221-பிறவிப் பயனை நல்கும்! 5/?

வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

 
பிறவிப் பயனை நல்கும்! 5/?

அறிவிற்கு விருந்து—221

28-08-2016—ஞாயிறு

மகரிஷி அவர்களின் 106 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இரண்டு வாரங்களாக மனவளக்கலையின் இறுதிப்பயனை அடைவதற்கு நம்குருநாதர் அவர்கள் அளிக்கின்ற உறுதியாகிய ‘பிறவிப்பயனை நல்கும்’ என்பதனை ஆராய்ந்து வருகிறோம்.
பிறவிப்பயன் என்ன என்பது ஏற்கனவே அறிந்திருந்தாலும், அந்த அறிதல்/புரிதல் வெறும் வார்த்தை அளவில் இருந்துவிடமால், செயலாவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘பிறவிப்பயன்’ என்ன என்பது பற்றி வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். பிறவிப்பயன் என்பது இறைஉணர்வு என்றாலும், இறைஉணர்வின் மனவுரு(CONCEPT OF GOD REALISATION) பற்றி சிந்தித்து வருகிறோம். இந்த ஆராய்ச்சியின் முடிவில் கிடைக்கும் தெளிவைக்கொண்டு, எவ்வாறு குருவை மதித்து ஒழுகி பிறவிப்பயனை அடைவது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

ஆகவே இன்றைய விருந்தில் பிறவிப்பயனை அடைவதற்கான பேரின்பப்படிகளில் இரண்டாவது படியான மனத்தூய்மை பற்றி சிந்திப்போம். மகரிஷி அவர்கள் அருளிய அப்பாடல் வரிகளை நினைவு படுத்திக்கொள்வோம்.

“பின்அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து,
ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்”

பாடலின் வரிகளை உற்று நோக்குவோம். உற்று நோக்கும் போது ‘பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெறுதலுக்கு’ மகரிஷி அவர்கள், என்னென்ன செயல்கள் செய்தார் என்பதனை அறிய முடிகின்றது. முதலில் பிறவிப்பயனை அறிந்திருக்கிறார். ‘இறை உணர்வு பெறுதல் என்பது மனம், செயல் தூய்மை அடைவது’ என்பதால், விழப்புடன் பயிற்சிகள் செய்தும், மனத்தூய்மைக்கு, பொறுப்புணர்ந்து செயல்கள் ஆற்றி மனம் தூய்மை பெற்றார்.

தன்முனைப்பு நீங்கிய மனத்தூய்மை அவசியம்:

‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்ற அகத்திய மகரிஷிகளின் அருள் மொழி நம் கவனத்திற்கு வருகின்றது. என்ன கூறுகிறார் அகத்திய மகரிஷி அவர்கள்?

மந்திரங்கள் உச்சாடனம் செய்து இறையை உணர்வது ஒரு முறை. எவ்வாறு மந்திரங்கள் உச்சாடனம் செய்வது இறையை உணரச் செய்யும் என்கின்ற ஐயம் எழுகின்றது. மந்திர உச்சாடனம் என்பது மனம் தூய்மை அடைவதற்காகச் செய்வது. மனம் தூய்மை அடையாமல் மனதின் மறுமுனையான இறையை எவ்வாறு உணரமுடியும்? அவ்வாறு மந்திர உச்சாடனம் செய்து மனம் தூய்மை அடைந்து, இறைதரிசனம் கிட்டிய பிறகு மந்திர உச்சாடனம் அவசியமில்லை  என்று கூறுவதுபோல் தெரிகின்றது. அப்படியல்ல. இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில், இறைஉணர்வு பெற ‘தன்முனைப்பு நீங்கிய மனத்தூய்மை அவசியம்’ என்பது தெளிவாகின்றது. தூய்மையாகிய மனம் இறை உணர்வில் தோய்ந்து விடுகின்றது. ‘மந்திர ஜபிப்பதனை விட்டுவிடுவது’ செய்தியல்ல. எத்தனை காலம் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே இருப்பது; அதன் பயனை அடையும் வகையில் மந்திரத்தை சிரத்தையோடு ஜபித்து செயல்கள் ஆற்றி மனம் தூய்மையாக வேண்டும் என்பதனைத்தான் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறவிப்பயன் இறை உணர்வு பெறுவது, அதற்கான பயிற்சிகள் தவமும் தற்சோதனை சிறந்த வழி என்றிருந்தாலும், இறை உணர்வு பெறுவதன் உட்பொருள் மனம் தூய்மை அடைய வேண்டும் என்பதால் மனம் தூய்மை அடைந்ததையே இரண்டாவது பேரின்பப் படியாகக் கூறுகிறார்.

எவ்வாறு மனத்தூய்மை பேரின்பத்தை நல்கும்?

அவ்வைத்தாய், மனிதப்பிறவியினை அரிதானது என்றும், அவ்வாறு மனிதப்பிறவி எடுத்ததன் பயனை யாரும் அடைவதில்லை என்பதனை அரிது அரிது மானுடனாய் பிறத்தல் அரிது என்று துவங்கும் பாடலில் கூறுகிறார். இதேபோன்று மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலர் கூறுவதனைக் கவனிப்போம். அரிதான ஒன்றை அடைவது சாதாரண புலன் வழி இன்பத்தைவிட அளவில் அதிகமாகத்தானே/பெரியதாகத்தானே இருக்கும். எனவே அது பேரின்பமாகின்றது,

ஏழாவது தந்திரத்தில் ‘கேடுகண்டிரங்கில்’ என்கின்ற அதிகாரத்தில், மனித வாழ்க்கையின் நிலையினைக்கண்டு இரங்கி பாடியுள்ள ‘மனிதப் பிராணிகள் இவர்’ என்கின்ற பாடலை நினைவு கூர்வோம்.

மனிதப் பிராணிகள் இவர்

 பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.          . . . திருமந்திரம் 2090

அரிதான மானிடப் பிறவி எடுத்தும், பெறுவதற்கு அருமையான மெய்ப்பொருளின் திருவடிகளைப் போற்றித் துதிக்க நினைக்க மாட்டார்கள். பெறுவதற்கு அருமையான மனிதப் பிறவியைப் பெற்றிருந்தும் சிந்திக்கும் உணர்வின்றி விலங்குகளைப் போல வாழும், இந்த மனித மிருகங்களெல்லாம் பிறவியின் பயனை பெற முடியாத பேரின்ப வாழ்வு பெறும் வாய்ப்பை இழந்தவராகிவிட்டனர் என்கிறார் திருமூலர். ஐயோ பாவம் என்கிறார் திருமூலர் என்பது குறிப்பு.

மற்றொரு பாடலையும் நினைவு கூர்வோம்.

பிறவிக்கடல் நீந்தப் பாருங்கள்:

 இக்காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்தெமக்கு ஆனதுஎன்று
அக்காலம் உன்ன அருள் பெறலாமே.                      . . . திருமந்திரம் 2106

இப்பாடலுடன் மகரிஷி அவர்கள் முழு மனிதன் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலை இணைத்துப்பார்த்து, அறிவை திடமாக்கி, அருளாளர்களோடு இணைந்து அவர்களின் அறிவுரைகளை செவிசாய்த்து, ஆய்விற்கு உட்படுத்தி முடிவு செய்து அருளைப் பெறுவோம். இத் திருமூலமந்திரத்தின் பொருளைக் கவனிப்போம். மரணம் அடைந்த உடன் இந்த உடம்பு இன்னொரு உடம்பில் புகுந்து மற்றொரு பிறவி எடுக்காமல், அதாவது பிறந்து பிறந்து இறக்காமல், பேரின்பம் அடையச்செய்யும் வழியினைப் பாருங்கள் என்கிறார். இந்தப்பிறவியைப் பெற்றதற்கான காரணத்தை எண்ணிப்பார்த்தாலே இறை அருள் கைகூடும் என்கிறார். அதாவது அப்படி எண்ணிப்பார்க்கும்போது, அறிவு சிந்திக்க ஆரம்பித்து பிறந்த நோக்கத்தை அறிய ஆரம்பித்துவிட்டது என்றாகிவிடுகின்றது. எனவே வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தயாரான ஆன்மாவிற்கு பேரான்மாவே துணைசெய்ய, அருள்புரிய காத்திருக்கின்றது. அவ்வாறு சிந்திக்கும்போது வினைப்பயனே பிறவிக்குக் காரணம் என்றும், அதை உணர்ந்து கொண்டால் தீவினைகளை விலக்கி வாழ்ந்தால், அப்படி வாழ்பவர் இறையருள் பெறலாம் என்கிறார்.
எனவே வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் வந்துகொண்டிருக்கும் அருளாளர்களின் ஒருமித்த உண்மை–கண்டுபிடிப்பு (கருத்து) மனிதப்பிறவியின் பயன் இறைஉணர்வு பெறுதலே என்பதேயாகும்.
மனிதப்பிறவியின் நோக்கத்தை அறிதலே பேரின்பமாக இருக்கும்போது, அதனை முடிவாக அடைய, மனதை தூய்மையாக்குதல் என்பது என்பது பேரின்பமாகத்தானே இருக்கும்!
3047 மந்திரங்களில் குறிப்பாக இந்த இரண்டு திருமந்திரங்கள் இதுவரை நினைவுகூறப்பட்டு விளக்கம் அறிந்த பயனாளிகள் யார் யார் என்பது நமக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் ஆன்ம சாதகர்கள் பலர் இந்த இரண்டு மந்திரங்களைக் கண்ணுற்றிருப்பார்கள். பயனடைந்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மந்திரங்களை நாம் அறிந்து சிந்திக்க எடுத்துக்கொண்டது யாரால் சாத்தியமாகியது? வேதாத்திரியத் தந்தை தன்னுடைய இறைஉணர்வு பெற்ற அனுபவத்தை பாடலாக இயம்பியுள்ளதால் அன்றோ சாத்தியமாகியது.

புத்தர் பெருமான் பல பொன்மொழிகளை உதிர்த்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக சொல்வது யாதெனில்
“நீங்கள் நல்லவராக இரு ங்கள்; அதுபோதும்” என்பதே. எனவே யார் எப்போது நல்லவராக இருக்க முடியும்? மனிதன் மனிதனாகப் பிறந்த பொறுப்பை உணர்ந்து, மனத்தூய்மையோடு வாழ்ந்தால்தானே நல்லவர்.

எனவே இப்போது மனம் தூய்மை அடைந்ததில் மகரிஷி அவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்வோம். முதல் படியான பிறவிப்பயனை அறிந்ததிலேயே பேரானந்தம் அடைந்து பின்னர் அதனை அடைய மனம் தூய்மை அடைந்ததனை இரண்டாம் படியாகக் கூறுகின்றார்.

‘பிறவியின் நோக்கத்தை அறிந்த போதும்,
பின் மனம் செயல் தூய்மை ஆனபோதும்,
துய்த்த பேரின்பம் எவ்வாறுரைப்பேன்!’

என்று பாடலை முடிக்க வில்லை. மனம் தூய்மை ஆன வழியினைக் (PROCESS OF PURIFICATION OF MIND) குறிப்பிடுகிறார். அதனை மகரிஷி அவர்கள்,

‘பின்அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து ஆற்றி’,

என்கின்ற இரண்டு வரிகளில் கூறுகிறார்.

பேரின்பப்படிகளில்(MAIN LADDER FOR ENJOYING ECSTASY) ஒன்றான மனம் தூய்மை அடைவதில் மற்றுமொரு துணை ஏணிப்படியினை (SUB LADDER) அறிவிக்கின்றார்.

மனம் தூய்மை அடையும் ஏணிப்படிகள்:

1) முதலில் மனம் தூய்மை அடைவதில் உள்ள எல்லையினை உணர்தல்
2) அவ் எல்லையினை அடைவதற்கு வேண்டிய அறநெறி
அ) ஒழுக்கம்
ஆ) கடமை
இ) ஈகை
3) பொறுப்புணர்வு
4) விழிப்புணர்வு
5) செயல்கள் புரிதல்
6) மனத்தூய்மையில் பேரின்பம் துய்த்தல்

மனம் தூய்மை அடைவதற்கு மேலே கூறப்பட்டுள்ள ஆறு துணைப்படிகள் அவசியமாகின்றன. ஒவ்வொரு படிகளாக ஆராய்வோம்.

1) மனம் தூய்மை அடைவதில் உள்ள எல்லையினை உணர்தல்:

எல்லை என்பதன் பொருள் என்ன இங்கே?! இங்கு எல்லை என்பதனை இலட்சியம் என்றும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக எல்லை என்றால் என்ன? ஒரு நாடு, மாநிலம் முடியும் இடம். நகரம், ஊர் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு. இப்போது மனம் தூய்மைக்கு உள்ள எல்லையினை அறிய வேண்டுமா? அல்லது மனதின் எல்லையினையே அறிய வேண்டுமா? மனதின் எல்லையினை அறிந்துவிட்டால், பின்னர் மனத்தூய்மையின் எல்லையினை அறிவது சுலபம். பொதுவாக எல்லை என்றால் ஒரு இடத்தின்(பருப்பொருள்) பரப்பைக் குறிக்கும். இடம் என்பது பருப்பொருள் வகையைச் சார்ந்தது.

ஆனால் மனமோ அரூபம். மனம் அரூபம் என்று சொல்வதைவிட அரூபா-ரூபம் என்றே சொல்லலாம். மனதிற்கு உருவமில்லை என்பதால் அது அரூபமாகிறது. ஆனால், மனதிற்கு உருவமில்லை என்பதால். அதனைக் காட்ட முடியாததாக இருந்தாலும் மனம் இல்லை எனக் கூறமுடியாது. எனவே மனம் அரூபா-ரூபம். பருப்பொருளல்லாத இத்தகைய தன்மை உள்ள மனதிற்கு எல்லை இருக்கின்றதா என்கின்ற கேள்விற்கு வருவோம்.னம் என்பது அலைதானே. எனவே அலைக்கு ஆரம்ப இடமும் உண்டு. அது போய்ச் சேரும் இடமும் உண்டு. எனவே மனதிற்கு எல்லை இருக்கின்றது. மனம் மனிதனின் உயிரிலிருந்து ஆரம்பித்து அது எல்லையில்லா அப்பாலுக்கப்பாலாய் உள்ள இறைவெளி வரும் செல்லக் கூடியது. இறைவெளிதானே மனமாக உள்ளது மனிதனிடம். மனதிற்கு எல்லை உள்ளது என்கின்ற தீர்மானத்திற்கு வருகிறோம். அடுத்தது, மனதின் தன்மையினை எல்லையாகக் கொண்டு ஆராய்ந்தாலே மனம் தூய்மை அடைவதற்கு அது கடந்த வரவேண்டிய எல்லை தெரிய வரும்.

எங்கே எல்லையுள்ளது?

மனம் தூய்மை அடையவேண்டும் என முடிவு செய்திருக்கும் அறிவும், தூய்மை அடைய இருக்கும் மனமும் இருப்பதோ ஒரிடத்திலேயேதான். எங்கே எல்லை உள்ளது? அதாவது ஆறடி உயரமுள்ள இந்த மனிதனின் உடலில்தான் இரண்டுமே உள்ளது. பின்னர் ஏன் மனம் தூய்மை அடைவதற்கு ஒரு எல்லையிருப்பதாகக் கூறுகிறார்? மனத்தூய்மை என்பது என்ன? பல்லாயிரம் பிறவிகள்தோறும், அறிவை அறியாத அறியாமையால் ஏற்பட்டுள்ள பழக்கமாகிவிட்டப் பழிச்செயல்களின் மிகஅழுத்தமானப் பதிவுகளை, பிறவியின் நோக்கத்தை தெளிவாக அறிந்த பிறகு, அவ்வேண்டாத பழக்கப்பதிவுகளை செயலிழக்கச் செய்யவேண்டியதே மனத்தூய்மை. ஆன்மீக சாதகர்களில் இருவகை உள்ளனர். ஒருவர் கருவில் திருவுடையவர். மற்றொருவர் இப்பிறவியில் கருவில் திரு இல்லாதவர். முதல் வகையினருக்கு மனம் தூய்மை அடைவதில் உள்ளை எல்லை அருகிலேயே இருக்கும். எல்லை என்பதே கிடையாது. திருமூலர் கூறும் ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்பதற்கிணங்க குருவைத் தரிசனம் செய்த ஷணத்திலிருந்தே அவர்களுக்கு இறையின் திவ்யதரிசனத்திற்கான(இறை உணர்விற்கான) திருப்பாதை திறந்துவிடப்படும்.

     ஏனெனில் ஏற்கனவே முற்பிறவிகளில் மனம் தூய்மை அடைந்து மனம் பரிபக்குவ நிலையில் இருக்கும். மற்றவருக்கு இனிமேல்தான் பிறவியின் நோக்கத்தை அறிந்து இப்பிறவியிலேயே பரிபக்குவ நிலைக்கு எழுச்சி பெற்று இறை உணர்வு பெறவேண்டும். எனினும் அவருக்கும் இப்பிறவியிலேயே இறை உணர்வு பெறுவதற்கு இயற்கை கருணையோடு செய்த ஏற்பாடுதான் தவமும், அறமும் என்கிறார் ஒர் பாடலில். இந்த இரண்டாமவருக்கு மனம் தூய்மை அடைவதில் உள்ள கால இடைவெளி அதிகமாகத் தேவையிருக்கலாம். அப்போது இப்போது இருக்கும் நிலைக்கும் அடையவேண்டிய நிலைக்கும் உள்ள இடைவெளியை எல்லை எனக் கொள்ள வேண்டும். கருவில் திருவுடையவர் என்பதற்கு ஒரு உதாரணப்புருஷர் சுவாமி விவேகானந்தர்.

எதனை வைத்து கருவில் திருஉடையவர், திருவில்லாதவர் என்று பிரிக்க முடியும்!? பரிபக்குவ நிலை வந்துவிட்டால் இருவருக்குமே குருவை தரிசித்த ஷணநேரமே போதுமானது இறையின் திவ்யதரிசனத்திற்கானத்(இறை உணர்வு) திருப்பாதை திறக்கப்படுவதற்கு. இதுவரை ‘மனம் தூய்மை அடைவதற்கான எல்லை’ யைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தோம்.

மனம் தூய்மை அடைதல் என்றால் என்ன?

அடுத்ததாக மனம் தூய்மை ஆதல் பற்றி ஆராய்வோம். மனம் தூய்மை அடைதல் என்றால் என்ன? மனம் என்ன பருப்பொருளாகவா உள்ளது? தூய்மை செய்வதற்கு? பருப்பொருளாக இருந்திருந்தால் அதனைத் தூய்மை செய்வது எளிது. மனிதன் என்பவன் யார்? எண்ணங்களின் தொகுப்பே மனிதன். MAN IS A BUNDLE OF THOUGHTS. இங்கேயும் மனம் தூய்மை என்பதன் மனவுருவை(CONCEPT OF PURIFICATION OF MIND) அறிதல் வேண்டும். அன்பும் கருணையுமான இயற்கையின்/இறையின் குழந்தைதானே ஒவ்வொரு மனிதனும். ‘தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை’, என்கின்ற பழமொழி பழமொழியாகவே இருந்துவிடாமல், தாயின் இயல்பை வெளிப்படுத்துவதே இறை உணர்வாகுமன்றோ. இறை உணர்விற்கு மற்றொரு மனவுரு (CONCEPT)கூறுகின்றார் மகரிஷி அவர்கள். ‘அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகைமையே இறைஉணர்வு’ என்கிறார். இதனை மனதில் கொண்டுதான் இரண்டொழுக்கப் பண்பாட்டினை வகுத்து பின்னாளில் தனது மாணவர்களுக்கு அறத்தை சொல்லவந்த மகரிஷி அவர்கள் தன் சொந்த இறை உணர் ஆன்மீக அனுபவித்திலே அதனை கடைபிடிக்க முயன்றிருக்கிறார் மகரிஷி அவர்கள்.

32 ஆக இருந்த அறம் வரையறுக்கப்பட்டு மூன்றிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது:

பண்டைக்காலத்தில், ஆன்மீக நெறியில் அறம் 32 வகைகளாக பிரிக்கப்பட்டிருந்ததை எளிமையாக்கி மனதில் எப்போதும் நினைவில் இருக்கும்படியாக அந்த அனைத்து 32 அறநெறிகளின் சாராம்சமாக மூன்றாக வகைப்படுத்தி அறநெறி என்பது என்ன என்பதனை திட்ட வட்டமாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகையாகும் அறநெறி மூன்று அங்கங்களாகத் தெரிந்தாலும் ஒழுக்கமே அறநெறியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். தங்கு தடையில்லாமல் வாழ்வில் ஒழுக்கம் வந்துவிட்டால் அதுவே அறஉணர்வு. ஒழுங்காற்றலே(பேரறிவு) தன்மாற்றத்தில் மனித அறிவாக மலர்ந்துள்ளதால் அது ஒழுங்குடன்தானே செயல்பட்டாக வேண்டும்?! IS IT NOT LOGIC?

ஒழுங்கு வந்துவிட்டால் அது கடமையைச் சரிவரச் செய்யும். கடமையைச் சரிவரச் செய்யாதவர் எவ்வாறு ஒழுக்கமுள்ளவராவார்? எனவே ஒழுக்கம் வந்துவிட்டால் கடமையும் வந்துவிடும்.

அடுத்தாக ஈகைக்கு வருவோம். ஈகை என்பது என்ன? இல்லாதவருக்கு தன்னால் முடிந்ததை அளிப்பது. இது ஒழுக்கத்தின்பால் சேர்ந்ததுதானே! ஒழுங்காற்றல்(பேரறிவு) அன்பும், கருணையுமானதுதானே! எனவே ஒழுக்கம் தங்கு தடையின்றி வாழ்வில் வந்துவிட்டால் கருணையின் அடிப்படையிலான ஈகையும் மலர்ந்துவிடும். எனவே அறநெறியில் சிறந்து விளங்குவதே மனத்தூய்மையாகும் என்பதனை முடிவுசெய்யவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இறைஉணர்வும், அறஉணர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இறை உணர்வில்லாமல் அறஉணர்வில்லை. அறநெறியில்லாமல் இறை உணர்வில்லை. இரண்டிலுமே இறை உணர் ஆன்ம சாதகன் இணைந்தே முன்னேறி வரவேண்டும். ‘நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்’ என்கின்றது ஆன்றோர் மொழி. உள்ளம் பெரும் கோவில் என்கிறார் திருமூலர். மனித சமுதாயாத்திற்கு என்ன தேவை? மனித சமுதாயம் என்கின்ற மாமரத்தில் அறஉணர்வு மொட்டுக்கள் பெரும்பாலானக் கிளைகளில் மொட்டாகவே இருந்து மலராமலேயே கருகிவிடுகின்றதே?
இப்படியிருக்கும் நிலையில் மனித சமுதாயம், தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க எவ்வாறு முடியும்? பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியாத நிலை பெரும் கவலையை அளிக்கின்றது உலகநல விரும்பிகளுக்கும், உலகநலத் தொண்டர்களுக்கும். இருப்பினும் பரிணாமம் பூர்த்தியாக, ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதால், எண்ணத்தை ‘வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!’ என்கின்ற தாரக மந்திரத்தின் வாயிலாக பயன்படுத்தி வருகிறார்கள். சமுதாயம் என்கின்ற மாமரத்தில் மறைந்துள்ள அறநெறிமொட்டுக்கள் மலர்ந்தால்தானே பிஞ்சாகி, காயாகி, கனியாகி இனிப்பான அமைதிக்கனியைச் சுவைக்க முடியும்? இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(31-08-2016-புதன்)

இன்றைய விருந்தின் சாராம்சம் என்ன?

1) பேரின்ப ஏணிப்படிகளில் முதல் படி, பிறவிப்பயன் இறை உணர்வு பெறுதல்தான் என்பதனை உறுதி செய்த பிறகு,
2) இரண்டாவது படியில் ஏறிவருவதற்கு தகுதி படைத்துக்கொள்வதற்கு மனம் தூய்மை அடைதலே என்றும் அறிந்துகொண்டோம்.
3) மனம் தூய்மை அடைதலுக்கு அறம் அவசியம் என்றும் உணர்ந்து கொண்டோம்.
4) அந்த அறத்தின் உச்சத்திற்கு செல்ல துணை ஏணியுள்ளது என்பதனையும்,
5) அவற்றின் ஒவ்வொரு படியான ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவற்றின் அவசியத்தையும் அறிந்துகொண்டோம்.
இனி அடுத்த விருந்தில் மனம் தூய்மை அடைய அறம் காப்பதில் உள்ள பொறுப்பினையும், அதற்கு வேண்டிய விழிப்புணர்வு, செயல்கள் புரிதல் பற்றியும் அறிவோம்.

            வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.