பழக்கமும் விளக்கமும்-4/?

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

பழக்கமும் விளக்கமும்-4/?

 
அறிவிற்கு விருந்து—234

12-10-2016—புதன்.

வாழ்க வளமுடன்.

இப்போது அழுகணிச்சித்தரின் பாடலுக்கு மகரிஷி அவர்கள் கூறியுள்ள விளக்கத்தை அறிய இருப்பதால் மீண்டும் அப்பாடலை நினைவு கூர்வோம்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவில் போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ?
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிரப்பாரேனோ?”

. . . அழுகணிச்சித்தர்.

“கண்ணம்மா” என்பதனை அறிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.

‘காட்டானை’ என்பதற்கு ‘காட்டுயானை’ என்பது பொருளல்ல. ‘காட்டானை’ என்கின்ற சொல் ‘காட்டமாட்டான்’ என்கின்ற சொல்லில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். அதாவது இறைவன் இருக்கிறான். மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அவன் இருக்கவில்லை என்கிறார். மேலும் விளக்குகிறார். அதாவது புலன்களாலே பார்க்கும் அளவிற்கு அவன் இருக்கவில்லை என்று பொருள்.

காட்டான் = அரூபியாக உள்ள அறிவு.

“ஐ” மேலேறி = ஐந்து புலன் உணர்ச்ச்சிகளையும் தாண்டி,

கடைத்தெருவில் போகையிலே = கெட்டிப்பொருள், நீர், நெருப்பு, காற்று. விண் ஆகிய ஐம்பூதங்களிலிருந்து எழுச்சி பெறக்கூடிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் அல்லது உருவமாக ஐந்து நிகழ்ச்சிகளையும் தாண்டிக் கடைசியிலே உள்ளது எது என வினவுகிறார். பிரம்மம்; சுத்த வெளி என்கிறார், அதுதான் கடைசி நிலை. கடைநிலை என்றால் கடைசி நிலை என்று பொருள்.

அந்தக் காலத்தில் கிராமங்களிலே மற்ற எல்லாத் தெருக்களையும் தாண்டி கடைசியிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அவரவர்களுக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பொருட்களை விற்றுக்கொள்வதற்காகவும் கிராமங்களிலே ஒரு தெரு அமைப்பார்களாம். அது கடைசியிலே இருப்பதினால் கடைத் தெரு என்று பெயர்.

பிரம்மத்தினையும் ‘கடை’ என்று சொல்வது அறிஞர்களின் வழக்கு என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே இராமலிங்கர் கூறியதனையும் நினைவு கூற விரும்பி, ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை.’ என்று சொன்னதை நமக்கு நினைவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.

அந்தக் ‘கடை’ என்று சொல்லக் கூடிய மறைபொருள் என்பது ‘பிரம்மம்’. பிரம்மத்தின் நிலையை நல்ல முறையிலே தெளிவாக விரித்துக் கூறிவிட்டேன்; எடுத்துக் காட்டிவிட்டேன்; ஆனால் அதை விளங்கிக் கொண்டு பின்பற்ற யாருமே வரவில்லை!’ என்று வள்ளலார் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்கின்ற வள்ளாலாரின் வரிகள் சொல்வதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

இறைஉணர் ஆன்மீகப்பயிற்சி என்பது என்ன?

பிரம்மத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். அறிவு தனது முழுமையை நோக்கிய பயணம். ஐந்தறிவு வரை உயிரினங்கள் அனுபவித்தது என்ன? காந்த தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை ஐந்து புலன்களின் வாயிலாக அனுபவித்ததேயாகும். அப்படியானால் ஆறாம் அறிவாக மனிதன் வந்தபோது அவன் அனுபவிக்க வேண்டியது என்ன? வாழ்வில் ஐந்து புலன்களின் வழியாக அனுபவிப்பதோடு நின்றுவிடாமல், அதனையும் தாண்டி,

பிரத்யேகமாக புலன் ஏதும் உருவாகாமல், பேரறிவிலிருந்து வந்துள்ள மனிதஅறிவு

அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள் என்பது என்ன,

அந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன,

அந்நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்

என்பதற்கான விளக்கத்தினை அறியவேண்டும்.

அவ்விளக்கங்களை அறியும்போது முடிவாக இப்பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதையும், அதுவே பிரம்மம்-கடவுள் என்று கூறப்படுகின்றது என்பதும் அறியப்படும்.

இந்தக் கருத்தினைத்தான் திருவள்ளுவர்,

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”

என்கின்ற குறளின் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்துள்ளார். அதாவது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன உருவான வகையை தெரிந்துகொள்ள வேண்டும். ஐந்தின் வகை தெரியும்போது பிரம்மமே தான் எல்லாமாக ஆகியுள்ளது என்பது அறியப்படும். அதாவது இறைஉணர்வினைப் பெறமுடியும். இதற்காகப் பிறந்தவன்தான் மனிதன் என்கிறார் திருவள்ளுவர். அப்படி இல்லாவிடில் உயிரினப்பரிணாமத்தில் வேறு எதற்காக மனித இனம் தோன்றிற்று?

எனவே வாழ்க்கைப் பயணம் என்பதே பிரம்மத்தை நோக்கிய பயணமேதான்! இந்த உண்மையினை அறியாமல்தான் மனித குலம் உள்ளது. இதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து திருவேதாத்திரியம் எடுத்துக் கூறி வருகின்றது.

எனவே

1) ‘காட்டான் ‘ஐ’ மேலேறி கடைத்தெருவில் போகையிலே’ என்பது அந்த பிரம்மத்தை நாடி அங்கேயே போய் அடக்கம் பெற்று இந்தத் தன்முனைப்பை நீக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இறைநிலைக்குப் போய் நிலைத்து வரவேண்டும் என்று போகும்போது;

2) நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்ரோ’ என்றால் இந்த உலகிலே வாழ்ந்து பதிவுகளைக் கொண்டு, அந்த எண்ணங்களெல்லாம், அந்தப் பதிவுகளெல்லாம் இருக்கின்றனவே, அவைகளெல்லாம், ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போலல்லாவா இருக்கின்றது என பாடலில் அழுகணிச்சித்தர் தெரிவிக்கிறார் என்கிறார் மகரிஷி அவர்கள். அழுகணிச்சித்தரின் இந்த அனுபவத்தை இயற்கை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகத் தெரிவித்து சிந்திக்க வைப்பது என்ன?

அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல.

அஞ்ஞானிக்கு மட்டும் பழக்கப்பதிவுகள் உண்டு என்பதல்ல. ஞானிக்கும் பழக்கப்பதிவுள் உண்டு. எனவே ஞானி பழக்கப்பதிவை வென்று விளக்கப்பதிவில் வாழ்வதுபோல், ஒவ்வொரு அஞ்ஞானியும் பழக்கப்பதிவை வென்று விளக்கத்தில் வாழவேண்டும். ‘Every Saint has a past and every sinner has a future.’ இங்கே மற்றொன்றை அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

முந்தைய பழக்கப்பதிவுகள் ஒன்று சேர்ந்து ‘ஓகோ? நீ எங்களையெல்லாம் விட்டு தாண்டிப் போய்விட முடியுமா?’ என்று எள்ளி நகையாடுவது போன்று அழுகணிச்சித்தருக்கு இருந்ததாக அவரே பாடலின் வாயிலாகத் தெரிவிக்கிறார். இதுபோன்று அவருக்கு மட்டுமா இத்தகைய அனுபவம்/உணர்வு ஏற்படும்? திருந்த வேண்டும் என்கின்ற ஆழ்மன எண்ணத்தோடு ஆன்மீகப் பயிற்சியினைச் செய்கின்ற அனைவருக்கும் ஏற்படும், ஏற்படவேண்டும். அது என்ன என்று அறிவோம்.  விளக்கத்திற்கு முன்னர் பழகிய பழக்கப்பதிவுகள் எவ்வாறு விளக்கப்பதிவுகளில் மனிதன் வாழ்வதற்கு இடையூறுகள் செய்கின்றன என்று பார்ப்போம்.

2.1. விளக்கம் பெற்றதும், அதுவரை சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தவன் ‘சூதாட்டக் கூட்டத்திலிருந்து விலகிவிடுவோம்’ எனத் தீர்மானித்தாலும், அவனது சூதாட்ட சகாக்கள் சும்மா இராமல், அவனை நல்வழியில் போகவிடாமல் ‘இவன் யோக்கியனாகப்போகிறானாம். என்று எள்ளி நகையாடி அவனை மீ்ண்டும் சூதாட்டத்தில் ஈடுபடத்தூண்டச் செய்யும் நிகழ்வு போலல்லவா உள்ளது அழுகணிச்சித்தரின் இறைவனை அறியமுயற்சிக்கும்போது உண்டாகின்ற பழையபழக்கப்பதிவுகளின் இடையூறுகள்.

2.2. இதே போன்றுதான் புகைபிடிப்பவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் அப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என நினைத்தாலும் பழைய பழக்கப்பதிவுகள் இடையூறுகள் செய்வதும்  பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்பதனைக் கவனிக்க வேண்டும்.

2.3. இவர்கள் நிலை மட்டும் இவ்வாறு இல்லை. மற்றவர்களின் நிலையும் இது போன்றதுதான். காரணம் எந்த செயலானாலும் அது பதிந்து பழக்கப்பதிவாகிவிடுகின்றது. எனவே பேராசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணப்பதிவுகளில் சிக்கித்தவிக்கின்றவர்கள் நிலையும் இதுபோன்றதுதான்.

2.4. மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதுபோல் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்தழுந்திப் புண்ணாகி வருந்துவோர்களின் நிலையும்  பழக்கப்பதிவுகளின் ஆதிக்கம் செலுத்துவதுதான்.

விளக்கம் பெற்று விளக்க வழியே வாழ வேண்டும்  என முயற்சி செய்பவர்கள் யாராக இருப்பினும், பழக்கப்பதிவுகளின் இடையூறுகள் இருந்தால் அவற்றை அழுகணிச்சித்தரை நினைவில் கொண்டு அவர் மன உறுதியோடு எதிர்த்துப் போராடியதுபோல், போராடித்தான் விளக்கப்பதிவில் வாழவேண்டும்.

விளக்கத்தை விட முடியவில்லை. ஏன்?

ஏனெனில் பரிணாமத்தில் விளக்கம் பெறுகின்ற நிலைக்கு அறிவு வரும்போதுதான், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் விளக்கமாக கிடைக்க ஆரம்பிக்கும். அறிவு என்பதே அறிவதற்காகத்தானே உள்ளது. ஆகவே அறிகின்ற நிலைக்கு வந்த அறிவிற்கு விளக்கத்தைவிட்டு விட மனமுமில்லை; அதே நேரத்தில் இதுவரையுள்ள பழக்கப்பதிவுகளாகிய பேய்களின் ஆதிக்கமோ மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. வள்ளலார் ‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்றும் மதமான(செருக்கு, ஆணவம்) பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுவதை நினைவு கொள்வோம்.

கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்ய முடியாது:

எந்த தரப்பினராக இருந்தாலும் தீயபழக்கப்பதிவுகளால் துன்பமே என்பதனை கவனத்தில் கொண்டு பழக்கப்பதிவின் போராட்டத்தில் வெற்றி பெற்றிடவேண்டும். அதனால்தான் ‘ஒழுக்கப்பழக்க அறிவு’, எனும் பாடத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே நற்பழக்கம் என்பது குழந்தைகளிடம் கொண்டு வருவது எளிது என பாடல் வாயிலாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

நற்பழக்கம்(22.12.1959)

பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;
பழக்கத்தை, வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.
பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைவிக்கும் எளிது.”

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால் அங்கிருந்தே ஒழுக்கவியல் பாடத்தைத் தொடங்க வேண்டும். ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது’ என்று பழமொழி எச்சரிப்பதால் ஒழுக்கம் தவறினால், ஒழுக்கவாழ்வு வாழ ஒழுங்குக்கு ஈனம் விளைவித்த ஒழுங்கீனப்பதிவுகளே ஒழுக்க விளக்கப்பதிவுகளை எளிதில் வெற்றி கொள்ளும். இருந்தாலும் ஒழுக்க வாழ்வைத்தானே வாழ்ந்தாக வேண்டும். அதனால்தான் ஒழுக்கப்பழக்க அறிவை பாடமாகச்சேர்க்கச் சொல்கிறார். இதனையே சுவாமி விவேகானந்தர் ‘Education is the manifestation of perfection already present in man’ என்கிறார்.

education-swami-vevekananda

3. ‘நாட்டார் நமை மறித்து நகைபுரியப் பார்த்தாலும்’ என்பது அப்படியெல்லாம் எத்தனையோ கோடி எண்ணங்கள்(பழக்கப்பதிவுகள்) குறுக்கிட்டபோதிலும் மன உறுதியோடு, பயிற்சியினாலே,

4. ‘காட்டானை மேலேறிக் கண்குளிரப்பாரேனோ’ என்றால் ஐம்புலன் அனுபவப்பதிவுகளையும் தாண்டி மேல் ஏறி கடைசியிலே உள்ள பிரம்மத்தை, அந்த அரூபமான நிலையிலே உள்ள பிரம்மத்தைக் கண்குளிர, நான் அறிவு பூர்வமாக, மனநிறைவு பெறுமளவிற்குப் பார்க்க மாட்டேனோ, உணர மாட்டேனோ’ என்று தனது உறுதியினை சமுதாயத்திற்குத் தெரிவிக்கிறார் அழுகணிச்சித்தர்
என்பது செய்யுளின் சாரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

இதுவரை அழுகணிச்சித்தரின் பழக்கப்பதிவிற்கும் விளக்கப்பதிவிற்கும் ஏற்பட்ட போராட்ட அனுபவத்தை அழுகணிச்சித்தர் அருளிய பாடலிருந்து, மகரிஷி அவர்கள் கூற அறிந்து கொண்டோம்.

அஞ்ஞானிக்குமட்டுமே பழக்கப்பதிவுகள் உண்டு என்பதில்லை; ஞானிக்கும் பழக்கப்பதிவு இருந்து, அதனை விளக்கப்பதிவால் வென்றுதான் ஞானியாகிறார் என்று அறிந்து கொண்டோம். அறிவிற்கு முழுமையான தெளிவு ஏற்பட்டதுமே(ENLIGHTENMENT) பழக்கப்பதிவுகளாகிய தீயவினைப்பதிவுகள் செயலிழந்துவிடும். முழுமையாக வினைப்பதிவுகள் செயலிழந்த பிறகுதான் தெளிவு/இறை உணர்வு ஏற்படும் என்பதில்லை. பெற்ற தெளிவின் அடிப்படையில் இறை உணர்வு என்பது எதிர்பார்க்காத சமயங்களிலும் நடைபெறும். எதிர்பார்த்து நடப்பதன்று இறை உணர்வு. ஆனால் இறைஉணர்வு ஏற்பட்டதும் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வந்த வினைகள் முழுவதுமாக செயலிழந்து விடுகின்றன.

இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்  (16-10-16-ஞாயிறு) பழக்கப்பதிவுகள் வலிமை உடையதாக இருந்தாலும் இப்பிறவியில் ஏற்பட்டுள்ள விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவினை வெற்றி கொள்ளும் அளவிற்கு எப்போது வலிமை பெறும் என்பதனை அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு