புகழும் உயர்புகழும் – 3 / ?

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

புகழும் உயர்புகழும் – 3 / ?

அ.வி. 50

25-01-2015 ஞாயிறு

பொருள் மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவா் 2044 வருடங்களுக்கு முன்னர் கூறியதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்காலத்திற்கேற்ப விஞ்ஞானத்தின் துணை கொண்டு, எளிமையாக்கி தெளிவு படுத்தியிருக்கிறார். மகரிஷி அவர்கள் எழுதிய ‘திருக்குறள் உட்பொருள்’ விளக்கம் எனும் நூலில், குறள் எண் 351,355 மற்றும் 358 ஆகிய குறட்பாக்களுக்கு அவர் அருளியுள்ள உட்பொருள் விளக்கத்தைக் காண்க. இப்போது, மகரிஷி அவர்கள் இயற்றிய மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து எனும் நூலில் அருளியுள்ள பாடலுக்கு விளக்கம் காண்போம்.

FFC-50-நிக-பொ-PNG-post-7-45am52-1-15

இப்பாடலின் பொருள் என்ன?

1) இல்லாததே இருப்பன – உருவமுள்ளதைத்தான் புலன்களால் உணரமுடியும். அரூபத்தை புலன்களால் உணர முடியாது. ஆகவே அரூபம் புலனறிவிற்கு இல்லாதது போல் இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இருக்கின்ற அரூபமே இருப்பன என்கிறார், காரணம் அரூபமாக இருந்த பேராற்றலே தோற்றங்களாக மாற்றம் அடைந்துள்ளதால், தோற்றங்களான அரூபத்தை எவ்வாறு இல்லாதது எனக் கூறமுடியும்? எனவே “இல்லாததே இருப்பன” என்கிறார். ஆற்றலுக்கு ஏது உருவம்? இதனை யாவரும் அறிவர்.

உதாரணத்திற்கு மின்சாரத்திற்கு ஏது உருவம்? ஆனால் மின்சாரத்தினால் இயங்கும் சாதனங்களுக்கு உருவம் உள்ளது. அதுபோல்தான் இறையாற்றல் அரூபமாகவும், இறையின் இயக்கம் உருவமாகத் தோற்றமளிக்கின்றது ஆகவே ஆற்றலாக உள்ளது அரூபமாக இருக்கின்றது. ஆனால் உருவமில்லா ஆற்றல்தான் எல்லாத் தோற்றங்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. அது என்றும் நிரந்தரமானது; என்றும் இருப்பது. தோற்றம் இல்லாமல் இருந்தது இப்போது தோற்றங்களாக உள்ளது என்பதனைக் கூறவே “இல்லாததே இருப்பன” எனக்கூறுகிறார்.

2) இருப்பன இல்லாது போம். – தோற்றமுள்ளது இல்லாமலும் போய்விடும். மாற்றமே நிரந்தரமானது. மனிதன் முதற்கொண்டு எல்லாமே மாற்றத்திற்குரியது. ஆண்டியாக இருந்தாலும். அல்லது அரசனாக இருந்தாலும், எல்லோருக்கும் தோற்றம்(பிறப்பு) இருப்பது போல் முடிவும்(மரணம்) என்பதுண்டு. இல்லாமல் ஒருநாள் போய்விடுவர். எனவே இருப்பன “இல்லாது போம்” என்கிறார்.

3) நில்லாதவை நிகழ்ச்சியாம் – நில்லாதவை என்றால் என்ன பொருள்? தோற்றங்களெல்லாம் அணுக்களால் ஆனது என்பது தெரிந்ததே. அணுக்கள் யாவும் நிற்காமல் ஓய்வின்றி சுழன்று கொண்டேதான் இருக்கின்றது. அணுக்கள் ஓய்வெடுப்பதில்லை. அதாவது தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துவதில்லை. நின்றால் அது அணுவில்லை. அது வெளியாகிவிடும். தோற்றம் மறைந்துவிடும். அவ்வாறு நிற்காமல் இருப்பதனை “நில்லாதவை நிகழ்ச்சியாம்” என்கிறார் ஒருமை விஞ்ஞானம் தந்த (Explorer of Science of Oneness) மகரிஷி அவர்கள்.

4) நின்ற மிச்சமே பொருள் — தன்னிறுக்கத்தால் (self compressive force) நொறுங்கி வெளி சுழன்றதால்நுண்ணியத்துகள் (infinitesimal particles)  உருவாகியது; நுண்ணியத் துகளின் சுழற்சி நின்று விட்டால் மீண்டும் அது வெளியாகிவிடும். சுழன்று கொண்டிருந்த நுண்ணியத்துகள் பொருளல்ல, ஆனால் சுழற்சி நின்றால் மீதமுள்ளது வெளி. சுழற்சி நின்று மீண்டும் ஏற்படும் ‘வெளியே’ பொருள் என்கிறார். இந்த வெளிதான் நிரந்தரமானது. அதற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. எனவே ‘வெளி’ அனாதை. எனவே தான் வெளியாகிய இறையை ‘அனாதி’ என்கின்றனர் மெய்ஞ்ஞானிகள்.
இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்” என்பதனை மேலும் அறிய, இணையதள ஆசிரியர் எழுதியுள்ள ‘நான் யார்?’ என்கின்ற நூலின் 10-ஆவது அத்தியாயத்தைக் காணலாம்..

ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மையினை, விஞ்ஞானத்தின் துணை கொண்டு, சுத்த அத்வைத விஞ்ஞானமாக்கியுள்ளது (Pure Advaidhic Science) வேதாத்திரியம். புகழ், உயர்புகழ் என்றும் இரண்டாகப் பிரித்துள்ளது வேதாத்திரியம். ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மை தெரிவிப்பது யாதெனில், ஆதியில் இருந்த ஒன்றே நாம் காணும் எல்லாத் தோற்றங்களாகவும், எல்லா உயிரினங்களாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஆதியில் இருந்த அந்த ஒன்றே தான் நாம் எல்லோருமாக உள்ளோம். ஆகவே மனிதன் செய்யும் செயல்களுக்காக (நிகழ்ச்சிகள்) வரும் புகழ் யாரைச் சார்ந்ததாக இருக்க முடியும்?

இந்த கோணத்தில் சிந்தித்தால் புகழ் யாருக்குரியது என்று தெரிய வரும். ஆதியில் இருந்த ஒன்றேயாகிய இறைக்கே உரியது எனத் தெளிவாகின்றது. அப்படி இருக்கும் அந்த புகழுக்கு மனிதன் சொந்தம் கொண்டாடுவது எவ்வாறு பொருந்தும். எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்? மனிதனின் நற்செயல்களுக்காக வரும் விளைவு புகழாக இருக்கும்போது, புகழ், எவ்வாறு இறைக்குரியதாகும் என ஐயம் எழலாம். “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கின்றபோது மனிதனின் நற்செயல்களுக்கு விளைவாக வரும் புகழ் யாருடையதாக இருக்கும்?” இறைவனுடையதாகத்தான் இருக்கும். இதனை உறுதிபடுத்துகின்றது ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கின்ற புனித வாக்கும்.

இறையின் திருவிளையாடலில் மனிதன் ஒரு கருவிதான் என்கின்றனர், இறையை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக உணர்ந்த மெய்ஞ்ஞானிகள். ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத தத்துவத்தின்படியும் இறைதான் எல்லாமாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது என்கின்ற போது மனிதன் செய்யும் நற்செயல்களின் பலனான புகழும் இறைக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும்.

இறைவனே மனிதனின் உடலாகவும், புலன்களாகவும், உயிராகவும், அறிவாகவும், நற்குணமாகவும், இருக்கும்போது, உடல், புலன்கள், அறிவு, நற்குணம் ஆகியவைகளைக் கொண்டு ஆற்றும் செயலினால் வரும் புகழ் யாருடையதாக இருக்க முடியும்? இறைவனுடையதாகத்தானே இருக்க முடியும். ‘அப்படியில்லை மனிதனுக்குத் தான் புகழ் உரித்தானது’ என்றால் மனிதன் இறையிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்வதாகிவிடும்.
மனிதன் இறைக்குரிய புகழை தனது என்று சொன்னால் என்ன ஆகிவிடப் போகின்றது?  இறை என்ன கோபித்துக் கொள்ளுமா? இறையின் மகன் தானே மனிதன். அதனால் ஏன் பரமபிதாவாகிய இறையின் புகழை தனது என்று சொல்வதானால் என்ன தவறு? இது போன்று ஐயங்கள் மனித மனங்களில் இருக்கும்; எழும்.

புகழ் தனக்குரியது என மனிதன் நினைக்கும்போது, அவன் இறையிடமிருந்து தன்னைப் பிரித்துப் பார்ப்பதால் தன்முனைப்பு வந்துவிடும். அத்வைதியாக மாற்றம் பெற வேண்டிய பயிற்சியில், இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தன்முனைப்புத் திரையை நீ்க்க வேண்டியது கடைசி நிலை. “தன்முனைப்பு கரைந்துபோம். காணும் தெய்வம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும். அத்வைதியாவதற்கு மட்டுமே தன்முனைப்பை அகற்ற வேண்டும் என்பதில்லை.

தன்முனைப்பு (Ego—ஆணவம்) எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக இருப்பதால் வாழ்க்கையில் துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கு தன்முனைப்பை அகற்றியேத் தீர வேண்டும். தன்முனைப்பு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற அமைதி வெடிகுண்டு (Silent Bomb.) இந்த தன்முனைப்பாகிய அமைதி வெடி குண்டு, அன்றாட வாழ்வில், சமுதாயத்தில், பழக வேண்டிய மனித உறவுகளுடன் சில நேரங்களில் வெடிப்பதுதான் சினம், வெறுப்பு, பொறாமை, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகளாகும். இவற்றின் அளவு அதிகமாகும் போது பஞ்ச மகாபாதகங்களாக உருவெடுக்கின்றன.

ஆகவே இறையே நானாகவும் எல்லாமாகவும் இருக்கின்றது எனக் கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் உறுதி படுத்தும் செயலை விடவா இப்புவியில் வேறு புகழ் உள்ளது? ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயனின் ஆட்சியில் மனிதன் ஒரு கருவி மட்டும்தான். எனவே மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது ஒருவித மாயை வலையில் சிக்கிக் கொள்வதாகும். ஆகவே இவ்வுண்மையை சமுதாயத்திற்குத் தெரிவிக்க வேதாத்திரி மகரிஷி அவர்கள், இயற்றியுள்ள காந்த தத்துவப்பாடலில் ‘மனத்தூய்மை’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை நினைவிற்கு கொண்டு வருவோம்.

காந்தத் தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை‘ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக்கூறும் ‘மனத்தூய்மை’ என்கின்ற தலைப்பையுடைய பாடலாக இருக்கின்றது.

பொருள், மெய்ப்பொருள் பற்றியத் தெளிவு இருந்தால் அறிவிற்கு புகழின் மீது மோகம் ஏற்படாது, ஆகவே சிந்தனை விருந்தின் தலைப்பு புகழும் உயர்புகழும் என்றிருந்தாலும் பொருள், மெய்ப்பொருள் பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம்.

இனி அடுத்த அறிவிற்கு விருந்தில் (28-01-2015 புதன்), ‘மனத்தூய்மை’ என்கின்ற பாடலையும் அதற்கான விளக்க உரையில் எவ்வாறு புகழ் மற்றும் செல்வாக்கு மனத்தூய்மையைக் கெடுக்கின்றது என்று மகரிஷி அவர்கள் கூறுவதையும் அறிவோம்.