத்தை) அறிவதைவிட வேறு மேலான  யோகம்(அதிருஷ்டம்) என்ன உள்ளது இவ்வுலகில்?

 யோக வாழ்க்கை என்பது என்ன?  யாரும் விரும்பியோ, எண்ணியோ  பிறப்பதில்லை.  பிறப்பது தன்விருப்பமில்லால் நடந்தாலும் மனிதன் வாழ்வது மட்டும் தன் விருப்பத்தில்தான் உள்ளது. அதாவது இயற்கை நியதிக்குட்பட்டு நலம் விரும்பி வாழலாம். நலமே தரும் யோக வாழ்க்கை வாழலாம்.  இதனை அறிந்தவனே ஸ்ரீ சாந்தானந்தர் கூறும் அறிவுள்ளவனாவான்.

பொதுவாக யோகம் என்றால் ‘அதிர்ஷ்டம்’ என்று பொருள் கொள்வர்.  ஜோதிடர்கள் ஒருசில ஜாதகங்களைப் பார்த்துவிட்டு இந்த ஜாதகர்  ‘யோக ஜாதகர்’ என்பர்.  அதாவது அந்த ஜாதகர் எல்லா வசதிகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.  அந்த பாக்கியம் எங்கிருந்து வந்தது?  அவனுடைய மூதாதையர் செய்துள்ள நல்ல காரியங்களால் வந்தது.  ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.

சமுதாயமும் ஒருவன் எல்லா வசதிகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழும் போது   அவனை  யோகக்காரகன் என்று சொல்லும்.

ஆன்மீகத்தில் யோகம் என்றால் தியானம், யோகாசனம் என்று பொருள். தியானத்தாலும், யோகாசனத்தாலும், ஏற்கனவே   இந்த ஆன்மா செய்துள்ள   தவறான   செயல்களால்   உண்டான பாவப்பதிவுகளை  நீக்கச் செய்து உடல்நலம்,   மனவளம்   பெறமுடிகின்றது.    யோகம்    செய்ததால் கிடைத்த உடல்நலமும் மனநலமும் பெற்றவர்  யோகக்காரகா்தானே!

சமுதாயத்தால் கருதப்படுகின்ற யோகக்காரகரரும் யோகம் செய்கின்றாரோ, இல்லையோ தன் கருமைய கணக்குப்புத்தகத்தில் பாவப்பதிவுகள் நீங்கி புண்ணியப்பதிவுகள்  பெற்றவராகத்தான் இருக்க முடியும்.

இப்போது ‘நான் யார்?’ என அறிவதால் ஏற்படும் பயன்களையும், அறியாததால் வரும் துன்பங்களை அறிந்து கொண்டால் ‘நான் யார்?’ என அறிந்து வாழ்வது யோகவாழ்வு என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

yoga_vazhvu

 ஆன்மீகத்தில்  ‘நான் யார்?’ (Who am I ?)என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’  என்பார்களே அது போல் ‘நான் யார்?’  என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக இருந்தாலும் இந்த வினாவின் விடைதான், அறிவின் வளா்ச்சியில் உச்ச நிலையை அடைந்து மனிதனின் கீர்த்தியை வெளிப்படுத்துவதாகும். 

    இயற்கையாகிய பேரறிவு / இறை, தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில், ஏன் உயிரினங்களாக வந்தது என்கின்ற காரணத்தை அறிந்தால், நான் யார் என்கின்ற வினாவிற்கான விடை கிடைக்கும்.

இயற்கை/இறை உயிரினங்களாக வந்தக் காரணம் என்ன என்று சிந்தித்தால்,   பஞ்சபூதங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை. மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, பேரறிவாகிய இயற்கை, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாக ஒவ்வொன்றாகப் படிப்படியாக (stage by stage) தன்மாற்றடைந்து வந்தது. பிரபஞ்சத்தில்,   பஞ்ச பூதங்களிலிருந்து நடந்து கொண்டிருந்த பஞ்சதன்மாற்ற நிகழ்ச்சிகளை (Physical Transformation of Pancha Boothas)உணர்ந்தாகிவிட்ட பிறகு, அத்துடன் இயற்கை  தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாமே! உயிரினங்களாக வந்து பின்னர் மனிதனாக ஏன்  வந்தது?

நாம் யார் அவ்வாறு  கேட்பதற்கு? தாயைப் பார்த்து பிள்ளை  “நீ ஏன் என்னைப் பெற்றாய்?” எனக் கேட்க முடியுமா? முடியாது.  அது போல் இயற்கை அன்னையையும் நாம் கேட்க முடியாது. ஆனால் அந்தக் காரணத்தை அறிய உரிமையும். தகுதியும் உள்ளது நமக்கு. காரணத்தைக் கேட்போம். விடையை அறிவோம். அறிய விழைந்தால் இயற்கை அன்னையே காரணத்தை உற்சாகத்துடன் கூறி மகிழ்வாள்.  நீயே அதுவானால் அதுவே  சொல்லும்” என்பதும் இதுதான்.

ஐந்தறிவிலிருந்து, ஆறாம் அறிவிற்கு, ஏன் தன்மாற்றப் பயணத்தைத் தொடர்ந்து இயற்கை அன்னை மனிதனாகவும் வந்தாள் என வினா எழலாம்.  ஏன் அவ்வாறு வினா வருகின்றது. காரணம், இன்று மனித குலத்தின் நிலை அவ்வாறு உள்ளது.  இன்று சமுதாயத்தில் வறுமை நிலவுகின்றது. சூது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கின்றன.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்கின்ற துன்பங்கள் மலிந்து விட்டன. வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிட்டது.  உத்திரவாதமின்மையான வாழ்க்கை (insecured life) வாழ வேண்டியுள்ளது.   இயற்கை/இறை மனிதனாக வராமல் இருந்திருந்தால், மனித குலம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டியதில்லையே என  எண்ணத் தோன்றலாம். இப்பிரபஞ்சத்தில் இவ்வளவு குற்றங்களே இருந்திருந்திராதே!

என்ன செய்வது?  இயற்கையின் ஆதிநிலை, பேரறிவையும் கொண்ட அளப்பரிய பேராற்றல் உடையது. ஆற்றல் என்றாலே இயக்கத்திற்கு வந்தால்தானே சிறப்பு.  இயக்கத்தில் இருந்தால் தானே அது ஆற்றல் என்கின்ற பெருமையைப் பெறுகின்றது. மின் கலம் (Battery) உள்ளது. மின்கலத்தை இயக்கினால் தான் அதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்த முடியும்.  மின் கலத்தை இயக்காமல் இருந்தால் அது ஒரு பயனற்ற பெட்டியாகத்தான் இருக்கும். அதுபோல் பேராற்றல் தன்னையே  இறுக்கிக் கொண்டு, நொறுங்கி இயக்கத்திற்கு வந்தது. பேராற்றலுடன் கூடவே, அறிவென்றாலே அறியும்  இயல்புடையதாகிய அறிவு பேரறிவாக  இருந்ததால், பேரறிவு உயிரினங்களாக மாற்றம் அடைந்தது.

இங்கே சிந்திக்க வேண்டும் மனிதன்.  அடுத்த விருந்தில் (04-11-2015) தொடர்வோம்.