தன்முனைப்பினை நீக்குவோம்

வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

தன்முனைப்பினை நீக்குவோம்

FFC- N240

02-11-2016- புதன்

adi-sankarar-ramakrishna-paramahamsar-vethathiri-maharishi

மனிதர்களில் இருவகை ‘நான்’ உடையவர் உள்ளனர். தன்முனைப்புள்ள நான்-‘Egoist I’ மற்றும் ‘தன்முனைப்பில்லா நான்—‘Egoless I’ என்று. தன்முனைப்பினை நீக்காதவரிடம் இருப்பது ‘தன்முனைப்புள்ள நான்’. முறையான உளப்பயிற்சியினை மேற்கொண்டு தன்முனைப்பினை நீக்கியவரிடம் இருப்பது ‘தன்முனைப்பில்லா நான்’. இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தன்முனைப்பினை நீக்கியவர் ஞானியாவார். தன்முனைப்பினை நீக்காதவர் அஞ்ஞானியாவார். ஞானியார் பேரின்ப வாழ்வு வாழமுடியும். அஞ்ஞானி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையை வாழ்பவர். அவற்றில் பெரும்பாலும் துன்பமே மிகுந்திருக்கும்.

தன்முனைப்பு பாவங்களுக்கெல்லாம் ஆணிவேர்:

எப்படி? தன்முனைப்பினை நீக்கியவர் ஞானி என்கின்றபோதே அவர் பாவங்களிலிருந்து/துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவராகிவிடுகிறார். தன்முனைப்பினை நீக்காத அஞ்ஞானி எல்லாத் துன்பங்களுக்கும் ஆளாகிறார். எனவே தன்முனைப்பு என்பது எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. தன்முனைப்புதான் எல்லா பழிச்செயல்களுக்கும் ஆணிவேராக உள்ளது.

     எப்படி வேண்டாத களையை ஆணிவேரோடு பிடுங்கி எறிந்தால் மீண்டும் மீண்டும் முளைக்காதோ அதுபோல், பழிச்செயல்களில் மனிதன் மீண்டும் மீண்டும் ஈடுபடாமல் இருக்க ஆணிவேராக உள்ள தன்முனைப்பினை அறவே நீக்கிட வேண்டும். அதற்கான அருமருந்துதான் இறை-உணர் ஆன்மீகமான மனவளக்கலை. ஆன்மீகத்தின் நோக்கம் பழிச்செயல்களை நீக்கி ஆன்மாவை உணர்வது. இறை உணர் ஆன்மீகத்தில் பழிச்செயல்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பு நீங்கும் வரை பழிச்செயல்களை நீக்க வேண்டும். (Sublimation of ego is spirituality — the means of sure success and happiness.) இருப்பினும் இந்த முறையினை தெரியாமல்தான் மனிதகுலம் துன்பத்தில் வாழ்ந்து கொண்டு அல்லலுறுகின்றது. காரணம், தன்முனைப்பு காலங்காலமாக பிறவிகள்தோறும் இருந்து, அதனைப்பற்றிய கவலையே இல்லாமல் இருந்து வருவதே. தன்முனைப்பினை நீக்கும் கலையைக் கற்று பயில்வதற்குத் தேவையான அறிவான, ‘தன்னை அறியும் அறிவியல்’ இருபதாம் நூற்றாண்டு வரை ஆன்மீகத்தில் உருவாகாமல் இருந்தது மேலும் ஒரு காரணமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

மனிதனுக்கு மட்டும் தன்முனைப்பு ஏற்படக் காரணம்?

   எல்லா உயிரினங்களும் இயற்கையின்/இறையின் தன்மாற்றங்களே. அப்படியிருக்கும்போது இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் எல்லா உயிரினங்களிலேயே ஆறாம் அறிவுடைய மனித இனத்திற்கு மட்டும்தான் தன்முனைப்பு என்பது வந்துள்ளது. என்ன காரணம்? ஆறாம் அறிவு தன்னையே உணர்ந்து கொள்ள ஐந்தறிவிலிருந்து தன்மாற்றம் அடைந்தது. அறிவு தன்னை யார் என உணர்ந்து கொண்டால் தன்முனைப்பு கரைந்துபோகும். ஆனால் அறிவு தன்னை உணர்ந்து கொள்ளக் கூடிய பரிபக்குவ நிலை ஒரு சிலருக்குத் தவிர எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இதற்குக் காரணம் என்ன?

அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்:

      ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்’ இருபதாம் நூற்றாண்டு வரை கல்வியில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் சிந்தனையில் ஓங்கிய ஒரு சிலர் தானாகவே அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியலை அறிந்து கொள்கின்றனர். ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தாகம் இயல்பாகவே ஆன்மாவில் உள்ளதால், அதாவது ‘நான் யார்?’ என அறிவுபூர்வமாக அறிந்து கொள்கின்றனர். அதனால் தன்முனைப்பு நீங்கியவர்களை நாம் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம். அவர்களை வணங்குவது என்பது அவர்கள் அடிபின்பற்றி வாழ்வதே. இதனைத்தான் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தில் ஏழாவது குறளில் கூறுகிறார்.

      தனிப்பட்ட இம்முயற்சியினை ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் மேற்கொள்வதில்லை. எனவே எல்லோரிடமே தன்முனைப்பு உள்ளது. இதனால் வாழ்க்கையில் தனக்கும் துன்பங்களை வரவழைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, பிறருக்கும் துன்பங்களைத் தருகிறான் மனிதன். ஆனால் இந்நிலை மாறி, இருபதாம்/இருபத்தோரம் நூற்றாண்டில் ‘அறிவு தன்னை அறிந்து கொள்ளும் அறிவியல்’ ஏற்பட்டு, அது இப்போது மனவளக்கலையாக்கப்பட்டு கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தான் ‘தன்முனைப்பில்லா நான் என்கின்ற தலைப்பே நம் சிந்தனைக்கு வந்துள்ளது.

‘தான்’, ‘தனது’ என்கின்ற இரு அவலத் தம்பதிகள்:

     தன்முனைப்பு என்பது தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்வது. இதனால், தான் இயற்கையிலிருந்து/இறையிலிருந்து வேறுபட்டவனாக, தனிப்பட்டவனாகக் கருதப்படும் சூழல் ஏற்படுகின்றது. எனவே இயற்கையின்/இறையின் சிறப்பை உணராமல், அனுபவிக்க முடியாமல் போகின்றது. இந்த எண்ணம் ‘தான்’ ‘தனது’ என்கின்ற இரு எண்ணக் கோடுகளை ஏற்படுத்திவிடுகின்றது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இந்த இரு எண்ணங்களை அவலத்தம்பதிகள் என்றே கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஏனெனில் இந்த இரு எண்ணங்களிலிருந்து பிறந்ததுதான் மனிதனிடம் உள்ள அவலக்குணங்களான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை மற்றும் வஞ்சம் என்கிறார். எனவே தன்முனைப்பை அகற்ற வேண்டும். தன்முனைப்பு கரைந்த ‘நான்’ தன்முனைப்பில்லா நான் எனப்படுகின்றது.

‘EGO’ என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது?

   ஆங்கில மொழியில் தன்முனைப்பு என்கின்ற சொல்லை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்வோம். ஆராய்ந்து பார்த்தால் தன்முனைப்பின் தன்மையினைக் கொண்டே அச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தன்முனைப்பு என்பது “Ego” என்கின்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாகும்(meaning). “Edging God out” என்கின்ற வாக்கியத்தில் உள்ள மூன்று சொற்களின் (words) ‘E’, ‘G’, ‘O’ என்கின்ற முதல் எழுத்துக்களை (letters) எடுத்து உருவாக்கப்பட்ட(coined) எழுத்துதான் “EGO” என்கின்ற எழுத்து. இறையை (இறைவனை, God) வெளியே ஓரம் தள்ளி விடுதல் என்பதாகும். தன்முனைப்பு என்பது இறையை மறந்த நிலை. மனிதனுக்கும் இறைக்கும் உள்ள திரையே தன்முனைப்பாகும். தன்னை இறையிடமிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் நிலை. தன்னை முனைப்புடன் காட்டிக்கொள்வது தன்முனைப்பு.

“தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்”

‘நான்’ என்பது யார்? உயிர் இல்லை எனில் ‘நான்’ என சொல்ல முடியுமா? எது உயிராக இருக்கின்றது? இயற்கையே/இறையேதான் உயிராகவும் இருக்கின்றது. அறிவாகவும் இருக்கின்றது. அவ்வாறு இருக்க ‘நான்’ என்பது யார்? ‘நான்’ என்பது இறையே! இறையே நானாக இருக்கிறேன் என்கின்ற தெளிவு கிடைக்க வேண்டும். இந்த உண்மை இருக்கும்போது தன்னை முனைப்புடன் காட்டிக் கொள்வதில் பொருளில்லையே!
எனவே இறையுணர் ஆன்மீகத்தில் இறை உணர்வு பெறுவதற்கு தன்முனைப்பு கரைய வேண்டும். தன்முனைப்பு கரைந்தால் இறையை அறிவு உணர்ந்து கொள்ளும்.
                                         “கரைந்து போம் தன்முனைப்பு; காணும் தெய்வம்”
என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட் செய்தியினை முழுவதுமாக அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

                                                  நிறைநிலை

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்
நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.”

 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

                         

உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்ளுதல்:

      தன்முனைப்பு என்பது, அறிவு தன் மூலத்தை மறந்து தன்னை தவறாக உடலுடன் அடையாளம்(body consciousness—mistaken identity) கொண்டு முனைப்பு கொள்ளுதலாகும். எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இருக்கும்போது, மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது அல்லது ஏங்குவது அல்லது புகழ் மயக்கத்தில் இருப்பது ஆகியவற்றிக்கெல்லாம் காரணம் இறையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் தன்முனைப்புதான். தன்முனைப்பே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக உள்ளதால், தன்முனைப்பு நீங்க அறிவு தன்னைப் பற்றி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தவமும் சுயசோதனையும் அவசியம்.
தினந்தோறும் மனிதன் “நான்”, “எனது” என்கின்ற இரு சொற்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தன்முனைப்பை வெளிபடுத்துகின்ற “நான்”, “எனது” என்கின்ற சொற்களை உபயோகிக்காமல் இருப்பது எங்ஙனம் சாத்தியம் என ஐயம் சாதகர்களுக்கு எழலாம். இந்த ஐயம் தீர்க்கவே இன்றைய சிந்தனை.

தன்முனைப்பை வெளிப்படுத்துகின்ற ‘நான்’ என்கின்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாதா?

அப்படியில்லை. தன்முனைப்பு நீக்கிக் கொண்ட ஞானியும் “நான்” என்கின்ற சொல்லை பயன்படுத்தினாலும், ஞானி பயன் படுத்துவதற்கும் சாதாரண மனிதன் பயன்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஞானி என்பவர் எப்போதும் அயரா விழிப்பு நிலையில் இறையே தானுமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற ஞாபகத்தில் இருப்பார். ஆனால் சாதாரண மனிதன் இவ்வுண்மையை தெரிந்திருந்தாலும் அந்நிலையை மறந்து தான் வேறு, இறை வேறு என்கின்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதுதான் அந்த வித்தியாசம்.   எனவே ஞானி பயன்படுத்துவது “Egoless I”. சாதாரண மனிதன் பயன்படுத்துவது “Egoist I ” ஞானியின் “நானை” சாதாரண மனிதன் புரிந்து கொள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளுவதைக் கவனிப்போம்.

சீவன் முக்தனின் அடையாளம்:

எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது. அதுபோல் பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட ஞானியின் அகங்காரமும்(தன்முனைப்பு) அப்படிப்பட்டதே என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

மேலும் விவேக சூடாமணி கூறுவதையும் கவனிப்போம். நிழலைப்போல் தொடர்ந்து தேகம்(உடல்) வந்து கொண்டிருந்தாலும் “நான்”, “என்னுடையது” என்கின்ற எண்ணமில்லாமை “சீவன் முக்தனின்” அடையாளம் என்கிறது.

தன்முனைப்பு நீங்கவே குருவை அடைகிறான் சீடன்:

குரு சீடர் உறவில், எதற்காக சீடர் குருவை அடைகிறான் என்று கூறும் போது ‘தன்முனைப்பு நீங்கவே குருவை அடைகிறான் மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் குரு சீடர் உறவு என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை நினைவு கூர்வோம்.

குரு சீடர் உறவு

முனைப்பை நீக்கு

தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால்போல
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு
“என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?” என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!”

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

முனைப்பு நீங்கும்போது

தன்முனைப்பு பாவப்பதிவு மயக்கம் மூன்றும்
தழைப்பதுதான் மனிதனரிட வாழ்வியல்பு
தன்முனைப்பை விழிப்புநிலை மெய்விளக்கம்
தவவாழ்வு இவற்றாலே கரைக்க வேண்டும்
தன்முனைப்புக் கரைந்து அறிவு முழுமை எய்த
தக்கவொரு தவ ஆசான் தொடர்பு வேண்டும்
தன்முனைப்பு முதல் மூன்று தளைகள் நீங்கத்
தான் பரமாம், பிறப்பு இறப்புத்தாண்டும் ஆன்மா.”

.. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

                             

      இது வரை வேறெங்கும் ஆன்மீகத்தில் தன்முனைப்பு பற்றிய இத்தகைய விளக்கம் காணப்படவில்லை. எனவே ‘அறிவு தன்னை அறியும் அறிவியலை’ பெற்றுள்ள நாம் அதற்கேற்ப ‘அறிவு தன்னை அறியும் அறிவியலில்’ தேர்ச்சி பெற்று தன்முனைப்பில்லா நானாகத் திகழ்வோம். சிறப்பான வாழ்வு வாழ்வோம். மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் சந்திப்போம்.

வாழ்க அறிவுச்செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

lotus