பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 9/?

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

FFC – 182

20-04-2016—புதன்

FFC_167-பாரதியார் படம்

ffc-182-sub-heading

வாழ்க வளமுடன்.

‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற, ‘உலகத்தை உய்விக்க வல்ல மகாமந்திரத்தைப்’ பற்றி சிந்தித்து வருகிறோம். ஒன்பதாவது நாளாக இன்று சிந்திக்க சத்சங்கத்தில் குழுமியிருக்கிறோம். இன்று சிந்திக்க வேண்டிய துணைத்தலைப்பு ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என்கின்ற ஆச்சரியத்துடன் கூடிய உண்மையாக உள்ளது. ஏன் இந்த தலைப்பைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று அறிந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம்.

பிரதான தலைப்பு(main title) ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது. இதனை வாழ்த்தாக உலகநலவாழ்த்துப்பாவில் அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள். 

ஒன்றேயான அருவமே எல்லாமாகியுள்ள உண்மையினை விளங்க வைப்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ காண்பதுதான்.

மனிதகுலம் உருவத்தில் பேதங்களைக் கொண்டிருந்தாலும் ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்கின்ற உண்மையினை விளங்கவைத்து,   மனிதகுலத்தை உய்விக்க முடியும் என்பதனைக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

அதாவது தெய்வத்திடமிருந்து வந்த மனிதன் மீண்டும் தெய்வநிலைக்கு உயர்ந்து வரும் போதுதான் மெல்ல மெல்ல பண்பேற்றம் பெற்று வர, வர, முடிவாக தெய்வநிலை உணரும்போது, முற்றிலுமாக பண்பேற்றம் அடைய முடியும்.

பண்பேற்றமும் தெய்வநிலையை உணர்வதும் வேறு வேறல்லவே! .இரண்டும் ஒன்றுதானே!?.

ஆறாம் அறிவிற்குரிய பேறு ‘இறைஉணர்வு’ என்பதால் மட்டும் மனிதன் இறை உணர்வு பெறவேண்டும் என்பதில்லை. பண்பேற்றம் பெறவே மனிதனுக்கு இறைஉணர்வு முதன்மை அவசியமாகின்றது.

பண்பேற்றம் பெற்று வரும்போது, தெளிவின் உச்ச கட்டத்தில் இறைவன் தடுத்தாட்கொள்ளும்போது நடப்பதுதான் இறை உணர்வு எனும் ஞான ஒளி.

இறைவனை பற்றி, அறிவை அறிந்த அறிஞர்கள் கூறுவது என்ன? அவற்றினை ஆராய்வோம்.

இறைவனுக்கு உருவம் ஏதுமில்லை. இறைவன் அரூபமானவன்.
எனவே அவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றான். அவன் இல்லாத இடமில்லை.
இறைவன் எங்கும் நீக்கமற (நீக்கம்+அற) நிறைந்துள்ளான்.
நீக்கமற (நீக்கம்+அற) என்றால் ஒரு இடம் கூடவிடாமல், எங்கும்(everywhere; omnipresent) என்று பொருள்.
எனவே சர்வ வியாபியாகிய இறைவன் நம்மிடத்தும் இருப்பான் அன்றோ?!
அதேபோன்று மற்றவர்களிடமும் இருப்பானன்றோ?!
காணுகின்ற உருவங்களில் எல்லாம் இருப்பானன்றோ?!

நம்மைச் சுற்றியும் (360°) இருப்பானன்றோ? அதனைத்தான் மகான் மகா கவி பாரதியார் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என அழுத்தமாக, உறுதியுடன் கூறுகிறார்.

சற்றுமுன்னர் அறிந்த இறைக்கான அறிஞர்களின் கூற்றுக்களின்படி, ’நோக்கும் திசையெல்லாம் இறையன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறியிருந்தால் சரி. மாறாக, நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று கூறுகிறாரே என ஐயம் எழலாம்.
அதாவது, ‘நாமன்றி’ என்கின்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இறை’ என்கின்ற வார்த்தையைச் சொல்லியிருக்கலாமே என்கின்ற ஐயம். அப்படியானால் ‘நாமும்’ ‘இறையும்’ ஒன்று என்றுதானே பொருளாகின்றது. ஆம். ஒன்றுதான். இதுதானே ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைவதற்கான, பகவான் ஸ்ரீரமணர் எழுப்பிய மிகச்சிறந்த கேள்வியான ‘நான் யார்?’ என்பதற்கான பதில். இருப்பினும் நாம் மட்டும் இறை அல்ல, எல்லாமே இறை தானே? எல்லாம் இறைமயம். ‘நோக்கும் திசையெல்லாம் ஒன்றேதான் உள்ளது, ஒன்றைத்தவிர அன்னியம் என்பது கிடையாது’ என்பதனை வலியுறுத்தவே ‘நாமன்றி வேறில்லை’ என்கிறார் மகான் மகா கவி பாரதியார்.

இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

இறை=நான்=நாம்=எல்லாம்.

இப்போது மகரிஷி அவர்களின் பொருத்தமான கவி ஒன்றினை நினைவிற்கொள்வோம்.

 

 

 57. “நான்” என்ற தத்துவமே நாம்

நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.
ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட
ஆட்சி முறை உலக சமாதானத் திட்டம்.”
                                                 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

FFC-182- இப்பாடல்- BOX MessageUntitled

 

‘நானேதான் நாமாக உள்ளோம்’, ‘நானேதான் மற்றவர்களாக உள்ளேன்’, ‘நானேதான் எல்லாமாகவும் உள்ளது’ ‘எல்லாமாக உள்ளது நானே!’ என்கின்ற, இந்த தெளிவுதானே பிரம்ம ஞானத்தின் சாரம். இந்தத் தெளிவு பேரின்பமாக இருக்கும் என்கிறார் மகான் மகா கவி பாரதியார். எனவே அதனைக் கூறும் அவருடைய பாடல் ஒன்றினை ஆய்வோம்.

மகான் மகா கவி பாரதியார் கூறும் பாப்பா பாட்டு ஒன்றை நினைவு கூர்வோம்.

cat_song_bharathiyar

இந்தக் கவியினைச் சற்று உற்று நோக்கினால், முரசு என்கின்ற தலைப்பில் 31 பாடல்களை இயற்றியுள்ளார் மகான் மகா கவி பாரதியார். ஆரம்ப வரியே ‘வெற்றி’ என்றுதான் உள்ளது. அதாவது தான் கண்டுபிடித்த உண்மை இவ்வுலகம் உய்வதற்கானத் தீர்வாக இருப்பதால் அதனை வெற்றியாகக்(கண்டுபிடிப்பு வெற்றிதானே) கருதி, ஆனந்தத்தில் முரசு கொட்டி அறிவிக்கச் சொல்கிறார்.

எனவே அந்த உண்மையினை எடுத்துச் சொல்ல விரும்பிய மகா கவி இவ்வையகத்திற்கு நல்லதாகிய உண்மையை சொல்வேன் என ஆரம்பித்து இயற்கையிலுள்ள எடுத்துக்காட்டினையே கொண்டு, பூனையை வைத்தே வேற்றுமையில் ஒற்றுமை இருக்கின்றது என்கின்ற உண்மையைக்கூறி முடிவில் அந்த உண்மையால் அன்பு ஓங்குவது தான் இந்த வையகத்திற்கு நல்லது எனக் கூறுவதனை அறிந்து மகான் மகா கவி பாரதியாரின் ஆழ்ந்து விரிந்த சிந்தனையை வியந்தும் போற்றியும், மதித்தும், ரசித்தும் மகிழ்கின்றோம். இது எதன் அடிப்படையில் அமைந்துள்ளது? இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்ற அடிப்படையில் அமைந்துள்ளது. கிளைத்தேற்றம் என்ன கூறுகின்றது? தான் உயராது மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் ரசிக்கவும் முடியாது என்பதே கிளைத்தேற்றம்.

‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ எனத் தெளிவு பெறுவதால் என்ன நன்மை? அதுதானே ஆறாம் அறிவின் பயன்! என்ன நன்மை என்பதனை விளங்கிக் கொள்வோம்.

மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல் ஆகியவற்றிற்கு மூலமான ‘நான் யார்?’ என்கின்ற புனித வினாவிற்கான விடையை செய்முறைத் தேர்வில்(தெளிவுடன் கூடிய தியானம்— Meditation and clarity) வெற்றி பெறும் போதுதான் உறுதிப்படுத்தி, முழுமையானப் பயனை பெற முடியும்.

இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும்.

இப்போது நமது சத்சங்கத்தில் எழுந்தருளி வாழ்த்தச் செய்வதற்கு, மகான் மகா கவி பாரதியாரையும் இறைஞ்சுவோம். எப்படி? அவரது பாடல்களின் வரிகளை நினைகூர்வதன் வாயிலாக மகா கவி பாரதியாரை சூக்குமாக நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளுமாறு வேண்டுவோம்.

ஜயபேரிகை_பாரதியார்

பேரிகை என்றால் முரசு என்று பொருள். முரசு என்றால் முற்காலத்தில் அரசர் தனது ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன் படுத்திய கருவி. ஆகவே தெய்வத்தின் உண்மைநிலையினை கண்டுபிடித்துவிட்டதால், அதனை தெய்வத்தின் ஆணையாகக் கருதி முரசைக் கொட்டி மக்களுக்கு அறிவிக்குமாறு உள்ளப் பூரிப்பில், ஆனந்தத்தில் குலுங்கி அவ்வாறு பாட்டினை அருளியுள்ளார் மகான் மகா கவி பாரதியார்.

‘பேரிகை கொட்டடா!’ என்று மட்டும் சொல்லவில்லை. ‘ஜய’ என்கின்ற சொல்லை சேர்த்து ‘ஜய பேரிகை கொட்டடா’ என்கிறார். ஏன்? ‘ஜயம்’ என்றால் வெற்றி என்று பொருள். அவரது உள்ள பூரிப்பால் தன் சக அன்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கின்ற விரிந்த மனம் ஒரு காரணம், மற்றும் அவரது அக்கண்டுபிடிப்பு மெய்ஞ்ஞானத்திற்கு கிடைத்த வெற்றி என்பதால் வெற்றிச் செய்தியினை முரசு கொட்டி சொல்லச் சொல்கிறார். என்னே அருளாளர்களின் உள்ளம்! இதுவன்றோ இறையும் மனிதனும் ஒன்றான நிறைவு. அவ்வாறு இந்த ஆன்மீக சரித்திரத்தில் இது வரை தோன்றியுள்ள எல்லா அருளாளா்களையும் நாம் அழைத்து பயன்படுத்திக் கொள்ளும் யுக்தியினை அறிந்திருக்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம்.

அடுத்ததாக ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற வரிகளை கவனிக்கவும். மகான் மகா கவி பாரதியார் தன் அடைந்த பேரின்ப அனுபவத்தை வெளியிட்டு மற்றவர்களும் அந்நிலையினை அனுபவிக்க, அதனை உலகுக்கு ஜய பேரிகை கொட்டி அழைக்குமாறு அறிவிக்கிறார் மகான் மகா கவி பாரதியார். இது எவ்வாறு இருக்கின்றது என்றால் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அழைப்புக் கவியில்,அழைப்பது போல் உள்ளது.

anbargale vaareer-THAI

மகான் மகா கவி பாரதியாரின் புனித வரிகளான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதனை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பாருங்கள். அந்நிலையினை அடைய முடியும். இதுதானே பிரம்மஞானியின் நிலையாக இருக்கும், இருக்க வேண்டும். பிரம்ம ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது என்ன? ‘ஞானம் என்பது அறிவை அறிந்த தெளிவு’ என்பது சிறப்பான விளக்கம்’ என்கிறார் நம் குருதேவர் அவர்கள். அறிவை அறிந்த தெளிவில் தான் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற மகா கவி பாரதியாரின் பேரின்ப மந்திரம் செயலுக்கு வரமுடியும்.

மகான் மகா கவி பாரதியாரின் பேரின்பத்தின் மந்திரமான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். என்பதில் இரண்டு நிலைகளைக் குறிப்பிடுகிறார் மகான் மகா கவி.

ஒன்று – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை,
மற்றொன்று – நோக்க நோக்கக் களியாட்டம்.

‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது மனதின் எந்த நிலையைக் காட்டுகின்றது? மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளில் இயங்க வல்லது எனத் தெரியும். அவற்றில் மகான் மகா கவி பாரதியார் கூறுகின்ற

‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்பது ஐயமின்றி மனதின் நான்காவது நிலையான பேரின்ப நிலையைக் குறி்க்கின்றது.

எப்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது மனதிற்கு என்கிறார் மகான் மகா கவி பாரதியார்? அதனையும் கவனிக்க வேண்டும் நாம். ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்கின்ற தெளிவு அறிவிற்கு கிடைக்கும்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது என்கிறார். அதாவது பார்க்க பார்க்க களியாட்டம் என்கிறார்.
அப்படியானால் களியாட்டம் என்பது என்ன? களியாட்டம் என்றால் களிநடம், ஆனந்தக்கூத்து என்று பொருள். தில்லையில் களிநடனம் புரிகிறான் இறைவன் என்கிறோம். களி என்றால் பார்ப்பது. கேட்பது முதலியவற்றால் மகிழ்தல்(rejoice) என்று பொருள்.

FFC-182-box message- களியாட்டத்திற்கு காரணம்Untitled

 

இங்கே நாம் நம் குருநாதரை அழைத்துக் கொள்வோம். எப்படி? அதற்கான அவர் அருளியுள்ள பாடலை நினைவு கூர்வோம்.

FFC-168-பகுத்து-மறைவாய்

 

.

‘இறைவெளி காட்சியாக, எல்லோரும் பார்த்துக் கொண்டே, மறைவாய் உள்ளாய் நீயென்று, மாற்றுரை பகர்கின்றார்!’ என்று கூறுவதன் மூலம் மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப கண்டுபிடிப்பான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதோடு பாரதியாரின் இளவளான மகரிஷி அவர்கள் இணைகிறார் அன்றோ!

‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறுவதனை, மகரிஷி அவர்கள், ‘இறைவெளி காட்சியாக’ உள்ளான் என்கிறார். இரண்டும் பிரம்மநிலையை உணர்ந்த வார்த்தைகள்தான். கண்கள் பார்க்கின்ற காட்சிகளெல்லாம் இறையேதான் என்றிருந்தாலும் மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டே இறைவன் மறைவாய் உள்ளான் என்று மாற்றிச் சொல்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றார். மனிதனுக்குள்ள குறையறிவை விரித்தால் இறையை தனதுள் கொள்ள முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
இன்றைய சிந்தனையை நிறைவு செய்ய இருக்கின்றோம். பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும் என்று ‘உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தைப்’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கானத் தனித்தனி பொருளென்ன, ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதற்கான பொருளென்ன, பகுத்துணர்வில் தொகுத்துணர்வு எவ்வாறு மனிதகுலப் பண்பாட்டினை உயர்த்த முடிகின்றது என்பனவற்றை எல்லாம் இந்த சத்சங்கத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சத்சங்கத்திற்கு மகான் மகா கவி பாரதியாரையும் எழுந்தருளி ஆசீர்வதிக்க நாம் எண்ணியதால்தான் பாரதியார் அருளிய பாடல்களில் இரண்டு பாடல்களை நினைவிற் கொண்டு மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப அனுபவங்களை அவரே நேரிடையாகவே வந்து கூறுவதுபோல் பொருள் விளங்கிக் கொண்டோம்.

“நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என மகான் மகா கவி பாரதியார் கூறுவது, மகரிஷி அவர்கள் “பகுத்துணர்வில் தொகுத்துணர்வு” என்பதும் ஒன்றே. பகுத்துணர்வில் தொகுத்துணர்வு வந்துவிட்டால் நோக்கும் திசையெல்லாம்/நாம் காண்பதெல்லாம் அன்னியமே அல்ல. பிறகு என்ன அது என்றால் நாமன்றி வேறில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற தெளிவு பிறக்கும். மேலும் அவ்வாறு காண்பது இயல்பாகிவிட்டால் அதுதானே பேரின்பம். இந்த நிலைக்கு அறிவு வருவதற்கு, விருப்பு, வெறுப்பு இன்றி எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் பண்பாட்டில் உயர வேண்டும்.

எனவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வுதான்’, நானேதான் நாமாக இருந்தும், உருவம் என்கின்ற வரையில் எல்லைக்கட்டிக்கொண்டு, பேதங்களைக் கற்பித்துக் கொண்டு, தனித்து இயங்கி துன்புற்று வாழ்கின்ற நிலையில் இருக்கும் உலகை வாழ்த்துவதற்கான ஏற்ற மகா மந்திரமாக உள்ளது என்பதனை அறிந்து மகிழ்கிறோம். எனவே பிரம்மஞானத்தின் பயனான நோக்க நோக்கக் களியாட்டம் என்கின்ற பேரின்ப நிலையினை அனுபவிப்போமாக. வாழ்க உலக சமாதானம். வரட்டும் விரைவில் உலக சமாதானம்.

மேலும் அன்றாட வாழ்வில் எப்போதும் பேரின்ப நிலையை அனுபவிக்கும் முகந்தான் பேரின்பம் என்பது எதார்த்தத்தில் என்ன என்று மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். Logical Solutions for the Problems of Humanity என்கின்ற நூலில் பக்கம் 30 இல் 19-22 வரிகளை(lines) வாசித்து பேரின்பம் என்ன அறிந்து கொண்டு சிந்தித்து சிந்தித்து பேரின்பத்தை பருகவும். இதே போன்று சமுதாயச் சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல் வருகின்ற 7-12 வரிகளை வாசித்து அறிந்து மகிழவும். சிந்திப்பதே நம்முள் உறைகின்ற இறையுடன் நடத்தும் சத்சங்கமாகும். அந்த இறையுடன் நடத்தும் சத்சங்கம் பேரின்பமாக இராதா என்ன?! சிந்திப்பதும் விடை கண்டு தெளிவு பெறுவதும் பேரின்பமாகும். வாழ்க சத்சங்கங்கள். வளர்க சத்சங்கங்கள்.

FFC-182- அருட்தந்தை-சங்கல்பம்

இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(24-04-2016-ஞாயிறு)  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை, திருவள்ளுவர் அணுகுமுறையில் தொடர்வோம். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.