சிந்திக்க கவிகள் – 6


   வாழ்க மனித அறிவு!                                                   வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள் – 6

03-05-2020-ஞாயிறு

அறம்

 

                அறத்தைக் காணா அறிவே மரமாம்

                 அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்

                 அறத்தைப் புரியும் அறிவே மனிதன்

                 அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்”

                                                                    . . . . .  திரு. வி. க.  அவர்கள்.

 

 

   பயிற்சி:

1. என்ன கூறுகின்றார் திரு. வி. க. அவர்கள்(1883-1953)?

2. அறத்தை அறியாதவர்களை மரத்தோடு ஒப்பிடுகிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ள வேண்டும்?

3. அடுத்த வரியில் அறம் என்றால் என்ன என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதற்குப் புறம்பாக நடந்துகொள்கின்றவனை விலங்கிற்கு சமம் என்கிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்? வேதாத்திரி மகரிஷி அவர்கள்(1911-2006) மனிதர்கள் மக்களாகவும், மாக்களாகவும் இருக்கின்றனர்    என்று  ஆரம்பித்து இயற்றியுள்ள பாடலை* நினைவு கூறுவது நலம் பயக்கும்.     

4. மூன்றாவது வரியில் அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அவ்வாறே நடப்பவன்தான் மனிதன் என்கிறார்?  உண்மைதானே?  மேலும் விரிவாக அறிந்து கொள்ளவேண்டியது என்ன?  மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறலாமே?

5. நான்காவது வரியில் அறத்தைக் காக்கும் அறிவே கடவுள் என்கிறாரே? இதுவும் சரிதானே? எப்படி?  மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூற்வது நலம் பயக்கும்?  எந்த வழியில் நலம் பயக்கும்?

6. நான்காவது வரியில் திரு. வி. க. கூறியிருப்பதனையே அவரது காலத்தில் சுமார் 42 (19531911=42) ஆண்டுகள் வாழ்ந்த, அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதஇன தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் அறம் எப்போது தோன்றியதாகக் கூறுகிறார்?(ஞா.க. க.எண்.494) அறத்தை எவ்வாறு போற்றுகின்றார் ஒரு வரியில்? மேலும் அறத்தின் அங்கங்கள் என்னென்ன என்று கூறுகிறார்.

7. இன்று அறம் பற்றி நம்மை சிந்திக்க வைத்த அருட்பேராற்றலின் கருணையும், நம் குருநாதர் சூக்குமாக இருந்து கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பதையும் நினைந்து ஆனந்தமும், தன்முனைப்பில்லா பெருமையையும் அடைகிறோம் எனில்  புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?!

வாழ்க மனவளக்கலைஞர்கள்!  வளர்க மனவளக்கலைஞர்கள்.

8. இச்சமயத்தில் வேறு அருளாளர்கள் அறம் பற்றி கூறியுள்ளதை நினைவு கூர்ந்து மகிழ்ந்து, அறம் ஊற்றெடுத்து சீவநதியாக ஓடக்கூடிய புதியதோர் உலகம் படைப்போம் என்கின்ற புனித எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரப்புவோம். 

                                       அறம் வாழ்க !  அறம் வளர்க!!

                               வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

* முழு மனிதன்(03-01-1959)

‘மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,

மனமறிந்த தேவருண்டு,  மதிநிலைத்த மனிதருண்டு,

மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழு மனிதன்.’

. . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

 வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளர்க அறிவுச் செல்வம்!!