229-உணர்ச்சிவயம் தவிர்த்தல்

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

உணர்ச்சிவயம் தவிர்த்தல் 

அறிவிற்கு விருந்து—229

 25-09-2016—ஞாயிறு.

%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

 வாழ்க வளமுடன்.

சென்ற இரு விருந்துகளில் அறிவின் மூன்று வறுமைகளில் அறியாமை, அலட்சியம் ஆகிய இரு வறுமைகளைப்பற்றி சிந்தித்தோம். இன்று உணர்ச்சிவயம் என்கின்ற அறிவின் வறுமையைப் பற்றி சிந்திப்போம்.

உணர்ச்சிவயம் என்றால் என்ன? அறிவு தன்னிலை மறந்து உணர்ச்சிக்கு வசப்படுவது. எல்லோரும் அறிந்த உதாரணம் சினம் கொள்ளல். ஞானியைத்தவிர (ஞானியாகும் வரை) மற்றவர்கள் அனைவரும் அவ்வப்போது, அடிக்கடி உணர்ச்சிவயத்திற்கு உள்ளாவது இயல்பாகவே உள்ளது. இயல்பாக உள்ளது என்பதால் அதனை சரியென ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சிவயப்படுவதால் நன்மை வருகின்றது என்றால் அதனை சரி என ஏற்றுக் கொள்ளலாம். உணர்ச்சிவயப்படுவது தீமை அளிப்பதால், அது இயல்பாக இருந்தாலுமே அதனை சரி என எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

எந்த மூலத்திலிருந்து மனிதகுலம் வந்துள்ளதோ அந்த மூலம் உணர்ச்சிவயப்படுவதில்லை. எனவே மனிதன் உணர்ச்சிவயத்தைத் தவிர்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும். நிதானம் வேண்டும். விலங்கினப்பண்பு என்கின்ற பரிணாமக் கசடால்(evolutionary effluent) மனிதன் உணர்ச்சிவயப்படுகிறான். விலங்கினத்திலிருந்து மனிதஇனம் வந்துள்ளதால் மனிதனின் மூளையில் ஒரு பகுதி ‘emotional area’ உள்ளதாக சொல்லப்படுகின்றது. உணர்ச்சி வயத்தால்தான் அன்றாடம் சிக்கல்கள், துன்பங்கள் அதிமாகிக் கொண்டே போகின்றன. மகரிஷி அவர்கள் அறிவின் ஏழ்மையே வாழ்க்கைச் சிக்கல்கள் என்று கூறும் பாடலை நினைவு கூர்வோம்.

 அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்

(02-04-1988)

தேவையொடு அளவு, முறை, காலம் நான்கைத்
   தேர்ந்தாற்ற அறிவு நுட்பம் அனுபவங்கள்
தேவையாம் வாழ்வோர்கள் எல்லாருக்கும்;
   சிறுவயதால் அறியாமை, நல்விழிப்பு,
தேவையால் அலட்சியம், பின்பாசம் பற்றால்
   தெளிவில்லா உணர்ச்சிவயம், இந்த மூன்றால்
தேவை முதல் நான்கினையும் கணித்து ஆற்றத்
   திறனில்லா அறிவேழ்மை வாழ்க்கைச் சிக்கல்!”

                                           . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஒழுக்கம் என்கின்ற புண்ணியகாரியமாகிய அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தி, சீவனில் சிவனைக்காண வேண்டிய மனிதன் காலங்காலமாக உணர்ச்சிவயப்படுவது இயல்பாக இருந்து வந்தாலும் உணர்ச்சிவயப்படுவதை எவ்வாறு சரி என்பது? உணர்ச்சி வயப்படுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான உளப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிவயப்படுவது புண்ணிய செயல் அல்லாததால், அதன் விளைவு துன்பமே. அந்த துன்பத்தைத் தவிர்க்கவாவது உணர்ச்சிவயத்தைத் தவிர்க்கப் பழகவேண்டும்.
மனிதவாழ்வில் உணர்ச்சி வயப்படுவது இயல்பாக இருந்தாலும், உணர்ச்சிவயத்தை தவிர்த்து உயரவும் முடியும்; அது அவசியமும் என்கின்றார் வாழ்வியல் கலையை வகுத்துக் கொடுத்துள்ள வாழ்வியலாளர் மகரிஷி அவர்கள்.
மகரிஷி அவர்கள் என்ன கூறுகின்றார் என்பதனை நினைவு கூர்வோம். சுமார் 25 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் மகரிஷி அவர்களின் துணைவியார் அன்னை லோகாம்பாள் கோலமிடும்போது அதைச் சுற்றிலும் ஏதேனும் ஒரு அருளுரையை மகரிஷி அவர்கள் எழுதச்சொல்வது வழக்கம். அவ்வாறாக எழுதப்பெற்ற கவிகளில் உணர்ந்த உண்மையினை ரசித்து, மதித்து, நன்றியுணர்வாகவும் வருங்கால சந்ததி பயன் பெறட்டும் என்கின்ற நன்நோக்கத்தில் சில அன்பர்கள், அவற்றைத் தொகுத்து ‘மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து’ என்கின்ற நூலாக வெளியிட்டனர். இன்று அறுபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து 22-12-1953 அன்று மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்தினை நினைவு கூர்வோம்.

makkaolamai-vandha-madhivirundhu

இயல்பும் – உயர்வும்(22-12-53)

அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.

                                              . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அரிதான மனிதப்பிறவி என்பது விலங்கினத்தைவிட உயர்வாழ்வு வாழ்வதற்காகவே என்பதால் எல்லோருமே உணர்ச்சியை வெல்லும் உயர்வு பெற்றே ஆக வேண்டும்.

அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு என்று கூறிய மகரிஷி அவர்கள், ஐந்து வருடங்கள் கழித்து 03-01-1959 அன்று மனிதருள் உயர்ந்தோர் யார் என்பதனை அறிவால் உணர்ச்சியை வெல்ல வேண்டும் என்பதனை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றுமொரு கவியினை மார்கழி மாத கோலத்தில் அருளுரையாக எழுதியுள்ளார். அதனையும் நினைவு கூர்வோம்.

மனிதருள் உயர்ந்தோர் (03-01-1959)

மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு
மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு
மனமறிந்து மனஇதமாய் மாக்களுக்கும் மக்களுக்கும்
மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.
                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இப்பாடலில் மதி நிலைத்தவரைத்தான் மனிதர் என்கிறார். அதாவது மதிநிலைத்தால் உணர்ச்சிவயம் தவிர்க்கப்படும். உணர்ச்சிவயப்படுபவர் மதிநிலைத்தவராகார். அவரை மனிதர் எனக் கொள்ள முடியாது என்று பொருளாகின்றது. எனவேதான் பாடலின் முதல் வரியிலேயே மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும் உண்டு மக்களும் உண்டு என்கிறார்.

மனிதகுலம் உணர்ச்சியை வெல்லும் உயர்வு பெற்றே ஆக வேண்டும். இது தனிமனித முயற்சி மட்டுமல்ல. தனிமனிதன் ஒருவன் மட்டும் உணர்ச்சியை வென்றால் போதுமானதல்ல. அவ்வாறு உணர்ச்சியை வென்ற ஒரு தனி மனிதனுக்கு, உணர்ச்சியை வெல்லாத பிறரிடமிருந்து துன்பங்கள் எவ்வளவோ வந்துகொண்டிருக்கின்றன. உணர்ச்சியை வெல்லாதவர்களே இந்த சமுதாயத்தில் அதிகமாக உள்ளதால் இன்னமும் மனிதகுலம் அமைதிக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. அமைதி மனிதகுலத்தின் பூர்வீக சொத்தாக இருந்தும் அதனை அனுபவிக்க முடியாமல் மனிதகுலம் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குத் தீர்வாகத்தான்
உலக நலத்தையே தனது நோக்கமாகக் கொண்ட,
உலக நல அக்கறையாளரான,
உலக நலத்தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்
உலக சமாதானத் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்கள். அந்த திட்டம் மலரும்போது எந்த மனிதனும் உணர்ச்சிவயத்திற்கு ஆளாகும் அவசியமே இராது. உணர்ச்சிவயப்பட வேண்டும் என ஒருவன் விரும்பினாலும் அதற்கான சூழ்நிலையே சமுதாயத்தில் இராது. குற்றங்கள் ஏற்படாத சூழ்நிலை அன்றோ அன்று நிலவும்! இது கேட்பதற்கு இப்போது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கலாம் பலருக்கு. இதற்கு விடையாக மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

அறிஞனே மருத்துவர்(17-12-1953)

அறிஞர் வாழ்வுமுறை வகுக்கும் அறநெறி, அன்புசொற்கள்
அறியார்க்கு புதிர்ஒவ்வாது ஆகையினால் மிரட்சிகொண்டு
அறிஞரைப் பித்தன், வாழஅறியாதோன் என்பர்ஆய்ந்தால்
அறிஞனே உலகப்பித்தர், அனைவருக்கும் மருத்துவனாம்.”

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

எனவே சீவனிலே சிவனைக்காண்கின்ற பிரம்மஞானிகளாகிய மனவளக்கலைஞர்களாகிய நாம் மகரிஷி அவர்களின் உலகசமாதானத்திட்டங்களை மனதில் வாதியாகவும் பிரதிவாதியாகவும் இருந்து சிந்தித்து ஆதரித்தால், ‘வாழ்க ‘வையகம் வாழ்கவளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்திற்கு வலுசேர்ந்து கொண்டே இருக்கும்.
மனஅலை 14 லிருந்து 40 cps வரை இருக்கும்போது அறிவு உணர்ச்சிவயத்திற்கு வசப்பட தயாராக இருக்கும். எனவே மன அலையைக் குறைக்கின்ற உளப்பயிற்சியாகிய அகத்தவத்தை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பலபிறவிகளில் அமைதி நிலையில் இல்லாதபோது(உணர்ச்சி நிலையில்) செய்துள்ள தீயச் செயல்களின் பதிவுகளை செயலிழக்கச்செய்ய அகத்தாய்வு பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக கிடைத்தற்கரிய பேறாக உள்ள குணநலத்தைப் பெறவேண்டும். நான்காவதாக, முடிவாக அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய வறுமைகளைக் கொண்டுள்ள குறைவுடைய மனிதஅறிவின் வறுமையை நீக்கி அறிவு முழுமையாக்கப் படவேண்டும்.

அறிவின் வறுமையால் துன்பக்கடலில் நீந்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற மனித சமுதாயத்தினை மீட்க இயற்கை/இறை தன்மாற்றப்பயணத்தில் அருளியதுதான் மனவளக்கலை எனும் அரு மருந்தாகும்.

அறிவின் உணர்ச்சி நிலைக்கும் முழுமை நிலைக்கும் உள்ள வித்தியாசங்களை காண்போம்.

ffc-229-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

அறிவின் உணர்ச்சிவயத்தால் விளைகின்ற ஆறு தீய குணங்கள் அறிவின் முழுமை நிலையால் சீவனில் சிவனைக்காணக்கூடிய பேற்றினை உடைய மனிதனிடம் நற்குணங்களாக மாற்றம் பெறுவதனை அறியும்போது மனதிற்கு இதமாக உள்ளது.
உணர்வது அறிவு என்றாலும் அறிவு உணர்தலாகிய உணர்ச்சியின் வசமாகிவிடக்கூடாது. எப்போதும் அறிவு விழிப்போடு இருக்க வேண்டும் விழிப்புணர்வே கடவுள்.(Awareness itself is God). வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்.