மனிதத் தேர்வு – PERSONALITY TEST-292(96) (மீள்பதிவு)

வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

மனிதத் தேர்வு – PERSONALITY TEST

(மீள்பதிவு) FFC – 292(96)

                                                      17-06-2020-புதன்

(01-07-2015)

 Personality_test-Q

    ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம்.  இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம்.  எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால்  இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு.  மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம்.  இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

   முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம்.   இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகமாக இயற்கை/இறை  நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது,  இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.

    தலைப்பு  ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது.  தேர்வு என்றால் என்ன  என்பது யாவருக்கும் தெரியும்.    தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய  படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து  மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.

ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன?  யார், யாரை, எதில் தோ்வு செய்வது?  இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே!   மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு.  ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

   உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால் (mutation)  மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின்  பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்.  இதுதான் மனிதம் எனப்படுகின்றது.  மனிதம் இருந்தால் தான்  அவன் மனிதன்.   மனம்+இதம்=மனிதன்.  இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

ஆகவே ஆன்மா தன்பரிணாமச்  சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும்.  இதற்காகவேதான் மனிதப்பிறவி.   ஆன்மா,  பிறவிஎடுத்தபிறகு,  மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது.   மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.

கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன் அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது  எடுக்கவேண்டும்  என்கின்ற கட்டாயம்உள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதனையாவரும் அறிவர்.  தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை  ஈட்டி நிறைவாக  வாழ முடியும்.

        அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில்,  தேர்ச்சிபெறவேண்டும்.  மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது.   மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான் (Desirable).  நடைமுறையில் அப்படி இல்லை.  ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும்  கீழ்,  பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.

        இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள்.  எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு வாழமுடிகின்றது.

        மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம்.  நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா,  துன்பமில்லாப்  பேரின்ப வாழ்வு வாழ முடியாது.

        மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர்.  இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்

perfect_man

   மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார்.  விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார்.  அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும்  மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.

    மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.  கல்வித்  தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது  இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது.  ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை  பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை.  இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.

         இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.

இச்சூழ்நிலையில்,

1)  மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி,  அதாவது மனிதத்தேர்வில்  40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது. (வள்ளலார் கூறும் பரிபாக நிலை)

2)   பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.(வள்ளலார் கூறும் சாகாவரம்)

    ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும்,   தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது.  திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம்.  திருவேதாத்திரியம்,

       “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.

    மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

this_birth_is_enough_for_liberation

பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால்.  நன்மை கிடைக்கின்றது என்கிறார்.

   விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு.  ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான்  பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும்.  விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா  மனிதனாகலாம் என்கிறார்.

   அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.

  இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.

  எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல்  வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல்,  சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற  சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார்.  மகரிஷி அவர்கள்.  மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.

   மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.

Personality_test-Answer

எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை  வாழ்த்துவோம். வணங்குவோம்.

                   வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

                                 வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.

    ‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து  வைத்திருந்த வேளையில், 30-06-2015—செவ்வாய், ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள A personality test on Gita values’ என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை  நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள்.  இந்து நாளிதழுக்கு நன்றி.   நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள்.  மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.

 Personality_Test_The_ Hindu_30th_Jun_2015

முக்குணங்களால் மனித  உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது.  சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள்.  அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி.  மீண்டும் ‘The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

    இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ்  ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.  மீண்டும் இச்சிந்தனையை  ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம்.    இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள  செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது.  இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான்.  ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.

     ஆகவே  அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை  அறிவுறுத்துகின்றது.  நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை.   ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது  என்பது இயலாது.  ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு,  ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு  சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது.  இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும்.  அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.   அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும்.  மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும்நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும்.  அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து,  மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.

“குருவருள் இன்றேல் திருவருள் இல்லை”  என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம்.  வாழ்க திரு வேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

வாழ்க திருவேதாத்திரியம்!                     வளர்க திருவேதாத்திரியம்!!