FFC – 148-திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்.

வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

 திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்.

FFC – 148

27-12-2015 – ஞாயிறு

குறிப்பு:- வாழ்க வளமுடன். கேட்கப்பட்டுள்ள வினாவின் விடையை விரிவாக ஆராய இருப்பதால், இன்றைய சத்சங்கம் முடிவதற்கு(article is lengthy)அதிக நேரம் ஆகலாம். அதற்காகவே விடை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தரப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக / ஒருசேர படித்து முடிக்க நேரம் கிடைக்காதவர்கள் முதல் பகுதியை படித்து முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது படியுங்கள். ஒருசேர படித்திட நேரம் இருக்குமானால் இடைவெளியில்லாமல் படிக்கலாம்.

வாழ்க வளமுடன். ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ கேட்கப்பட்ட ஒரு வினாவிற்கான விடையை விரிவாக இன்றைய விருந்தில் சிந்திப்போம்.

முதலில் தலைப்பின் கீழ் சிந்தனையைத் தொடர்வோம். சிந்தனையின் முடிவில் நீங்களே எந்த வினாவிற்கான விடை உள்ளது என அறிவீர்கள். வாழ்க வளமுடன்.

பகுதி – 1

திருவேதாத்திரியம் என்றால் என்ன என்று நமக்கெல்லாம் தெரியும்.
மனித சமுதாயம் இன்பம் மட்டுமே இயற்கையிலுள்ளதைப் புரிந்து கொண்டு,
அறியாமையால் இன்பத்தை துன்பமாக மாற்றி அல்லலுராமல்
அறிவின் நிலையில் உயர்ந்து மிக மிக எளிதாக இன்பமாக வாழ முடியும்
.
என வாழ்க்கைக்கு வாழ்வியல் தந்த வாழ்வியல் வல்லுனரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்(தத்துவ-உண்மைகள்) அனைத்துமே திருவேதாத்திரியம் என்கின்ற ஒரு சொல்லால் புனிதமாக அழைக்கப்படுகின்றது. எவ்வாறு மூலநாயனார் அருளியுள்ள மந்திரம் திருமந்திரம் என்றும், வள்ளுவர் அருளியுள்ள குறள் திருக்குறள் என அழைக்கப்படுகின்றதோ அதுபோல் வேதாத்திரியத்தை திரு வேதாத்திரியம் என அழைத்து போற்றுகிறோம், மகிழ்கிறோம்..
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவேதாத்திரியத்தை எவ்வாறு ஞானத்தின் ஊற்றுக் கண் என முடிவு செய்துள்ளீர்கள் என ‘சிந்திக்க வினாப்பகுதியில்’ வினா கேட்கப்பட்டிருந்தது.
திருவேதாத்திரியத்தை பாரிஜாத மலர் என்று போற்றி மகிழ்கிறோம்.. ஏன்? திருவேதாத்திரியத்தால் அடைந்த பயனால், நன்றி உணா்வாக திருவேதாத்திரியத்தை பாரிஜாத மலர்’ என்கிறோம். நன்றி உணர்விற்காக மட்டுமேவா அவ்வாறு போற்றுகிறோம்.!. வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனில் உள்ளது.
மனிதனின் பண்பேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாகக்(corollary) கருதப்படுவது ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது’ என்பது. இயற்கை/இறை எதனை எதிர்ப்பார்த்து திருவேதாத்திரியத்தை மனித குலத்திற்கு வரமாக அளித்துள்ளது? மனிதகுலத்தில் விரைவில் பண்பேற்றத்தை எதிர்பார்த்து வேதாத்திரியம் வரமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே இயற்கை/இறை எதிர்பார்க்கின்ற பண்பேற்றத்தில் உயர்ந்து வருவதனையே வேதாத்திரியத்தின்(மற்றவர்களது) உயர்வை போற்றுவது(மதித்தல், ரசித்தல்) எடுத்துக்காட்டுகின்றது.
அன்றும் சரி (திருவள்ளுவர் காலம்) இன்றும் சரி, பொருட்செல்வம் ஒன்றை மட்டுமே செல்வம் என்று கருதும் மனித சமுதாயத்திற்கு, திருவள்ளுவர், மனிதனுக்கு ஒன்பது செல்வங்கள் அவசியம் எனக் கருதி ஒன்பது உடைமை அதிகாரங்களை வகுத்துள்ளதில் ‘அருள் உடைமை’ என்பதும் ஒன்று. அருள் உடைமை அதிகாரத்தில் வரும் முதற் குறளைக் கவனிப்போம்.
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட் செல்வம்
பூரியார் கண்ணும் உள.” குறள் எண் 241
பூரியர் = கீழோர்.
விளக்கம்:- பொருட் செல்வம் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன. உயர்ந்தவர்களிடத்தில் மட்டுமே உள்ள அருளாகிய செல்வம் செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
ஈகையைப் பற்றி பத்து பாக்களை ஒரு அதிகாரத்தில் கூறிவிட்டு, அடுத்த அதிகாரத்தை ‘புகழ்’ என வைத்து அதில் மீண்டும் ஈகையையும் புகழையும் இணைத்துக் கூறவந்த திருவள்ளுவர், முதல் குறளிலேயே
”ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” என்கிறார்.
விளக்கம்: – வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது–பயன் வேறொன்றுமில்லை.
பத்தொன்பது நூற்றாண்டுகள் பிறகு, திருவள்ளுவர் வழி அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘ஊதியம்’ என்கின்ற சொல்லுக்கு கூறும் பொருளைக் கவனித்து மகிழ்வோம். உயிருக்கு ஊதியம் என்கிறாரே அறிஞர் திருவள்ளுவர்? உயிருக்கு ஊதியம் என்றால் என்ன? பொதுவாக ஊதியம் என்பது செய்த செயலுக்கு(வேலைக்கு) கொடுக்கப்படும் சம்பளம் எனப் பொருள்படும். அதாவது செய்த செயலுக்குக்(வேலை) விளைவாக கிடைப்பது பணம் என்கின்ற ஊதியம். அவ்வூதியம் அவரின் அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்யும். தேவைகள் பூர்த்தியாக வில்லை எனில் அவருக்கு வாழ்க்கையில் குறையிருக்கும். ஆகவே ஊதியம் என்பது குறைகளைப் போக்கி நிறைவு செய்யும் என்கின்ற பொருள். இதனைக் கருத்தில் கொண்டு, ‘ஊதியம்’ என்பது வாழ்வின் குறைபோக்கி நிறைவு தரும் வரவு அல்லது விளைவு எனக் குறிக்கும் சொல்லாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். வாழ்வில் குறை என்பது பொருட் செல்வத்தில் குறைவாகவும் இருக்கலாம். அல்லது அறிவுச் செல்வத்தில் குறைவாகவும் இருக்கலாம். பொருட்செல்வம் மிகையாக இருந்து அறிவுச்செல்வம் குறைவாக இருக்கலாம், அறிவுச் செல்வம் மிகையாக இருந்து இருந்து பொருட்செல்வம் குறைவாக இருக்கலாம். பொருட்செல்வமும் வேண்டும். அறிவுச்செல்வமும் வேண்டும். அறிவுச் செல்வம்தான் அருட்செல்வத்தைத் தரவல்லது,
திருவள்ளுர் வழி அவதரித்ததால் மகரிஷி அவர்கள் திருவள்ளுவர் என்ன நினைத்து கூறியிருப்பாரோ அந்த உட்பொருளையே கூறும் சிறப்பு பெற்றவர். அதானால்தான் திருக்குறளின் உட்பொருள் விளக்கம் என மிக மிக முக்கியமான ஐம்பது குறட்பாக்களுக்கு விளக்க நூல் எழுதியுள்ளார். அதனைக் கண்ணுரும்போது அனைத்து குறட்பாக்களுக்குமே உட்பொருள் விளக்கம் அவசியமாகின்றது எனத் தெரிகின்றது.
‘ஈகை’ என்பது இயற்கைக்கு இசைபட வாழ்தல் என்பதால், உயர்ந்தவர்கள் தான் பெற்ற அருட்செல்வத்தை, தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கு வழங்குகின்றனர். அதுதான் அறநூல்களாகத் திகழ்கின்றன.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதனின் சிறப்பு என்கின்ற தலைப்பில் அருளியுள்ள 101 வரிகளில் . 32,33,34,35 ஆகிய நான்கு வரிகளில் கூறுவதனைக் கவனிப்போம்.

FFC-148-

தான் இயற்றிய கவிக்கு இலக்கணமாகவே திகழ்ந்தவர் அவரே. அவ்வாறு திகழ்ந்ததால்தான் அவர் அக்கவி இயற்றியுள்ளார்.
ஒருவன் அறிவில் உணர்வது என்பது, அது—இயற்கை/இறை உணர்த்த இவன் உணர்வது சிறப்பு. இவன்பால் இயற்கை/இறை கருணையால் கொடுத்த செல்வம் தானே! அதனை இவன் மட்டுமே வைத்துக்கொள்ளவா கொடுத்தது? எனவே அந்நிலையில் உயர்ந்தவர் அதனை உலகோர் அனைவரும் ஏற்றுக் கொண்டு அனுபவிக்க பரவச் செய்யும், பயனுள்ள அற்புத அறிவின் சிற்பமே மனிதன் என்கிறார். ஒருவருக்கு இயற்கை/இறையால் உணர்த்தப்பட்டது, சமுதாயச் சொத்து என்பார். அதனை சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய தொண்டுகளான, உடலால், பொருளால், அறிவால் – அருளால் மூன்றில் அருட்தொண்டாக செய்துவிட வேண்டும் என்பார். இதனைக் கருத்தில் கொண்டுதான் மனவளக்கலையை வடிவமைத்து, ஒவ்வொரு மனவளக்கலைஞர்களையும் அருள் நிறையப்பெற்ற அருள்நிதியாக்கி, இறைத்தூதுவர்களாக்கி வருகிறார் மகரிஷி அவர்கள். ஆகவே இறைத்தூதுவரின் பணி அருட்பணியாகும். எனவே இந்தப்பணியில் இறையைப்பற்றி எடுத்துக்கூறுவதற்கு இறையைப்பற்றிய தெளிவையும், நாம் அடைந்த பயனையும் பிறர்க்கு சரியாக எடுத்துரைத்தால்தான் பயன் பெறும் அன்பர்கள் மிகுந்த பயனை விரைவில், எளிதாகப் பெறுவர். இந்த நிலையில்தான் நாம் வேதாத்திரிய உண்மைகளைப் போற்றி, போற்றி மகிழ்கிறோம்.
பொதுவாக மலரில் தேன் ஊறும். அதனை பருக தேனீக்கள் வந்து மொய்க்கும். தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலர் விரும்பியதெல்லாம் தரும் என்கின்ற கூற்று உள்ளது. ஆகவே திருவேதாத்திரியத்தில் தனது உச்சநிலையை அடைவதற்கு, விரிவடைந்து தனது தாகத்தைப் போக்கிக் கொள்ள விருப்பம் கொண்டு திருவேதாத்திரியத்தை அறிவுத்தேனீக்கள் நாடி வருகின்றன. ஆகவே இந்த நிகழ்வைக் கருதி பாரிஜாத மலரை உவமானமாகக் கொண்டு திருவேதாத்திரியத்தை பாரிஜாத மலர் என்றும், அறிவை தேனீக்களோடு ஒப்பிட்டும் திருவேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என்கிறோம்.
இப்போது திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என்கிறோம். இது திருவேதாத்திரியத்தைப் போற்றுதலாகும். இங்கே ‘ஊற்றுக்கண்’ என்பதனை உவமானமாகக் கொண்டு திருவேதாத்திரியம் மனித அறிவை உச்ச நிலையான ஞானத்திற்குக் கொண்டு செல்வதால் ‘திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்’ என அழைத்து, நன்றியை தெரிவித்து மகிழ்கிறோம். ஏன் ‘ஊற்றுக்கண்’ என்கின்ற உவமானத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று அறிந்தால் . இதுவரை திருவேதாத்திரியத்தின் பயனை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அதனை உறுதிபடுத்த முடியும் இச்சத்சங்கத்தில்.
மனிதன் 16 வகைகளில் வித்தியாசப்படுவதால், ஒருவருடைய வாழ்வியல் அனுபவ உண்மைகளை(தத்துவ உண்மைகள்) பரிமாறிக் கொள்ளும் போது, அது எளிதில் விளங்குதற்கு, உவமான–உவமேயம் தேவைப்படுகின்றது. தெரிந்த ஒன்றோடு தெரியாத ஒன்றை ஒப்புமைக் காட்டி புரிய வைக்க உவமான உவமேயம் தேவைப்படுகின்றது. தெரிந்த ஒன்றைப்பற்றிய சிறப்பையோ, தன்மையையோ முழுமையாக உணர்ந்திருப்பதால், அதனுடன் தெரியாத ஒன்றின் தன்மையையோ, சிறப்பையோ ஒப்பிட்டுப்(mapping) பார்த்தால்தான் தெரியாத ஒன்றைப்பற்றிய – தன்மையையோ, சிறப்பையோ முழுமையாக உறுதி செய்து நாமே கண்டுபிடித்துள்ளது போல் அறிந்து கொண்டு பயன் பெற முடியும்.
“ஒருவன் ஒன்றை உண்மை என்று ஆராய்ந்து உறுதி செய்துவிட்டால் அதைச் செய்து முடிக்கும் ஆற்றல் அவனுக்கு ஏற்பட்டு விடும்” என்று க்யோதே என்கின்ற அறிஞர் ஒருவர் கூறுவதுபோல் தெரியாத ஒன்றின் உண்மையை ஆராய்ந்து தெரிந்து கொண்டால் அதனை அறிந்து கொள்வதில், செய்து முடிப்பதில் உறுதியும் ஆற்றலும் வந்துவிடும்.
உதாரணத்திற்கு மகரிஷி அவர்கள் பிறவியின் உண்மை நோக்கத்தை அறிந்து படிப்படியாக அதில் வெற்றி பெற ஆற்றல் பெற்றதே முதல் உதாரணமாகக் கொள்ளலாம்.
அறிஞர் க்யோதே அவர்கள் கூறும் ஆற்றலை பெறுவதற்காகவேதான் திருவள்ளுவரும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மற்றும் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் உண்மையினை(குறள் எண் 355, 423) அறிந்து கொள் என்கிறார். இவ்விரண்டு குறட்பாக்களிலும் மெய்ப்பொருளைக் காண்பதுதான் அறிவு என்கிறார்.
எந்த ஒரு அறிதலும் வாழ்க்கையை சிறப்புடையதாக்கவே ஆகும். ஆகவே உண்மைப் பொருளை அறிதலால் வாழ்க்கை சிறப்புடையதாக செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கு நெடுங்காலப் பிறவித் தொடராக வரும் பழக்கப்பதிவு தடையாக இருப்பதால் இப்பிறவியில் மட்டுமே பெற்றுள்ள விளக்கப்பதிவு, பழக்கப்பதிவின் அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் பெற்று, பழக்கப்பதிவை வெற்றி கொள்ள ஆற்றல் பெறவேண்டும்.
அந்த ஆற்றலைப் பெறுவதற்கான வழிகளே, அறிஞர் க்யோதே “ஒருவன் ஒன்றை உண்மையென்று ஆராய்ந்து உறுதி செய்து விட்டால். அதைச் செய்து முடிக்கும் ஆற்றல் அவனுக்கு ஏற்பட்டுவிடும்“ என்பதும், மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவர் கூறுவதும், ‘தகவல், உறுதி செய்தல், மாற்றமடைதல்’ என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் தாரக மந்திரமும் ஆகும்.
ஒன்றின் உண்மையை அறிந்துகொள்ள முயற்சிக்கும்போது, உவமானப் பொருளின் சிறப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என்கின்ற போற்றுதலில் காட்டப்பட்டுள்ள ‘ஊற்றுக்கண்’ என்பது பற்றி ஆராய்வோம். ஊற்றுக்கண் என்பதில் இரு சொற்கள் உள்ளன. ஒன்று ‘ஊற்று’. மற்றொன்று ‘கண்’. இரண்டு சொற்களையுமே அனைவரும் அறிவர். இருப்பினும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

பகுதி – 2

 

ஊற்று’ என்றால் என்ன? 1) நிலத்திலிருந்து வரும் நீர்ச் சுரப்பு – spring. 2) மேல்நோக்கிப் பீச்சும் நீர் –fountain. ‘ஊற்று’ எங்கு காணப்படும்? கிணற்றில், ஆறுகளில் காணப்படும். ஊற்றின் வழியாக மறைந்திருக்கும் தண்ணீர் வெளிவந்து நிரம்பும்.
கண் என்றால் அனைவரும் அறிவோம். கண் பார்ப்பதற்கு உதவுகின்ற உறுப்பு. இங்கே கண் என்பது சிறு துவாரம்(orifice). ஊற்றுக்கண் என்பது கிணறு போன்றவற்றின் அடியிலிருந்து, ஒரங்களிலிருந்து நீர் சுரந்து வரும் வழி(orifice of a spring). ஊற்றுக்கண் அடைபட்டுவிட்டால் கிணற்றில் நீர் ஊறாது. ஆகவே. ஆகவே கோடை காலத்தில் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து நீர் கலங்களாக ஆகும்போது, கிணற்றில் தூா் வாரப்படும். அதாவது நீரை இறைத்துவிட்டு அழுக்கினால் அடைபட்டிருக்கும் ஊற்றுக்கண்ணை கழுவி அழுக்கை நீக்கி சுத்தம் செய்தால் நீர் ஊறும், . அறிஞா்களைப் போற்றும்போது ‘அவா் ஞான ஊற்று’ என்போம். அப்படியானால் என்ன பொருள்? அறிஞர் என்பவர் யார்? அறிவை அறிந்தவர் அறிஞர்? அறிவை அறிந்தவர் ஞானக்கடல். அவரிடம் எப்படி தூரு வாரிய கிணற்றில் நீர் வேகமாக சுரந்து வருகின்றதோ, அறிவை அறிந்த அறிஞரிடம் மும்மலங்கள் நீங்கியிருப்பதால், அறிவை அறிந்த தெளிவே ஞானம் என்பதால், அறிஞர் ஞான ஊற்றாகத் திகழ்கிறார். வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானத்தின் ஊற்று.
கிணற்றில் உள்ள ஊற்றுக்கண்ணைச் சுத்தம் செய்தால் அடைப்பட்ட நீர் சுரக்க ஆரம்பித்து கிணற்றில் நல்ல நீர் சுரப்பதைப்போல், திருவேதாத்திரியம் இருளில் உள்ள அறிவை ஒளி பெறச்செய்து ஞானமாகியத் தெளிவை மேலும் மேலும் தந்து கொண்டே இருப்பதால் திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என்கிறோம்.
ஞானம் பற்றி மகரிஷி அவர்கள் ‘பொதுவாக ஞானம் என்றால் தெளிவு என்று அர்த்தம். சிறப்பாக சொல்வதென்றால் அறிவை அறிந்த தெளிவு’ என்பார். உண்மையன்றோ! அறிவு என்றால் என்ன? அறிவு என்கின்ற காரணப்பெயரைக் கொண்டது அது. அறிய வேண்டியதை அறிய வேண்டுமல்லவா? ஆகவே அறிவு அறியவேண்டியது என்ன? அறிய வேண்டிய அறிவு தன்னையே அறிதல் ஆகும். அதாவது அறிவு அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். எனவேதான் ‘தின்றுத்திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என வினவி அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அன்பா்களை அழைக்கிறார் மகரிஷி அவர்கள்.
ஞானம் என்பது ஆறாம் அறிவின் உச்சநிலை. களங்கள் நீங்கி அறிவு அறிவொளியாகத் திகழ வேண்டும். திருவேதாத்திரியம் அறிவிற்கு என்னென்னத் தெளிவை கொடுக்கின்றன.?
1) இயற்கையின் ஆதிநிலையை ஐயமின்றி கூறுகின்றது.
2) அந்த ஆதிநிலையையே தெய்வம் என்கின்றது.
3) வெளியாக இருந்த ஆதிநிலை எவ்வாறு பஞ்சபூதங்களாகியது என்கின்றது.
4) சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் கூறிய பிரணவத்தை விஞ்ஞான அடிப்படையில் கூறுகின்றது.
5) பருப்பொருள் எவ்வாறு அணுக்களால் உருவானது எனக் கூறுகின்றது.
6) இதற்கெல்லாம் காரணமான ஒழுங்காற்றலாய் திகழ்வதே அறிவு என்கின்றது.
7) ஏனெனில் உயிர்களாக வரும்போது அந்த ஒழுங்காற்றலே உணா்தலுக்கு காரணமாக உள்ளது என்பதால் அதனை அறிவு என்கின்றது.
8) அவ்வறிவையே தெய்வம் என்கின்றது.
9) அது மனிதனாக தன்மாற்றம் அடைந்ததைக் கூறுகின்றது.
10) தெய்வமே மனிதனாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அவனிடம் களங்கங்கள் இருப்பதற்கு, தெய்வம் நேரிடையாக மனிதனாகத் தன்மாற்றமடையாமல், விலங்கினங்களாக வந்துதான் மனிதனாக வந்துள்ளதால், விலங்கினப்பண்பே மனிதனிடம் களங்கங்கள் உள்ளதற்குக் காரணமாகக் கூறுகின்றது.
11) அதனைநீக்கிக் கொண்டு மனிதனாக வாழ்ந்து தன்மாற்ற சுழற்சியினை முடித்துக் கொள்வதற்காகவே தான் இந்த மனிதப் பிறவி என்கின்றது.
12) வாழ்க்கைக்கு அர்த்தத்தை புரிய வைக்கின்றது. எனவே வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அறிய வைக்கின்றது.
13) நிலையாமையை புரிய வைக்கின்றது.
14) இன்பவியலைத் தந்துள்ளது.
15) மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற வாழ்வியலைத் தந்துள்ளது.
16) மனிதனை இறைத்தூதுவர்களாக்கிக் கொண்டிருக்கின்றது.
இன்னும் எவ்வளவோ தருகின்றது.
TO
∞ Infinite numbers of benefits.

இயற்கை/இறைக்குள்ள பெறும் சிறப்பை, தன்மையை, திறமையை ‘entelechy’ என்கின்ற ஆங்கிலச் சொல்லால் உணா்த்துவார் மகரிஷி அவர்கள். ‘entelechy’ என்றால் என்ன பொருள்?
. Entelechy(noun)= 1) Realisation
2) the becoming or being actual of what was potential
3) developed perfection
4) what gives perfection
5) informing spirit
தமிழில்
மெய்விளக்கவியலில் பயன்படுத்தப்படும் சொல்
Entelechy= 1) பொருளின் நிறை நிலை
2) பொருண்மை
மெய்விளக்கவியலில் பயன்படுத்தும் சொல் என்பதால் பொருளின் நிறை நிலை என்பது, அந்த மறைபொருளான மெய்ப்பொருளின் நிலை என்றாகின்றது.
பொருண்மை எனில் உண்மையான பொருள் நிலை. பொருளின் தன்மை. உதாரணத்திற்கு பாடலின் பொருண்மைக்கு( உட்கருத்தை) ஏற்ப ராகத்தை அமைத்தார் இசை அமைப்பாளர் என்கிறோம். மகரிஷி அவர்கள் Entelechy என்கின்ற சொல்லை பயன்படுத்திய வாக்கியத்தை உற்று நோக்குவோம்.
ஆங்கிலத்தில் “All things evolve in orderly fashion, directed by entelechy(omniscient consciousness with inner purpose) of Nature.’”
தமிழில் இயற்கையின் எல்லாவற்றையும் அறியும் பேரறிவின் உள்ளார்ந்த நோக்கத்தின் தூண்டுதலினாலேயே எல்லாப் பொருட்களும் ஒழங்கான அமைப்பில் தோன்றுகின்றன.
‘Entelechy’ என்கின்ற வார்த்தையின் பொருட்கள்(அர்த்தங்கள்) தரப்பட்டுள்ளன. எனினும் இதுவே அந்த வார்த்தையைப் புரிந்து கொண்டதாகாது. அந்த வார்த்தை தெரிவிக்கும் நிலையினை உணர்ந்ததாகாது. இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்து பெறும் தெளிந்த தெளிவு இயற்கையின்/இறையின் தன்மாற்றங்களில் வெவ்வேறு உயரினங்களாக மாற்றம் அடைந்ததில், ஐயங்கள் இருந்தாலும், ஐயமென்று தெரியாமலே புரிந்து கொண்டதாக நினைப்பதற்கும், ஐயம் இருப்பதை உணர்ந்து கொண்டு ஆனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிந்தனைக்கும் பேருதவியாக இருக்கும், எப்படியெனில், மகரிஷி அவர்கள், எவ்வாறு இயற்கையின்/இறையின் தன்மாற்றங்களை அறிவின் உணர்அனுபவங்களாகப் பெற்றாரோ, அதே அனுபவத்தைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.
எனவே இத்தகைய பெருமைவாய்ந்த இயற்கை/இறை கொடுத்துள்ள வேதாத்திரியத்தில் கொடுக்கும் தெளிவுப்பட்டியலில் நீண்டு கொண்டே போகும் என்பதால் 16 வரை நிறுத்தப்பட்டு TO ∞ Infinite numbers of benefits. என குறிப்பிட்டுள்ளோம். எவ்வாறு இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் ஆங்காங்கே சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள், தேவைகள், முழுமை அடையக் கூடிய சிறப்பு இருக்கின்றதோ, அதே வகையில் தன்மாற்றங்களில் கடைசியுமான ஆன்மா முழுமை அடைவது என்பதை உணர்ந்து அதில் ஆர்வம் எழுந்துள்ள அறிவிற்கு என்னெவெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் தந்து அருளுகின்றது திருவேதாத்திரியம். ஆர்வமுள்ள ஆன்மாவிற்கு மட்டுமல்ல, மேடு பள்ளம் இருப்பது என்பது போல், இன்பமும் துன்பமும் உண்டு என்பதுபோல், இவ்வுலகம் உய்வதற்கான வழிகள் ஏதும் இல்லை என்கின்ற கருத்து ஒருவேளை இருந்தாலும், இவ்வுலகம் உய்வதற்கான அனைத்து முடியும் வழிகளையும் தரவல்லது வேதாத்திரியம்.

இப்படி யோசித்துப் பார்க்கலாமே‘ இயற்கை/இறை வேதாத்திரி மகரிஷியின் வாயிலாகத் திருவேதாத்திரியத்தை மனிதகுலத்திற்கு அளித்துள்ளது. வேதாத்திரி மகரிஷி அவர்களே இயற்கை/இறை உணர்த்தியதை, தான், தெரிவிப்பதாகத்தானே கூறுகின்றார். இதுதானே சுத்த அத்வைதம். வேதாத்திரி மகரிஷி அவா்கள் தன்னுடைய வாழ்க்கையில் அறிவின் அனுபவங்களைத்தானே கூறியிருக்கிறார். அதுதானே திருவேதாத்திரியம் எனப்படுகின்றது. அந்த வாழ்க்கை அனுபவங்கள் சிறுவனாக இருந்த வேதாத்திரியை அரும் பெரும் ஞானவானாக்கியது என்றால் அந்த திருவேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண் என்பதில் எள்ளளவும் ஐயமிருக்க வாய்ப்பில்லை.

ஒன்றுமில்லா ஒன்றாக உள்ள வெட்டவெளிதான் பிரபஞ்சமாகவும் மனிதன் வரை எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்தது என்று அறிவதில் ஆரம்பத்தில் இருந்து வந்த வியப்பு, அதுவும் நாமும், அனைத்தும் ஒன்றே என்கின்றத் தெளிவு, தெளிவாகத் தெளிவாகப் போய்விடும். இருப்பினும் ஆனந்தத்திற்கு குறைவிருக்காது. ஆனால் திருவேதாத்திரியம் அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள்  வியப்பிலும் வியப்பாக உள்ளார். அதிசயங்கள் பல இருப்பதால் முக்கியமான 7 ஐ மட்டும் ( 7 wonders) உலக அதிசயங்கள் பட்டியலில் உலகம் வைத்துள்ளது.  உலகத்தை உய்விக்க உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவியவரும், வேதாத்திரியம் அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள், நிறை அறிவில் எல்லோரும் ஒன்றே என இருந்தாலும், அவர் தனிப்பிறவியிலும் தனிப்பிறவி என்பதால், அந்த ஏழு அதிசயங்களோடு(சடப்பொருட்கள்) மகான் வேதாத்திரியை(வேதாத்திரியம்) நாம் சேர்த்து உலக அதிசயங்கள் பட்டியல் வரிசையில் முதலில் வைப்போம். வாழ்க வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவாற்றல். தொடர்ந்து அவரின் அறிவாற்றல்-இறையின் அறிவாற்றல் உலக மக்களின் வழியாக வளரட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்
வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

 

முக்கிய அறிவிப்பு

வாழ்க வளமுடன்!

அடுத்த சத்சங்கத்தில் (30-12-2015 புதனன்று) சிந்தனைப்பயிற்சியில் உள்ள ‘சிந்திக்க வினாக்கள்’ மற்றும் ‘சிந்திக்க அமுத மொழிகள்’ ஆகிய பகுதிகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடையினை  ஆராய்வோம். வாழ்க வளமுடன்.

எல்லோரும் இணையதள சத்சங்கத்திற்கு கூடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றது.

வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்