சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

1

வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனிதஅறிவு

                                   சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

  06-11-2014

FFC – 10

 

   உணவு, விருந்து என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். உணவு என்பது சாதாரணமானது. அன்றாடம் சாப்பிடுவது. விருந்து என்றால் சிறப்பான உணவு(FEAST, DINNER). பிறந்தநாள். திருமணம். வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு விசேஷமாக அளிக்கப்படும் உணவை விருந்து எனக் கூறுகிறோம்.
     உணவு எதற்காக? உடலுக்கு உணவு அவசியம். வயிற்றுப் பசியினைப் போக்க உணவு அவசியம்.   எளிமையான. சத்துள்ள. சுகாதாரமான உணவு போதுமான அளவு. சரியான நேரத்தில் தேவை. விருந்தில் பல்வேறு வகையான சுவைமிக்க உணவு வகைகள் இருக்கும். விருந்து என்றாலே உணவுப் பண்டங்கள் அளவு(LIMIT) மீறியும் முறை(METHOD) மாறியும் இருக்கும். .
     விருந்தை விரும்பிச் சாப்பிடுவோம். உணவாக இருந்தாலும். விருந்தாக இருந்தாலும் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் சீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்டு சக்கை இருபத்து நான்கு மணி நேரத்தில் மலமாக வெளியேறும். இதனை யாவரும் அறிந்ததே.
       ஆனால் இங்கு நாம் சிந்தனை விருந்து என்கிறோம். இந்த விருந்து உடலுக்கா அல்லது அறிவிற்கா?   மண்ணாகப் போகின்ற உடலுக்கு மட்டும் உணவு அவசியம் என அறிந்திருக்கின்றோம்.   ஆனால் உடலைத் தவிர உயிர் இருக்கின்றது. உயிர் இருப்பதால் மனமும். அறிவும் இயங்குகின்றது. இந்த மூன்றிற்கும் உணவு அளிக்கப்படுவதில்லை.
         உயிர் அழிவதில்லை. உயிரை ஒட்டிய கருமையமும் (ஆன்மாவும்) அழிவதில்லை. அழியாத கருமையத்திற்கும் உணவு அவசியம்.   ஆனால் உணவு அளிப்பதில்லை. அழிகின்ற உடலுக்கு மட்டும் உணவு அளிக்கின்றோம். ஏன்?
       உயிரோ. கருமையமோ. அறிவோ கண்களுக்குத் தெரிவதில்லை. கண்களுக்குத் தெரியாத. வாய் இல்லாத ஒன்றிற்கு உணவு அவசியமா என ஐயம் எழலாம். அறிவிற்கும் உணவு அவசியம்தான். அதுவும் அது விருந்தாக இருக்க வேண்டும். வயிற்றுப் பசிக்கு உணவு அளவுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அசீரணம் ஏற்படும்.   ஆனால் அறிவி்ற்கு விருந்து தேவையாய் இருக்கின்றது. இங்கே அளவு கிடையாது.
     ஏனெனில் எல்லையில்லா(infinite) இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவே மனித சிற்றறிவாக வந்துள்ளதால், அது தன்னை அறிந்து கொள்ள தெளிந்த தெளிவு பெறவேண்டும். அதற்கு தினந்தோறும் அறிவிற்கு விருந்துதான் அவசியம். தினந்தோறும் அறிவிற்கு அளிக்கப்படும் விருந்தால் அசீரணம் ஏற்படாது. மாறாக மேலும் மேலும் தெளிவினை அளித்து எப்படி வாழ வேண்டும் என் உறுதி செய்து அதுபோல் வாழ்ந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை நல்கிவிடும்.
         ஆறாவது அறிவின் சிறப்பே சிந்தனைதான். பேசுவது. எழுதுவது, படிப்பது. பட்டம் பெறுவது, இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றுவது மட்டும் ஆறாவது அறிவின் சிறப்புகளல்ல.
           ஆறாவது அறிவு அறிய வேண்டியதை அறிய வேண்டும். அறிய வேண்டியது என்பது தனது மூலத்தை(Source), மூலத்திலிருந்து இன்று வரையுள்ள தன்னுடைய மாற்றமான, தன்மாற்றத்தை (Self realisation/God Realisation/Liberation/Perfection of Consciousness) அறிதலாகும். உடலுக்கு அவசியமான உணவை உட்கொள்ளும் போது அறிவுதான் சுவையை உணர்கின்றது.   ஆனால் தனக்கே தேவையான உணவு (அறிவிற்கு) கிடைப்பதில்லை.   ஆறாவது அறிவிற்கு தேவையான உணவுதான் சிந்தனையாகும். மற்ற உயிர்களுக்குச் சிந்திக்கத் தெரியாது.      ஆனால் மனிதன் சிந்திக்க முடியும். ஆனால் சிந்திப்பதில்லை.
 மனிதனும் சிந்திக்காமல் இருந்தால், ஐந்தறிவு விலங்கினத்திலிருந்து வந்த மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம் என்பது போல் அறிவின் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம்.   உருவமற்ற (அரூபமான) அறிவிற்குத் திட உணவையும், திரவ உணவையும் அளிக்க முடியாது. உருவமற்ற அறிவிற்கு உருவமற்ற உணவுதான் அளிக்க முடியும். அந்த உருவமற்ற உணவுதான் சிந்தனை.    
                                                         …… இதன் தொடர்ச்சியை நாளைச் சிந்திப்போம்.
வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளா்க அறிவுச் செல்வம்