மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

 

FFC -114

 30-08-2015—ஞாயிறு

 4. இறைவன் என்பவர் யார்?

 

FFC-114-30-08-15-கடவுள் உயிர் வினைப்பயன்

இன்று மூன்றாவது வினாவான “இறைவன் என்பவர் யார்?” என்றும் “அவர் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார்?” என்கின்ற வினாவினை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். மகரிஷி அவர்கள், அவருடைய தந்தையார் பழக்கியபடி கடவுளிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறார் என்கின்ற நம்பிக்கை மகரிஷி அவர்களுக்கு இருந்தாலும், அவருடைய உள்ளம் கடவுள் என்பவர் யார் என்கின்ற வினாவை சிறு வயதிலேயே எழுப்பியது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோருக்கு கடவுளைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.  பக்தியிலேயே திளைத்து ஒரு சிலர் கடவுளைக் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. காட்டிற்குச் சென்றுக் கடுந்தவம் புரிந்ததன் பயனாக கடவுள் காட்சி கொடுத்தார் என்றும் ஆன்மீக வரலாறுகள் செப்புகின்றன. கடவுளைச் சிலை வடிவில் வணங்கி கடவுளைக் கண்டவர்கள் கடவுளை உருவகப்படுத்தி பாடல்கள் அருளியுள்ளனர். சித்தா்கள், மனதை ஒருமுகப்படுத்தி கடும் தவம் புரிந்து கடவுளைக் கண்டார்கள் எனவும் செய்திகள் உள்ளன. சித்தர்கள் கடவுள் நிலையை அரூபம் என்றனர்.
பக்தியின் வழியாக கடவுளைத் தரிசித்தவர்களும் அல்லது அரூப வழிபாட்டில் கடவுளை உணர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கச் சீலர்களாக இருந்தனர் என்பதனை அவர்களது வாழ்க்கை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அறவாழ்வு வாழ்ந்துள்ளனர். அதுதானே சமுதாயத்திற்கு அவசியம். கடவுள் அன்பும் கருணையுமானவன் என்கின்றனர் இருதரப்பினருமே. இரு தரப்பினருமே கடவுள் நிலையைப் பற்றியும், மனிதன் எவ்வாறு அறவாழ்வு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி அறநூல்கள் எழுதியுள்ளனர். இருப்பினும் சாதாரண மனிதனுக்கும் விளங்குகின்ற அளவில் கடவுள்நிலை விளக்கம் இல்லை.
தந்தை யார்? தாய் யார்? என்று ஒவ்வொரு மனிதனுக்குத் தெரிகின்றவாறு கடவுள் யார்? என்கின்ற கடவுள் நிலை விளக்கம் இல்லை. கடவுள் நிலையைப்பற்றி குழப்பம் தான் உள்ளது. சமுதாயச் சிக்கல்களுக்கானப் பல காரணங்களில் கடவுள் நிலையைப் பற்றியக் குழப்பமும் ஒன்று. இதனை மகரிஷி அவர்கள் சமுதாயச் சிக்கல்களும் அதற்கான ஆய்வுத் தீா்வுகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமும் எழுந்து விட்டது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைய வேண்டும் என்று சுவாமி விவோகானந்தர் கூறியுள்ளார். முன்னவர் விரும்பினார். அதனையே பின்னவரான உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி, ஐன்ஸ்டீன் “மெய்ஞானமில்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்ஞானமில்லாத மெய்ஞானம் குருடு”, (Science without Religion is lame, and religion without Science is blind) என்று கூறியுள்ளார். அடுத்த பின்னவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்துவிட்டார்.
எல்லோரும் கடவுளைக் காண முடியவில்லை. நம்பிக்கையில்தான் கடவுள் வணங்கப்படுகிறார். அதுவும் இணக்கமில்லாத வணக்கம்தான் நடைபெறுகின்றது. மூடநம்பிக்கைகள் பெருகிவிட்டன. ஆகவே கடவுளை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆதிமூலம் என்று கடவுளுக்குப் பெயா் வைத்திருந்தாலும், அதனை வைத்து கடவுள் ஏன் ஆதிமூலம் என அழைக்கப்படுகிறார் என்று கேள்வி கேட்டு கடவுள் நிலையை உறுதி படுத்தப்படுவதில்லை.
கட+உள்=கடவுள் என்றும், இப்பிரபஞ்சத்தை (ஆட்சியின்றி என்பது கவனிக்கத்தக்கது) ஆண்டு கொண்டிருப்பதால் ஆண்டவன் என்றும், கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறான் என்று கூறி, அதாவது இறைந்து கிடப்பதால் கடவுளுக்கு இறைவன் என்கின்ற பெயரும் உள்ளன. ஆனால் கடவுள் நிலை அறுதியிட்டுக் கூறப்படவில்லை. கடவுள் எல்லாவற்றையும் விட வலிமையானவன் அதாவது mightier than all என்பதால் Almighty என்றும்,   G(generation)+O(operation)+D(destruction)=GOD என்கின்ற உருவாக்கிய சொல்லாக கடவுளை ‘GOD’  என்றும் ஆங்கிலத்தில் கடவுளை அழைக்கின்றனர்.
இந்த நிலையிலே கடவுள் என்பவர் யார் என்றும், அவர் ஏன் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவினை அரூபமான இயற்கேயே/இறையே
சிறுவர் வேதாத்திரியிடம் கேள்வியாக வந்து,
அதுவே தன் நிலையை அப்பட்டமாக தெளிவாக விடையாகத் தந்து
வேதாத்திரியை மகானாக்கி, மகாத்மாவாக்கி,

அறிவினரைச் சேர்தல் மூன்றாம் இனிதாக அவ்வையார் கூறும் அறிவினராக்கி(குருவாக்கி),
மனிதன்(துவைத நிலையில்) ஏற்படுத்திய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று குருவைப்பற்றிக் கூறுவதற்கிணங்கத் தானே வேதாத்திரிய வடிவில் குருவாகி,
உலகிற்கு அறிவொளியாக காட்சி கொடுத்துள்ளது. இதுதான் ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத விஞ்ஞானம்.

சுருக்கமாக, இயற்கை திருவேதாத்திரியத்தின் வாயிலாக இறையைப்பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

“வெட்டவெளியேத் தெய்வம்”
வெட்ட வெளியை பாழ்நிலை, அது ஒன்றுமில்லாதது என்று கூறப்பட்டு வந்ததற்கு, மாற்றாக, அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தரங்களை(qualities as adjectives)யும், அது மட்டுமல்லாது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கொண்டுள்ளது என்கின்றது வேதாத்திரியம்.

மேலும் உருவமில்லாத வெட்டவெளி எவ்வாறு உருவமுள்ளதாக முடிந்தது என்பதனை விளக்குவதற்குக் காரணம் அதற்கு தன்னிறுக்க ஆற்றல் (self compressive force)இருந்தது என்கின்றது வேதாத்திரியம்.
அதற்கு மேலும் தனித்தனியே வெளியிலிருந்து துகளானது எவ்வாறு சுழற்சி பெற்று, எவ்வாறு அவைகள் ஒன்று கூடி தொகுப்பாகி விண்ணாகவும் மற்ற பஞ்ச பூதங்களாக முடிந்தது என்பதற்கு காரணமாக இருந்தது சூழ்ந்தழுத்தும் ஆற்றல் surrounding pressure force என்கின்றது வேதாத்திரியம். வேதாத்திரியம் அருளியுள்ள ஒரு கவியுடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

FFC-114-30-08-2015- வெட்டவெளி சக்தி யில்லையானால்

 இவ்வளவு திட்டவட்டமாக, அறுதியிட்டு, தெளிவாக இதுவரை காணமுடியாதிருந்த தெய்வத்தை அவரவர்களே கருத்தியலாக அறிந்து கொண்டு, அதனை செய்முறையாகவும்-அதாவது தவத்தால் உணரச் செய்துள்ளது வேதாத்திரியம். இது காலத்தின் கட்டாயமும் அவசியமும். இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த விருந்தில் (02-09-2015-புதன்) நான்காவது மகோன்னத வினாவான ‘வறுமை ஏன் வருகின்றது’ பற்றி சிந்திப்போம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.