தன்குறைகளை அறிவதே ஞானமா? 1 / 2

 

தன்குறைகளை அறிவதே ஞானமா? 1 / 2வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

1

FFC – 15

 

                                                                             11-11-2014

      தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்வதே ஞானம் என்கிறார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். குறைகளை அறிந்து கொள்வதே ஞானமா? தன் குறைகளைத் தானே அறிபவன் அத்துடன் சும்மா இருந்து விடுவதில்லை. ஏனெனில், வள்ளுவர் கூறுவதுபோல் சான்றோர்களின் அணிகலான நாணம் அவனிடமும் உள்ளதால் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வான், தன்குறைகளை அறிந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்ளும் போதுதான் அவன் தன் குறைகளை அறிந்தவன் ஆகிறான். அவனே தான் பின்னர் சான்றோனாகிறான். ஞானியாகிறான்..

     தன்குறைகளை அறிந்து கொள்பவன், எந்த அளவிற்கு ஆழ்ந்து தீவிரமாகத் தன்னை திருத்திக் கொள்ள முயல்கின்றானோ அதற்கேற்ப திருந்துகின்ற சூழலும் வாய்ப்பும் ஏற்படும். அறிவினர்ச் சேர்க்கையும் உண்டாகும். தன்குறைகள் தனக்கே தெரிய ஆரம்பிப்பதும், தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதுமே அறிவிற்கு ஏற்படுகின்ற தெளிவினால்தான் சாத்தியமாகின்றது. இயற்கையே ஆதிநிலையில் பேரறிவாக இருந்தது,   மனித அறிவாக தன்னையே உணர்ந்து கொண்டு மகிழ்வதற்காக மலர்ந்துள்ளது.

     ஆனால் தனது பயணத்தில் பரிணாமக் கசடுகளைச்(பரிணாமக் கசடுகள் பற்றித் தனித்தலைப்பில் வேறோரு நாள் அறிவிற்கு விருந்து படைப்போம்.) சுமந்து கொண்டு வந்துவிட்டது மனித அறிவு. அந்த பரிணாமக் கசடுகள்தான் மனிதனிடம் குற்றங்குறைகளாக உள்ளன. ”எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற ஆதங்கப் புதிரை இன்னமும் கொண்டதாகவே உள்ளது மனித மனம்.

   ஆகவே மனிதனுக்கு தன் குறையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால் எல்லாம் வல்ல இயற்கையே திருந்துகின்ற சூழலையும், நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த இயற்கையின் ஏற்பாடுதான் — அவ்வையார் கூறும் அறிவினரின் அல்லது தன்னை உணர்ந்த குருவின் சேர்க்கையும், பிறகு அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதில் இன்பம் கண்டு பிறவிப் பயனை இப்பிறவியிலேயே அடைதலும்.

    பொதுவாக ஞானம் தேடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் ஞானம் தேடி ஞானியாகிவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கின்ற தவறானக் கருத்து நிலவி வருகின்றது. ஞானம், தேடிப் பெறுவதன்று. அறிவு தனக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற முழுமையானத் தெளிவே ஞானம். அறிவு மேலும் மேலும் தெளிவு அடையும்போது, அறிவின் குறைகள் படிப்படியாக நீங்குதல் ஏற்படும். எனவே ஞானம் என்பது குறைகள் நீங்கிய அறிவின் நிலை என்றுதானே பொருளாகின்றது. ஞானம் என்பது அறிவின் ஒளியாகும். எப்படி? இருட்டில் இருக்கும் அறிவிற்கு ஞானம் ஒளியைத் தருகின்றது. அறிவொளியே ஞானம்.

    ஞானம் என்கின்ற சொல்லின் பொருளென்ன?

o    ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை,

o    முழுமையான அறிவு என்பதனைக் குறிக்கின்றது.

அனைத்தும் அறிந்த நிலை என்றால் அறிவிற்கு குழப்பம், சந்தேகம் முதலியவை நீங்கி ஏற்படும் துலக்கம் என்று பொருள். அதாவது ஞானம் எனில் தெளிவு என்று பொருள்.

முழுமையான அறிவு என்றால் அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகிய குறைகள் நீங்கிய நிலை. மனித அறிவு ஞானம் ஏற்படுவதற்கு முன்னர் குறைவுடைய அறிவாக இருக்கின்றது. ஆதலால்தான் மனவளக்கலையின் இறுதிப்பயன் அறிவின் முழுமைப் பேறு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஞானம் என்பது பற்றி   மகா கவி பாரதியார், மற்றும் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் ஞானம் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம்.

   மகா கவி பாரதியார் தெளிந்த நல்லறிவை ஞானம் என்கிறார். தெய்வப்பாடல்கள் வரிசையில், ஒருபாடலில்         “தெளிந்த நல்லறிவு வேண்டும்“ என தெய்வத்தை வேண்டச் சொல்கிறார்.   அப்பாடலை நினைவுபடுத்திக் கொள்வோம்.

                                       அன்னையை வேண்டுதல்

                                       ”எண்ணிய முடிதல் வேண்டும்

                                           நல்லவை எண்ணல் வேண்டும்;

                                        திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

                                          தெளிந்தநல் லறிவு வேண்டும்;

                                        பண்ணிய பாவ மெல்லாம்

                                          பரிதிமுன் பனிபோல,

                                        நண்ணிய நின்முன் இங்கு

                                          நசித்திடல் வேண்டும் அன்னாய்.” , , , , , மகா கவி பாரதியார்.

 எதற்காகத் தெளிந்த நல்லறிவை கேட்கச் சொல்கிறார் மகா கவி? பாவங்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ”என்னுடைய பாவங்களைப் போக்கிட வேண்டும்” என இறையை மீண்டும் மீண்டும் வேண்டுவது என்பது அறி்வின் மடமையன்றோ. செய்த பாவத்திற்கான பாதிப்புகள் தனக்கும் சமுதாயத்திற்கும் வந்து கொண்டே இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத தெளிந்த நிலைக்கு அறிவு உயர்ந்து விட்டால் பாவத்தின் விளைவுகளான தீமைகள் தனக்கும் சமுதாயத்திற்கும் நிகழாமல் இருக்கு மல்லவ?. பாவங்கள் செய்யாத நிலைக்கு உயர்ந்த அறிவு நல்லறிவுதானே. நல்லறிவில் தெளிவும் சேர்ந்து விட்டால் எவ்வளவு நலன் பயப்பதாக இருக்கும். எனவே தெளிந்த நல்லறிவை வேண்டச் சொல்கிறார் மகா கவி.

நல்லவை எண்ணாததற்கு முன், தீயவைகளை எண்ணியபோது தான், பாவங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று அறிந்து கொள்வதற்கும், இனிமேல் நல்லவைகளையே எண்ண வேண்டும் என்று விரும்புவதற்கும், ஏற்கனவே செய்துள்ளப் பாவங்கள் நீங்க வேண்டும் என இறைவியை வேண்டுவது என்பது அறிவு தெளிந்தால்தான் சாத்தியமாகும். அந்த அறிவுத் தெளிதல் ஏற்பட்டு விட்டால் கெட்ட அறிவு நல்லறிவாக மாறிவிடும். தெளிதல் ஏற்பட்ட நல்லறிவுதான் தெளிந்த நல்லறிவு எனப்படும்.       அதாவது தன்னிடமுள்ள குறைகளை அறிந்து கொள்வதற்கு தெளிந்த நல்லறிவு வேண்டும். அதனால்தான் தெளிந்த நல்லறிவை இறைவியிடம் வேண்டச் சொல்கிறார் பாரதியார். அடுத்ததாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் பற்றிக் கூறுவதனைச் சிந்தி்ப்போம். அவ்விருந்தை நாளை அருந்துவோம்.

                                                                                . . . . .  நாளைத் தொடரும்