அ.வி. 141-எல்லாப் புகழும் இறைக்கே!  — 5/?

வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

எல்லாப் புகழும் இறைக்கே!  — 5/?

அ.வி. 141

                                                                       02-12-2015 – புதன்      

 

FFC-62vethathiri_mararishi

 எல்லாப்புகழும் இறைக்கே என்பதனை சிந்தித்து வருகிறோம்.avan_nee_ondraai

“அவனில்தான் நீ! உன்னில் அவன்!

             அவன்யார்? நீயார்? பிரிவேது?

            .. …. …. …. …. …. …. …… ….. ….. ….

            .. …. …. …. …. …. …. …… ….. ….. ….

           அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,

            அறிவு முழுமை அது முக்தி.”   

என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருள் மொழியின்படி “அவனில்தான் நீ! உன்னில் அவன்! அவன்யார்? நீயார்? பிரிவேது? என்றாகிவிட்ட பிறகு, எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறையில் நடக்கின்ற எல்லாப்புகழ் தருகின்ற நிகழ்வுகளுக்கும்/நிகழ்ச்சிகளுக்கும் இறைதானே காரணமாக இருக்க முடியும்.  என்று சிந்தித்து வருகிறோம்.

     இதுவரை 

  •  பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
  • மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் எய்தினார்,
  • வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண், இயற்கையின் இரகசியம் எது என்றும்,
  • அதனை அறிய வேண்டிய அவசியத்தையும், 
  • திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்,

 என்று அறிந்து கொண்டோம்.

    எந்த ஒரு பொருளானாலும், இயக்கமானாலும், தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்குகளைக் கொண்டிருப்பதால்,  அதில் இரகசியமான சூக்குமம், காரண நிலைகைள  அறிவதே அறிவு,  என்பதனால்  மனிதன் விரும்புகின்ற ‘இன்பத்தையே’ நம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு  ‘இன்பம் துய்த்தலில்’  உள்ள சூக்குமத்தையும் காரணத்தையும் அறிவோம்.

     இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றது வேதம்.  லட்டு சாப்பிடுகிறோம்.  லட்டிலுள்ள இனிப்பு இன்பத்தைத் தருகின்றது.  அந்த இன்பம்   எதில் இருக்கின்றது என்றால் புறப்பொருளான லட்டில் உள்ளது என்போம்.  ஆனால் வேதம், இன்பம் புறப்பொருளில் இல்லை என்பதால் லட்டு அருந்துவதால் வரும் இன்பம் லட்டில் இல்லை என்றாகின்றது. வேதாத்திரியமும் அவ்வாறே இன்பம் பற்றி வேதம் கூறும் உண்மையையே கூறுகின்றது.  ஆனால் இன்பம் – துய்த்தல் நிகழ்ச்சியில் உள்ள சூக்குமம், காரண நிலைகளை விளக்கி இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்ற உண்மையைக் கூறுகின்றது. 

 அதாவது  லட்டு உண்பதில் எதனை இன்பமாக  அறிவு உணர்கின்றது என்று வேதாத்திரியம்கூறுகின்றது?

லட்டு என்பது தூலமாக உள்ளது. அதில் கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகியன உள்ளன.  இந்த மூன்றும் அணுக்களால் ஆனது.  அந்த அணுக்கள் இறைத்துகள்களைக் கொண்டது,  அதிலிருந்து வருவது காந்தம்.  லட்டிலிருந்து வரும் காந்த  அளவிற்கு, சீவகாந்தம் உயர்ந்து செலவாகி மாறி (conversion and consumption) இன்பமாக உணரப்படுகின்றது.  இன்பத்தின் இந்த காரண நிலையை உணர்த்தி இன்பம் என்பதில் உள்ள உட்பொருளை விளக்குகின்றது வேதாத்திரியம். 

   நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவு வரை சீவகாந்தம் உயா்ந்தால் அது இன்பமாக இருக்கும்.  நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவிற்கு மேல் சீவ காந்தம்  உயர்ந்தால் அது துன்பமாக இருக்கும் என்கின்றது.  எனவே இன்பமே துன்பமாக மாறுவதை அறிய முடிகின்றது.  அதனால்தான் இன்பம் துய்ப்பதில் பொருந்தா உணர்வான சலிப்பு ஏற்படுகின்றது.      

    இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் இன்பம் துய்ப்பதில் ‘அளவும், முறையும்’ என்கின்ற சாம்யம் கிடைத்தது மனித குலத்திற்கு.  இது தத்துவமாக இல்லாமல், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது.  எனவே  ‘இன்பம் துய்த்தல்’ என்பதில் நம்முடைய சீவகாந்தத்தின் செலவே இன்பமாக உணரப்படுகின்றது.  ஆகவே இன்பம் தருகின்றது என்பதால்  இன்பத்தையே துய்த்துக் கொண்டிருக்க முடியாது.  ஏனெனில் நம்முடைய சீவ காந்தமேதான் செலவாகிக் கொண்டிருக்கின்றது.  சீவகாந்தம் அதிகம் செலவானால் அதன் இருப்பு குறைந்து விடும்.  உணவு உண்பதால் சீவகாந்த இருப்பு குறைகின்றது என்பதால் உணவே உட்கொள்ளக்கூடாதா என கேள்வி எழலாம்.  உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் உணவின் மூலம்தான் கிடைக்கின்றது. எனவே போதுமான சத்து கிடைக்கும் அளவிற்கு  உணவு உண்டுதான் ஆக வேண்டும். அந்த உணவின் சுவையை உணர்வதற்காக  சீவகாந்தம் செலவாவது தவிர்க்கமுடியாது. அதனால்தான் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும் என்கின்ற சாம்யம் இயற்கை/இறை தந்துள்ளது.

   எனவே எந்த இயக்கத்திலும் புறமேன்மையை உணர்வதோடு மட்டுமல்லாது அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.  அதாவது இன்பம் துய்த்தல் என்கின்ற நிகழ்ச்சியில் புறமேன்மையான இன்பத்தை உணா்வதோடு, அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த உண்மையினை அறிந்து கொண்டால்தான்  இன்பம் துய்த்தலில் பொறுப்புணர்ச்சி ஏற்படும்.   அளவு, முறை என்கின்ற சாம்யம் பின்பற்றப்படும்.  இல்லாவிடில் திருவள்ளுவர் கூறுவது போல் பிறவி துன்பப்பிறவியாகிவிடும். இன்பம் துய்த்தலிலுள்ள சூக்கும, காரண நிலைகளை அறிந்ததால் பிறர்க்கு தெரிவிக்கும் கவியான “இன்பம் துன்பம்” என்கின்ற கவி உருவாயிற்று.  அக்கவியினை நினைவு கூர்வோம்.

இன்பம் துன்பம்

இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

  எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;

இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

  எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு

இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,

  ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,

இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,

  இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.

                                                              …..   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    லட்டு மட்டுமல்ல, ஐாங்கிரி, குலோப்ஜாம், மைசூர்பாக்கு, அதிரசம் போன்ற எந்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்  கொண்டாலும் புறத்தே பார்க்கும் போது அவைகள் வெவ்வேறாக உள்ளதாக தோன்றினாலும். அதற்கு காரணம் மட்டும் ஒன்றேதான். அதாவது அதில் உள்ள இனிப்பு மற்றும் சுவைக்கு காரணம், உண்பவரின் சீவகாந்தம் இனிப்பு பதார்த்தத்தில் இருந்து வரும் காந்த அலைகளின் அளவிற்கு உயர்ந்து, மாறி செலவாவதுதான்.

  உப்புமா சாப்பிடுகிறோம்.  உப்புமாவில் காரச் சுவைக்காக பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது.  சாப்பிடும்போது பச்சை மிளகாயை கவனமாக அப்புறப்படுத்தி விட்டு  உப்புமாவை மட்டும் உண்கிறோம்.     தெரியாமல் பச்சை மிளகாய் வாய்க்குள் சென்று விட்டால் நாவிற்கு எரிச்சல்என்கின்ற பொருந்தா உணர்வு ஏற்படுகின்றது. உடனே நீர் அருந்துகிறோம்.  குழந்தைகளாக இருந்தால் சிறிது சர்க்கரையைக் கொடுத்து அந்த துன்ப உணர்விலிருந்து விடுபடச்செய்கிறோம்.  இதற்குக் காரணம் என்ன?

    உப்புமாவிற்கு காரச்சுவையை ஊட்டுவதற்கு போதுமான பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. பச்சைமிளகாயிலுள்ள காரச்சுவை (காந்தம்) உப்புமாவில் கலந்து போதுமான காரச்சுவையோடு உப்புமா இருக்கின்றது. அதனால் உப்புமாவை மட்டும் சாப்பிடும் போது  உப்புமாவில் கலந்துள்ள காரச்சுவை நாவிற்கு பொருத்தமாக இருந்து எரிச்சல் எடுப்பதில்லை.  ஆனால்  காரச்சுவையின் மூலமான பச்சைமிளகாயை நேரிடையாக வாய்க்குள் சென்றதால் பச்சைமிளகாயிலுள்ள காரம் அளவிற்கு(காந்தம்) சீவகாந்தம் திடீரென உயர்ந்ததால், நாவிலுள்ள அணுஅடுக்குகள் தாங்கும் அளவிற்கு மேல் சென்றதால் எரிச்சல் என்கின்ற துன்ப உணர்வு உண்டாயிற்று.

     வேதாத்திரிய மெய்ப்பொருள்-இறைஞான விளக்கம் தெளிவாகவும், சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது.  இதுவரை சித்தர்கள் வெட்டவெளியே தெய்வம் என கூறியிருந்தாலும், வேதாத்திரிய மெய்ப்பொருள் விளக்கம் வெட்டவெளிக்கு உள்ளடங்கியத் திறன்களையும், தரங்களையும் கூறுகின்றது.    மேன்மைக்கு காரணமான உள்ளடங்கியதைக் குறிக்கும் சொல் ‘உண்மை’ என்பதற்கிணங்க, மெய்ப்பொருளின் மேன்மைக்குக் காரணமான உள்ளடங்கிய திறன்களையும், தரங்களையும் கூறுவதால், மெய்ப்பொருள்-இறைஞானத்தை, மனவளக்கலைஞர்கள் அனுபவிக்க முடிகின்றது.

   ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞரின்—இயற்கையின் விருப்ப – எண்ண-, வாழ்த்தாக உள்ளதால்  அதனை நிறைவேற்றுவதில் தெளிந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

    இந்த விருந்தை முடித்தவுடன்,  ஞானக்களஞ்சியம் (பகுதி இரண்டு) நூலினை எடுத்து, ‘மலர் வழியே விளங்கும் மறை பொருள் விளக்கம்-1982’ என்கின்ற 1649 வது பாடலை ஒரிருமுறை ரசித்துப்பாடி இன்புறவும்.  அறிவிற்கு சுத்தஅத்வைத விஞ்ஞானத் தெளிவு ஏற்படுவதற்கு நலம் பயக்கும்.

   மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா?  விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது.  எனவே மலரில் பல கோடி அணுக்கள்  இருப்பதாகக் கூறுகிறார்.  அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும்.  மலராகும் போது ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒரு நாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன.   அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்ற  நாடகத்தில் ஒரு கட்டம் மலருடைய தோற்றம்.

  ரோஜா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, மரிக்கொழுந்து எதுவானாலும் அவை புறத்தே வெவ்வாறகத் தோற்றமளித்தாலும், அவற்றிலிருந்து வரும்  வாசம் வெவ்வேறாக இருந்தாலும் வாசம் நுகர்வதற்கு  காரணமாக இருப்பது ஒரே நிகழ்ச்சிதான்.  அதாவது பூக்களிலிருந்து வரும் வாசமாகிய காந்த (அலைகளின்) அளவிற்கு நுகருபவரின் சீவகாந்தம் உயர்ந்து, மாறி, செலவாவதேதான் காரணம். அதிகமாக வாசத்தை நுகர்ந்தால் அதிகமான சீவகாந்தம் செலவாகும்.

   அதே போன்றுதான் மனிதன் என்கின்ற நிகழ்ச்சியும்.   அணுவின் கூட்டுப்பக்குவமாக உருவத்தை எடுத்துப் பிறக்கிறான்(ஆன்மா). அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து விடுகின்றது ஆன்மா.  அதாவது மறைகிறான்.  மனிதன் என்கின்ற பாத்திரம் முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் வாழ்க்கை.  மலர் மட்டும்நிகழ்ச்சி அல்ல.  மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது?  புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது?  ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை  இனிவரும்  அறிவிற்கு விருந்தில்  விரிவாக பார்க்க உள்ளோம்.

     உலக மக்கள் 720 கோடி உருவங்களாக  புறத்தே  வேறுபட்டிருந்தாலும் உருவத்தின்(தூலம்) சூக்குமம், காரணம் நிலைகளில் ஒன்றாகத்தான் உள்ளோம்.  இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள விஞ்ஞானம்.  இந்த மெய்யான விளக்கத்திற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

மெய் விளக்கம்

நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே

  நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.

ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை

  உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;

ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு

 என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல

வானறிவோம் உயிர்விளங்கும் வரை கடந்து நிற்கும்

  வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்.

      

                      — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.       

இன்றைய விருந்தின் சுருக்கம்:

 1) இன்பம் புறப்பொருளில் இல்லை என்கின்ற வேதத்தின் கூற்று உண்மை என அறியப்பட்டது.             

2) இன்பத்தின் அடிப்படை உண்மை அறியப்பட்டது. 

3) ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம் கிடைத்தது.

4) வேற்றுமையில் ஒற்றுமையில் உள்ள மெய்ஞான-விஞ்ஞானம் அறியப்பட்டது.

 

   அடுத்த விருந்திற்காக 06-12-2015 ஞாயிறன்னு கூடுவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்