FFC – 274செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும் – 9/?

வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

lotus

FFC – 274
அ.வி. 274

10-12-2017-ஞாயிறு

கருமையம்
(பாகம்-4)

 [rev_slider home-slider-1]

 வாழ்க வளமுடன்!

சென்ற மூன்று அறிவிற்கு விருந்து நிகழ்ச்சிகளில் கருமையம் பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்று கருமையத் தூய்மை பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள பாடலின் உட்பொருளை விரிவாக அறிந்து கொள்வோம்.  அதற்கு முன்னர் கவிகளின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம். கவிகள் சிறப்பு பற்றி பதிமூன்று கவிகள் அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  அவற்றில் ஒரு கவியினை  நினைவுகூர்வோம். அக்கவிக்கும் பொருள் காண்போம்.

 கவிகளின்  சிறப்பை நினைவில் கொண்டு,

ஒவ்வோரு கவிகளின் பொருளை அறிந்துகொள்ளும் போதுதான்,

அக்கவியின் பொருளை எதற்காக அறிகிறோம் என்பதும்,

எந்த நோக்கத்தோடு அந்தக் கவிஞர் வழியாக இறையால்  அருளப்பட்டதோ

அந்த நோக்கமும் நிறைவேறும்.

 இறையின் நோக்கம் என்கின்றபோது இறைஉணர் பாதையிலே பயணிப்பவர் இறையின் நோக்கத்தை சிரமேற்கொண்டல்லவா ஏற்பார்!

 சிந்திக்க கவிகள் பயிற்சியின் அவசியம்:

 கவியின் சிறப்பினை உணர்ந்து கொண்டால் நாம் அறியவேண்டிய  கருமையத்தூய்மை என்கின்ற பாடலின் பொருள் கருத்தோடும், ஆழமாகவும் உள்ளத்திற்குள் சென்றடையும். எனவே  ‘கருமையத் தூய்மை’ என்கின்ற பாடலின் உட்பொருளுக்குள் செல்வதற்கு முன் ‘கவியின் சிறப்பினை’ அறிந்துவிட்டு கருமையத்தூய்மை என்கின்ற பாடலுக்குள் செல்வது ‘சிந்திக்க கவிகள்’ பயிற்சியின் அவசியத்தை நமக்கு எடுத்துக் கூறுவதாக அமையும்.  கவியின் சிறப்பினை’ சமுதாயத்திற்கு  எடுத்துக்கூறுவதற்கும்  கவிகளையே பயன் படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.  என்னே அவர்களின் கவித்துவம்!   வாழ்க திருவேதாத்திரிய மந்திரம். வளர்க திருவேதாத்திரிய மந்திரம்.

 கவியின் சிறப்பு பற்றி எட்டு வரிகளில் பதிமூன்று கவிகளை அருளியுள்ளார் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எல்லாவற்றையும் (ஞானக்களஞ்சியம் பாகம் -1 ல் 4.18) அன்பர்கள் வாசித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.  எனினும் கவியின் சிறப்பு பற்றி ‘நிறைவாய் இருக்க’ என்கின்ற தலைப்பில் இயற்றிய ஒரு கவியை மட்டும் நினைவுகூர்ந்துவிட்டு,  ‘கருமையத் தூய்மை’ என்கின்ற பாடலின் பொருளுக்குள் செல்வோம் அன்பர்களே!

 

FFC-274-நிறைவாய்-கவியின் சிறப்பு

 

பாடல் வரிகள் அன்பர்கள் உள்ளத்தை நிரப்பும்போது அவர் அடையும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என இறையிடம் சமர்ப்பிக்கிறார். இங்கே  இறைக்கு  மகரிஷி அவர்கள் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவிப்பதுவுமன்றி, பின்னர் வரும் சமுதாயத்திற்கும் எவ்வாறு கவிகள் உருவாகின்றன என்பதனை தெரிவிக்க விரும்புகிறார்.  வார்த்தைகள் உருண்டுருண்டு கவிகளாகியுள்ளன என்பதனை அறியும்போது எத்தகைய மகிழ்வினை அடைகின்றோம் நாம்.?!!

 இவ்வாறு கூறுதலே நாமும் இறைக்கும், கருவியாகிய நம் குருநாதருக்கும் உளம் பூரித்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இத்தகைய குருநாதரை இந்த  நூற்றாண்டில் நாம் பெற்றதே நம் கருமையம் அத்தகைய தூய்மையாக இருந்ததால்தான் சாத்தியமாகியது என்றால் அது மிகையாகாது.  முழுமையாக கருமையத்தூய்மையினை அடைய அது பற்றி சிந்திக்கும் நாம் இவ்வாறு தெரிவிப்பது நம் கடமை அன்றோ.  மேலும்  மேலும் அறிய வேண்டியது இறையே சொல்ல மகரிஷி அவர்களின் திருக்கரங்களால் கவிகள் எழுதப்படுகின்றன என்பதனையும் அறிந்து மகிழ முடிகின்றது.

அன்பர்கள் உள்ளத்தில் நிரப்பும் போது மகரிஷி அவர்கள் அடையும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என்று கூறியிருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.   கவிகளால் அன்பர்களின்  உள்ளம் நிரம்புவதால், மகரிஷி அவர்களுக்கு ஏற்படும் பேரின்பத்திற்கு எல்லை இல்லை என்கிறார்.  இதுதானே தந்தையின் உள்ளம்!   தந்தை கற்றுத்தரும் பாடத்தினை தனது குழந்தை ஆரம்பத்தில் புரிந்து கொள்ள சிரமப்பட்டு பின்னர் புரிந்து கொள்ளும்போது தந்தை அடையும் மகிழ்ச்சிபோல், தனது குழந்தைகளின்(அன்பர்கள்)   உள்ளம் நிரம்புவதைக் கண்டு அருட்தந்தைக்கு   பேரின்பம் உண்டாவது இயல்புதானே!  ஆகவே குருநாதரின் அடிபற்றி இறைஉணர் பாதையிலே வாழ்கின்ற அவரது குழந்தைகளான மாணவர்களுக்கும் அதே பேரின்பம் ஏற்பட வேண்டும்.

 கவிகளை வாசிக்கும்போது அன்பர்களது உள்ளம் நிரம்பவேண்டும். அந்த பேர்வாய்ப்பினைப் பெற வேண்டும்.  அப்போதுதான் கவியின் முழுப்பயனையும் அடைய முடியும்.  இதனைக் கருத்தில் கொண்டுதான் இணையதள சத்சங்கத்தில் சிந்தனைப் பயிற்சியில் ‘சிந்திக்கக் கவிகள்’ என்கின்ற பயிற்சி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் அறிய வேண்டியது யாதெனில்,  இறைவன் சொல்லச் சொல்ல,  தான் எழுதியதை(it is not mere dictation) காட்சிப்படுத்துகிறார் மகரிஷி அவர்கள் நம் நன்மைக்காக.

 அது எவ்வாறு இருந்ததாம்?  ‘மின்னி வெளி வந்த’ என கவிகள் வெளிவந்ததை வர்ணிக்கிறார்.  மின்னல் வேகத்தை யாவரும் அறிவர்.  அதுபோன்றே மனிதன் ஐயப்படாது அகத்தை உணர்வானேயாகில் அவனை தெய்வத்திற்கு ஒப்பாகக் கொள்ளலாம்

சந்தேகமின்றி  அகத்தை உணர்வாராகில் அவரைத் தெய்வத்திற்கு ஒப்பாகக் கொள்ளலாம் என்கிறார் பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர்.  அந்த நிலையை அடைந்த அத்வைதிக்கு இறை தெரிவிப்பது மின்னல் போன்றுதான் வெளிப்படும். மேலும் அவர் கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.  அக்கவிகளை எழுதுவதோடு இருந்து விடாமல் மீண்டும் அதனை நினைவு படுத்திக் கொள்ளும்போது நிறைவு  ஏற்படுகின்றது என்பதனையும் அன்பர்கள் கவனிக்க வேண்டும்.  இரவு நேரங்களில் இரண்டு மணிக்கு எழுந்து மண் எண்ணெய்  விளக்கு வெளிச்சத்தில்  கவிகள் மற்றும் உரைநடைகளை எழுதுவாராம் மகரிஷி அவர்கள். எழுதி விட்டு உறங்கச் சென்றிடுவாராம்.  ஆனால் உறக்கம் வராமல் மீண்டும் படுக்கையிலிருந்து எழுந்து எழுதியதை வாசித்து ஆனந்தமடைவாராம் மகரிஷி அவர்கள். தான் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்து இன்பமுற்று நிறைவாய் இருப்பதனை இறைவனுக்கும் தெரிவிக்கின்ற  அதேவேளையில், அன்பர்களும் அவருடைய அருள்அனுபவத்தை  அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பாடலின் கடைசி இரண்டு வரிகள் உருவாகியுள்ளன.  அன்பர்களும் அறிந்து அவர்களது  பயணத்தில் இதனை அனுபவிக்க வேண்டும்.

 இதுவரை  கவியின் சிறப்பை அறிந்து கொண்டோம். இதனை எப்போதும் மனதில் கொண்டு அருட்கவிகளை வாசிக்கும்போது அனுபவித்து வாசிக்க வேண்டும்.

 இப்போது கவிகளின் சிறப்பினை நினைவிற் கொண்டு கருமையத்தூய்மை என்கின்ற கவியின் உட்பொருளுக்குள் செல்வோம்.

  ‘கருமையத்தூய்மை’ பாடலின் பொருள்:

FFC-274-கருமையத்தூய்மை

பாடலின் பொருள்:

                பாடலின் பொருள் எளிமையானதுதான்.  இருப்பினும்  கவியின் சிறப்பை சற்றுமுன் அறிந்தோம்.  அதனை நினைவில் கொண்டு, பாடலின் பயனை  பெறும் வகையில், பாடலின் உட்பொருளுக்குள் செல்வோம்.  பாடலின் உட்பொருள் மனதில் நின்று அயரா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்  என்பதற்காக, கருமையத் தூய்மையைக்கெடுக்கும் ஒவ்வொன்றும் எவ்வாறு தூய்மையைக் கெடுக்கின்றன என்றும் அறிந்து கொள்வது மிக்க நலம் பயக்கும்.  மேலும் பாடலை வாசிப்பது என்பது பாடலின் வரிக்கு வரி பொருள் கொள்வதோடு  முடிந்துவிடுவதில்லை. பாடல் ஆசிரியர்எந்த நோக்கத்தோடு அப்பாடல் வரிகளை அமைத்தாரோ அல்லது அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை அப்பாடலை கண்ணுறுபவர்கள் அறிந்து கொள்ள  வரிகளுக்கிடையே மறைந்திருக்கும்(hidden in between lines) பொருளையும் சேர்த்து அறிந்து கொள்வது முழுப்பயனையும் தரவல்லது.

கருமையத்தூய்மையைக் கெடுக்கும் செயல்களை அட்டவணையிட்டுள்ளார் மகரிஷி அவர்கள்.

  1. கறை படுத்தும் எண்ணம்
  2. நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்.
  3. நெஞ்சம் மனம் பேச்சுஇடை பிணக்காகும்  பொய்கள்.
  4. மறைமுகமாய் நேர்முகமாய் பிறர்உளம் வருத்தல்
  5. மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்
  6. நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல்,
  7. மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு

 ஆகிய ஏழும் தெய்வீக நீதி மன்றமாகிய  கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும் என்கிறார்.  பொதுவாக கருமையத்தூய்மை எதற்காக?  விலங்கினத்திலிருந்து வந்த மனிதனின் கருமையம், விலங்கினப்பண்பை செயலிழக்கச் செய்து மனிதப்பண்பில் உயர வேண்டும்.  இஃதல்லாத செயல்களெல்லாம் கருமையத்தைக் களங்கப்படுத்துவதாகவே இருக்கும் என்கின்ற புரிதலுடன் சிந்தனையைத் தொடர்வோம்.

 1. கறை படுத்தும் எண்ணம்

இன்பவாழ்விற்கு நல்ல செறிவுள்ள வித்து:

 எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இயற்கையின் சிகரமாகிய எண்ணம் மனிதனிடமிருந்துதான் வெளிப்படுகின்றது. அவ்வாறு எண்ணம் மனிதனிடமிருந்து வெளிப்படும்போது அது கருமையத்தில் கறையை ஏற்படுத்திவிடக்கூடாது.  ‘எண்ணமே வாழ்க்கையின் சிற்பி’, ‘எண்ணம்போல் வாழ்வு’ என்பதால் வாழப்பிறந்த மனிதன் வாழ்வாங்கு வாழ மனிதன் முத்தொழில்களின் முதன்மையானதுமான எண்ணத்தில் தூய்மை வேண்டும்.  எண்ணமே இன்பதுன்பத்திற்கு வித்தாக அமைகின்றது என்பதால் துன்பமில்லா இன்ப வாழ்வு வாழ்வதற்கான நல்ல செறிவுள்ள வித்தாக அமைய வேண்டும்  எண்ணம்.  எனவேதான் மனவளக்கலையின் செய்முறைப் பயிற்சியான தற்சோதனையில் எண்ணம் ஆராய்தலை முதலில் வைக்கப்பட்டுள்ளது.  எண்ணத்தை ஆராய்ந்து பயன்படுத்துவதில் முழுவெற்றி பெற்றுவிட்டால் ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் ஆகிய பயிற்சிகளில் வெற்றி பெறுவது எளிதாகிவிடும்.

 2.நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்

 ஒரே வீட்டில் உள்ள இருவருக்கும் இடைவெளி!

மனிதனைத் தெய்வமாக்கும் அகத்தாய்வுப் பயிற்சியில் இரண்டாவது பயிற்சியாக ‘ஆசை சீரமைத்தல்’ என்கின்ற பயிற்சியினை வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

 உத்தமன் உள்ளத்திலே கோயில் கொண்டிருக்கின்றான் என்பது அருளாளர்களின் சத்தியவாக்கு. அவ்வாறிருக்கும்போது  உத்தமனுக்கும் மனிதனுக்கும் இடைவெளி இருக்கின்றது என்பது (ஒரே வீட்டில் உள்ள இருவருக்கும் இடைவெளி என்பது) ஒருவகையில் நமக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், உத்தமனுக்கும் நமக்கும் உள்ள ‘இடைவெளி அறிவியலை-the Science of distance between God and individual’ அறிய முடிகின்றதல்லவா!?

      இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள அந்த இடைவெளி என்பது அவன் கொண்டுள்ள ஆசைகளின் பட்டியலே என்கின்றனர்.  ஆசைகளில் தேவையான ஆசைகளை அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 

தேவையற்ற ஆசைகள்,

முறையற்ற ஆசைகள் மற்றும்

உத்தமன் மீது கொள்ளாத ஆசை ஆகியவற்றைக் கொண்ட பட்டியலைத்தான் இடை வெளி என்கின்றனர் அருளாளர்கள்.

 ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்:

      தேவையற்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான் உள்ளம் பாடுபடுமே  தவிர உள்ளத்திலே அமர்ந்திருக்கும் உத்தமனை அறிந்து அவனோடு உறவு கொள்ள வேண்டும், உரையாடவேண்டும் என்கின்ற எண்ணமே இராது போய்விடும். உத்தமனை அறிய விருப்பம் கொள்ளாத கருமையம் தூய்மை அற்றதாகவே கருதப்படும்.  கருமையம் தூய்மையாக இருந்தால் மட்டுமேஅது உத்தமனை நாடும். முத்தொழில்களில் தூய்மை அடையாது உத்தமன் மீது நாட்டம் கொள்வது என்பது இயலாத காரியம். அப்படியே உத்தமன் மீது நாட்டம் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாலும் அது ‘ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்’ வைத்திருப்பதற்கே ஒப்பாகும்.

 

3. நெஞ்சம் மனம் பேச்சு இடையே பிணக்காகும்  பொய்கள்

 காரண அறிவிற்கு ஏற்புடையதா?( Is it logical?):

 இதனைக்கருத்தில் கொண்டதுதான்  ‘உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்’ என வள்ளலார் இறைஞ்சுவது.  புத்தரும் பாவங்களிலிலே தலையாயது பொய் என்கிறார்.  மெய்யை(உண்மையை –truth) அறிய வேண்டிய பயிற்சியில் பொய் பேசுவது கருமையத்தை தூய்மையைக் கெடுப்பதுதானே! இது காரண அறிவிற்கு ஏற்புடையதாகவா இருக்கின்றது?! (Is it  logical?). பொய் பேசுவது வாழ்வில் இயல்பாக உள்ளதால் அதனை சரி என்றோ, நியாயப்படுத்துவதோ சரியாகாது.  ஏன் பொய் பேச வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது?  உண்மையை மறைக்கப் பொய்யை பயன்படுத்த வேண்டியுள்ளது.

உண்மையை அறியும் பயிற்சியில் பொய் பேசுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும்?  குழந்தைககள் தாங்கள் செய்த தவறை பெற்றோர்களிடம் மறைக்க பொய் பேசுவது வழக்கம். அப்போது குழந்தைகள் பொய் பேசுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ‘பொய் பேசக்கூடாது’ என்று அறிவுரை கூறியும், ‘இனிமேல் பொய் பேசமாட்டேன் என்று சொல்’ என்கின்ற உறுதியையும்  குழந்தைகளிடமிருந்து பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதில் நியாயம் உள்ளது தான்.  ஆனால் அதே  போன்று உண்மை பேசும்  பொறுப்பை நம்மிடம் நாமே  எதிர்பார்ப்பதில்லை.  பொய் பேசுவதுதானே என்று அலட்சியப்படுத்த முடியாது.  பொய் பேசுவதால் என்ன ஆகிவிடப்போகின்றது என்று கருதுகின்ற நிலைமை மாறவேண்டும்.

 பொய் பேசுவதால் கருமையம் தூய்மை கெடுகின்றது என்பதில் உள்ள அறிவியலை அறிந்து கொள்வது நலம் பயக்கும்.  வேதாத்திரிய உலக சமாதான திட்டங்கள் முழுமையாக அமுலுக்கு வரும்போது மனிதர்கள் பொய்பேச விரும்பினாலும் பொய் பேசும் அவலநிலை அன்று இல்லை. வாழ்க உலக சமாதானம்! விரைவில் வருக உலக சமாதானம்!!   நாகரீகத்தை பொய்யில்லா  உண்மையோடு இணைக்கிறார் மகரிஷி அவர்கள்.  பொய்பேசுவது அறிவின் வளர்ச்சியினைத் தடுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அறிவின் வளர்ச்சியால்தான் உயிர் ஆக்க வாழ்வு பெறமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

 4.மறைமுகமாய் நேர்முகமாய் பிறர் உளம் வருத்தல்

 நியாயமான எதிர்பார்ப்பில் உள்ள நியாயம்:

       மனிதன் எப்போதும் இனியவையே பேசவேண்டும் என்பதனை அறிவுறுத்தவே இனியவை கூறல் எனும் தனி அதிகாரத்தையே இயற்றியுள்ளார் திருள்ளுவர்.  யார் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதனையே நாமும் பிறர்க்கு செய்ய வேண்டும். ‘யாரும் நமக்குத் துன்பம் தரக்கூடாது’ என்கின்ற நியாயமான எதிர்பார்ப்பில் உள்ள நியாயத்தை நாமும் பிறர்க்குத் துன்பம் தரக்கூடாது என்பதை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்க  வேண்டும்.

 மனிதனின் அறமற்ற செயலை சீரணிக்க முடியவில்லை:

 இங்கே இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே  இன்னா செய்யாமை என்கின்ற அதிகாரத்தை

ஏற்படுத்தி, அதில் திருவள்ளுவர் எட்டாவது குறளில் மொழிந்துள்ளதை நினைிவில் கூர்வது நலம் பயக்கும்.

தன்உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ

மண்உயிர்க்கு இன்னா செயல்.”              . . . குறள் எண் 318

  பொருள்:   பிறர்  செய்யும் தீங்குகள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், பிற உயிர்களுக்குத் தான்  துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ?

 ‘என்ன காரணத்தாலோ?’ என்கின்ற வினாவோடு தான் அக்குறளை முடித்திருக்கிறார்.  இது எதனை அறிவிக்கின்றது?  அவரால், மனிதனின் இந்த அறமற்ற செயலை சீரணிக்க முடியவில்லை. திருவள்ளுவருக்கு இளையவரான முன்னாள் பாரத ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் ‘பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை’ என்றுகூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்துகின்றதல்லவா!   இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர்  அறிவுறுத்தியிருந்தும் அறமற்ற  செயல்கள் சமுதாயத்தில் மறையவில்லை என்பதனைக் கருதி இதனை எவ்வாறு சரிசெய்வது என்பதனைக் கருத்தில் கொண்டுதான் இரண்டொழுக்க பண்பாட்டினை சங்கல்பமாக வைத்துள்ளர் மனவளக்கலை பயிற்சியில். 

இந்த இரண்டொழுக்கப் பண்பாட்டின் அலைகள் கருமையத்திலும், வான்காந்தத்திலும் பதிந்து அழுத்தம் பெற்று மனித அறிவு பரிணாமத்தில் நாளடைவில் வளரும் என்பதே இரண்டொழுக்கப் பண்பாட்டு சங்கல்பம் ஏற்படுத்தியதன்  நோக்கம்.

இரண்டொழுக்கப் பண்பாடு மலரவேண்டுமே!

 அந்த வகையில் நம் உள்ளம் வருத்தப்பட பிறர் மறை முகமாகவோ அல்லது நேர்முகமாகவோ வருத்தப்படுத்துவதை நாம் விரும்புவோமா?  விரும்ப மாட்டோம். பிறர் துன்பத்தை நம் துன்பம் போல் கருதி இரங்கி உதவி செய்வதே அறம் என்கின்றபோது பிறர் உள்ளத்தை வருத்தப்படுகின்ற செயல் அறமற்ற செயலாகவே உள்ளது.  பிறர் வருந்துவதை நம் உள்ளம் வருந்துவதுபோல் எண்ணி  பிறர் உள்ளம் வருத்தப்படுகின்ற செயல்களைச் செய்யக் கூடாது.  இந்த சமுதாயத்தில்  இரண்டொழுக்கப் பண்பாடு மலரவேண்டுமே!  அதற்காகத்தானே தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டு சங்கல்பத்தை வான்காந்த களத்திலே பரவ விடுகிறோம். அவ்வாறிருக்க பிறர் உள்ளத்தை வருத்தப்படுத்துதல் இரண்டொழுக்கப் பண்பாட்டிற்கு முரணாகவல்லவா ஆகிவிடும்.

 கருமையத்தூய்மை எதற்காக?

 இறை உணர்வு பெறுவதென்றால்  கருமையத் தூய்மை பெறுவதே ஆகும்.  இறை உணர்வின் பயன் என்ன?  அறம் மலர்தலேயாகும். ஆகவே கருமையத்தூய்மையின் பயன்  அறம் மலர்வது. ஆகவே மறைமுகமாயும், நேர்முகமாயும் பிறர் உள்ளத்தை வருத்தப்படுகின்ற செயலில் அறம் மறைந்து விடுகின்றது. அறத்தை மறைக்கக்கூடிய கருமையம் தூய்மையற்றதே என விளங்கிக் கொள்ள வேண்டும்.

 இதுவரைமற்ற கருமையத்தூய்மையைக் கெடுக்கும் நான்கு காரணிகளைப் பற்றி சிந்தித்தோம்.  மற்ற காரணிகளான ‘உயிரின் சுதந்திரமும், வாழ்வின் வளம் பறித்தலும்’, நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் காத்தல், மேலும் நெறி பிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு ஆகிய வற்றைப் பற்றி அடுத்த அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்(13-12-2017-புதன்) அன்று சிந்திக்க இருக்கிறோம்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளர்க அறிவுச் செல்வம்