FFC – 205-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 1/3

வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 1/3

FFC –  205

 10-07-2016-ஞாயிறு

எண்ணிய முடிதல் வேண்டும்.

எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்துப்பழகி  

            அறிஞர்கள் ஆவோம் விரைவில். வாழ்க வளமுடன்.

Analysis_of_Thought

 

எண்ணம் என்பதன் வரையரையை நாம் அறிவோம். எண்ணாத மனிதன் யாரும் இல்லை. எண்ணியதெல்லாம் நடந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. எண்ணியது நிறைவேறுகின்றதா வாழ்க்கையில்? அல்லது நிறைவேறுகின்றவாறுதான் எல்லோராலும் எண்ண முடிகின்றதா என்பதும் ஐயமே. எண்ணியது நடக்காதபோது அது கவலையாக மாறுகின்றது. ஏன் இந்த நிலை?
மனிதன் நினைத்தது நிறைவேறாதபோது என்ன சொல்கிறான்? ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கின்றது.’ என்கிறான். ‘மனிதன் நினைக்கிறான். அதனை ‘தெய்வம் நிறைவேற்றுகின்றது. — Man proposes God disposes’ என்று சொல்கிறோம். ஏன் எண்ணுவது நிறைவேறுவதில்லை? அல்லது ஏன் நிறைவேறுகின்றவாறு எண்ண முடிவதில்லை? இதன் விஞ்ஞானம்தான் என்ன? What is the Science of it? மனிதனைவிட தெய்வம் வல்லமை உடையது என்பதால் அவ்வாறு நடக்கின்றதா? தெய்வம் மனிதனைவிட வல்லமை உடையதுதான். இருந்தாலும் மனிதன் நினைத்ததை ஏன் எல்லா சமயங்களிலும் நிறைவேற்றித் தருவதில்லை தெய்வம்?
ஆகவே தெய்வம் விரும்புவதை அறிந்து, மனிதன் அதனை எண்ணி அடைவதற்கு முயற்சி செய்து பெறுதல் வேண்டும் என்பதுபோல்தானே உள்ளது. ஆம் உண்மைதான். அதில் ஐயம் ஏதும் இல்லை. தெய்வம் விரும்புவதை எவ்வாறு அறிவது? தெய்வமேதான் மனிதனாக இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் தெய்வம் நினைப்பதை ஏன் மனிதன் அறிய முடியாது? தெய்வம் பொதுவாக நினைப்பது எதுவாக இருக்க முடியும்? நல்லது ஒன்றைத்தான் விரும்பும்? தன்னுடைய பிரஜைகளான மனித சமுதாயம் நலமுடன் இருக்கத்தானே விரும்பும்! மனிதன் நல்லவனாக வாழ்வதை விரும்பும் தெய்வம். தன்னுடைய தன்மாற்ற மனிதகுல சாம்ராஜ்யத்தில் அமைதியை விரும்பும். தெய்வம் விரும்புவதை அறிவது என்பதனை வார்த்தைகளுக்கான நேர் பொருளில்–literal meaning எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி மனிதன் எண்ணுவதில் ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பதற்கான விளக்கம் தெரிந்ததே. ஆகவே மனிதனின் ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பமாகும். ஒழுக்க எண்ணமே தெய்வ விருப்பத்தை அறியமுடியும்.
இன்றைய சிந்தனையில்
1) எண்ணியதை முடிப்பது எவ்வாறு,
2) செய்ய முடிந்ததை எவ்வாறு எண்ணுவது,
3) செய்யத்தக்கவாறு எண்ணுவது பற்றிச் சிந்திக்க இருக்கிறோம்.

“எண்ணிய முடிதல் வேண்டும்” என இறைவியை வேண்டச் சொல்கின்ற மகான் மகாகவி பாரதியாரை நினைந்து இச்சிந்தனையைத் தொடங்குவோம்.

அன்னையை வேண்டுதல்

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்;
………………………………………………………………………………..
……………………………………………………………………………….” மகா கவி பாரதியார்.

எண்ணியது நடக்க வேண்டும் என்று இறைவியைக் கேளுங்கள் என்கின்ற அதே வேளையில், நல்லவை எண்ணுதல் வேண்டும் எனவும் கேட்கச் சொல்கிறார். முதலில் நல்லதை எண்ண வேண்டும், பிறகு எண்ணிய நல்லது நிகழ வேண்டும். எண்ணியது முடிதல் வேண்டும் என்று கேட்டுவிட்டு, பிறகு ‘நல்லவை எண்ணல் வேண்டும்’ என்றிருக்கின்றது. இதற்கு என்ன பொருள்? ‘நல்லதை எண்ணுவேன்’ என்று இறைவிக்கு உறுதியினை அளிக்கச் சொல்கிறார். எண்ணுவது என்பது மனிதனிடம்தான் உள்ளது. எனவே மனிதன் நல்லதை எண்ணினால், எண்ணியதை நிறைவேற்றுவது இறைவியின் கடமை. என்றாகின்றது.
மனிதனின் எண்ணம் நிறைவேறுவதைப்பற்றிச் சிந்திக்கின்றோம். ‘என்னைப் பற்றித் தெரிந்துகொள் என்று நம்சிந்தனைக்குள் கருமையம் பிரவேசிக்கின்றது?’ ஏன்? எண்ணியது நிறைவேறுவதற்கும், கருமையத்திற்கும் என்ன தொடர்புள்ளது?
கருமையம் என்பது என்ன? இதனை ஆன்மா என்றும் சொல்லலாம்.

உடலில் சுழன்று ஓடிக் கொண்டிருக்கும்போது காந்த ஓட்டம் ‘துல்லிய சமதள சீர்மை’ என்கின்ற தத்துவப்படி உடலில் ஒரு மையத்தில் திணிவு பெறுகின்றது. அந்தத் திணிவு பெற்ற சீவகாந்தமையம் தான் கருமையம் எனப்படுகின்றது? இதன் பணி என்ன? இந்தக் கருமையத்தில் கோடிக்கணக்கில் பதிவுகள்(imprints) உள்ளன. மனம் சுருக்கி பதிவுகளாக இங்கு வைக்கின்றது. வெவ்வேறு அலைச் சுழல்களில் ( different wave lengths) பதிவுகள் உள்ளன.
‘இறை, உயிர், மனம் என்னும் மூன்று மறை பொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள்தான் கருமையம்’ என்கிறார் மகரிஷி அவர்கள். நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை செய்து, பின்னர் தீர்ப்பு வழங்குவதுபோல், கருமையம் மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் (தெய்வம்) இடையே பாலமாக அமைந்திருப்பதால், கருமையத் தெய்வீக நீதி மன்றத்தில் நீதிபதியாகத் தெய்வமே இருந்து கொண்டு மனிதன் செய்துள்ள, செய்கின்ற முத்தொழில்களையும் பதிய வைத்துக் கொண்டு விளைவுகளாக தன் தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இப்போது எண்ணியது நிகழ்வதிலும், நிகழ்வதை எண்ணுவதிலும் இந்த கருமையத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளவே இன்றைய சிந்தனை. இங்கே செயல் விளைவுத் தத்துவத்தையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ‘செயல் விளைவுத் தத்துவம்’ என்பது மனிதன் செய்யும் செயலுக்கு விளைவு உண்டு என்பதேயாகும். இதனை இயற்கையின் நீதி என்றும் சொல்லலாம். இதனை வேறுவிதமாகவும் சொல்லலாம். இறைவனை எங்கும் தேடவேண்டியதில்லை என்பார் நம்குருதேவர். ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்பார் நம்குருதேவர். மனிதனுடைய செயல்கள் என்னென்ன? மனிதனாகப் பிறந்ததற்கான அடையாளமாக மனிதன் எண்ணுகிறான். பேசுகிறான்(சொல்), பிறகு செயல்புரிகிறான். மனிதனின் முத்தொழில்களாவன: எண்ணம், சொல், செயல். இந்த மூன்றும் பதிவுகள் இல்லாமல் நடப்பதில்லை. எண்ணம் இயற்கையின் சிறப்பு என்பதுபோல், பதிதல் (imprint) இயற்கையின் சிறப்புகளில் மற்றொன்று. பதிதல் இல்லை எனில் எண்ணமே இல்லை. பதிதல் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சிறிது கற்பனை செய்து பாருங்களேன். சத்சங்க அன்பர்களின் சிந்தனைக்கு விடப்படுகின்றது.
மனிதனின் முத்தொழில்களும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. இந்த முத்தொழில்களிலும் முதலில் இடம் வகிப்பது எண்ணமாகும். ஒரு Nano second நினைப்பது கூட பதிவாகாமல் இருப்பதில்லை. கருமையத்திலும், மூளையிலும், வான்காந்தத்திலும் பதிகின்றது. பதிந்ததை அந்த அலைச்சுழல் வரும்போது மீண்டும் பிரதிபலித்துக் காட்டுவது கருமையப் பதிவுகளே. ஒரு எண்ணம் வந்தது என்றால், அதன் விருப்பம்போல், அதனை மனதினுள் விட்டுவிடக்கூடாது. காவலாளிபோல்(gate keeper) இருந்து கொண்டு ஏன் வந்தது, எதற்காக வந்தது, அந்த எண்ணத்தை வளர்த்தால் அதன் விளைவு என்ன என்று முடிவு செய்து, அந்த எண்ணத்தின் விளைவு நன்மை செய்யுமானால் அந்த எண்ணத்தை மனதினுள்ளேவிடலாம். இல்லையென்றால் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டியதுதான். அதாவது அந்த எண்ணத்தை மீண்டும் மீண்டும், எண்ணி எண்ணி, நீர் பாய்ச்சி, உரம்போட்டு வளர்த்து விட்டால் அது மரமாகி தேவையற்ற விளைவுகளை விளைவிக்கும். செயல் விளைவு தத்துவப்படி எண்ணுவதிற்கும் விளைவு உண்டு.
1991 அல்லது 1992 ஆம் வருடம் இருக்கலாம். விஞ்ஞானிகளின் கருத்தரங்கிற்கு(Science Meet) தலைமை தாங்க மகரிஷி அவர்கள் வேலூர் வந்திருந்தார். குருதேவர் விருந்தினர் மாளிகையில்(Guest house) தங்கியிருந்தார். ஒரு இனிய காலைப் பொழுது நேரம். அப்போது அவரைச் சந்தித்து ஆசி பெறும்போது, குருதேவர் திருவாய் மலர்கிறார். “இப்பொழுது கூட எந்த ஒரு எண்ணம் வந்தாலும், அதனை watchman ஐப் போல் வெளியே நிற்க வைத்து, அந்த எண்ணம் ஏன் வந்தது, அந்த எண்ணத்தை செயல்படுத்தினால் வரும் விளைவு என்ன என்று ஆராய்ச்சி செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்பேன்” என்றார். எண்ணம் ஆராய்தல் என்கின்ற புனிதப் பயிற்சியினை அருளியுள்ள அவருக்கு எண்ணத்தை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது அவருக்கு இயல்பாகிவிட்ட நிலை.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அவருக்கு அப்போது வயது 80(1991-1911=80) இருக்கும். தனது 35 வயதில் தெய்வநிலை உணர்ந்து 55 வருடங்கள் பரிபூரண வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர் அப்போது. இருப்பினும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியில் வைத்திருப்பவர். அந்த நிலையில் அவருக்கு வருகின்ற எண்ணம் என்பது நல்ல எண்ணம், சமுதாயத்தை ஒட்டியே தான் இருக்கும். எனினும் அப்படியொரு நல்ல தெய்வீக எண்ணமாக இருந்தாலும் அதனையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். நல்ல எண்ணமாக இருந்தாலும் அதனையும் நிறைவேற்றுவதாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில்தானே நிறை வேற்ற வேண்டியிருக்கும். அந்த நிகழ்வை சமுதாயம் வரவேற்பதாக இருந்தால் தானே அந்த நல்ல எண்ணத்தையும் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

இந்நிகழ்ச்சியில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று உள்ளது. மகரிஷி அவர்கள், அறிவின் முழுமைப்பேறு அடைந்து, அதாவது முழுமையாக மனத்தூய்மை அடைந்து (80-35=45) 45 வருடங்கள் கழிந்த பிறகும் எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்திருக்கிறார் என்பதனை அறிந்து மகிழ முடிகின்றது.

அதே நேரத்தில் நாமே எண்ணம் எண்ணுவதிலோ அல்லது மற்றவரின் எண்ணங்கள் நம்மனதில் புகும்போது எவ்வாறு விழிப்புடன் இருக்கப் பயில வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அறிய வைத்தது இயற்கை/இறை என்பதனை நினைந்து நன்றி செலுத்தி மகிழ்கிறோம்.

   மேலும், நம்குருதேவரின் வாழ்வில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சியினையும் அறிந்து ரசிப்போம் மகிழ்வோம். இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் நம்மிடையே செயலாவதற்கான வாய்ப்பல்லவா இது.

மகரிஷி அவர்கள் 2002 இல் ‘மதமும் மனிதனும்’ என்கின்ற நூல் எழுதியபோது. பக்கம் 11 இல் குருவிற்கு வணக்கம் செலுத்தியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சில வைர வரிகளை நினைவுகூர்வோம். அவ்வரிகளாவன:

இந்தக் கருத்துக்களைத் தொகுக்கும்போது வேறு சில அன்பர்களின் உரையாடலோ, செயல்களின் தாக்கமோ ஏற்படாது இருக்கத் தக்க நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து(17-11-2011) இந்த ஆண்டு மௌன நோன்பு தொடங்கியிருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு இந்த உயர்ந்த நன்நோக்கக் கருத்துக்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளேன்.” என்று மகரிஷி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.” இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்ன?

எண்ணங்கள் வலிமையானவை. அறியாமலேயே கூட பிறர் மனங்களில் ஊடுருவக் கூடிய ஆற்றல் உடைய மௌன ஊடகம் எண்ணம். ஆகவே எண்ணம் வருகின்றது/எழுகின்றது என்றால் எண்ணம் எழுவதற்கு ஆறு காரணங்கள் உள்ளதால், எண்ணத்தை ஆறு சோதனைகளுக்கும் உட்படுத்திய, பின்னர்தான் எண்ணத்தை நம் மனதுள் அனுமதிக்கும் நற்பழக்கத்தை பழகிக்கொள்ள வேண்டும். 

இதுவே அறிவை அயரா விழிப்புணர்வில் இருக்கச் செய்யும்.

   அறிவின் முழுமைப்பேற்றினை அடைந்த, தனது எண்பது வயதிலும்கூட எண்ணத்தை ஆராய்ச்சியிலே வைத்திருந்தார் என்றால், இறை உணர் ஆன்மீக சாதகர்கள் தெய்வீகப்பயிற்சியான தற்சோதனையின் முதல் பாடமான ‘எண்ணம் ஆராய்தலில் எந்த அளவிற்குத் தேர்ச்சி பெற/பெற்றிருக்க  வேண்டும் என அறிந்து கொள்ள வேண்டியது பொறுப்பு மிகுந்த கடமையாகும் இதுவே நன்றி உணர்வாக, நம்குருதேவருக்கு செலுத்தும் காணிக்கையாகும்.

“எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,

எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்” என்று மகரிஷி அவர்கள் இயம்புவதை இப்போது நினைவு கூர்வது சிறப்புடையது.

எண்ணத்தை எப்போதும் ஆராய்ச்சியிலேயே வைத்துப்பழகி அறிஞர்கள் ஆவோம் விரைவில். வாழ்க வளமுடன்.

வினை-விளைவு விஞ்ஞானத்தின்படி, எண்ணத்திற்கும் விளைவு உண்டு. எண்ணியதற்கான முதல் விளைவு தனக்குள் ஏற்படும். அது எண்ணிய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும், பூரிப்பாகவும் இருக்கலாம். அல்லது தீய எண்ணமாக இருந்தால் அது தனக்கே மனதிற்கு பொருந்தா துன்ப உணர்வாகவும் இருக்கலாம். எண்ணத்தை தற்சோதனைக்கு உட்படுத்தாவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் பிரதிபலித்து வலிவு பெற்று சொல்லாக – பேச்சாக வெளிவரும். அந்த சொல்லைப் பொறுத்து விளைவு இன்பமாகவோ அல்லது துன்பமாக வரும். அழுத்தம் பெற்ற எண்ணம் சொல்லாக வராமல், மூன்றாவது தொழிலான செயலாகவும் வரும். செயலுக்கு ஏற்ற விளைவு இன்பமாகவோ, துன்பமாகவோ வரும்.
இந்த முத்தொழில்களும் கருமையத்தில் பதிவாகாமல் நடப்பதில்லை. செயலுக்குரிய விளைவு, ஐந்து காரணிகளான

        (1) நோக்கம்,

       (2) திறமை,

       (3) தொடர்பு கொள்ளும் பொருள்,

       (4) இடம்,

       (5) காலம் ஆகியவைகளைப் பொருத்திருக்கின்றது.

  அதனால் ஒரு சிலவற்றிற்கு உடனேயும் விளைவுகள் வரலாம். வேறு சிலவற்றிற்கு விளைவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகும். தீய விளைவுகளை உடனே தரக்கூடிய செயல்களைக்கூட, அறியாமையாலோ, அலட்சியத்தாலோ, உணர்ச்சி வசத்தாலோ அல்லது பழக்கப்பதிவின் அழுத்த உந்துதலாலோ மீண்டும் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும்’ மனிதன் செய்துவிடுகிறான்; தவிர்க்கமுடிவதில்லை மனிதனால்.

இதுபோன்ற நிலை காலங்காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றது. திருந்துவது போராட்டமாக உள்ளது என்பதாலே, மனிதகுலம், போராட்டத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடமுடியுமா?

இதுவரை தோன்றிய அறிஞர்களின் ஆதங்கங்கள் வான்காந்தத்திலே பதிந்து கொண்டுவருகின்றன. அதன் அழுத்தத் திணிவாலும், மற்றும் மனிதகுலத்திற்கு ‘விமோசனமே கிடையாதா?’ என்கின்ற பேரறிவின் பின்னமான அருளாளா்கள் மற்றும் நல் உள்ளங்களின் வேண்டுதலுக்கிணங்க(Fraction demands. Totality supplies), இயற்கை கருணையோடு அளித்ததுதான் திருவேதாத்திரியம். மனிதனுள் ஏற்கனவே இருக்கும் பூரணத்தை வெளிக் கொண்டுவருமாறு கல்வி இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் மொழிந்துள்ளதுபோல், திருவேதாத்திரியம் கல்வியின் நான்கு அங்கங்களாக எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத்தத்துவ அறிவு என்று கருதுகின்றது.

கல்வி என்பது ஆரம்பக் கல்வியிலிருந்து ஆரம்பிப்பது. மேலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’, ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது எதார்த்த நிலையாக உள்ளது. எந்த ஒரு நற்பழக்கமும் மனிதன் குழந்தைப் பருவத்திலேயே பழக ஆரம்பிக்க வேண்டும் என்பதால், இயற்கை, இப்போது, பள்ளிக் கல்வியிலேயே பண்பேற்றக்கல்வியினை திருவேதாத்திரியத்தின் வாயிலாகக் கொண்டுவந்துள்ளது. வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம்.

அடுத்த விருந்தில் (13-07-2016 புதன்) கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.

… தொடரும் 13-07-2016

வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

அறிவிப்பு  

 08-07-2016-வெள்ளி

வாழ்க வளமுடன்.

                   செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

வாழ்க வளமுடன்.

www.prosperspiritually.com

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
நன்றி,
வாழ்க வளமுடன்