ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 3/?

ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 3/?

FEAST FOR CONSCIOUSNESS – FFC – 88

அறிவிற்கு விருந்து – அ.வி. – 88

03-06-2015—புதன்

Swamiji

இதுவரை ‘Science’ எனும் அறிவியலில் அறிவைப்பற்றிய(Consciousness) எளிமையான விளக்கங்கள் இல்லாத நிலையில், சென்ற விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவை, தான் அனுபவத்தில் அறிந்ததோடு மட்டுமல்லாது, அதனை இயலாக்கி, உலகசமுதாயம் அறிவை தன் அனுபவமாக அறிந்து கொள்ளும் வகையில் அறிவுப்பூர்வமாக தெரிவித்துள்ளதால் அறிவைப்பற்றிய இயல், அறிவின்—இயல் என்றும், அதனை முதன் முதலில் தெரிவித்ததால், வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் –அறிவியலாளர் என்றும் அறிந்து கொண்டோம். ஏற்கனவே ‘science’ என்கின்ற ஆங்கில வார்த்தை, தமிழில் அறிவியல் என்று சொல்லப்படுவதால், ‘the Science of Consciousness’ ஐ அறிவியல் என்று சொல்லாமல், அறிவின்—அறிவியல் என்கிறோம்.

இன்றைய விருந்தில் ‘What is Science?’, விஞ்ஞானம், மற்றும் அறிவியல் ஆகிய சொற்களின் பொருள் பற்றியும், போராட்டம் என்பது என்ன, மனதுடன் போராடுவது என்பது என்ன என்று அறிந்து கொள்ள இருக்கிறோம். ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டிய காரணத்தையும், பல்லாயிரம் தலைமுறைகளில் ஆன்மா ஏற்படுத்திக் கொண்ட வினைப்பதிவுகள் மற்றும் அதன் அழுத்தத்தையும், அது விளக்கப்பதிவை வெற்றி கொள்ளாமல் இருக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

Science of Consciousness – அறிவு இயல்/அறிவியல்/அறிவின் இயல்

Let us know what is Science? Science is the concerted human effort to understand, or to understand better, the history of the natural world and how the natural world works, with observable physical evidence as the basis of that understanding. The word science comes from the Latin “scientia,” meaning knowledge. … obtained and tested through scientific method [and] concerned with the physical world.
Science is the study, description, experimental investigation and theoretical explanation of the nature and behaviour of phenomena in the physical and natural world. A branch of systematised knowledge as an object of study.

‘Science’ என்பது என்ன? ‘Science’ என்பது இயற்கையைப்பற்றியும், எவ்வாறு இயற்கை இயங்குகின்றது, இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் அறிவு பூர்வமாக அறிவது. இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என அறிய வேண்டுமானால், பொருட்களுக்கு அடிப்படையாக உள்ளதை அறியவேண்டும். ஆகவே பொருட்களுக்கு அடிப்படையாகவுள்ள அணுக்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை இயங்குகின்ற தன்மைகளை அறிந்து கொள்ளும் விளக்கமே விஞ்ஞானமாகும். விண்+ஞானம்=விஞ்ஞானம்.

அணுவின் அசைவு நிகழ்ச்சியாகும். அதிலிருந்து அணுக்கள் கூடி இணைந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் காலம், தூரம், பருமன், வேகம் என்கின்ற 4 அளவைகளால்(measurements) கணிப்பது விஞ்ஞானமாகும். அந்த நிகழ்ச்சிகளால் மனித வாழ்வில் ஏற்படுகின்ற விளைவுகளை யூகித்து தன்னுடைய விருப்பத்திற்கும், தேவைக்கும், ஏற்றபடி அவ்விளைவுகளைப் பயன்படுத்தவும், இந்த நோக்கமும், செயலும் வெற்றி பெற உடல் கருவிகட்குத் துணைக் கருவிகளாக இயந்திரங்களையும், நுட்ப அளவைக் கருவிகளையும் உற்பத்தி செய்து பயன் கொள்வதும் விஞ்ஞானத்தின் சிறப்புக்கள்.

‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் `விஞ்ஞானம்’(விண்+ஞானம்=விஞ்ஞானம்) என்று சொல்லப்பட்டு வந்தது. இப்போது ‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் அறிவியல் என அழைக்கப்பட்டு வருகின்றது. ‘விஞ்ஞானம்’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டு சொற்களின் பொருளை கவனிப்போம்.

விஞ்ஞானம் என்பது விண்ணைப்பற்றிய ஞானம்; ஞானம் என்றால் அறிவு, தெளிவு என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விண்ணைப்பற்றிய அறிவு. அதாவது அணு, அதன் துணை அணுக்களான புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகியவைகளைப்பற்றிய அறிவு. ஆகவே அது விஞ்ஞானம் எனக்கூறப்பட்டு வந்தது.

அறிவியல் என்கின்ற சொல் ஒரே சொல்லல்ல. அது இரண்டு சொற்களைக் கொண்டதாக உள்ளது. அதாவது அறிவு, மற்றும் இயல் என்கின்ற சொற்களைக் கொண்டது. இந்த இரண்டு சொற்களைச் சேர்த்துத்தான் அறிவியல் என அழைக்கப்படுகின்றது. (மருத்துவம்+இயல்=மருத்துவவியல்) மருத்துவ இயல் (Medical Science) என்றால் அதில் மருத்துவம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும், அதில் மருத்துவம் பற்றி ஆராயப்படும். அதுபோன்று ‘Science’-அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) என்றால் அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். ஆனால் இதுவரை இடம் பெறவில்லையே. அறிவை பற்றி ஆராய்ச்சி இருக்கும் இயல்தானே அறிவியல் எனப்படவேண்டும். தற்போது ‘Science’ ஐ அறிவியல் என்று வழக்கத்தில் பொதுவாக கூறிவருவதால், அறிவு பற்றிய அறிவியலை– ‘Science of Consciousness’ஐ நாம் ‘Medical Science’ ‘Physical Science’ என்று கூறுவது போல் அறிவின்-–அறிவியல் என்கிறோம். அறிவை ஐயமின்றி நுணுகி ஆராய்ந்து அறிந்தவரை அறிவின் அறிவியலாளர் (Scientist of Consciousness) என்கிறோம்.

‘பாவம், புண்ணியம்’ என்பது மதச்சார்புடைய வார்த்தைகள் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், ‘பாவம், புண்ணியம்’ என்பதனை அறிவியலாக்கி பாவம் என்பது ஒழுக்கமின்மையாகவும், தீயொழுக்கமாகவும், புண்ணியத்தை ஒழுக்கமாகவும் அறிவியல் ரீதியாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

ஒழுக்கத்திற்கு மகரிஷி அவர்கள் கூறும் வரையறை என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவால் தனக்கோ, பிறர்க்கோ, சமுதாயத்திற்கோ, எந்தவகையிலும் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ தீங்கு நிகழாமல், நன்மையே இருந்தால் அது ஒழுக்கமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே ஒழுக்கத்தின் விளைவு நன்மையாகின்றது. ஆகவே ஒழுக்கம் எப்போதும் நன்மையைத் தருவதால் அது புண்ணியச் செயலாகின்றது. தீங்கு நிகழ்ந்தால் அது ஒழுக்கமின்மை- தீயொழுக்கம் என்றாகின்றது. ஒழுக்கமின்மை தீங்கைத் தருவதால் அது பாவமாகின்றது.

அறிஞர் ரூஸோ, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கூறியுள்ள கூற்றுகளைப் பார்த்தோம். இந்த நான்கு கூற்றுகளையும் இணைத்து நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அறிஞர்கள் நன்றாக கூறியுள்ளார்கள் என்று கூறிவிட்டு விட்டு, அதோடு சென்று விடுவதா? இதற்காகத்தானா இந்த நான்கு அறிஞா்களும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்?! சமுதாயம், ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, சமுதாய அக்கறையோடு சொல்லி இருக்கிறார்கள் நான்கு அறிஞர்களும்.

‘ஒழுக்கம் போர்க்களம் போன்றது’ என்று ரூஸோ சொல்வதால் ஒழுக்கம் கடைபிடிப்பது கடினம் என்று ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருந்து விடுவதா? திருவள்ளுவர் ஒழுக்கத்ததைப்பற்றிக் கூறி 2046 வருடங்கள் கழிந்து விட்டன. இது வரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேலும் புதிய அறநூல்கள் ஏதும் அவசியம் இல்லை என்கிறார். அறம்பிறழா நெறி நின்று வாழ, அவசியமான பொருட்களுடன் கல்வி கிட்டுவதற்கு அறவோர்களை திட்டமிட்டு அமுல் செய்ய வேண்டுகோள் விடுக்கிறார் அறநெறியாளரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். இங்கே சாதனையே அறநெறி(21.12.1961) என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

FFC-88-3-6-15-சாதனையே அறநெறி-கவி

“ஒழுக்கம் போர்க்களம் போன்றது”, என்று அறிஞர் ரூஸோ சொல்வதால், போரிட்டுத் தான் ஒழுக்கத்தை வெல்ல வேண்டும் என்றாகின்றது. ஒழுக்க வாழ்வு வாழ வேண்டுமெனில் ஓயாமல் (இடை விடாது – தொடர்ந்து– consistent effort) மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர். ‘ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்பதால் கடைசி மூச்சு வரை மனப்போராட்டம் செய்து கொண்டு போராட்ட வாழ்க்கைதான் வாழ வேண்டுமா? அப்படியில்லை. எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் போராட்டம் நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியினைத் தரும்.

வினைப் பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். (சிந்திக்க வினாக்கள்—76–28-05-2015–வியாழன்  Click here) தொண்ணூறு வயது முதியவர் கூட கடைசி மூச்சு வரை ஒழுக்க வாழ்வு வாழ்ந்தேதான் ஆக வேண்டும்.

இங்கே மகரிஷி அவர்கள் கூறும் மனிதனைப்பற்றிய வரையறையை கவனிப்போம் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் மனிதன்”, என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் இந்தக் கூற்று ரூஸோ அவர்கள் கூறும் ஒழுக்கத்தைப் பற்றியா? ஆம். ஒழுக்கமில்லாமல் அறியாமையாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது உணர்ச்சி வயத்தாலோ, அல்லது இம்மூன்றும் சேர்ந்த அறிவின் குறைபாடுகளாலோ
முழுமையான ஒழுக்கமில்லாமல்,
பல தலைமுறைகள் வாழ்ந்து விட்ட ஆன்மாவிற்கு,
இன்று ஒழுக்கவாழ்வின் மேன்மையை அறிந்து கொண்டு,
நாளை முதல் ஒழுக்க வாழ்வு வாழ்வதென்பது,

ஏற்கனவே ஒழுக்க நெறியில், வாழ்ந்து வரும், கருவில் திருஉடையவர்களைத்தவிர மற்றவர்களுக்கு சிரமம்தான் என்கின்ற எதார்த்தத்தை எடுத்துச் சொல்வதுதான் மகரிஷி அவர்கள் மனிதனைப் பற்றிக் கூறும் அந்த வரையறை. சிரமம் என்கின்ற எதார்த்த நிலையைக் கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளாக பழிச்செயல்களை செய்திருந்தாலும், ஒரு பிறவியிலேயே அதனை மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றலை இயற்கை கருணையோடு கொடுத்துள்ளது என்கிறார் மகரிஷி அவர்கள். அதுதான் தவமும், அறநெறிவாழ்க்கையுமாகும்.

மனிதனுக்கான பொதுவான வரையறைகள் என்ன?

Man is a bundle of thoughts. —————————————– மனிதன் எண்ணங்களின் தொகுப்பு.

Man is a social animal. ———————————————— மனிதன் ஒரு சமுதாயப் பிராணி.

Man is a living being endowed with sixth sense. —————— மனிதன் ஆறாம் அறிவுடைய ஒரு உயிரினம்.

மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான வரையறை என்ன? மகரிஷி அவா்கள் மனிதனுக்குக் கூறும் வரையறையாவது — “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்”

மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான இந்த வரையறை, அறிஞர் ரூஸோ, “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” (சிந்திக்க அமுதமொழி – 49 – 20-02-2015—வெள்ளிக்கிழமை Click here) என்று கூறுவதோடு ஒத்துப் போகின்றது. இரண்டு பொன்மொழிகளும் ஒத்துப் போகின்றது என்றால் இரண்டு பொன்மொழிகளும் ஒரே உண்மையைக் கூறுகின்றன.

இரண்டு பொன் மொழிகளிலும் போராட்டம் என்பது பொதுவாக உள்ளது.
ஆகவே போராட்டம் என்பதற்கான பொருள் அறிய வேண்டும்.
மனதுடன் போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. எவ்வாறு மனதுடன் போராடுவது?
மனவளக்கலைஞா்களாகிய நாம் மனதைப் பற்றி அறிவோம். மனதை செம்மைப் படுத்தும் தெய்வீகப் பயிற்சியான அகத்தாய்வு பயிற்சியையும் செய்யத் தெரியும் நமக்கு.

இந்த இரண்டு பொன் மொழிகளும் ஒரே உண்மையினை தெரிவிக்கின்றது என்பதால், ஒழுக்கத்தைப்பற்றியே இரு அறிஞர்களும் கூறுகிறார்கள். அறிஞர் ரூஸோ, ஒழுக்கத்தைப் பற்றி நேரிடையாகவே கூறுவதற்கு, ‘ஒழுக்கம் கடைபிடிக்க போராட வேண்டும்’ என்கிறார்.

மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்பதால், மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடுவது என்று கூறுவதும், அறிஞர் ரூஸோ ‘ஒழுக்க வாழ்க்கை வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்று கூறுவதும் ஒன்றே. இருவருமே ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி கூறுகிறார்கள்.

சென்ற விருந்தில், ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலம்(Chart) அறியலாம் என்று கூறி இருந்தோம். இச்சிந்தனை விருந்து நீண்டு கொண்டே இருக்கும் காரணத்தால், அதனை இவ்விருந்தில் கூற இயலவில்லை. அடுத்த விருந்தில்(07-06-2015—ஞாயிறு) அதனை அறிவோம். தொடரும் (07-06-2015—ஞாயிறு)