பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 10/?

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

FFC – 183

24-04-2016—ஞாயிறு

FFC-183-sub titlle-Untitled

  FFC-166-dheaivappulavar

வாழ்க வளமுடன்.

     ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்து பற்றி பல துணைத்தலைப்புகளில் சிந்தித்து வருகிறோம். மகரிஷி அவர்கள்  ‘தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள் ஆகும்’ என்கிறார்.  ஒரு மனிதன் அறிவின் முழுமையை அடைய அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு வாழ்க்கைத்துறைகள் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் முழுமையில்தான் மனிதன் தனது தீயவினைப்பதிவுகளை முழுமையாகப் போக்கிக் கொள்ள முடியும்.  மீண்டும் பிறவா நிலை எய்த முடியும்.  அறிவின் முழுமைப்பேற்றில்தான் ஆன்மா பிறவி எடுத்ததற்கான காரணம் நிறைவேறிவிடுகின்றது. அதாவது, அறிவு வாழ்நாளில், உணர்கின்ற எல்லாவற்றிலும் சிறப்பானதும், முதன்மையானதுமாகிய ‘தன்னையே உணர்ந்து கொள்ள முடிகின்றது.  இந்தப்பேறு தான் வீடுபேறு. பிரபஞ்சத்திற்கே வீடுமாகவும், அதே நேரத்தில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் எழுப்பியுள்ள வீடுகளுக்கெல்லாம் வீடாகவும் உள்ள இயற்கையின் ஆதிநிலையை/இறைவெளியை உணர்ந்துகொள்வதனைப் பேறாகக் கருதி, அது வீடுபேறு என அழைக்கலாகின்றது.

     ஞானநெறியைக் காட்டிய சான்றோர்களில் ஒரு சிறந்த பேரறிஞர் திருவள்ளுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் கூறுகிறார்: திருவள்ளுவர் ‘படைப்பு’ எனும் கற்பனையிலிருந்து விடுபட்டு, ‘தன்மாற்றம்’(பரிணாமம்) என்கின்ற உண்மை வழியிலே முழுமை பெற்ற மெய்ஞ்ஞானி ஆகிறார் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இதுவரை திருவள்ளுவரை இவ்வாறு அறிந்து வெளிப்படுத்தியவர் வேறு யார் உள்ளனர் எனத் தெரியவில்லை. எனவேதான் திருவள்ளுவர் அவதரித்த பிறகு, பத்தொன்பது நூற்றாண்டுகள் சென்ற பிறகு அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக–இயல்பூக்க நியதியின்படி தானும் பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று, நம் எல்லோரையும் உள்ளடக்கிய உலக சமுதாயத்தையும்  பண்பில் ஏற்றம் பெறச்செய்யவல்ல மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

sudhtha advaitham

        எனவே இன்று திருவள்ளுவர் வழியில் ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்கின்ற துணை தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.  இன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்து மந்திரம் திருவள்ளுவரின் எந்த கண்டுபிடிப்புடன் இணைகின்றது என்பதனை அறிவோம்.

    மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறிவாற்றல் பற்றி   ஏதாவது  கூறியிருக்கின்றாரா என சிந்தித்தால், ‘கூறுகின்றார்’ என்கின்ற பதிலே வருகின்றது.

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதனை ஒன்றுபடுத்திப் பார்ப்பதற்கு,  தெய்வப்புலவர் கூறும் குறட்பாக்கள் என்னென்ன?  மெய்உணர்தல் என்கின்ற அதிகாரத்திலும், அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் அக்குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

 அதிகாரம் – 36 – மெய் உணர்தல்

 எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.               குறள் எண். 355.

      இக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இடம் பெற்று, அறிவு பற்றி கூறுகின்றது. எது அறிவு என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். ஆறாம் அறிவிற்கான வரையறையைக்  கூறுகின்றார். ஆகவே மெய்யை/மெய்ப்பொருளை/இறையை உணரவிருக்கின்ற ஒவ்வொருடைய அறிவும் எந்த பரிபக்குவ நிலைக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  மெய்உணர்வு/இறைஉணர்வு பெறுதலுக்கான வரையறையையும் இக்குறளில் காணமுடிகின்றது.  மெய்ப்பொருள் என்பது என்ன?  பெயரிலிருந்தே தெரிகின்றது அதுதான் மெய்யான பொருள் என்று.  ஆகவே மற்றப் பொருட்கள் பொய்யானவை; பொருட்களல்ல என்றாகின்றது.  இருப்பது எவ்வாறு பொய்யாக அல்லது இல்லாததாக முடியும் என்கின்ற நியாயமான ஐயமும் எழுகின்றது.  நியாயமான ஐயம் நீங்க இன்றைய சிந்தனை துணைபுரியட்டும்.

eadhu meypporul

 ‘மெய்உணர்வு’ என்றால் என்ன பொருள்? 

மெய்ப் பொருளை உணர்வது மெய் உணர்வு.  

மெய்ப்பொருளின் தன்மையை உணர்வது மெய் உணர்வு. 

மெய்ப்பொருள் தன்மை என்பது என்ன? 

மெய்ப்பொருள் ஒன்றே எல்லாமாகவும் ஆகியுள்ளது என்பதுதான் மெய்ப்பொருளின் தன்மையாகும்.

 எனவே பேரறிவே பின்னப்பட்டு தனது தன்மாற்ற பயணத்தில் மனிதனிடம் வந்து, தன்னையே/தனது மூலநிலையாகிய மெய்ப்பொருளையே அறியும்போதுதான் ஆறாம் அறிவாகின்றது.  அதாவது மனித அறிவு முழுமையாகி மெய்ப்பொருளாகிவிடுகின்றது.  

  அடுத்ததாக அறிவுடைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளைக் கவனிப்போம்.

 அதிகாரம்-43- அறிவு உடைமை

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.                  …. குறள் எண் 423

 ‘மெய் உணர்தல்’  அதிகாரத்தில் எது அறிவு என்று கூறிய அறிஞர் திருவள்ளுவர், மீண்டும் அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் எது அறிவு என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆறாம் அறிவின் கடமையும், பொறுப்புமாக உள்ளது.

        ஒருமனிதனுக்கு இருக்க வேண்டிய பத்து உடைமைகளில் ஒன்றாக அறிவைக் கருதி அறிவு உடைமை எனும் அதிகாரத்தை வகுத்துள்ளார் திருவள்ளுவர். மனிதர்கள் என்றால் எல்லோருக்குமேதான் அறிவு இருப்பதால்   எல்லோருமே அறிவை உடைமையாக, அதாவது தனது செல்வமாகக் கொண்டிருப்பதில்லை என்கின்ற எதார்த்த நிலையைக் கருதி  ‘அறிவை’, தனது உடைமையாக–செல்வமாக ஆக்கிக்கொள்வதற்காக அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

     அறிவு என்றாலே அறிந்து கொள்ளும் இயல்புடையது அறிவு.  அறிந்து கொள்வது தானாகவும் அறிந்து கொள்ளலாம்.  அல்லது யாராவது சொல்லக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்  எவ்வாறாக இருந்தாலும் ஒன்றைப் பற்றி அறியும்போது அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளும் அறிவே அறிவு என வரையறுக்கிறார்(Defines what is Consciousness) திருவள்ளுவர்.

     திருவள்ளுவர் அறிவைப்பற்றி கூறும் அடிப்படையிலிருந்துதான்,  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்தை உருவாக்கிய  மகரிஷி அவர்களிள் அறிவுகூர்மையை நாம் அறிந்து மகிழ முடிகின்றது/வேண்டியுள்ளது.  எனவேதான் ‘தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள்’ என மகரிஷி அவர்கள் கூறுவதற்கானக் காரணத்தையும் அறிய முடிகின்றது.  மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் அறிவு (ஆறாம்) என்கிறார் திருவள்ளுவர். 

    மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் மனிதஇனம் பண்பாட்டில் உயர்ந்திருக்க முடியுமன்றோ!  மெய்ப்பொருள் அறிந்த அறிவுதான் முழுமை அடைகின்றது.  சமுதாயத்தில் இன்னும் பண்பாடு உயரவேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  பண்பாடு உயர்வதற்குத் தேவையானது, உலகமக்கள் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பெறும் திறமையைப் பெறவேண்டும்.  எனவே ‘பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்தினை எண்ண அலைகளாக பரப்ப ஏற்படுத்தியதுதான் உலகநல வாழ்த்துப்பா.

      ஏன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சொற்றொடரை புனிதச் சொற்றொடர் என்கிறோம்?  அச்சொற்றொடர் கூறும்  நிலையினை மனிதன் அடைவானாகில் அவன் புனிதம் அடைகிறான்.  அதாவது மெய்ப்பொருள் உணர்ந்த நிலை அது.  மேலும் கூறுவதென்றால், ஐயப்படாது அகத்தை உணர்ந்த நிலை அது.  அந்த நிலையை அடைந்த மனிதனை தெய்வத்தோடு ஒப்புக் கொள்ளலாம். அறிவாகிய தெய்வத்தையே-தெய்வீகம் தன்னுள் இருந்து பூரித்து மலர்வதை உடைமையாக்கிக் கொண்ட நிலை அது.

     ஆகவே புனிதச் சொற்றொடரான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மகரிஷி அவர்களின் வழியாக நேரிடையாகவும் அதற்கு மேலும் சான்றளிக்கும் வகையில் செந்நாப்புலவர் திருவள்ளுவரையும் நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளச் செய்து கொண்டோம். இந்த பிரபஞ்சமே இயற்கையின்/இறையின் உடலாக நினைக்க வேண்டியது இப்போது எளிதாகிவிட்டது.

     மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல்-நான் யார் என்கின்ற  வினாவிற்கான புனித விடையை பெறுவதற்கான செய்முறைத் தேர்வில் வெற்றி பெற்றமை ஆகியன என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும். 

    மேலும் ஏதாவது குறள் நம்முடைய இன்றையச் சிந்தனைக்கு உதவுகின்றதா என்றால், ஆம் மற்றுமொரு குறளை எடுத்துக் கொண்டு  அடுத்த அறிவிற்கு விருந்தில் (27-04-2016-புதன்) ஆராய்வோம்.

 வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.