FFC – 178-தெளிவு—4/?

வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

                 தெளிவு—4/?                     

                                                                   FFC – 178                                                    

 06-04-2016—புதன்.

ffc-178- title

வாழ்க வளமுடன்.

                 தெளிவு’ பற்றி கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் தெளிவு அடைந்து வருகிறோம்.  இன்று அறிஞர் திருமூலர் கூறும் மூன்றாவது வழியான ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

 குருவருளே திருவருள்

 தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

                                              . . . அறிஞர் திருமூலர்.

 ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’: 

            குருவினுடைய திருமேனியும், திருநாமமும் எவ்வாறு அறிவிற்குத் தெளிவினைத் தருகின்றது என்பதனை ஐயமின்றி அறிவுப்பூர்வமாக சென்ற அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்தோம். இப்போது மூன்றாவது வழியான   ‘குருவினுடைய திருவார்த்தை கேட்டலும்’ தெளிவினைத் தருகின்றது என்று  அறிஞர் திருமூலர் கூறுவதனை சிந்திப்போம்.

      கேட்டல் தெளிவினைத் தருகின்றது என்றால் ‘தெளிவு’ என்பது என்ன? தெளிவு என்பது அறிவிற்கு ஏற்படுவது.  அறிவிற்கு ஏற்படுவது என்றால், அது உணர்வா? ஆம் உணர்வுதான்.  ஆனால் அது  வழக்கம்போல் புலன்கள் வழியாக ஏற்படும் உணர்வு அன்று? பின்னர் என்ன உணர்வு அது?  புலன்களின் உதவியின்றி, அறிவிற்கு ஏற்படும், முடிவான பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் ஆனந்த உணர்வு அது.

    அப்படியானால் என்ன?!

    உணர்வதும், அறிவதும் எதுவோ அதுவே அறிவு.  அப்படியிருக்கும் போது, புலன்கள் உதவியின்றி அறிவிற்கு ஏற்படும் அந்த ஆனந்த உணர்விற்கு வேறு பெயர் ஏதேனும் உள்ளதா? உள்ளது. அதுதான் தெளிவு.

     இருப்பினும், இப்போது நேரிடையாகத் ‘தெளிவு’ என்பது என்ன என்கின்ற முடிவிற்கு வருவோம். உணர்வதும், அறிவதுமாகிய அறிவிற்கு ஏற்படும் தெளிவு என்பது, அறிவிற்கு ஏற்படும் சரியான மிகமிகத் துல்லியமான புரிதலாகும் (correct and the Most precise understanding). இதுவரை சூரிய வெளிச்சம் இருந்தும், அறியாமை என்கின்ற இருளில்வாழ்ந்து வந்ததால் , இருட்டில் இருந்த அறிவிற்கு ஏற்படும் அந்த சரியான, மிகமிகத் துல்லியமான புரிதல்  அறிவொளியை வீசுவதால், அது ஆனந்தத்தை  ஏற்படுத்தும் அறிவிற்கு.  இந்த ஆனந்தமே முடிவாக மனதின் நான்காவது நிலையான பேரானந்தத்திற்கு  இட்டுச்செல்லும்

     ‘கேட்டல்’ தெளிவினைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருமூலர். கேட்டல் பற்றி வேறு அறிஞர்கள் கூறுவதென்ன என்பதனையும் அறிந்து கொள்வோம். ‘கேட்டல்’ என்பது செல்வத்தைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருவள்ளுவர் .

 “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை“   குறள் எண். 411

     இக்குறளின் பொருள் யாவரும் அறிந்ததே.  ஒருவர் தான் பெற்றிருக்கும் செல்வங்களுள், செவியால் கேட்டு அறிந்து கொள்ளுதலே தலையாயச் செல்வமாகும். கேட்பது என்பது, செவி வழியாக நடப்பதால், கேட்டறியும் செல்வத்தை செவிச் செல்வம் என்கிறார். அறிஞர் திருமூலா்  ‘கேட்டு அறிவதனை தெளிவு’ என்கிறார்.  தெய்வப்புலவரோ ‘கேட்டு அறிவதனைச் செவிச் செல்வம்’ என்கிறார். இவ்விரு அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்கினால், ‘கேட்பது’ என்பது பொதுக்காரணியாக உள்ளதால், ஒரு சமன்பாடு (Equation) வருகின்றது.

 அது,

தெளிவு = செவிச்செல்வம் என்பது.

     தெளிவும், செவிச் செல்வமும் ஒன்றே என்று, சமன்பாடு (Equation) தெரிவித்தாலும், அறிவு, இன்னும் இதற்கு மேலும் தெளிவினை விரும்புகின்றது.  தெளிவாகிவிட்டால் இனிமேலும்,  மீண்டும்  ஐயம் எழாது  அறிவிற்கு.

     எனவே ‘கேட்டு அறிவதனை’, செல்வம் என்று தெய்வப்புலவர் கூறுவது எப்படி என ஐயம் எழுகின்றது அறிவிற்கு.  செல்வம் என்பது என்ன? செல்வம் என்பது பொதுவாக பொன், பொருளைக் குறிக்கும்.  செல்வம் என்பது ஒருவருக்குச் சொந்தமான மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு, சொத்து ஆகும்.

    தெய்வப்புலவர் கேட்டு அறிவதனை, சாதாரணமாக ‘செல்வம்’ என்பது என்ன என்று கூறும் அர்த்தத்தில் கூறவில்லை.  கேட்டு அறிவது என்பது செவிச்செல்வம் என்பதால் அது சாதாரணமான பருப்பொருள் செல்வமாக இருக்க முடியாது.  செவிச் செல்வம் என்பது அரூபா–ரூபச் செல்வம்.  அது அறிவிற்கு ஏற்படும் பூரணச்செல்வம்.  மற்ற செல்வங்கள்  உடல் வாழ்வதற்குத்  தேவையான உணவு, உடை, உறைவிடம் பெறுவதற்குத் தேவையானது.  ஆனால் அறிவு பேரின்பமாக வாழ்வதற்கு செல்வம் தேவையிருக்கின்றது.  அது தான் அறிவிற்கு ஏற்படவேண்டிய மிகமிகத் துல்லியமான புரிதல். எனவே அந்த மிகமிகத் துல்லியமான புரிதல் என்பதனை ‘தெளிவு’ என்கிறார் அறிஞர் திருமூலர்.

அதனையே தெய்வப்புலவர், குருவிடம், அறிவில் சிறந்தவர்களிடம், கேட்டு அறிவதனை செல்வம் என்கிறார். அதுவும் ஒருவர் பெற்றிருக்கும் செல்வங்களில் தலையாயச் செல்வம் என்கிறார்.

 குருவிடம் கேட்டறிவது என்பது, அறிவு மேலும், மேலும் தெளிவு பெற்று கடைத்தேறுவதற்கு பேருதவியாக இருக்கும். மேலும், கடைத்தேறுவதற்கு ‘நாள் கடந்து போகின்றதே’ என்கின்ற கவலையை(anxiety), நீக்குவதால், அறிவு தனது பூர்வீகச் சொத்தான, அமைதியினை அனுபவித்து வர முடிவதால், அதனை செல்வம் என்கிறார், அதே வேளையில் ‘புதிது, புதிதாக தெரிந்து கொண்டு தெளிவு அடைந்து வருகிறோம்’ என்கின்ற மகிழ்ச்சியான மகிழ்ச்சி. மகிழ்ச்சியான மகிழ்ச்சி செல்வம்தானே?!

 கல்வியின் சிறப்பையும், பயனையும் கூறுவதற்கு

    1) ‘கல்வி’ எனும் அதிகாரத்தை வைத்துவிட்டு,

    2) அக்கல்வியினை கற்காமல் போனால் அதனால் ஏற்படும் இழப்பைக் கூறுவதற்கு ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை வைத்துவிட்டு

    3)  அதற்குஅடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் நோக்கத்தை அறிவதனால்

திருவள்ளுவர் இல்லாத காலத்திலும், திருவள்ளுவரின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்கிறோம்.

      கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்று, அவ்வாறே கற்றதற்கு ஏற்ப வாழ வேண்டும் என்று (குறள் எண். 391) கூறிவிட்டு,

    அதே அதிகாரத்தில்(குறள் எண். 398)  ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்கிறார்.

    முடிவில் கல்வி பற்றிக் கூறுவதனைக் கவனிப்போம்.  ஒருவனுக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே என்கிறார்.  மற்ற செல்வங்கள் செல்வங்கள் அல்ல என்கிறார்.(குறள் எண் 400)

     இவ்வளவு  முக்கியம் வாய்ந்த கல்வியினை கற்காமல் போனால் அதன் விளைவுகளை ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை கல்வி எனும் அதிகாரத்திற்கு அடுத்ததாக வைத்துக் கூறுகிறார்.

   கல்லாதவரை விளைவில்லாத களர் நிலத்தோடு ஒப்பிடுகிறார்(குறள் எண்.406). 

    மேலும் கற்றவரை மக்கள் என்றும்,  கல்லாதவரை விலங்கோடு ஒப்பிடுகிறார் (குறள் எண்.410).  அதோடு தன் சிந்தனையை நிறுத்திக் கொள்ள வில்லை திருவள்ளுவர்!  அவர் அறிவை அறிந்த அறிஞராயிற்றே!

      கல்வியின் பயன்பற்றிக் கூறியும், அக்கல்வியினை கல்லாமல் போனால் அதன் இழப்பையும் கூறியிருந்தாலும், இதற்கும் தீர்வினை, ‘கல்வி’, ‘கல்லாமை’ என்னும் அதிகாரங்களுக்கு அடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதால், அறிஞர் திருமூலர் கூறும் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் என்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதனை அறிந்து இன்பமுறமுடிகின்றது.

 ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறட்பாவாகிய

 “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்; அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை”   குறள் எண். 411

 என்பதில் ஒருவருக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் செவியால், கேட்டறியும், கேள்விச் செல்வமே தலையானது என்கிறார்.  ஏன் கேள்விச் செல்வத்தை தலையான செல்வமாகக்  கருதுகிறார் என்பதற்கானகாரணத்தை அறிந்து கொள்ளவும்.

 (குறள் எண். 391, 399, 400, 410, 411, ஆகிய குறட்பாக்களை இணைத்துப்பார்த்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்து, ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பதற்கான தெளிவினைப் பெறவும்.  ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்றுரைப்பதுபோல் குருவின் திருவார்த்தைக் கேட்பதில் ஆனந்தம் ஏற்படும். தொய்வில்லாமல் கேட்க விரும்பும் அறிவு.  ஆனந்தம் ஏற்படுகிறது என்றால் அது அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துகின்றது என்றுதானே பொருள்?!

FFC-166-dheaivappulavar

கல்வி-கேள்வி

கற்றல் என்பது பார்ப்பது, வாசிப்பது, கேட்பது ஆகியவற்றால் சாத்தியமாகின்றது. ஒன்றைப் பார்த்து அதனைப்பற்றி  தெரிந்து கொள்ளலாம். பார்த்து முழுமையாகத் தெரிந்து கொள்வது   சாத்தியமில்லை. ஏனெனில் ஐயம் எழுந்தால் அதனைக் கேட்டுத்தான் போக்கிக் கொள்ள வேண்டும்.  அதே போல் வாசித்து கற்றலில் முழுமையாக தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை.  ஐயம் எழுந்தால் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  கேட்டு கற்றலில் ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டுத்  தெரிந்து கொள்ளலாம்.  ஐயங்கள் நீங்கினால் அறிவு அதில் தெளிவு பெறுகின்றது.

குருவானவர் அறியாமையை நீக்குபவர்.  எனவே அவருடைய உபதேசங்கள், வார்த்தைகள் அந்த அலைகளைத் தாங்கிவரும்.  எனவே அவை காதின் வழியாக சென்று கருமையத்தில் பதியும்.  குருவின் திருவார்த்தைக் கேட்கக் கேட்க தெளிவினை ஏற்படுத்தும். கற்க வேண்டியதைக் கற்று, அதற்கு ஏற்றாற்போல் வாழ்வது, ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கு உதவியாக இருக்கும்.  கல்வியைவிட சிறந்த செல்வம் வேறு இல்லை என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.  கற்றவரை மனிதராகவும், கல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார்.  இப்படிப்பட்ட கல்வியினை கேட்டறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி எதற்காகத் தேவை அறிவிற்கு?

அறிவு என்பது எது?  உணர்வது எதுவோ அதுவே அறிவு. அறியக் கூடியது எதுவோ அதுவே அறிவு.  எனவே உணர்வதும், அறிவதும் எதுவோ அது அறிவு. அறிவதற்காகவே உள்ளது அறிவு.  உணரும்போது அறிவிற்கு இன்பமோ, துன்பமோ ஏற்படுகின்றது.  அறியும்போது அறிவிற்கு என்ன ஏற்படும்? அறியும்போது அறிவிற்கு அதேபோன்று இன்பமோ, துன்பமோ ஏற்படும். 

     இன்பம், துன்பம் எப்போது ஏற்படுகின்றன?  

புலன்கள் வழியாக, அளவு, முறையோடு அனுபவித்தால் அது இன்பமாக இருக்கும்.  இதற்கு எதிர்மறையில் அனுபவித்தால் இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை வேதாத்திரிய இன்ப-துன்பவியல் அறிவிக்கின்றது. புலன் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலன்இன்பம்.

 கல்வி என்பது அறிவிற்கு செல்வமாகும்.  அச்செல்வமாகியக் கல்வி பார்த்தல், வாசித்தல், கேட்டல் ஆகியவற்றின் வழியாகக் கற்கலாம்.   பார்த்து கற்பதில் அறிவு தானாகவே அறிந்து கொள்கின்றது. வாசித்து கற்பதில், பிறர் எழுதியுள்ளதிலிருந்து கற்கின்றது. இந்த இரண்டிலுமே ஐயங்கள் எழலாம். ஐயத்தைப் போக்கிக் கொள்வதுஎப்படி?  பிறரைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள முடியும். பிறரைக்கேட்டுப் பெறுவது தான்  கேள்விச்செல்வம்.

 திருமூலர், திருவள்ளுவர் வரிசையில் மற்றொரு தமிழ்ப்புலவர் கேட்டறிவதுபற்றி என்ன  கூறுகிறார் என்பதனையும் அறிந்துகொள்வோம். அத்தமிழ்ப்புலவர் பாடியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

“உணற்(கு)இனியஇன்னீர்பிறி(து)உழிஇல்என்னும்
கிணற்(று) அகத்துத்தேரைபோல்ஆகார் – கணக்கினை
முற்றப்பகலும்முனியா(து) இனிதோதிக்
கற்றலிற்கேட்டலேநன்று.”                                —  மூன்றுரையரையனார்

 முதல் இரண்டு அறிஞர்களான அறிஞர் திருமூலர் மற்றும் தெய்வப்புலவர் ஆகிய இருவர்,  கூறும் முறையே தெளிவு, செல்வம் இரண்டும் ஒன்றே என்று, சமன்பாட்டின் மூலம் உறுதி படுத்திவிட்டோம்.   இப்போது மூன்றாவது அறிஞரான தமிழ்ப்புலவர் ‘கேட்பது’ பற்றியே கூறுவதனால் இவரும் அந்த இரண்டு அறிஞர்களுடன் எவ்வாறு இணைந்து கொள்கிறார் என்பதனை அறிந்துகொண்டால், அறிஞர் திருமூலர் உறுதிகூறும் ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பது எவ்வாறு என்று தெளிவாகிவிடும்.

 பழமொழியின் பொருள்: தமிழ்ப்புலவர் மூன்றுரையரையனார்  ‘கற்றலிற்கேட்டலேநன்று’ என்று கூறுகிறார். அதாவது அறிஞர்களிடம் விருப்பத்துடன் கேட்டு அறிந்து கொள்வது கற்றலைவிட நல்லது என்கிறார்.  அதற்கு பாடலாசிரியர் எடுத்துக் கொண்ட உதாரணம் கிணற்றுக்குள் இருக்கும் தேரை.   ஆறு மீட்டர் ஆழமுள்ள  கிணற்றினுள் இருக்கும் வெளி உலகைக் காணமுடியாத தேரை தான் வசிக்கும் கிணற்றிலுள்ள உவர்ப்பில்லாத நல்ல நீர் வேறு எந்த இடங்களிலும் இல்லை என நினைக்கின்றது. 

 நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்த ஒருவர், தான் படித்ததுதான் எல்லாமே என ஒருவேளை அத்தேரையைப்போல் நினைத்துக் கொள்ளலாம் இல்லையா? இருந்தாலும், மற்றவர்கள் நம்மைவிட வேறு நல்ல கருத்தைக்களைத் தெரிந்து வைத்திருந்தால், அதனைக் கேட்பதால் நம் அறிவின் தெளிவிற்கு மேலும் தெளிவினைச் சேர்க்குமன்றோ!

எனவே நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்து தெரிந்து கொண்டிருந்தாலும், அறிஞர்களிடம் விரும்பிக் கேட்டலே நல்லது என்பதுதான் ‘கற்றலிற் கேட்டலே இனிது’என்பதற்கான பொருள்.

   கற்றல் என்பது பார்ப்பது, நல்ல நூல்களை தானே வாசிப்பது ஆகியவற்றால் நடைபெறுவதைவிட, குருவானவர் கற்பிப்பதைக் கேட்டு அறிந்து கொள்வது சிறப்பு என்கிறார். தானே கற்பதில் தான் புரிந்து கொண்டதே எல்லாம் என்பதான முடிவுக்கு வந்துவிடலாம். இதற்கப்பால் ஒன்றுமில்லை என நினைக்கத்தோன்றும். அதற்குப்பதிலாக ஒரு ஆசிரியரிடமோ அல்லது குருவிடமோ கேட்டிருந்தால் நாம் வியக்குமளவிற்கு புரியும்படி விளக்கி இருப்பார். இதற்கானக் காரணம், ஆசிரியரோ, குருவோ, ஒரு கருத்தை வலியுறுத்தும் பல நூல்களைப் படித்திருப்பார். மேலும், இறை உணர் வாழ்வியல் அனுபவங்களைப் பெற்றிருப்பார். ஆகவே ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுத் தெளிவு கண்டவர் என்பதால், கேட்பவரையும் தெளிவடையச் செய்வதும் எளிது.

  மேலும், மேலும்  ‘Don’t delay enlightenment’ என்ற அறிவுறுத்தலின் பயனை விரைவில்அடைய, கற்றலினும் கேட்டல்தானே நன்று?

    இதுவரை மூன்று அறிஞர் பெருமக்கள் வாய்மொழியாக ‘கேட்டலின்’ பெருமையை உணர்ந்தோம். கேட்டலினால் தெளிவு எவ்வாறு பிறக்கின்றது என்பதனையும் அறிந்தோம். வரும் அறிவிற்கு விருந்தில் (10.04.2016) மகரிஷி அவர்கள் கூறும் தெளிவை அறிந்து கொண்டு இயல்பூக்க நியதியின் துணையுடன் ‘தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’ என்கிற உறுதியான சிந்தனைக்குள் செல்வோம்.

வாழ்க வளமுடன்.

வாழ்க மனித அறிவு!                            வளர்க மனித அறிவு!