மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

FFC — 111

 19-08-2015—புதன்

 

anbargale vaareer-THAI

 

உற்ற வயதில் கேட்க வேண்டிய கேள்விகள்

உயிரினங்களிலேயே மிகச் சிறந்தது மனித இனம். காரணம் ஆறாம் அறிவுடையவன் மனிதன்.
இயற்கையே/இறையேதான் ஆறாம் அறிவாக மலர்ந்துள்ளதாலும்,
இயற்கை, ஆறாம் அறிவோடு தானே மாறும் தன்மாற்றத்தை நிறுத்திக் கொண்டதாலும்,
ஆறாம் அறிவைத்தவிர அதற்கு மேலும் அறிவு ஏதும் தேவை இல்லை என்பதாலும்
ஆறாம் அறிவுடைய மனிதன் மட்டுமேதான் இயற்கையின் இரகசியங்களை அறிந்து மகிழ முடியும்
ஆறாம் அறிவுதான் இயற்கையில் மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டுபிடித்து வாழ்க்கை வளமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்கு விஞ்ஞானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எல்லையில்லாதது இயற்கை. முடிவற்றது இயற்கை. ஆகவே இயற்கையில் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உள்ளன. எல்லாவற்றையும் எல்லையுடைய ஆறாம் அறிவு கண்டுபிடிப்பது என்பது முடியாததுதான், என்றாலும், விஞ்ஞானம் இயற்கையின் இரகசியங்களை ஏராளமாகக் கண்டு பிடித்து வருகின்றது. ஆனால் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான இரகசியங்கள்  இன்னமும் இரகசியமாகவே இருந்து வருகின்றன.

மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. ஆதிமனிதனிலிருந்து இன்றுவரைத் தோன்றி மறைந்த மக்கள் தொகை கணக்கு இல்லை. கடலிலுள்ள நீர்த்துளிகள் எத்தனை என்று சொல்ல முடியாதோ அதுபோல் இதுவரைத் தோன்றி மறைந்துள்ள மக்கள் தொகையையும் சொல்ல முடியாது.
விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சியினை அடைந்து, மனித வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைப் பெருக்கி வந்தாலும், அந்த விஞ்ஞானத்தினால் மனிதனின் பூர்வீகச் சொத்தான அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்ளும் அறிவு நிலை மலரவில்லை.
வாழ்க்கையை இயற்கைக்கு ஒத்த முறையில் சரியாக வாழும் முறை இன்னும் இரகசியமாகவே இருந்து வருகின்றது. ஆறாம் அறிவின் திறன் அதன் சிந்தனையில்தான் வெளிப்படும். அதற்கு அறிவு என்ன, ஏன், எவ்வாறு ஆகிய வினாக்களைக் கேட்டால்தான், அறிவின் சிந்தனைத்திறன் வளர்ச்சி பெறும்.
மனிதப் பிறவியை எடுத்தப் பயனை இந்தப் பிறவியிலேயே பூர்த்தி செய்து கொள்வதற்கான திறன் படைத்தது ஆறாம் அறிவு. ஆகவே ஆறாம் அறிவு என்ன, ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகளைக்கேட்டு, அவைகளுக்கான விடைகளையும் அறிவுபூர்வமாகப் பெற்று அவ்வாறு வாழ வேண்டும். வாழ்க்கையில் அறிவு எவ்வளவோ வினாக்களைக் கேட்கின்றது. ஆனால் அறிவினால் கேட்கப்பட வேண்டிய சாதாரணக் கேள்விகள் உள்ளன. ஆனால் அந்த சாதாரணக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்போது மனிதன் மகானாகிறான். அப்போது அந்த சாதாரணக் கேள்விகள் மகோன்னத கேள்விகளாகின்றன. ஆனால் எல்லோரும் அந்த சாதாரணக் கேள்விகளைக் கேட்பதில்லை. அந்த வினாவினைக் கேட்டு, விடைகளைப் பெற்று, அதற்கேற்றவாறு வாழும்போது அந்த ஆன்மா மகானாகின்றது. சரித்திரம் படைக்கின்றது.
உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் என்னென்ன, அந்த வினாக்கள் எவ்வாறு மகோன்னத வினாக்கள் என்றும், இதுவரை யாராவது அந்த வினாக்களைக் கேட்டு விடைகளைப் பெற்று மகானாகி இருக்கிறார்களா?
ஆறாம் அறிவுடைய மனிதன் வாழ்க்கையில் உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் உள்ளன. அவ்வினாக்களை உற்ற வயதில் கேட்டால்தான் அவன் வாழும் காலம் முழுமைக்கும் மகிழ்ச்சியாக வாழலாம். அவன் வாழ்கின்ற சமுதாயத்தையும் வாழ வைத்து மகிழலாம். வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில்(உதாரணத்திற்கு ஐம்பது வயதில்) அவ்வினாக்கள் எழுந்து எப்போது விடைகள் கிடைக்கும்? பிறகு அதற்கேற்ப வாழ்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்க எஞ்சியுள்ள வாழ்நாள்தான் போதுமானதாகத்தான்  இருக்குமா?

  • அவ்வினாக்கள் என்ன,
  • அவற்றிற்கு என்ன விடைகள், எவ்வாறு விடைகள் கிடைக்கும்,
  • அவைகள் எவ்வாறு மகானாக்கும் என்று பார்க்க இருக்கிறோம்.

எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். இதில் தவறில்லை. ஆனால் துன்பமும் வந்துவிடுகின்றது. அதனை அவ்வாறே ஏற்று இன்ப-துன்ப பிறவிப்பிணியிலேயே வாழ் நான் முழுவதும் வாழ்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதாவது சிந்திப்பது இல்லை. சிந்தித்தால் வரும் முதல் வினாதான்.
1) இன்பம் துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? எனக்கு மட்டும் ஏன் வருகின்றன? ஒரு சிலருக்கு மட்டும் ஏன் வருகின்றன?

அடுத்த வினாவினைப் பார்ப்போம். இன்ப துன்பத்தை அனுபவிப்பது உயிர்தான். மனிதனுக்கு ஏராளமான ஆசைகள் உள்ளன. மனிதன் ஆசைப்படுகிறான் என்றால் அவனது உயிர்தானே ஆசைப்படுகின்றது. உயிர் போன சவத்திற்கு ஏது ஆசை? ஆகவே உயிருக்குள்ள முதல் ஆசை தன்மீது தான். உயிர் மதிப்பற்றது என்கிறோம். உயிரை யாரும் துறப்பதற்கு விரும்புவதில்லை. எவ்வாறு கறந்த பால் மீண்டும் முலை புகாவோ அதுபோல் உடலைவிட்டு வெளியேறிய உயிர் மீண்டும் உடலுக்குள் நுழையாது.

உற்றார் உறவினரின் உயிர் இழப்பு பெரும் பாதிப்பையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. உயிர் போய்விட்டால் உடலுக்கேது மதிப்பு? உடல் அழுகிவிடும். துர்நாற்றம் வீசும். அத்தகைய சிறப்புடைய உயிரை யாராவது இதுவரை பார்த்திருக்கிறார்களா. ஏன் உயிரைப் பார்க்க முடியவில்லை என்கின்ற சிந்தனை பரவலாக மனிதர்களிடம் வந்திருக்க வேண்டும். ஆகவே எழ வேண்டிய இரண்டாவது வினா

2) உயிர் என்பது என்ன?

அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். இறைமீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம். இறைமீது நம்பிக்கை இல்லாதவர்கள் இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள். அவர்கள் வெகு சிலரே. அவர்கள் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள். எனவே கண்களால் காணமுடியாத இறையை அவர்கள் இல்லை என்கின்றனர். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுவது மூடநம்பிக்கை என்கின்றனர். அது அவர்களின் சிந்தனைச் சுதந்திரம்.

மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவினைத் தரவல்லது இயற்கை என்பதனை இருதரப்பினருமே அறிந்து அறவாழ்வு வாழ்வதுதான் மனிதம் என்று அறிந்து விழிப்போடு வாழ வேண்டும். இருதரப்பினருக்குமே வாழ்வதற்கு காற்றை,ஒளியை, நீரை, உணவைத் தருவது ஒரே இயற்கைதான்.

இறை மீது நம்பிக்கைக் கொண்டு இறைவழிபாடு செய்து வருபவர்கள் யாரும் அவா்கள் வாழ்நாளில், இறையைக் காணாமலேயே வாழ்நாள் முடிந்து விடுகின்றது. இச்சூழலில் எழ வேண்டிய அடுத்த வினா:

3) இறைவன் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தை(universe) படைத்தார்?

அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. ஒருநாள் பிறந்தவர் இறந்தே தீர வேண்டும். ஆகவே இறக்கவேப் பிறக்கிறான் மனிதன். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலம் அவனது வாழ்நாள் எனப்படுகின்றது. மனிதர்கள் வாழ்நாளில் எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் இன்றியமையாத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடமாவது எல்லோருக்கும் கிடைக்க வேண்டாமா? இம்முன்றும் கிடைக்காமல் போனால் அதனை என்ன என்று அழைக்கிறான் மனிதன்? ஏழ்மை என்கிறான். வறுமை என்கிறான். இதுபற்றிய கேள்வி எழவேண்டாமா மனிதனுக்கு! ஆகவே இந்த கேள்விதான் நான்காவதாகும். ஆகவே நான்காவது வினா.

4) வறுமை ஏன் வருகின்றது?
இந்த நான்கு வினாக்களைத் தான் மகோன்னத வினாக்கள் என்கிறோம் நாம்.
இன்றைய விருந்தில் மகோன்னத வினாக்கள் நான்கு என்று பார்த்தோம். இவ்வினாக்கள் எவ்வாறு மகானாக்கும் மகோன்னத வினாக்கள் என அடுத்த விருந்தில் 23-08-2015 அறிவோம்.

வாழ்க மனித அறிவு!            வளர்க மனித அறிவு!!