பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 8/?

வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

 FFC – 181

                                               17-04-2016—ஞாயிறு

வாழ்க வளமுடன்.

                  02-03-2016 லிருந்து 23-03-2016 வரை ஏழு விருந்துகளில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்பது பற்றி சிந்தித்து வந்தோம்.  இன்று அதனுடைய தொடர்ச்சியினை எட்டாவது நாளாக சிந்திக்க இருக்கிறோம்.  எனவே இதுவரை சிந்தித்ததை கீழே உள்ள அட்டவணையைக் கொண்டு, சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.

gist of ffcs 168-174

       ஆறாம் அறிவின் ஏழாம் செயல்பாடான ‘தன்னிலை உணர்தல்’ என்பதனை மனித அறிவு அடைந்தேயாக வேண்டும். மனிதஇன பரிணாம – இயற்கையின் நிகழ்ச்சியில் முடிவானதாக இருப்பது ‘தன்னிலை உணர்தல்’ என்பது. எனவே இது பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

அறிவின் 4, 5, 6 ஆம் நிலைகள் ஐயுணர்வைக் குறிக்கின்றன.  இந்த நிலை விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் பொது. ஆனால் விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனித இனத்திற்கான ஆறாம்  அறிவிற்கு என்ன பணி என ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மனிதன் ‘தன்னிலை உணரவேண்டும்’ என்பதும், அது இயற்கையின் நிகழ்வேயாதலால், அது விஞ்ஞானம் என்பதும் தெளிவாகும். ஐயுணர்வு என்பது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமே உணர்வதாகும்.

     ஐயுணர்விலிருந்து, வந்த ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்த அறிவிற்கான பிரத்யேக உணர்வு என்னவாக இருக்கும்?

     ஐயுணர்வில் அறிவு காரணத்தை அறிய முடியாது.  உள்ளதை அப்படியே உணர வேண்டும்.

     ஆறாம் அறிவாக மலர்ச்சி பெற்ற அறிவு என்ன, ஏன், எதற்காக என்கின்ற வினா எழுப்புவதற்கான திறமையைக் கொண்ட காரணஅறிவாகின்றது(Consciousness with Logical Reasoning).

     எனவே அறிவு ஆறாம் அறிவாக மலரும்போது, தான் உணர்கின்ற அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து நிகழ்ச்சிகளும் என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இவற்றை எல்லாம் உணர்கின்ற நான் யார்  என்கின்ற வினாவிற்கான விடையை அறிய வேண்டியது அவசியமாகின்றது.

    விடை அறியும் போது அறிவு முழுமை அடைவதே ‘தன்னிலை உணர்தல்’ ஆகின்றது.  இதனை விஞ்ஞானம் சொல்லித்தான்அறிவு  தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதாவது பிறவியின் நோக்கம் தன்னிலை உணர்தல், அறிவை அறிய வேண்டும் என்பது விஞ்ஞான நிரூபணமில்லாமலேயே காரண அறிவைக் கொண்டே உறுதியாகின்றது.  தன்னிலை உணர்தலில்  அறிவின் பயணம் முடிவுபெறுகின்றது. இயற்கையாகிய அறிவின் பயணம்(Journey of Consciousness) என்பதும் இயற்கையின் நிகழ்வுதானே!அறிவின் பயணத்தின் முடிவு தன்னிலை உணர்தல் என்கிறபோது தன்னிலை உணர்தல் என்பதும் இயற்கையின் நிகழ்ச்சியேதான்

    ஆனால் ஆங்காங்கே விரல் விட்டு எண்ணும் அளவில் ஒரு சிலரைத் தவிர, மனிதகுலம் இந்த இயற்கையின் நிகழ்வினை தடைசெய்து கொண்டல்லவா வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றது!

      அப்படியானால் இயற்கைக்கு முரணாகவல்லவா வாழ்கின்றது மனித சமுதாயம்.

    அறிவின் வளர்ச்சி கடைசி கட்டத்தில் தடைபட்டு நிற்கின்றது.  

    இயற்கையில் உள்ள பல வளங்களில் சிகரமானது ‘தன்னை அறிதல்’ என்பது.

   மற்ற இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றிக் கொண்டு, புலன்களின் திறமையை அதிகரித்துக் கொள்ளத் தெரிந்த மனித இனத்திற்கு,

  ‘தன்னை அறிதல்’ வளத்தை மட்டும் வாழ்வின் வளமாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழத் தெரியவில்லை.

    இந்தநிலையினை அடைவதற்காக வாழ்த்துவதுதான் உலக நல வாழ்த்தின் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில், தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது.

இந்த வாழ்த்துதான் உலக நல வாழ்த்திலும், உலக நல வேட்பு, உலக நல நாட்டம் ஆகியவற்றில் உள்ள  மற்றவைகளையும் நிறைவேற்றி வைக்கும்.

    ஆறாம் அறிவாகி மலர்ந்த பிறகு விலங்கினத்தில்  இருக்கின்ற பண்பான பிறர்வளம் பறித்தல் என்பது பாவமில்லாமல் இருந்தது, மனிதனாக வந்தபிறகு ‘பிறர்வளம் பறித்தல்’ பாவச்செயலாகி விடுகின்றது. ஐந்தறிவுள்ள புலி மானைக் கொன்று உணவாக உட்கொள்வதில் பிறர்வளம்  பறித்தல் அடங்கி இருந்தாலும் அது புலிக்கு பாவமில்லை. சிந்தனைத்திறன் கொண்ட ஆறாம் அறிவுடைய மனிதனுக்குத்தான் அவன் செயலின் விளைவைப் பொருத்து பாவம்(தீயொழுக்கம்). புண்ணியம்(ஒழுக்கம்) என அமைகின்றது.

    ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனித இனப்பரிணாமத்தில், ஆரம்பத்தில் விலங்கினங்களாகத் தான் வாழ்ந்திருக்கிறான்.  ஆகவே அப்போது அன்பு, கருணை என்கின்ற மனிதம் மலர்ச்சி அடையவில்லை.  இருப்பினும் ஒரு நாள் ஒரு மனிதன் பட்ட துன்பத்தை மற்றொரு மனிதன் கண்டு தன்னுணர்வுபோல் கருதி, இரக்கம் கொண்டு உதவி செய்திருப்பான்.  அன்றுதான் அறம் தோன்றிற்று என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  ஆனால் அன்று ஆரம்பித்த ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய அறத்தின் வளர்ச்சி தொடர்ந்து  முழுமை அடையவில்லை. அதுதான் இன்று மனிதகுலத்தில் காணப்படுகின்ற அமைதியின்மைக்குக் காரணமாகின்றது.   எனவே இந்த அறவுணர்வு குன்றிய பண்பாட்டினை உயர்த்துவதற்காகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை’ உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்து மந்திரத்தை உலக நல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்தாக அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

    எனவே ஐயுணர்விலிருந்து, ஆறாம் அறிவு, தன்னிலை உணராது பயணித்தால் பாவ வினைகள் அதிகமாகிக் கொண்டே துன்பங்கள் மல்கி வாழ்க்கை துன்பமாகிவிடுகின்றது.

     தான் துன்பப்படுவது மட்டுமன்றி, தன் வம்சாவளியையும் துன்பத்திற்கு ஆளாக்க நேரிடுகின்றது.  தன்  வம்சாவளிக்கு  அளித்துள்ள பாவங்களை(சஞ்சித கர்மா) போக்குவதோடு மட்டுமல்லாது  சஞ்சித கர்மாவால் வம்சாவளி சேர்த்துக் கொள்கின்ற பிராரப்த கர்மாவும் சேர்ந்து விடுகின்றன.  எனவே வம்சாவளிக்கு பாவங்களை போக்க வேண்டிய பளு அதிகமாகி விடுமன்றோ!?

    அறிவு ஐயுணர்வோடு நின்று விட்டால், தனது 7 ஆம் செயல்பாடான தன்னிலை உணர்தல் என்பதற்கு முயலாமல் போனால் விலங்கினப்பண்பின் வாசனையால் ஒழுக்கமின்மையும், அதன் விளைவாக பாவங்களும் சேர்ந்து கொண்டே போவதால், வாழ்க்கையில், துன்பம், இன்பம் என்கின்ற சுழற்சியிலேயே துன்பமே மிகுவதைத் தான் அனுபவிக்க நேரிடுகின்றது.   மனதின் மூன்றாம் நிலையான அமைதியினையும் நான்காம் நிலையான பேரின்பத்தையும் அனுபவிப்பது எப்போது என்பது கேள்விக்குறியாகிவிடும்.

   மேலும் ஆறாம் அறிவு தன்னிலை உணர்வதற்கு ஆசைப்படுவது என்பது ‘முடவன் கொம்புத் தேனிற்கு ஆசைப்படுவது போன்றதா என்ன? அல்லவே அல்ல.

    தன்னிலை உணர்தல் என்பது மனிதன் உடலுக்கு ஆடை அணிவது எப்படி கட்டாயமோ, அதுபோல் அறிவு தன்னிலை உணர்வது என்பது இயற்கை/இறை வைத்துள்ள கட்டாயம்.

    வளர்ச்சி அடைந்த மனிதன் ஆடை அணியாமல் போனால் அது சட்டப்படி குற்றம் ஆகின்றது.

   ஆனால் ஆறாம் அறிவு ‘தன்னிலை உணர்தலை’ முயற்சிக்காமல் போனால் மனிதனால் இயற்றப்பட்டுள்ள சட்டப்படி குற்றமாகாமல் போனாலும் இயற்கையின் நீதியின் படி குற்றம்.

     இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரு நீதி இருக்கும்போது ‘தன்னிலைஅறியாமல் போனால் என்பது’ இயற்கை நீதியின்படி குற்றம் என்பது, இது இயற்கையின் இரண்டாவது நீதியா? இல்லை!இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரே நீதிதான் உண்டு. ஆனால் அது எல்லாவித மனிதகுற்றங்களையும் தன்  ஒரே நீதியின் கீழ் அலசிப் பார்த்து தீர்ப்பளித்துவிடும்.

    பிறவியின் நோக்கம் தன்னிலை உணரவேண்டும் என்பது இதுவரை ஆன்மீகத்தில் விருப்பமாக (optional-choice of preference) ஆக இருந்து வந்தது  ஆனால் வேதாத்திரிய ஆன்மீகம், பயிற்சியாளர் ஒவ்வொருவருமே சுயமாகவே சிந்தித்து, தன்னிலை உணர்வதற்கான விளக்கங்களை வழங்கி வருகின்றது. இது இயற்கையின் நிகழ்வுஎனவே  கட்டாயமாக, தன்னிலை உணர்ந்தேதான் ஆக வேண்டும் என்கின்ற அவசியம் மனிதனுக்கு உண்டு  என்பதனை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

     தோற்றங்களைப் பார்க்கும் போது வடிவம்-குணம் – shape and image எடுத்துப்பார்ப்பது இயல்புதான் மனிதனுக்கு.   இருப்பினும் இயல்பு என்பதால் அதனை சரி என்று எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறியாமை இயல்பாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அறியாமை இயல்பாகலாமா? இயல்பாக இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா?

       நாகரீகமான பண்பட்ட மனிதகுலத்தில் வேற்றுமை இருக்கலாமா? வடிவம்-குணம் – shape and image வந்துவிட்டால் அங்கே வேற்றுமை வந்துவிடுமல்லவா?! ‘ஒற்றுமை’ என்கின்ற வார்த்தையையும் மனிதகுலம்தான் கண்டுபிடித்து வைத்துள்ளது.  அந்த கண்டுபிடிப்பு எதற்கு?  வேற்றுமைக்கு எதிர்ச் சொல்தான் ஒற்றுமை.  வேற்றுமை இருக்கும்போது பயம் இருக்கும். துன்பம் அளிக்கும் எண்ணம் வரும். எனவே வேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) காணவேண்டுமெனில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வும் இருக்க வேண்டும்.  எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியது அவசியம்தானே?!

வேற்றுமை மற்றும் ஒற்றுமை என்பதற்கான பொருள் என்ன?

   வேற்றுமை என்றால் மாறுபடும் தன்மை. வித்தியாசம் என்கின்ற பொருட்கள் உண்டு. வேற்றுமையில்  தொடர்பு இருக்காது. இணக்கம் இருக்காது.  ஒற்றுமை என்றால் கூட்டுறவு, முழுமை என்று பொருள். ஒற்றுமை என்பது கூட்டுறவு என்பதால் மனித குலத்தில் சேர்ந்திருக்கும் உறவு தானே அவசியம்.  நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களே என்கிற மேன்மை உணர்வு நம்மிடம் உள்ளது.  அது எங்கிருந்து வந்தது?   நிறத்தை வைத்து, பகுத்துணர்வு கருமை நிற மனிதன், வெண்மை நிற மனிதன் என வேறுபடுத்தும்.  ஆனால் தொகுத்துணர்வு யாராக இருந்தாலும் இருவருமே மனிதர்கள் என்று ஒன்றுபடுத்தும்.

    ஆகவே பகுத்துணர்வில், தொகுத்துணர்வு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவசியம் தானே.  வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புதானே?

   எனவே உலகசகோதரத்துவப் (Universal Brotherhood) பண்பாடு உறுதிப்படுத்தப்படவேண்டுமெனில்  அதனை பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் ஏற்படுத்த முடியும். 

    ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் கருமை நிறமாகவும், இரண்டு குழந்தைகள் வெண்மை நிறமாகவும் இருப்பதால் அவள் வேற்றுமை பார்ப்பாளா?  இல்லையே.  உண்மையிலே அந்த நான்கு குழந்தைகளுக்கும் மூலம்(தாய்) ஒன்றே தான்.  அது தான் அந்தத் தாய்.  வேற்றுமையில் அன்பு ஓங்காது.  ஒற்றுமையில்தான் அன்பு ஓங்கும்.

   தன்னிலை உணர்தல் என்பது தொகுத்துணர்வாகும்.   தன்னிலை உணர்ந்தவரின்  அறிவு

   ஐயுணர்வான பகுத்துணர்வோடு, அதே நேரத்தில் எல்லாவற்றையும் தொகுத்துணர்வின் பார்வையிலேயே பார்க்கும்.

  அதாவது விழிப்புணர்வோடு செயல்படும்.

  அது மட்டுமல்ல தொகுத்துணர்வு, மனிதனை எப்போதும் குற்றமற்ற செயல்களையே செய்ய வைப்பதால்   அவனை அயரா விழிப்புணர்வோடு இருக்கச் செய்து அதன் விளைவாக பேரின்பத்தையே அனுபவிக்கச் செய்துவிடும்.

 தன்னிலை அறிதலின் நிலை அல்லது பயன்கள் என்ன?

1)    பிரம்மத்தை உணர்ந்த நிலை.

2)   பிரம்மத்தை உணர்ந்த நிலையில்தான்  பிரம்மமே நானாகவும், மற்றவர்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது என செய்முறையாக உணரப்பட்ட நிலை(Practical understanding). இந்த பிரம்ம ஞானியின்  அயராத நினைப்பே(அயராவிழிப்புணர்வு) ‘பகுத்துணர்வில் பகுத்துணர்வு’ என்பது.

3)   ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற அருள் வாக்கில் உள்ள உண்மை உறுதிப்படுத்தப்படுவதும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால்’ தான்.

4)    சுவாமி விவேகானந்தர் அன்று சிகாகோவில், ஆன்மீக உரை நடத்தும்போது, எல்லோரும் கரவொலி எழுப்பி மகிழ்ந்த புனித சொற்களான “Sisters and Brothers”  என்பது இந்த பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால் தான்.

5)   சுருங்கச் சொல்லின்,  அறிவது அறிவு, அறிவு தன்னையே அறியும்போதுதான் அறிவு முழுமை அடைகின்றது.  அதுவரை அறிவு குறைவுடையதாகவே உள்ளது.

6)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் இயற்கையின்/இறையின் உண்மை நிலையை பிரகடனப்படுத்துகின்றது.

7)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் மனித அறிவு ஐயுணர்விலே மட்டுமே வாழ்ந்து வருகின்ற நிலையில் தொகுத்துணர்வைச் சேர்த்து  மனிதன் மனிதனாக வாழச் செய்கின்றது.

8)   மேலும் உண்மை நிலை என்ன? இயற்கையே/இறையே தான் எல்லாமாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது.  அதாவது எங்கும், எதுவும், எல்லாமும் இறைமயம்.  (Everything is to be visualised  in terms of Almightyஇதனை மூன்றாம் வகுப்பிற்கான  கணிதத்தின் மூலம்  விளங்கிக் கொள்ளலாம். வாருங்கள்.

9)   Question:    Express  the sum of the following units in terms of millimetre.

                   கீழ்கண்ட அளவுகளை மில்லிமீட்டர் அளவில் மாற்றவும்.

                     14 km, 80 m, 181 cm, 101 mm.

unity in diversity_mathematics

Expressing 14 km, 80 m, 181 cm, 101 mm as 14081911 mm is correct and they are  one and the same. 14 km, 80 m, 181 cm, 101 mm  is none other than 14081911 mm.  இது  தான் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது. 

இன்றைய மனிதகுலம் துன்பச்சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  பகுத்துணர்விலேயே  மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதால் துன்பங்கள் மல்கிவிடுகின்றன.  இந்நிலையில் உலகநல  வாழ்த்து மந்திரம் எப்படி இருக்க வேண்டும்?  மனித பண்பாடு குறைந்திருக்கும் காரணத்தாலேயே  துன்பக்கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகை நலம் பெற வாழ்த்துவது என்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதாகத்தானே இருக்க வேண்டும்?!!!  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை வரும் அறிவிற்கு விருந்திலும் மகாகவி பாரதியார் மற்றும் திருவள்ளுவர் அணுகுமுறையில் (20-04-2016-புதன்) தொடர்வோம்.

வாழ்க வளமுடன்.

            வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.