ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

FEAST FOR CONSCIOUSNESS – FFC – 90

அறிவிற்கு விருந்து – அ.வி. – 90

 

10-06-2015—புதன்

சென்ற  நான்கு விருந்துகளில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

1)   ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,   மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு  வழிவிட வேண்டும் என்பது  பற்றியும்,

2)   வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும்  மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

 3)   எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும்.  விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும்  என்றும் அறிந்தோம்.

 4)   சென்ற விருந்தில் கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு  போராட வேண்டியிருக்கின்றது,

 என்றும் அறிந்து கொண்டோம்.

ன்றைய விருந்தில்,

       ஔவையார், மூதுரையில் நான்கு நல்லவைகளைக்  கூறுவதனைக் கவனிப்போம்.  கருமைய அறிவியல் மற்றும் கல்வியின் நான்கு அங்கங்களையும் அறிவோம்.

     ஒழுக்கமின்மையில் பல காலம் பழகிவிட்டு,ஒழுக்கம் கடைபிடிப்பிடிக்கும் மாற்றத்திற்கு   திடீரென வருவதென்பது போராட்டமாக இருக்கும் என்பதால்,  ஒழுக்கம் கடைபிடிப்பதை விட்டுவிடலாம்  என்று சௌகரியமாக எடுத்துக்  எடுத்துக்கொள்ளமுடியாது. ஒழுக்கமற்ற வாழ்க்கை ஒரு வேளை, ஆரம்பத்தில் சுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முடிவில் துன்பத்தையே நிச்சயமாக, தனக்கோ, அல்லது தன் வம்சாவளிக்கோ கொடுக்கும். அப்போது யார் அந்த துன்பத்தை அனுபவிப்பது? முதலில் இன்பம் அனுபவித்த அறிவுதான் அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது தனது வம்சாவளியான மகனோ அல்லது மகளோ, அல்லது அவர்களையும் கடந்து, பேரனோ, பேத்தியோ அனுபவிக்க வேண்டியிருக்கும். அல்லது அவரது ஏழாவது தலைமுறையிலும் அனுபவிக்கலாம்.

    ஒழுக்கமின்மையின் விளைவாகத் துன்பம் வரும்போது ‘ஒழுக்க வாழ்வில் இருந்து பிறழாமல்இருந்திருந்திருந்தால் இப்போது இத்துன்பம் வந்திருக்காதே’ என்று   வருந்தி என்ன பயன்? ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்’ என்பது போல்தான் அது.  நல்லொழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள எதார்த்த–சிரமத்தை எடுத்துக் கூறுவது எதற்காகவெனில்,

   1) உலகநாதர் உலக நீதியில் அறிவுறுத்தியதுபோல் மனம் போன போக்கெல்லாம் போகாமல்  இருக்கவும்,

   2) ஒழுக்கம் கெட்ட பிறகு  திருந்துவதற்கு முயற்சி செய்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கவும்,

   3) மனிதன் ஒழுக்கம் கடைபிடிப்பதில் ஓயாது, தளரா விடா முயற்சியுடன்  தற்சோதனைப் பயிற்சியினை செய்து வருவதற்கும்,

 4) ஒழுக்கத்தின் அவசியம் மனப்பூர்வமாக அறிந்து. அதனை கடைபிடித்து வரும் வேளையில் எதிர்பாராமல் வரும்  சிரமங்களை கையாள்வதற்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து மனம் தளராமல் இருந்து பிறவிப்பயனை எய்துவதற்காகவும்,

5) ஒழுக்கம் என்பது உயிரைவிட சிறந்தது என்பதால், உயிர் வாழ்வதற்கு, மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல், ஒழுக்கம் என்கின்ற காற்றினை, எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்க,         நல்லோர்களின் இணைப்பைத் தேடி அவா்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

    என்று அறிவுறுத்துவதற்காகவேதான். 

    இப்போதும் ஔவையார் கூறும் மூதுரையைக் கவனத்தில் கொள்வோம்.

moodhurai-ovvaiyar

 

  •  நான்கு நன்றுகளைக் கூறுகிறார் அவ்வையார்.  நன்று என்பது என்ன?
  • நல்லது என்று பொருள்.  பாராட்டைத் தெரிவிக்கும் சொல்.
  • எது நல்லதாக அமையும்?  எதற்காக நல்லோரைக் காண விழைகிறோமே அது நல்லதாக அமையும் என்று பொருள்.
  • அதாவது அடிப்படையில் நல்லொழுக்கத்தை கற்று அதன் வழி நிற்பதற்காகவே நல்லாரைக் காண விழைவதால் அது நல்லதாகவே அமையும் என்று பொருள்.
  • ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ என்பது எதற்காக?
  • நல்லார் குணங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே!
  • எப்போது நல்லவருடைய குணங்களை ஒரு மனிதன் பாராட்டுவான்? எடுத்துரைப்பான்?
  • அவனுக்கு நல்லாரின் குணங்கள் மிகவும் பிடித்திருந்தால் அக்குணங்களின் தன்மை தானாகவே, மீண்டும், மீண்டும் நினைவிற்கு அடிக்கடி வந்துபோகும்.  இவனும் விரும்பி நினைவிற்கு கொண்டு வருவதோடு, அதனை பிறர்க்கும் எடுத்துச் சொல்வான்.
  • அவ்வையார் கூறுவதில் உள்ள அறிவியல் என்ன?
  • திருவேதாத்திரிய மந்திரம் 10 உரைப்பதுபோல், இயல்பூக்க நியதிதான் அந்த அறிவியல்.
  •  ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பது இயல்பூக்கத் தேற்றத்தின்(theorem) கிளைத்தேற்றம்(Corollary). என்பதால், நல்லாரின் குணத்தைப் பெறுவதற்காக,  நல்லாரைச்சந்தித்து அவரது குணங்களில்  உயர்ந்து வருகிறான் என்று பொருள்.
  • ஆகவே நன்று என்று அவ்வையார் கூறுவது,  நல்லொழுக்கனாக மாறுவதேயாகும்.  

       சிறப்புக்களையும், பெருமையையும் உடைய ஒழுக்கம் கடைபிடிப்பதை மனிதன் ஏன் விரும்புவதில்லை? பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதேயாகும்.  அதாவது நல்லொழுக்க விளக்கப்பதிவு, நல்லொழுக்கமில்லாப் பழக்கப்பதிவிடம்(தீயொழுக்கப்பதிவு), தோற்கின்றது.  இந்நிகழ்விற்குப் பின்னால் உள்ள அறிவியலை(hidden Science in  the defeat of Wisdom bythe habits) ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற பொன் மொழியை உதிர்த்து, அதற்கான அறிவியல் விளக்கமும் அளித்துள்ளார் முதன் அறிவியல்-அறிவியலாளர்.  அதுதான் திருவேதாத்திரியத்தின் மகிமையிலும் மகிமை.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? முதன் அறிவின்—அறியவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராட வேண்டியிருக்கின்றது என்கின்ற எதார்த்தத்தை கூறுவதோடு நின்று விடாமல் அதற்கான அறிவியல் விளக்கமும் தருகிறார். எதார்த்தத்தை மட்டும் கூறியிருக்கலாம்.  ஆனால் அதனுள் மறைந்துள்ள அறிவியல் உண்மையையும் கூறுகிறார்.  ஏன்?  எந்த ஒரு குறைபாட்டையும், அதனை சரி செய்வதில் உள்ள சிரமங்களை கூறுவதோடு மட்டும் இருந்துவிடாமல்,

   அந்தக் குறைபாடுகள் ஏன் வந்தன,  அதனைச் சரிசெய்வதில் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்கின்ற விளக்கங்களையும் கூறுவதால், தனிமனிதன்  நிலையில், மனிதன் தனது குறைபாட்டினை சரி செய்துகொள்ளும் பயிற்சியில் உறுதியும், வெற்றி அடைவோம் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டு தன்னைத்திருத்திக் கொள்வதில் தளராது விடாமுயற்சி செய்து வெற்றி கொள்ள முடியும்.

     குறைபாடு என்பது ஒரு தனிமனிதனிடம் மட்டும் இல்லை.  பல கோடி தனிமனிதர்களைக் கொண்டதுதான் இந்த சமுதாயம்.  ஆகவே ஒரு தனிமனிதன் திருந்தியதால் வரும் பயன் மட்டுமே போதாது இந்த சமுதாயத்திற்கு.   சமுதாயத்தில் திருந்திய நல்வாழ்வு வாழாத அனைவருமே திருந்தி, நல்வழியில் வாழ வேண்டும்.

ஆகவே சமுதாய அளவில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு, சமுதாயப் பொறுப்பாளர்கள்

  • சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவும்,
  • அதற்கான சீரானத் திட்டங்களையும்,
  • எவ்விடத்தில்,
  • எப்போது அத்திட்டங்களை
  • எவ்வாறு கொண்டு வரவேண்டும்

என்று  முயலும்போது,

  • ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம்’ கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமைய உதவியாக இருக்கும்.

     உதாரணத்திற்கு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ போன்ற ஆன்றோர்கள் மொழிந்துள்ளதை கவனத்தில் கொண்டால்,  “ஆளும் வளரனும், அறிவும் வளரனும்” என்கின்ற திரைப்படப் பாடல் ஒன்று கூறுவதுபோல் குழந்தையிலிருந்து உடல் வளர்ந்து வருவதுபோல், அறிவும் வளரவேண்டியிருப்பதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை இயல்பாக மலரச் செய்வதற்கு, பள்ளிக்கல்வியிலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை(ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள்) வாழ்க்கையில் மிக மிக அவசியமான, ஒழுக்கத்திற்கு முதல் கவனம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும். ஒழுக்கத்தை இயலாக்கிடவேண்டும். மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைவிட மாணவர்கள் இளம்வயதில் ஒழுக்கவியல் பாடத்தில் அதிக கவனமும், ஆர்வமும் காட்டுவர். ஏனெனில் ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக திகழ்வதால், அது ஒழுக்கத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருக்கின்றது. அதற்கு இளம்வயது பிராரப்த கர்மா சோ்த்துக் கொள்ளாத சரியான பருவம். ஆகவே மற்ற பாடங்களில் உள்ள ஆர்வத்தைவிட ஒழுக்கவியல் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் மாணவர்கள்.

    ஒழுக்கம் என்பது மரபணுவுடன் தொடர்புடையதால், தொடர்ந்த முறையான, பன்னிரண்டு வருட கருத்தியல் மற்றும்  செய்முறைப் பயிற்சியாலன்றி ஒழுக்கப்பண்பை, மரபணுவில் பதிய வைக்க முடியாது.  மரபணுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு நூறு ஆண்டுகள் கூட ஆகும் எனக்கூறப்படுகின்றது. ஆகவே மரபணுத் தொடர்புடைய  ஒழுக்கப்பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு மாணவப் பருவத்திலேயே ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள் ஒழுக்கவியல் கல்வியினைக் கொடுத்து விடவேண்டும்.  ஐந்து வயதிற்கு முன்னரும் தாய், தந்தையர்கள் குழந்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி அடிப்படை ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.  அதற்கு முதல் ஆசிரியா்களான பெற்றோர்களும்,  ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து, தங்களின் செராக்ஸ் நகல்களான குழந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க, செராக்ஸ் நகலின் மூலமான(original)தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உதவுவதற்காகவே வேதாத்திரி மகரிஷி என்கின்ற கருணாமூர்த்தி மூலம் இயற்கை/இறை அருளியதுதான் மனவளக்கலை.

இத்தருணத்தில்  06-02-2011 அன்று வெளிவந்த தினமலா், சென்னை நாளிதழில் வந்துள்ள “நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கின்றது” என்கின்ற செய்தியினை பகிர்ந்து கொள்வோம்.  அச் செய்தி வந்ததை  ஒட்டி,  ஆன்ம செழிப்புறு இணையதள ஆசிரியா், அன்று, அன்பர்களுடன் இ-மெயிலில் பகிர்ந்து கொண்ட சிந்தனை விருந்து இப்போது இணையதள சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.  வாழ்க வளமுடன். 

 

gene_dinamar_news

dinamalar_news_06.02.2011

அறிவின்–அறிவியலாளர், மனிதகுல விடிவெள்ளியான, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கல்வி என்பது,

1)   எழுத்தறிவு,

2)   தொழிலறிவு,

3)   ஒழுக்கப்பழக்கறிவு,

4)   இயற்கைத்தத்துவறிவு

ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிறார்.  ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், முதல் வகுப்புக்குக் கல்வியிலேயே ஒழுக்கவியல் பாடத்தை மற்ற பாடங்களுடன் கட்டாயப்பாடமாக்கி கற்றுத்தரப்பட வேண்டும்.

வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம், வாழ்க மனிதகுலம். வளர்க மனித குலம். வாழ்க மனித அறிவு  வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம் என்கின்ற எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்பியும், நிரப்பியும்  வருவோமாக.

அடுத்த விருந்தில், பழக்கத்திற்கு விளக்கத்திற்கும் இடையே போராட்டமாக உள்ளதில் உள்ள அறிவியல் உண்மையை மெய்ஞான அறிவியலாளர்  கூறுவதனை மேலும் அறிவோம் தொடரும்  14-06-2015