FFC-207-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 3/3


வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

எண்ணியது  நிகழ்வதில்  கருமையத்தின் பங்கு என்ன? 3/3

FFC-207

                                                                                                 17-07-2016—ஞாயிறு

திண்ணிய நெஞ்சத்தால்தான் எண்ணியதை அடையமுடியும்   

eNNiya mudidhal_FFC-207_17-07-2016

திண்ணிய நெஞ்சம் வேண்டும்:

    ஞானி மகாகவி பாரதியார் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்

 நல்லவை எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

 தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம்

 பரிதிமுன் பனிபோல,

நண்ணிய நின்முன் இங்கு

 நசித்திடல் வேண்டும் அன்னாய்.

               …. மகாகவி பாரதியார்.  

மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்குள்  புகுவோம்.  இப்பாடலின் பொருளை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் என்ன அறிவோமோ அவ்வாறே அறிவதற்காக மகாகவி பாரதியாரின் அறிவாற்றலுடன் நம் அறிவாற்றலையும் இணைத்துக்கொள்வோம்.  பெரும்பாலும் இப்பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிவோம்.  கடைசி நான்கு வரிகளை  பயன்படுத்துவது என்பது அரிதாக உள்ளது.  இங்கு நாம் எல்லா வரிகளுக்குமே மகாகவி பாரதியாரிடமிருந்து, பொருளும், விளக்கமும் கேட்டறிவோம்.

    இப்பாடலில், வேண்டுதல்கள் ஐந்து போல் இருந்தாலும் நான்கு வேண்டுதல்களும்(wants),  இரண்டாவது வேண்டுதல் உறுதி மொழியாவும் உள்ளன. இதற்கும் மேலாக  ஒரு ஒப்புக் கொள்ளுதலும்(confession) உள்ளன.

1)   எண்ணிய முடிதல் வேண்டும்.

2)   நல்லவை எண்ணல் வேண்டும்.(இது வேண்டுதல் மட்டும் இல்லை. உறுதிமொழி கலந்த வேண்டுதலாக உள்ளது. இறைவிக்கு அளிக்கும் ‘நல்லவை எண்ணுவேன்’ என்கின்ற உறுதி மொழியை அளித்துவிட்டு, அதற்கு விழிப்போடு தான் இருக்க, இறைவி துணையாக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலும் உள்ளது.)

3)   திண்ணிய நெஞ்சம் வேண்டும்.(நல்லது என எண்ணியதை முடித்திட மனதிற்கு உறுதியும், தைரியமும் வேண்டும். தளரா விடாமுயற்சி வேண்டும்.)

4)   தெளிந்த நல்லறிவு வேண்டும். (எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது.  ஆனால் தெளிந்த நல்லறிவு என்பது அறிவை  அறிந்தவரிடம் மட்டுமே உள்ளது. நல்லறிவு வேண்டும் என்பது சரி. நல்லதையே எண்ணுவதற்கும், நல்லதையே பேசுவதற்கும், நல்லதையே செய்வதற்கும் நல்லறிவு அவசியமாகின்றது என்பது தெரிகின்றது.  ஆனால், அதிலும் தெளிந்த என்கின்ற வார்த்தையை சோ்த்திருக்கிறார் பாரதியார்.  ஏன் எல்லாவற்றிலும் நல்லதே இருக்க வேண்டும்  என்கின்ற விளக்கமாகியத் தெளிவு வேண்டும். மனித சமுதாயத்தில் பெரும்பாலும், தெளிந்த நல்லறிவு இல்லாமையால்தான் இப்பாடலே இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பாரதியாருக்கு.)

5)    ஒப்புதல் அளித்தல்:— பண்ணிய பாவமெல்லாம் (அறியாமையில் குற்றவாளி உணர்ச்சி வயத்தில் குற்றம் செய்துவிட்டு, நீதி மன்றத்தில் நீதிபதியிடம்  தான் குற்றம் செய்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் (confession statement) கொடுப்பது போல், இறைவியின் சன்னிதானத்தில்— ‘இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் பாவங்கள் செய்து விட்டேன் என்கின்ற ஒப்புதல் வாக்கு மூலம்)

6)   நசித்திடல் வேண்டும். (செய்த பாவங்களெல்லாம் நீக்கிட வேண்டும்)

 கருத்துரை:– அதாவது ஒவ்வொரு மனிதனும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும், செய்த செயல்களின் விளைவுகளாகத் தனிமனிதத் துன்பங்களும், சமுதாயத்துன்பங்களும் மல்கிவிட்டன.  அதுதான் உலகில் அமைதியின்மைக்கு காரணமாக உள்ளது.  ஆகவே ஒரு(இந்த) காலகட்டத்திலாவது, தன்னுடைய பாவங்களை உணர்ந்து, அவை நசிந்திட, இனிமேலாவது, நல்ல எண்ணங்களை எண்ணி, அவ்வாறு எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேற (உலகில்  அமைதி நிலவவேண்டும் என்பது கூட ஓர் உயர்ந்த எண்ணம்) வேண்டும் என இறைவியை வேண்டச்சொல்கிறார்.

     திருவள்ளுவர் மற்றும் ஞானி மகாகவி பாரதியார் கூறும்  வைரவரிகளையும், மகரிஷி அவர்கள் கருமையம் தூய்மையாக இருக்குமானால் எண்ணம் நிறைவேறுவது பற்றி கூறும் வைரவரிகளையும் ஒப்பிட்டால் தெரிய வருவது திருவள்ளுவர் கூறும் ‘செயல் ஆற்றுவதில் வேண்டிய உறுதி, பாரதியார் கூறும் திண்மை, ’ மகரிஷி அவர்கள் கூறும் கருமையத்தூய்மையால் கிடைக்கப் பெறுகின்றது என்பது தெரிகின்றது,  மகரிஷி அவர்கள்  “ஞானி நினைப்பது நடக்கும்.  ஞானி நடக்கக் கூடியதைத்தான் நினைப்பான்” என்பார்.  காரணம்  ஞானி கருமையத்தூய்மை அடைந்தவர்.  எல்லோருமே எண்ணுவது நிகழ வேண்டும் என நினைக்கின்றனா்.  அதற்கு கருமையத்தூய்மை அவசியம் என்பதனை உணர வேண்டும்.

     கருமையத்தூய்மை அடைந்தவரின் மனதில் தேவையற்ற எண்ணங்கள் (ஆசைகள்) இராது.  எண்ணங்கள் மிகக் குறைவாகவே  எழும். எண்ணிக்கையில் குறைவான, நியாயமான எண்ணங்கள்  இருக்கும்போது, மனஆற்றல் அழுத்தத்துடன் ஒவ்வொன்றாக முடித்திட, செயல் ஆற்றுவதற்கு  உறுதி அதிகமாக இருக்கும்.   வாழ்வின் நோக்கம் உறுதி செய்யாத நிலையில்,  தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக இருப்பதால்,  எல்லாவற்றையும் செய்து முடிக்கும் உறுதிக்கு வலிவு குறைந்துவிடும்.

      ஆகவே தற்சோதனைக்கு உட்படுத்தாத எண்ணங்கள், தேவையற்ற ஆசைகள், வாழ்க்கைக்கு முரணான ஆசைகள் கருமையத்தூய்மையைக் கெடுக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையைப்பற்றிக் கூறும் கவிகளைக் கவனிப்போம்.

          எண்ணத்தின் வலிமை

     “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.

      எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.”

 

              எண்ணத்தில் நிறைந்திடு

    “விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ

    எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!”

               தீய எண்ணம்

   “உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,

   உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே”.

 ஆகவே எண்ணம் நிறைவேற வேண்டுமெனில் கருமையத்தூய்மை அவசியமாகின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும்.  எல்லோருக்கும் தான் எண்ணுவதெல்லாம் நிறைவேற வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் கருமையத்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

      உயிர் ஒரு மறைபொருள்.  இருப்பினும்  உயிர் மீது எல்லோருக்குமே அக்கறை உள்ளது போல் கருமையம் மற்றும் அதனைத் தூய்மைப்படுத்துவதன் மீது அக்கறை இருக்க வேண்டும்.  உயிர்  ஒரு மறைபொருளாக இருந்து, கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் இருப்பதை முழு மனதோடு ஒப்புக்கொள்கின்றான் மனிதன்.  காரணம் உயிர் பிரிவதால், மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து விடுவதை மற்றவர்களின்  இறப்பிலிருந்து அறிந்து கொள்கின்றான்.  இருப்பினும், மரணத்தால், உடல் வாழமுடியாமல், புலன்இன்பம் அனுபவிக்க முடியாமல் பயனற்றுப்போவதை, உடல் மீதுள்ள பற்றால் அவனால் ஏற்றுக்கொள்ள  முடிவதில்லை.  

       எனவே எளியமுறை குண்டலினியோகம் பயிலாதவர்கள்கூட, மறைபொருளான உயிர் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். யார் ஒப்புக் கொள்கிறார்களோ, இல்லையோ, உயிர் மனித உடலில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. உயிர் இருப்பதுபோல், உயிருடன் தொடர்புடைய கருமையம் அல்லது ஆன்மா (Registry of recorded events taking place while living) ஒன்று மறைபொருளாக மனிதனிடம் இருப்பதனையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

     ஒப்புக் கொண்ட பிறகு,  பள்ளிப்படிப்பு படித்த மற்றவர்கள், தங்களின் இதயத்தை நேரிடையாகப் பார்க்க முடியாவிட்டாலும், எவ்வாறு இதயம் உடலில் இருக்கின்றது என்று நம்புவதில் உறுதியாக இருக்கின்றார்களோ, மற்றும் இதயத்தின் வடிவம், இயக்கம் பற்றிய விளக்கங்கள் அறிந்தும் இருக்கின்றார்களோ அதுபோல் கருமையம் இருப்பது பற்றியும், அதன் இயக்கம் பற்றிய தெளிவையும் பெற வேண்டும். இதுவரை, ஜீவாத்மா(மனிதன்), பரமாத்மா(கடவுள்) என்றும் ஜீவாத்மா என்றும் அழியாதது என்றும் ஆன்மிக நூல்கள் கூறியிருந்தாலும், அவை மனிதனால்-ஆறாம் அறிவால்  கருத்துருவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

     ஆனால், இந்த நிலையில், இறை, பரமாத்மாவாகிய தன்னைப் பற்றியும், தான் ஜீவாத்மாவான வரலாற்றையும், தான் எவ்வாறு ஆட்சியின்றி ஆளுகின்ற விதத்தையும், அதனை நவயுக வியாசர், நம் குருதேவர்  உலக சமுதாயத்திற்கு எடுத்து இயம்புகின்ற விதத்தில் விளக்கியுள்ளது. 

        அன்று வேதங்களை எல்லாம் தொகுத்து கொடுத்தவர் வேதவியாசா் எனப்படுகிறார்.  இன்று இறையின் மறைபொருள் விளக்கங்களை, தான் நேரில் பார்த்தவாறே, தன் அனுபவத்திலும், உள்ளுணர்விலும் அறிந்ததை, அதேபோன்று பிறரும் எளிதாக அறியவும், மேலும், மனிதன்  எவ்வாறு எதார்த்தமாக வாழவேண்டும் என்றும் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துக் கொடுத்த  நம்அருட்தந்தை அவர்களை, நவயுக வியாசர் என்று கூறாமல்  இருக்க  முடியாதன்றோ! இது பொருத்தத்திலும் பொருத்தமன்றோ!

      ஆகவே, ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்று நமக்கெல்லாம் நம் குருதேவர் உறுதி அளித்துள்ளதால், நம் குருதேவர், எவ்வாறு கருமைய உண்மைகளை அறிந்து சமுதாயத்திற்கு கூறியுள்ளாரோ, அது போல் நாமும் கருமையத்தைப்பற்றியும், அதன் மதிப்பையும் உணர்ந்து மதித்து அதனைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம்.  எனவே, நாம்  அதன் இருப்பு, இயக்கம் பற்றி உறுதிப்படுத்தி, அதனைத் தூய்மை செய்வதில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

      கருவில் திருவுடையவர்களுக்கு   மறைபொருள் விளக்கங்கள்  அதிகமாகத் தேவையில்லை.  அறிவை அறிந்த குருநாதரின் கருணையானப் பார்வை திருவுடையவரின் மீது விழுந்தாலே  போதுமானது; திருவுடையவரிடம் மலர்வதற்காகக் காத்திருந்த ஆன்மீக மொட்டு மலர ஆரம்பித்துவிடும்.  மற்றவர்களுக்கு இயற்கையிலுள்ள மறைபொருட்களின் இரகசியங்கள் விளங்க விளங்கத்தான், தன்முனைப்பு நீங்க ஆரம்பித்து மனம் திண்மை பெறும்.  திண்மை பெற்ற மனம்தான் உறுதியுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்.  அதனால்தான் ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’ என்று பாரதியாரும், “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.  எண்ணத்தில் உறுதியும் (திண்மை) ஒழுங்கும் அமைந்திடில்.” என்று மகரிஷி அவர்களும் கூறுகிறார்கள்.

     கருமையத்தூய்மை என்பது ஏதோ கருமையம் சுத்தமாக இருப்பதற்காக மனிதன், செய்யும் பணி அல்ல.  மனிதனுடைய இன்ப வாழ்விற்கும் அவனுடைய  நல்வம்சாவளிக்காகவும்(good progeny as an asset to the family and society) கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மனிதனின் முத்தொழில்களையும் பதிவுகளாக ஏற்றம்(upload) செய்யும் கருமையம் ஒன்று இல்லாமல், எவ்வாறு உயிரினம் வாழ முடியும்? ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் கருமையத்தின் பதிவுகளையும், அதன் தரத்தையும் வைத்துதானே அமைகின்றது.

     உயிர் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதனைவிட அதிக அக்கறை கருமையத்தின் மீதும்,  அதன் தூய்மையைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும்.  உயிர் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றாலும், கருமையத்தூய்மை இருந்தால்தான் எண்ணிய எண்ணமும் நிறைவேறும்; ராஜவாழ்க்கையும் (liberated life)  வாழ முடியும்.  இங்கே ‘ராஜவாழ்க்கை’ என்பது சொல்லளவில் சொல்லப்படுவதல்ல. புலன்களுக்கும், மனம்போன போக்கிற்கும், அறிவு அடிமையாகி வாழாமல், எப்போதும் துன்பமிலா வாழ்வு வாழ்வதாகும். கருமையம் பற்றிய முழுமையானத் தெளிவினைப் பெறுவது அவசியமாகும்.  அதற்கு திருவேதாத்திரியத்தின் ‘கடவுளும் கருமையமும்’, ‘மனம்” ஆகிய நூல்களை மீண்டும் மீண்டும் படித்து தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

     அந்நூல்களில் உள்ள உண்மைகளை மீண்டும், மீண்டும்  படிக்க, கருமையம், அதன் இருப்பு மற்றும் அதன் நீதிதவறா பணிகளான பதிதல் மற்றும் விளைவுகளை வழங்கும் நுட்ப நிகழ்வுகளை நேரிடையாக காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நமது மனமானது கருமையத்தூய்மையின் மீது அதிக அக்கறை செலுத்தும்.  கருமையத் தூய்மைக்கேற்பவே மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வாய்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

      கருமையத்தூய்மையும் எண்ணம் நிறைவேறுதலும் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள் நம்மனதில் எப்போதும் சுழன்று கொண்டே விழிப்புடன் இருக்க, அவ்வரிகளை மீண்டும் ஒரு முறை  நினைவு படுத்திக் கொண்டு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.

  “கருமையம் தூய்மையாக இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்.  எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”   வேதாத்திரி மகரிஷி அவா்கள். 

       இதுபோன்ற வாழ்வியல் உண்மைகள் அனைத்தும், மனிதனின் பள்ளிக்கல்வி—மாணவப் பருவத்திலேயே முழுமையாகச் சென்றடையச் செய்து மனிதவளத்தை பெருக்கியும், அதன் உச்சத்திற்கே உயா்த்தியும் வளமிகு மனித சமுதாயத்தை, திருவேதாத்திரியம் உருவாக்கி வருகின்றது என்றால் மிகையாகாது.  போற்றுவோம் திருவேதாத்திரியத்தை.  வாழ்த்துவோம் திருவேதாத்திரியத்தை.   வாழ்க திருவேதாத்திரியம்    வளர்க திருவேதாத்திரியம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                             வளர்க அறிவுச் செல்வம்


அறிவிப்பு  

 வாழ்க வளமுடன்.

                    செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு  இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம். 

        அன்று அருளாளர்கள் உலகம் பற்றி சிந்திப்போம்.

வாழ்க வளமுடன். 

www.prosperspiritually.com