பழக்கமும் விளக்கமும்-3/?

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

                                                             அறிவிற்கு விருந்து—233

09-10-2016—ஞாயிறு.

ஏன் விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளிடம் தோற்றுப் போகின்றன?

மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர். ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையவைகளாக உள்ளன. ஆதிமனிதன் பிறக்கும்போது அவனுக்கு சிந்தனை ஆற்றல் இல்லை. மனிதஇன பரிணாமத்தில் சிந்தனை ஆற்றல் பெற்ற பிறகு ஏற்பட்டுள்ள தலைமுறைகளைக் கணக்கில் கொண்டு, ஆதிமனிதன் தோன்றி, சிந்தனை ஆற்றல் வளரும் வரையான காலத்தோடு ஒப்பிடும்போது, அது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகவேதான் உள்ளது. ஆகவே இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் விளக்கப்பதிவுகளைவிட பழக்கப்பதிவுகளே வலிமை உடையவைகளாகத்தான் இருக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

ffc-124-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-1-2-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95

மேலும் ஒரு குழந்தை பிறந்தது முதல் விளக்கப்பதிவுகளை வெளிக் கொண்டுவர வாய்ப்பே இல்லை. புலன்களின் மூலம் உடல் உறுப்புகளின் மூலம் பழக்கப்பதிவுகள்தான் செயல்படுகின்றன. பன்னிரண்டு வயதிற்குமேல்தான் விளக்கப்பதிவுகள் சிறிது சிறிதாக செயல்படத் தொடங்குகின்றன.
பழக்கப்பதிவாகவோ அல்லது விளக்கப்பதிவாகவோ இருந்தாலும் அவை சீவகாந்த ஆற்றலால்தான் செயல்படமுடியும். புலன்களும் உடல் உறுப்புகளும் இயங்கும்போது அவற்றின் செல்கள் வழியாக சீவகாந்த ஆற்றல் ஓடி செல்களுடைய இணைப்புகளை சீரமைக்கின்றது. அவ்வாறு சீவகாந்த ஆற்றல் ஓடும்போது, எவ்வாறு மழைபெய்யும்போது மழைநீர் பூமியின் மீது ஓடி ஒரு வழித்தடம்(path, ஆறாக) அமைகின்றதோ அதுபோல் சீவகாந்த வழித்தடம் அமைகின்றது. எப்போது மழை பெய்தாலும். மழைநீர் முன்பு ஓடிய பாதையிலேயே ஓடும். அதுபோல் உடலில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் சீவகாந்தம் மீண்டும் ஓடும்போது முன் ஓடிய பாதையிலேயே ஓடும். அப்போது அதே வேலையைச் செய்ய மனதுக்கு செயலில் ஆர்வமோ, உணர்ச்சி வேகமோ அல்லது தடையற்ற கட்டாயமோ உண்டாகி, செயலாவிடுகின்றது.

பிரம்மப்பிரயத்தனம்(untiring effort) வேண்டும்:
எதற்கு பிரம்மப்பிரயத்தனம் தேவை?
பிரயத்தனம் என்றால் என்ன? ஒன்றைச் செய்வதற்காக சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி.

‘பிரம்மப்பிரயத்தனம்’ என்றால் என்ன? ஒரு சிலருக்கு இவ்வார்த்தை பரிச்சயமானதாக இருக்கலாம். பிரம்மத்தை அறிவதற்காக பிரயத்தனம் செய்வது (மேற்கொள்ளும் முயற்சி) பிரம்மப்பிரயத்தனம். முயற்சியின் அளவே ஞானம் என்பார் அருட்தந்தை அவர்கள்.
பொதுவாகவும் ‘பிரம்மப்பிரயத்தனம்’ என்கின்ற வார்த்தைப் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கலாம். அப்போது அதன் பொருள் என்ன? கடும் முயற்சியின் தன்மையைப் பற்றி விவரிக்கும்போது ‘பிரம்மப்பிரயத்தனம்’ என்கின்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஏன்? ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கின்ற முறையில் மேற்கொள்ளும் கடும் முயற்சி பிரம்மப்பிரயத்தனம் என்கின்ற சொல்லால் விவரிக்கப்படுகின்றது. மனிதன் நூற்றுக் கணக்கில் செயல்கள் புரிகிறான் வாழ்நாளில். அவற்றில் கடும்முயற்சி செய்து வெற்றி பெற வேண்டிய ஒரு காரியம் உள்ளது என்றால் அது பிரம்மத்தை உணர்வது. பிரயத்தனம்(கடும்முயற்சி) செய்து தான் பிரம்மத்தை உணரவேண்டியுள்ளது. காரணம் பல்லாயிரம் பிறவிகளாக செய்துள்ள, பிரம்மத்தை உணர்வதற்கு எதிர்மறைச்செயல் பதிவுகள் வலிமையானவை என்பதால் பிரம்மத்தை உணர விளக்கப்பதிவு கடும்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையன.(எனினும் மனவளக்கலையால் பிரம்மத்தை உணர்வதற்கான கடும் முயற்சி எளிமையாக்கப்பட்டு வாழ்வியலாக மாற்றப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மனக்கவலைக்கும், துன்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பிரம்மத்தை உணர்ந்தே ஆக வேண்டும்.)

எனவே எந்த ஒரு புதிய பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நுண்மாண்நுழைபுலனோடு அச்செயல் புரிய இறங்க வேண்டும். நுண்மாண்நுழைபுலன் அறிவு இல்லாமல் ஒரு செயலை செய்து, பழக்கமாகி, ஒரு வேளை அந்தப் பழக்கம் நல்லதல்ல என பின்னர் தெரிய வரும்போது அதனைப் போக்கிக் கொள்வதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். எனவே பழைய வேண்டாப் பழக்கப்பதிவைப் போக்கிக் கொள்ள பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். வேண்டாதப் பழக்கத்தை எதற்காக போக்க வேண்டும்? முதல் காரணம் அதனால் வருகின்ற துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அடுத்த காரணம், துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற பிரம்மத்தை நோக்கிய பயணத்தில் உள்ள தடைக்கற்களே வேண்டாத பழைய பழக்கப்பதிவுகள்.

பிரம்மத்தை உணர அல்லவைகளை நீக்க பிரயத்தனம்(கடுமையான முயற்சிகள்) செய்ய வேண்டியிருப்பதால் அந்த கடுமையான முயற்சி பிரம்மப்பிரயத்தனம்தானே! இங்கே பிரம்மத்தை உணர்வதற்காக இந்தச் செயல் அமைவதால் இச்செயல் பிரம்மப்பிரயத்தனம் எனப்படும். பிரம்மத்தை உணர எடுக்கும் கடுமையான முயற்சியின் அளவை வைத்து உலகியல் வாழ்க்கையில் ஒரு கடினமாக செயலை செய்து முடிப்பதற்குத் தேவையான தொடர்விடாமுயற்சி பிரம்மப்பிரயத்தனம் எனப்படுகின்றது.

பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவுகளை செயலாக்கவிடாமல் செய்கின்ற அனுபவம்:

இந்த அனுபவ உணர்வு யாருக்கு ஏற்படும்? இந்த அனுபவ உணர்வு ஆழ்மன – ஏக்கத்தோடு, ‘விளங்கிய வழியே’ வாழ விரும்பும் அனைவருக்கும் (அவர்கள் ஆன்மீகப்பயிற்சியாளர்களாக இருக்கலாம் அல்லது ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம்) ஏற்படும். ஏற்படவேண்டும். இது போன்ற அனுபவத்தை உணர்ந்த ஒர் அருளாளர் சமுதாயத்திற்கு உதவட்டும் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாடலாக இயற்றியுள்ளார். அந்த அருளாளர்தான் அழுகணிச்சித்தர். அந்த அருளாளரை வணங்கி அருளாரின் அனுபவத்தை, ‘அருளாளர்கள் அனைவரையும் மானசீகக் குருவாக’ வணங்கிய நம் குருதேவர் வழியாக அறிந்து கொள்வோம்.
அழுகணிச்சித்தர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பாடல் வழியாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவில் போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ?
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி, என் கண்ணம்மா, கண் குளிரப்பாரேனோ?”

. . . அழுகணிச்சித்தர்.

பின்னாளில் அருளாளராகிய  அழுகணிச்சித்தருக்கேஆரம்பத்தில் பழக்கப் பதிவுகள்(ஐம்புலன்களின்- அனுபவப்பதிவுகள்) ஆன்மீக முன்னேற்றத்தில் முன்னேற விடாமல் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இருந்தாலும், பின்னர் அருளாளராக ஆக வேண்டிய கருமையப்பதிவுகள் அவரிடம் இருந்ததால் அவர் தடைகளைக் கண்டு அஞ்சாமல், துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்று அருளாளராகினார். அதனை தனக்குப்பின்னர் வரும் சமுதாயத்திற்கு உதவுகின்ற வகையில் பாடலாக இயற்றியுள்ளார். இந்த அனுபவப் பாடலை கண்ணுற்ற சித்தர்கள் வழிவந்த நம்முடைய குருதேவர் அவர்கள் அதனை ஆராய்ந்து ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற மானுட இயல்பினை/உண்மையினை கண்டுபிடித்துள்ளார்.

இந்தப் பாடலின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து, பின்னர் அருளாராகியவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கும்போது சாதாரண நிலையிலிருந்து ஆன்மீகப் பயிற்சியினை மேற்கொள்பவர்களுக்கும் ஐம்புலன்-அனுபவப் பதிவுகளின்(பழக்கப்பதிவுகள்) இடையூறுகள்/குறிக்கீடுகள் கட்டாயம் ஏற்படும் என்று கருதி பழக்கப்பதிவுகளிடம் வெற்றி கண்ட அழுகணிச்சித்தரின் அனுபவப்பாடலின் உட்பொருளை தனது மாணவர்களும் அறிந்து கொண்டு பயனடைய வேண்டும் எனக் கருதி, மனதில் நிற்குமாறு விவரிக்கிறார் மகரிஷி அவர்கள்.

அழுகணிச்சித்தரின் இப்பாடலுக்கு வேறு எவ்வாறு விளக்கம் இதுவரை கூறப்பட்டுள்ளதோ தெரியாது. ஆனால் மகரிஷி அவர்கள் இப்பாடலுக்கு அருளியுள்ள விளக்கம் அழுகணிச்சித்தரே வந்து நமக்கு விளக்கம் அளித்ததாக உள்ளது. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

இப்போது, இப்பாடலுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்ற விளக்கத்தினை அறிவோம்.

மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பு தன்முனைப்பு கரைந்துபோம், காணும் தெய்வம் என்பது. தன்முனைப்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே திரையாக இருந்து கொண்டு இறைவனைக் காணவொட்டாமல் செய்கின்றது என ஆன்மீகத்தில் பெரியவர்கள் கூறுகின்றனர். எனவே அழுகணிச்சித்தருக்கும் ‘தன்முனைப்பு கரைந்த பிறகுதான் இறையை கண்குளிர காண முடியும்’ என்கின்ற நியதி பொருந்துமல்லவா? எனவே அழுகணிச்சித்தரின் தன்முனைப்பைக் கரைத்ததில் அடைந்த அனுபவத்தைத் தெரிவிக்கும் அழுகணிச்சித்தரின் பாடலுக்கு விளக்கம் கூற வந்த அருட்தந்தை அவர்கள் தன்முனைப்பிலிருந்து ஆரம்பிக்கிறார்.
தன்முனைப்பு கரைய முதலில் செய்ய வேண்டியது என்ன?

தன்முனைப்பு கரைந்த பிறகுதான் இறையை உணரமுடியும் என்பதால் தன்முனைப்பு கரைவதற்கு என்ன செய்வது? தன்முனைப்பின் விஞ்ஞானத்தை(Science of Ego) முதலில் அறிய வேண்டும். அப்போதுதான் தன்முனைப்பு என்பது என்ன என்கின்ற புரிதலில் ஆழ்ந்த நிலையினை அடைய முடியும். அதற்கு அரிஸ்டாடில் கூறுவதுபோல், எங்கு, எப்போது, எவ்வாறு, எப்படி, ஏன் ஆகிய வினாக்களை எழுப்பி விடைகள் காண வேண்டும். வேதாத்திரிய மானுடவியலில், ‘தன்முனைப்பின் அறிவியல்’ உருவாகியுள்ளது. வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் ஒன்றாகும்.

தன்முனைப்பு என்பது என்ன? திரையாக இருந்து கொண்டு இறைவனை மறைக்கின்றது என்றால் என்ன பொருள்? தன்முனைப்பு எங்கிருந்து உண்டாயிற்று/எழுகின்றது? தன்முனைப்பு என்பது ஒரு தவறான எண்ணம். அதாவது தான் யார் என்று தெரியாமல் இருக்கின்ற எண்ணம். ‘உடலே நான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற எண்ணம். ‘நான் உடலல்ல, அறிவே(ஆத்மா) நான்’ என அறியாதிருத்தல். எல்லாம் வல்ல இறைநிலையிலிருந்து வந்த இந்த உடல் தனித்து இயங்குவதான எண்ணம் இந்த எண்ணம் எப்போது ஏற்பட்டது? ‘இறைநிலையிலிருந்து விடுபட்டு தனியாக துகள்களாக இயங்குவதே முனைப்புதானே! என்பார் மகரிஷி அவர்கள். எனவே அங்கேயே தன்முனைப்பு தோன்றிவிட்டதாக தன்முனைப்பின் அறிவியலைக் கூறுகிறார்.

நீண்ட நாட்களாக உயிர் முனைப்போடு தனித்து இயங்குகின்றது:

நெடுநாட்களாக, உயிர்களாக, உணர்ச்சி நிலை உயிர்களாகத் தோன்றியதிலிருந்து பரிணாமத்திலே தொடர்ந்து ‘இறைநிலையை மறந்து, உடல் தனித்து இயங்குகின்றது’ என்கின்ற எண்ணம் இருந்து கொண்டேதான் வந்து கொண்டிருக்கின்றது. மனிதனிடம் வரும்போது அது ‘தன்முனைப்பு’ என்பதாகத் தெரிகின்றது. எனவே தன்முனைப்பு எண்ணப்பதிவுகள் எவ்வளவு வலிமை உடையதாக இருக்குமன்றோ? எனவே இறைநிலைக்கு போக முயற்சிக்கும்போது எத்தனை கோடி எண்ணங்கள் பதிவாகி இருக்கின்றனவோ வினைப்பயனாக, அவைகளெல்லாம் இறைநிலைக்கு போகவிடாமல் தடுக்கின்றன. தன்முனைப்பு நீங்கிப் பரம்பொருளோடு பரம் பொருளாகவே இருக்க வேண்டிய அறிவு, அந்தப்பரம்பொருளிலேயே லயமாவதற்காக விரும்பும்போது அந்தப்பாதையிலே போக விடாமல் தடுத்துத் தூக்கித் தூக்கி வெளிப்புறம் எறிகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். ‘தடுத்துத் தூக்கித் தூக்கி’ என்று அழுத்தமாகக் கூறுவதனை மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இதனால் அறிய வேண்டியது யாதெனில் பழக்கப்பதிவுகள் மிகவும் வலிமை உடையன. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அழுகணிச் சித்தரின் பாடலுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தை அடுத்த அறிவிற்கு விருந்தில் (12-10-2016- புதன்) நிகழ்ச்சியில் அறிந்து கொள்வோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                                      வளர்க அறிவுச் செல்வம்