219-பிறவிப் பயனை நல்கும்! 3/?

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

பிறவிப் பயனை நல்கும்! 3/?

அறிவிற்கு விருந்து—219

21-08-2016—ஞாயிறு

 peeRu_uNmaipporuLuNarthal

பிறவிப்பயன் என்ன என்பதனை அருளாளர்களின் துணையுடன் உறுதி செய்துவருகிறோம். இன்றைய விருந்தில் மகரிஷி அவர்கள் அருளிய ‘மலரே மலரே’ எனத்துவங்கும் பாடலின் கடைசி இரண்டு வரிகளான

‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

என்ன அறிவுறுத்துகின்றது என்பதனைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்வது என்பது உண்மைப் பொருள் உணர்ந்து வாழ்தலேயாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் உண்மைப்பொருள் உணர்ந்து வாழ்தல் என்பதனை பேறாகக் கருதுகிறார். இந்தப் பேற்றினைப் பெற்றுவிட்டால் அதுவே மனிதப் பிறவி எடுத்ததன் பயனாகவும் கூறுகிறார்,

உண்மைப் பொருள் என்றால் என்ன?

உண்மைப் பொருள் என்கின்றபோதே பொய்ப் பொருள் உள்ளதென தெரிகின்றது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறாரே திருவள்ளுவர். காண்கின்ற பொருட்களெல்லாம் உண்மைப் பொருட்களல்ல. அவையெல்லாம் மாறக்கூடியவை. இன்றிருக்கும், நாளை இல்லாமல் போகும். ஆனால் இவற்றிற்கெல்லாம் மூலமான என்றும் அழியாத பொருள்தான் மெய்ப்பொருள் எனப்படுகின்றது. அந்த மூலப்பொருள் எவ்வாறு இருக்கும்? பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அது அணுக்களால் ஆனது. அணுக்கள் புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தற்சுழற்சி உடைய துகள்களால் ஆனது. ஒருவேளை இப்பிரபஞ்சமே இயக்கமற்று விடுகின்றது என வைத்துக்கொண்டால். என்னவாகும்? தற்சுழற்சி உடையவைகள் நின்று விடும். நின்று விட்டால் எஞ்சியிருப்பது வெளியே. அந்த வெளி என்றும் இருப்பது. அந்த வெளியிலிருந்துதான் துகள்கள் தோன்றின. பின்னர் பஞ்சபூதங்கள் தோன்றின. என்றும் அழியாத அந்த வெளியே உண்மைப்பொருள் எனப்படுகின்றது அறிவை அறிந்த அறிஞர்களால். அந்த உண்மைப்பொருளை(Truth) ஆறாம் அறிவு அறிவதுதான் பேறு எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். உண்மைப் பொருளை அறிதலை வேறு எவ்வாறு சொல்லலாம்?

அறிவு தன்னையே அறிதல் எனலாம்:

உண்மைப் பொருளை அறிதலை அறிவு தன்னையே அறிதல் எனலாம். அறிவும் அந்த மூலப்பொருளும் ஒன்றுதான். எனவே அறிவு மெய்ப்பொருளை அறியும்போது தன்னையே அறிந்துகொள்கின்றது. எனவே இதற்கான மறு பெயர்தான் ‘அறிவு தன்னை அறிதல்(Self Realisation)’ எனப்படுகின்றது. இன்னமும் சற்று கூடுதலாக/விரிவாக விளங்கிக் கொள்ளலாம். அறிவு ஐந்தறிவு வரை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமேதான் உணர்ந்து கொண்டிருந்தது. அதற்காக ஒரறிவு சீவனிலிருந்து ஐந்தறிவு சீவன்கள் வரை ஒவ்வொரு உணர் கருவிகளாக(five senses) படிப்படியாக உருவாகி வந்தன. மனிதனாக வந்தபோது கூடுதலாக உணர்கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வித்தியாசப்படுத்தி ஆறாம் அறிவுடையவன் எனக் கூறிக்கொள்கிறான். கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் ஒரறிவை(உணர்தலை) கூடுதலாகப் பெற்றிருக்கிறான் மனிதன் எனில் அந்த கூடுதலான அறிவிற்கான உணர்தல் என்பது என்ன? ஆறாம் அறிவின் சிறப்பு சிந்திக்க முடியும். ஐந்தறிவு வரை விலங்கினங்கள் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, காந்த தன்மாற்றங்களான, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உள்ளதை உள்ளவாறே உணர்ந்து வந்தன. அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்பது என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன என்கின்ற வினாக்களை எழுப்ப ஐந்தறிவால் இயலாது. ஆனால் சிந்திக்கும் திறனுள்ள ஆறாம் அறிவு ஐந்தறிவு வரை ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்ததோடு, மனிதனிடம் வரும்போது ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்களின் வழியாக சிந்தனை மலர ஆரம்பித்ததன் விளைவே, ‘ஐவகை நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்’ என்கின்ற வினா எழுந்து விடைகண்டதே தன்னிலை உணர்தலானது. இவ்வாறான விளக்கமும், அதற்காக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளும் வாக்கியங்களுமே இருபதாம் நூற்றாண்டில் பெருமளவிற்கு வெளிவருவதற்கானக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் உதயமான திருவேதாத்திரியமேயாகும்.

தன்னை அறிதல் என்பது பேறா? எப்படி?

இதனை விளங்கிக்கொள்ள, ‘பேறு’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும், பேறு என்பது கிடைத்தற்கரிய ஒன்றைப் பெறுவதற்காக பாக்கியம்-புண்ணியம்(good fortune) என்று பொருள். அவ்வையார் மொழிந்துள்ளது போல், மானிடராய் பிறத்தல் அரிது. மனிதராகப் பிறந்தாலும் ஞானம் அடைய விரும்புவது அரிது என்கிறாள். அவ்வையார் என்றோ சொன்னது இது. ஆனாலும் 1911 வரை இந்நிலை தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் இப்போது ஞானம் என்பது என்ன என்று தெளிவாக விளக்கப்பட்டு வருகின்றது. ‘பொதுவாக ஞானம் என்றால் தெளிவு என்று பொருள். சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்பதாகும்.’ என்கின்றது திருவேதாத்திரியம். அறிவை அறிந்த தெளிவு என்பது அறிவு தன்னை அறிதல் தானே!? ஆகவே ஞானம் அடைய-அறிவு தன்னை அறிதல் என்பது அரிதாக உள்ள குடும்பத்தில், சமுதாயத்தில் தன்னை அறிதல்- உண்மைப் பொருள் உணர்தல் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாகத்தானே கருதமுடியும்?!

உண்மைப் பொருளை உணர்தலே-தன்னை அறிதலே பிறவிப்பயனா?

பயன் என்பது என்ன? ஒரு செயலின் விளைவு பயன் எனப்படும். அந்த விளைவு நன்மையாக இருந்தால் மகிழ்ச்சி. ஒரு செயலின் நன்மை விளைவை மனிதன் பயன் எனக் கொள்ளலாம். பிறவிப்பயன் என்கின்ற சொல்லை இரண்டாகப் பிரித்து விளக்கம் காணவேண்டும். அப்படியானால் ‘பிறவி’ மற்றும் ‘பயன்’ என்று பிரித்தால் பிறவி என்கின்ற செயலால் பயன் ஏற்படுகின்றது என்பது விளங்கும். மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்வுகளில்(செயல்கள்) ஒன்று. இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்றான பிறவிக்கு ஏற்படும் நல்விளைவுகளே பயன் எனப்படுகின்றது.

மனிதர்கள் வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்போதுமே இன்பம் உள்ளதா? துன்பமும் கலந்துதானே உள்ளது. மனிதனுக்கு மனிதன் வாழ்க்கையில் நடக்கும் இன்பம்-துன்பம் விகிதாசாரத்தில் வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கும். சிலருக்கு பெரும்பாலும் துன்பம் அதிகமாக இருந்து, இன்பம் குறைவாக இருக்கும். சிலருக்கு துன்பமேதான் வாழ்க்கையாக அமைகின்றது. பயன் என்றால் செயலின் விளைவு என்று சற்று முன்னர்தான் வரையறுத்துள்ளோம். விளைவாகிய இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மூலம் செயல்தான். பிறவிப்பயன் என்பதில் பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி(செயல்) என்று பார்த்தோம். இயற்கையின் நிகழ்ச்சியாகிய மனிதப்பிறவியில் விளைவாகிய இன்பம்/துன்பம் வருவதற்கு யார் காரணம்? மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி என்பதால் இன்ப-துன்பம் வருவதற்கு பிறவியாகிய இயற்கையின் செயல்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? இயற்கை வேறு மனிதன் வேறா? அல்லவே! இயற்கையேதான் மனிதனாக வந்துள்ளது. இப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த திறன் எங்கிருந்து வந்தது? இயற்கை ஆறாம் அறிவாக மனிதனிடம் இயங்கிக் கொண்டிருப்பதால்தானே சிந்திக்க முடிகின்றது.!

மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்தவன் ஆறாம் அறிவைக் கொண்டு/ஆறாம் அறிவை இயக்கி வாழவேண்டும். அவ்வாறு மனிதன் செயல்புரிந்தால்(வாழ்ந்தால்) மனிதப்பிறவிக்கான பயன் நல்விளைவுகளாக இருக்கும். நல்விளைவுகளே இன்பம் எனப்படுகின்றது. மனிதனின் செயலுக்கேற்ற விளைவுகள் உண்டு என்பது இயற்கை நீதி என்பதனை மனிதன் எப்போதும் நினைவில் கொண்டு அயராவிழிப்போடு வாழவேண்டும். எனவே ஆறாம் அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

அறிவு தன்னை உணர்தல் என்பது மனிதனிடம் உள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் நீங்கினால் அனைவருக்குமே சாத்தியம். மும்முலங்கள் நீங்கினால் விளைவு என்னவாக இருக்கும்? விளைவு இன்பமாக இருக்கும். சாதாரண மனிதனின் வாழ்வில் மும்மலங்கள் நீங்காமல் இருந்தே இன்பத்தையும் அனுபவிக்கிறான் அவனுடைய அவ்வப்போது புரிகின்ற நற்செயலைப் பொறுத்து, மும்மலங்கள் நீங்கிய நிலையில் அறிவு தன்னை உணர்ந்து கொள்ளும்போது அவ்வப்போது நற்செயலைப் புரிவது என்பது மாறி எப்போதுமே நற்செயல்கள் புரிகின்ற விழிப்பு நிலை வந்துவிடுவதால் எப்போதுமே இன்பமே. சலிப்பில்லாத இன்பம். புலன்வழி இன்பத்தில்தான் இன்பம் மிக மிக அதுவே துன்பமாக மாறிவிடும். எனவே மனிதனின் வாழ்வில் ஆறாம் அறிவிற்கேற்ப வாழ்ந்து உண்மைப்பொருளை-தன்னை அறிந்துகொள்கின்ற பேறு கிட்டும்போது அது பிறவியின் பயனாகக் கருதப்படுகின்றது. இதுவரை அவ்வையார் அரிதான மனிதப்பிறவிக்கான பயன் என்ன என்றும், மற்றும் மகரிஷி அவர்கள் மலர் வழியே மறைபொருள் விளக்கப்பாடலில் மனிதப்பிறவிக்கான பயன் தன்னை உணர்தலே என்று கூறுவதனை அறிந்து கொண்டோம்.

மகரிஷி அவர்கள் தனது 35 வது வயதில் இறை உணர்வில் தெளிவாகிவிட்டார், அதன் பிறகு ஐம்பதாவது வயதில் உலக சமுதாயத்திற்கு தன்னை உலகநலத் தொண்டனாக அர்பணித்துக் கொண்டு, சுமார் 46 வருடங்கள் அன்பர்களை சிந்திக்க வைக்கும் அருட்பணியாகிய அறிவுத் தொண்டாற்றினார். மகரிஷி அவர்கள் ஒரு முறை அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் கூறியதாவது—‘இறை உணர்வு பெறுபவர்களில் பெரும்பாலோருக்கு இறை-உணர்வு என்கின்ற அரிய நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் தற்செயலாக நடந்துவிடுகின்றது. எனவே அவர்களால் இறை உணர்வு பெற்ற அந்த பாதையை படிப்படியாக(stage by stage) பிறருக்கு உணர்த்த முடியவில்லை. ஆனால் தனக்கு முறையாக (through Process) இயற்கை/இறை அதனை உணர்த்தியது. அதனால்தான் தன்னால் பிறருக்கு இறைஉணர்வு பெறும் வழியை முறையாக தெரிவிக்க முடிந்தது’ என்றார். அப்படி உருவாகியதுதான் ‘மனவளக்கலை’ எனும் அரிய வாழ்வியல் கலை என்று நாம் அறிகிறோம்.

மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்த்தைகளால் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கவனிப்போம். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலின் கடைசி சரணத்தைக் கவனிப்போம்.

உன்னிலே நானடங்க, என்னுளே நீ விளங்க,
உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்,
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?
எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.’

                                                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இப்பாடலில் அவரது தெய்வீக அனுபவத்தை இயம்புகிறார். எனவே இச்சரணத்தின் உட்பொருளை ஒவ்வொன்றாக(list out) அறிவோம்.

1) எடுத்த மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததை பேறாகக் கருதுகிறார்.

2) தூய்மை அடைந்ததால் மனிதப்பிறப்பு முழுமை அடைந்தது என அறியப்படுகின்றது.

3) தூய்மை பெறுவது என்பது மனிதனின் முயற்சியால்தான் என்றிருந்தாலும் அதாவது மனிதனது செயல்களால்தான் என்றிருந்தாலும் விளைவு இறைவனது கருணையினால் அன்றோ! இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற்றதாகக் கூறுகிறார். இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற முடிந்தது அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று ஒர் அருளாளா் தன் அனுபவத்தைக் கூறுகின்றார்.

4) மகரிஷி அவர்கள் பேரறிவுடன் தன் அறிவை முழுமையாக இணைத்ததால், இறையே அவருள் விளங்கியதாகக் கூறுகிறார். ‘விளங்க’ என்றால் சிறப்பாக அமைதல் என்று பொருள். ஆகவே பேரறிவு மகரிஷி அவர்களை ஆட்கொண்டு விட்டது என்று சொல்வதற்குமேல் வேறு என்ன பொருள் கொள்ள முடியும் ‘என்னுளே நீ விளங்க’ என்பதற்கு?

மலரே நீ யார்? என்கின்ற பாடலில் உண்மைப் பொருளை உணர்தல் பேறாகக்கருதியும், அதுவே பிறவிப்பயனாகவும் கூறுகிறார். இப்பாடலில் மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததனை பேறாகக் கருதுகிறார். இரண்டு பாடல்களிலும் பேறு என்பதனைக் குறிப்பிடுகிறார். இதனை சமன்பாடுகளை (Equations) ஏற்படுத்தி ஆராய்வோம்.

உண்மைப்பொருள் உணர்தல்=பேறு   ….. சமன்பாடு-1

உள்ளம் தூய்மை பெறுதல்      =பேறு   …..சமன்பாடு -2

உண்மைப்பொருள் உணர்கின்ற பேறும், உள்ளம் தூய்மை அடைகின்ற பேறும், பேற்றை அனுபவிக்கக்கூடிய மனதை பொருத்த வரை ஒன்றாகத்தான் இருக்க முடியும். எப்போதும் நிறைவில்லாத மனிதமனம் மனநிறைவிற்கு வந்துவிட்டது, மனம் நிறைவிற்கு வந்துவிட்டதால்தான் ‘இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்றது அவரது மனசாட்சி.

சமன்பாடுகளிலிருந்து அறிய வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. இரண்டு பேறுகளும் ஒன்று என்பதால் உண்மைப்பொருள் உணர்தலும், உள்ளம் தூய்மை அடைதலும் வேறு வேறல்ல. ஒன்றேதான்.

ஆகவே இரண்டு சமன்பாடுகளை சேர்த்துப் பார்த்தால், கீழ்கண்ட புதிய முடிவு கிடைக்கிறது.

உண்மைப்பொருள் உணர்தல் =  உள்ளம் தூய்மை பெறுதல்  = பேறு  

இதுதான் வேதாத்திரிய சுத்த அத்வைத ஆன்மீகமான மனவளக்கலையின் நான்கு அங்கங்களான தவம், தற்சோதனை, குணநலப்பேறு, முழுமைப்பேறு என்பதன் முடிவான முடிவு(end result).

உள்ளம் தூய்மை அடைதலும். இன்னும் வேறென்ன வேண்டும், இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்ற மனநிறைவை இப்பாடலிலும், வேறோரு பாடலில் ‘concept of Realisation’  ஐக் கூறுகிறார். (இறைஉணர்வின் பொதுக்கொள்கை, மனவுரு, மனத்தோற்றம்). அப்பாடலை அடுத்த அறிவிற்கு விருந்தில் நினைவு கூர்வோம். அது என்ன பாடல் என்பதனை அன்பர்களும் யோசித்து மௌன ஊடகமான எண்ணத்தைப் பயன்படுத்தலாமே அடுத்து அறிவிற்கு விருந்து(24-08-2016-புதன்) சிறப்பாக அமைய. வாழ்க வளமுடன்

இன்றைய சிந்தனையின் சுருக்கம்:
‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

என்கின்ற பாடல் வரிகளை எடுத்து ஆராய்ந்தோம். அதன் பயனாக உணர்ந்து கொண்டதை சுருக்கமாக பார்ப்போம்.

1) உண்மைப் பொருள் என்பது அறிவு தன்னையே அறிதல் என்றும்,
2) உண்மைப் பொருளை உணர்தலே பேறு என்றும்,
3) அப்படியானால் தன்னையே அறிதலும் பேறு என்றும்,
4) தன்னை அறியும் பேறு எப்போது சாத்தியம் என்றும்
அறிந்து கொண்டோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளர்க அறிவுச்செல்வம்.